பிரதமர் அலுவலகம்
தலைமைச் செயல் அதிகாரிகளின் வட்டமேசை கூட்டத்தில் பிரதமர் பங்கேற்பு
Posted On:
22 SEP 2024 11:50PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி நியூயார்க்கில் மாசசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (எம்ஐடி) யின் ஸ்கூல் ஆஃப் இன்ஜினியரிங் ஏற்பாடு செய்திருந்த வட்டமேசை கூட்டத்தில் தொழில்நுட்ப பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினார். செயற்கை நுண்ணறிவு, குவாண்டம் தொழில்நுட்பம், உயிரி தொழில்நுட்பம், செமிகண்டக்டர் தொழில்நுட்பங்கள் உள்ளிட்டவற்றில் இந்த வட்டமேசை கூட்டம் கவனம் செலுத்தியது.
உலக அளவில் வளர்ந்து வரும் தொழில்நுட்ப சூழல் குறித்தும், இந்தியா உட்பட உலகெங்கிலும் உள்ள மக்களின் நல்வாழ்வுக்கு இந்த அதிநவீன தொழில்நுட்பங்கள் எவ்வாறு பங்களிக்கின்றன என்பது குறித்தும் பிரதமருடன் தலைமைச் செயல் அதிகாரிகள் கலந்துரையாடினர். மனிதவள மேம்பாட்டில் புரட்சியை ஏற்படுத்தும் திறன் கொண்ட புதிய கண்டுபிடிப்புகளில் தொழில்நுட்பம் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதை அவர்கள் தொகுத்துக் கூறினர்.
தொழில்நுட்ப நிறுவனங்களின் பிரதிநிதிகளை ஒன்றிணைத்ததற்காக எம்ஐடி பொறியியல் பள்ளி, அதன் டீன் ஆகியோரின் முயற்சிகளை பிரதமர் பாராட்டினார். தமது மூன்றாவது பதவிக்காலத்தில், உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாற இந்தியா அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும் என்று அவர் அப்போது கூறினார். புதிய கண்டுபிடிப்புகளில் இந்தியாவின் வளர்ச்சி கதையை நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அவர் ஊக்குவித்தார்.
இந்தியாவில் ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றத்தை, குறிப்பாக மின்னணு-தகவல் தொழில்நுட்ப உற்பத்தி, குறைக்கடத்திகள், உயிரி தொழில்நுட்பம், பசுமை மேம்பாடு ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை பிரதமர் எடுத்துரைத்தார். குறைக்கடத்தி உற்பத்தியின் உலகளாவிய மையமாக இந்தியாவை மாற்ற தமது அரசு உறுதிபூண்டுள்ளதாக அவர் கூறினார். இந்தியாவை ஒரு உயிரி தொழில்நுட்ப சக்தி மையமாக உருவாக்குவதற்கான இந்தியாவின் பயோ இ 3 கொள்கையையும் அவர் விளக்கினார்.
வட்டமேசை கூட்டத்தில் அசென்சர் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி திருமதி ஜூலி ஸ்வீட், கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி திரு சுந்தர் பிச்சை, ஐபிஎம்-ன் திரு அரவிந்த் கிருஷ்ணா உள்ளிட்ட 15 நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
***
(Release ID: 2057695)
TS/PLM/AG/KR
(Release ID: 2071090)
Visitor Counter : 21
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam