பிரதமர் அலுவலகம்
16-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் துவக்க நிகழ்ச்சியில் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
Posted On:
23 OCT 2024 5:22PM by PIB Chennai
மதிப்பிற்குரிய தலைவர்களே,
16-வது பிரிக்ஸ் உச்சிமாநாட்டை சிறப்பாக ஏற்பாடு செய்ததற்காக அதிபர் புதினுக்கு எனது வாழ்த்துகள்.
பிரிக்ஸ் அமைப்பில் இணைந்துள்ள அனைத்து புதிய நண்பர்களையும் மீண்டும் ஒருமுறை அன்புடன் வரவேற்கிறேன். உலக மனிதகுலத்தில் 40 சதவீதத்தையும், உலகப் பொருளாதாரத்தில் 30 சதவீதத்தையும் பிரிக்ஸ் அமைப்பு தனது புதிய வடிவத்தில் கொண்டுள்ளது.
கடந்த 20 ஆண்டுகளில் பிரிக்ஸ் பல மைல்கற்களை எட்டியுள்ளது. வரும் காலங்களில், உலகளாவிய சவால்களை எதிர்கொள்ள மிகவும் சக்திவாய்ந்த தளமாக இந்த அமைப்பு உருவெடுக்கும் என்று நான் நம்புகிறேன்.
புதிய வளர்ச்சி வங்கியின் தலைவர் திருமதி டில்மா ரூசெப் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நண்பர்களே,
கடந்த பத்து ஆண்டுகளில், உலகளாவிய தென்பகுதி நாடுகளின் வளர்ச்சித் தேவைகளுக்கு இந்த வங்கி ஒரு முக்கியமான அம்சமாக உருவெடுத்துள்ளது. இந்தியாவில் குஜராத் சர்வதேச நிதித் தொழில்நுட்ப நகரம் உருவாக்கப்பட்டுள்ளது. ஆப்பிரிக்கா, ரஷ்யா ஆகியவற்றில் உள்ள பிராந்திய மையங்கள் இந்த வங்கியின் நடவடிக்கைகளை ஊக்குவித்துள்ளன. மேலும், சுமார் 35 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. தேவைக்கேற்ற உந்துதல் கொள்கையின் அடிப்படையில் புதிய வளர்ச்சி வங்கி தொடர்ந்து பணியாற்ற வேண்டும். மேலும், வங்கியை விரிவுபடுத்தும் போது, நீண்ட கால நிதி நிலைத்தன்மை, ஆரோக்கியமான கடன் மதிப்பீடு, சந்தை அணுகல் ஆகியவற்றை உறுதி செய்வது முன்னுரிமையாக இருக்க வேண்டும்.
நண்பர்களே,
புதிய விரிவாக்கப்பட்ட வடிவத்தில், பிரிக்ஸ் 30 டிரில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமான பொருளாதாரமாக உருவெடுத்துள்ளது. நமது பொருளாதார ஒத்துழைப்பை அதிகரிப்பதில் பிரிக்ஸ் வர்த்தக கவுன்சில், பிரிக்ஸ் பெண்கள் வர்த்தக கூட்டமைப்பு ஆகியவை சிறப்பான பங்காற்றியுள்ளன.
உலக வர்த்தக அமைப்பின் சீர்திருத்தங்கள், வேளாண்மையில் வர்த்தக வசதி, நெகிழ்திறன் கொண்ட விநியோகச் சங்கிலிகள், மின்னணு வர்த்தகம், சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் ஆகியவற்றில் பிரிக்ஸ் நாடுகளுக்குள், இந்த ஆண்டு ஏற்பட்ட ஒருமித்த கருத்து நமது பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்தும். இந்த அனைத்து முன்முயற்சிகளுக்கும் இடையே, சிறு மற்றும் நடுத்தர தொழில்களின் நலன்களிலும் நாம் கவனம் செலுத்த வேண்டும்.
2021-ம் ஆண்டில் இந்தியா தலைமையில் முன்மொழியப்பட்ட பிரிக்ஸ் புத்தொழில் அமைப்பு இந்த ஆண்டு தொடங்கப்படும் என்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையே சரக்கு போக்குவரத்தையும் விநியோகச் சங்கிலி இணைப்பையும் அதிகரிப்பதில் இந்தியா மேற்கொண்டுள்ள ரயில்வே ஆராய்ச்சி கட்டமைப்பு முன்முயற்சியானது முக்கிய பங்கை வகிக்கிறது. இந்த ஆண்டு, பிரிக்ஸ் நாடுகள், யுனிடோவுடன் இணைந்து, 4-வது தொழில் புரட்சிக்கு ஏற்ற திறமையான தொழிலாளர்களை தயார் செய்ய ஒருமித்த கருத்தை எட்டியது மிகவும் குறிப்பிடத்தக்கது.
2022-ல் தொடங்கப்பட்ட பிரிக்ஸ் தடுப்பூசி ஆராய்ச்சி, மேம்பாட்டு மையம் அனைத்து நாடுகளிலும் சுகாதார பாதுகாப்பை அதிகரிக்க உதவுகிறது. டிஜிட்டல் சுகாதாரத்தில் இந்தியாவின் வெற்றிகரமான அனுபவத்தை பிரிக்ஸ் நாடுகளுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறோம்.
