கூட்டுறவு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சபர்கந்தா மாவட்டம், ஹிமத்நகரில் 800 மெட்ரிக் டன் உற்பத்தித் திறன் கொண்ட அதிநவீன கால்நடை தீவன ஆலையை மத்திய உள்துறை அமைச்சரும் கூட்டுறவு அமைச்சருமான திரு அமித் ஷா திறந்து வைத்தார்

Posted On: 19 NOV 2024 7:10PM by PIB Chennai

குஜராத் மாநிலம் சபர்கந்தா மாவட்டத்தில் உள்ள ஹிமத்நகரில் 800 மெட்ரிக் டன் உற்பத்தித் திறன் கொண்ட அதிநவீன கால்நடை தீவன ஆலையை, மத்திய உள்துறை அமைச்சரும், கூட்டுறவுத் துறை அமைச்சருமான திரு அமித் ஷா இன்று திறந்து வைத்தார். குஜராத் சட்டமன்ற சபாநாயகர் திரு. சங்கர் சவுத்ரி உட்பட பல பிரமுகர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

அமித் ஷா தனது உரையில், சபர் பால் பண்ணை நிறுவப்பட்ட வடிவத்தில் விதைக்கப்பட்ட விதை தற்போது ஒரு ஆலமரமாக வளர்ந்து, மூன்றரை லட்சத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு வாழ்வாதாரத்தை வழங்கி வருவதாகக் குறிப்பிட்டார். கால்நடை வளர்ப்புடன் தொடர்புடைய சில பெண்களையும் இன்று சந்தித்ததாகவும், சபர் டெய்ரி மற்றும் அதன் பால் வணிகத்தால் தான் தற்போது கண்ணியத்துடன் வாழ முடிகிறது என்று அவர்கள் தன்னிடம் கூறியதாகவும் திரு ஷா பகிர்ந்து கொண்டார்.

பால் உற்பத்தியில் சிறப்பாக செயல்பட்டதற்காக இன்று கௌரவிக்கப்பட்ட இரண்டு கூட்டுறவு சங்கங்களில், பால் வர்த்தகத்தில் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் வருவாயை ஈட்டிய சங்கங்களும் அடங்கும் என்று மத்திய கூட்டுறவு அமைச்சர் கூறினார். கூட்டுறவு பால் பண்ணை இயக்கம் பெண்களுக்கு அதிகாரம் அளித்தது மட்டுமின்றி, கிராமங்களுக்கு வளத்தை கொண்டு வந்துள்ளதுடன், ஊட்டச்சத்தையும் வழங்கியுள்ளது என்று அவர் குறிப்பிட்டார். அமுல் தொடங்கி வைத்த வெண்மைப் புரட்சியின் விளைவாக இந்த வெற்றி கிடைத்துள்ளது என்று திரு. ஷா தெரிவித்தார்.

உள்ளூர் கால்நடைகளுக்கு சத்தான தீவனம் வழங்குவதற்காக சபர்கந்தா பால் பண்ணையில் ரூ. 210 கோடி மதிப்பில் கால்நடை தீவன ஆலை நிறுவப்பட்டுள்ளதாக திரு அமித் ஷா தெரிவித்தார். 1976 ஆம் ஆண்டில் சபர்கந்தா பால் பண்ணை தொடங்கப் பட்டதிலிருந்து, தீவன ஆலை திறக்கப்பட்ட நேரத்தில் 2,050 மெட்ரிக் டன் கால்நடை தீவனத்தின் திறனை அடைந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார். 1970 -ம் ஆண்டில் இந்தியா ஒரு நபருக்கு ஆண்டுக்கு 40 கிலோ கிராம் பால் மட்டுமே உற்பத்தி செய்தது என்றும், 2023 -ம் ஆண்டில் நாடு, ஆண்டுக்கு ஒரு நபருக்கு 167 கிலோ கிராம் பால் உற்பத்தி செய்தது என்றும் அவர் கூறினார்.

இதன் பொருள் அனைத்து நாடுகளையும் விட இந்தியா மிக உயர்ந்த தனிநபர் பால் உற்பத்தி சராசரியைக் கொண்டுள்ளது என்றும், இந்த சாதனையில் கூட்டுறவு இயக்கம் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டுள்ளது என்றும் திரு ஷா வலியுறுத்தினார்.

விவசாயிகளிடம் இயற்கை விவசாயத்தை பின்பற்றுமாறு  அவர் வேண்டுகோள் விடுத்தார். வரும் நாட்களில், இது விவசாயிகளின் செழிப்புக்கு ஒரு காரணமாக இருக்கும் என்றும், புற்றுநோய், நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்தம் ஆகியவற்றிலிருந்து நாடு மற்றும் உலகின் மக்களை விடுவிப்பதற்கான வழிமுறையாக இது செயல்படும் என்றும் கூறினார். இயற்கை விவசாயம் மிகவும் எளிமையானது என்றும், இது சமூகத்தின் ஆரோக்கியம் மற்றும் வருமானம் இரண்டையும் மேம்படுத்த பெரிதும் உதவும் என்றும் அவர் குறிப்பிட்டார். இயற்கை விவசாயத்தில் ஈடுபடும் விவசாயிகள் தங்கள் விளைபொருட்களுக்கு நல்ல விலை கிடைப்பதை உறுதி செய்வதற்காக, பிரதமர் திரு நரேந்திர மோடி தேசிய கூட்டுறவு கரிம நிறுவனம் (என்.சி.ஓ.எல்) மற்றும் தேசிய கூட்டுறவு ஏற்றுமதி நிறுவனம் (என்.சி.இ.எல்) ஆகியவற்றை நிறுவியுள்ளார், இவை இயற்கை விவசாயத்தின் மூலம் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை விவசாயிகளிடமிருந்து வாங்கி ஏற்றுமதி செய்யும்.

இயற்கை விவசாயத்தின் முதல் ஆண்டில் விளைச்சல் சற்று குறைவாக இருந்தாலும், இரண்டாவது மற்றும் மூன்றாவது ஆண்டுகளில் லாபம் இருக்கும் என்று திரு அமித் ஷா கூறினார். இயற்கை விவசாயம் மண்புழுக்கள் மூலம் மண்ணை வளப்படுத்துகிறது என்றும், பூச்சிக்கொல்லிகளின் தேவை இருக்காது என்றும் அவர் குறிப்பிட்டார். இந்த நடைமுறை குஜராத்தில் பரவலாக பின்பற்றப்படுவதாகக் குறிப்பிட்ட அவர், பால்வளத் துறை அதன் திட்டங்களில் இயற்கை விவசாயம் குறித்த பயிற்சியை இணைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

அதிக கால்நடைகளை வைத்திருப்பவர்களுக்காக பிரதமர் திரு நரேந்திர மோடி கோபர்தன் திட்டத்தை தொடங்கி வைத்தார் என்றும் அவர் குறிப்பிட்டார். குஜராத்தில் உள்ள பல பால்பண்ணைகள் கோபர்தன் என்ற கருத்தை வெற்றிகரமாக செயல்படுத்தியுள்ளன. கோபர்தன் மூலம் உற்பத்தி செய்யப்படும் உரம் மண்ணை வளப்படுத்துகிறது என்று அவர் கூறினார்.

கூட்டுறவு இயக்கம் பால் பண்ணைகளுடன் தொடங்கியபோது, அமுல் 60,000 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரு பரந்த வலைப்பின்னலாக மாறும் என்று யாரும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள் என்று அவர் சுட்டிக்காட்டினார். இயற்கை விவசாயம் என்ற கருத்து ஆரம்பத்தில் நடைமுறைக்கு சாத்தியமற்றதாகத் தோன்றினாலும், இறுதியில், இது இந்திய விவசாயிகளுக்கு ரூ.10 லட்சம் கோடி மதிப்புள்ள உலகளாவிய சந்தையைத் திறக்க வழிவகுக்கும் என்றும், நாட்டின் செழிப்புக்கு வழிவகுக்கும் என்றும் அவர் மேலும் கூறினார்.

திரு அமித் ஷா இன்று காந்திநகரில் ஃபிலா விஸ்டா -2024 முத்திரை கண்காட்சியை திறந்து வைத்தார். தண்டி குடிர் அருங்காட்சியகத்தில் தண்டி யாத்திரையில் பங்கேற்ற தலைவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.

மேலும், மத்திய உள்துறை அமைச்சரும் கூட்டுறவு அமைச்சருமான திரு அமித் ஷா சனந்தில் உள்ள ஷெலா ஏரி மற்றும் பூங்காவையும் திறந்து வைத்தார்.

***

MM/AG/DL


(Release ID: 2074774) Visitor Counter : 18