நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பாரத் கொண்டைக்கடலையின் 2-ம் கட்ட சில்லறை விற்பனை வேன்கள் - தில்லியில் கொடியசைத்து தொடங்கி வைத்தார் அமைச்சர் திரு பிரல்ஹாத் ஜோஷி

Posted On: 23 OCT 2024 1:38PM by PIB Chennai

மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு, பொது விநியோகத் துறை அமைச்சர் திரு  பிரல்ஹாத் ஜோஷி, தில்லியில் பாரத் கொண்டைக்கடலையை வாகனங்கள் மூலம் விற்பனை செய்யும் இரண்டாம் கட்ட சில்லறை விற்பனை நடைமுறையை இன்று (23.10.2024) தொடங்கி வைத்தார். தேசிய நுகர்வோர் கூட்டுறவு கூட்டமைப்பு, தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பு, மத்திய விற்பனை நிலையங்கள் ஆகியவற்றின் சார்பில் இயக்கப்படும் கொண்டைக்கடலை விற்பனைக்கான  வேன்களை அமைச்சர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

பாரத் கொண்டைக்கடலை விற்பனையின் 2-ம் கட்டத்தில், கையிருப்பிலிருந்து 3 லட்சம் டன் கொண்டைக்கடலை, உடைத்த கடலை  ஆகியவை நுகர்வோருக்கு முறையே கிலோ ரூ.70, ரூ.58 என்ற விலைகளில் சில்லறை விற்பனை செய்யப்படுகிறது. கொண்டைக்கடலையைத் தவிர, அரசு பாரத் பிராண்டின் கீழ் பாசிப் பருப்பு, மசூர் பருப்பு ஆகியவற்றையும் விற்பனை செய்கிறது.

நிகழ்ச்சியின் போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் திரு ஜோஷி, நுகர்வோருக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மலிவு விலையில் கிடைப்பதை உறுதி செய்வதில் அரசின் நிலைப்பாட்டை உறுதிப்படுத்தும் வகையில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அரிசி, கோதுமை மாவு, பருப்பு, வெங்காயம் போன்ற அடிப்படை உணவுப் பொருட்களின் சில்லறை விற்பனை மூலம் நேரடியாக அரசே விற்பனை செய்வது நிலையான விலையைப் பராமரிக்க உதவியுள்ளது என்று அவர் கூறினார்.

பருப்பு வகைகள் எளிதில் நியாயமான விலையில் கிடைப்பதை உறுதி செய்ய மத்திய அரசு பல்வேறு கொள்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது என அவர் தெரிவித்தார். உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிப்பதற்காக, அரசு ஆண்டுதோறும் பருப்பு வகைகளின் குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்தியுள்ளது என்றும் அமைச்சர் திரு பிரல்ஹாத் ஜோஷி குறிப்பிட்டார்.

***

TS/PLM/KPG/KR/DL




(Release ID: 2067421) Visitor Counter : 36