நண்பர்களே,
பருவநிலை மாற்றம் என்பது நமது பொதுவான முன்னுரிமைக்குரிய விஷயமாக இருந்து வருகிறது.
ரஷ்யாவின் தலைமையில் பிரிக்ஸ் திறந்த கார்பன் சந்தை ஒத்துழைப்புத் தொடர்பாக எட்டப்பட்ட ஒருமித்த கருத்து வரவேற்கத்தக்கது. இந்தியாவிலும், பசுமை வளர்ச்சி, பருவநிலை நெகிழ்திறன் உள்கட்டமைப்பு, பசுமை மாற்றம் ஆகியவற்றுக்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. சர்வதேச சூரியசக்தி கூட்டணி, பேரிடர் தடுப்பு உள்கட்டமைப்புக்கான கூட்டணி, சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கை முறை இயக்கம், தாயின் பெயரில் ஒரு மரக்கன்று நடும் இயக்கம் போன்ற பல்வேறு முன்முயற்சிகளை இந்தியா மேற்கொண்டுள்ளது.
கடந்த ஆண்டு, ஐநா பருவநிலை மாநாட்டில், பசுமைக் கடன் என்ற முக்கியமான முன்முயற்சியை நாங்கள் தொடங்கினோம். இந்த முயற்சிகளில் இணையுமாறு பிரிக்ஸ் நாடுகளுக்கு நான் அழைப்பு விடுத்துள்ளேன்.
பிரிக்ஸ் நாடுகள் அனைத்திலும் அடிப்படை வசதிகளை ஏற்படுத்த சிறப்பு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.
இந்தியாவில் பன்முக இணைப்பை விரைவாக விரிவுபடுத்துவதற்காக விரைவு சக்தி தளம் என்ற டிஜிட்டல் தளத்தை நாங்கள் உருவாக்கியுள்ளோம். இது ஒருங்கிணைந்த உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டமிடல், செயலாக்கத்திற்கு உதவியுள்ளதுடன், சரக்கு போக்குவரத்து செலவுகளையும் குறைத்துள்ளது.
எங்கள் அனுபவங்களை உங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைவோம்.
நண்பர்களே,
பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையே நிதி ஒருங்கிணைப்பை அதிகரிக்கும் முயற்சிகளை நாங்கள் வரவேற்கிறோம்.
உள்ளூர் நாணயங்களில் வர்த்தகம், சுமூகமான எல்லை தாண்டிய பணப்பட்டுவாடா ஆகியவை நமது பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்தும். இந்தியா உருவாக்கிய ஒருங்கிணைந்த பணப்பரிவர்த்தனை இடைமுகம் (UPI) ஒரு பெரிய வெற்றியாகும். இது பல நாடுகளில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு, ஐக்கிய அரபு எமிரேட்ஸிலும் இது தொடங்கப்பட்டது. இந்தத் துறையில் மற்ற பிரிக்ஸ் நாடுகளுடனும் இந்தியா ஒத்துழைத்து செயல்பட முடியும்.
நண்பர்களே
பிரிக்ஸ் அமைப்பின் கீழ் ஒத்துழைப்பை அதிகரிக்க இந்தியா முழுமையாக உறுதிபூண்டுள்ளது.
நமது பன்முகத்தன்மை மீதான நமது வலுவான நம்பிக்கை நமது பலம். நமது இந்த வலிமையும், மனிதகுலத்தின் மீது நாம் பகிர்ந்து கொண்டுள்ள நம்பிக்கையும், வரும் தலைமுறையினருக்கு வளமான, பிரகாசமான எதிர்காலத்திற்கு அர்த்தமுள்ள வடிவம் கொடுக்க உதவும்.
இன்றைய மிக முக்கியமான, மதிப்புமிக்க விவாதங்களுக்காக அனைவருக்கும் நன்றி.
பிரிக்ஸ் அமைப்பின் அடுத்த தலைவர் என்ற முறையில், அதிபர் லூலாவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். பிரிக்ஸ் அமைப்பின் தலைமைப் பொறுப்பில் நீங்கள் வெற்றிபெற இந்தியா முழு ஆதரவு அளிக்கும்.
அதிபர் புதினுக்கும், அனைத்து தலைவர்களுக்கும் மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
பொறுப்புத் துறப்பு – இது பிரதமர் ஆற்றிய உரையின் உத்தேசமான மொழிபெயர்ப்பு ஆகும். பிரதமர் தமது உரையை இந்தியில் வழங்கியிருந்தார்.
----
TS/PLM/KPG/DL
(Release ID: 2067450)
Visitor Counter : 47
Read this release in:
Marathi
,
Hindi
,
Punjabi
,
Gujarati
,
Kannada
,
Assamese
,
Manipuri
,
English
,
Urdu
,
Bengali
,
Odia
,
Telugu
,
Malayalam