தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
ஐஎப்எப்ஐ 2024 ஆஸ்திரேலியாவின் வளமான திரைப்பட மரபுகள் மற்றும் துடிப்பான சினிமா கலாச்சாரத்தை கொண்டாடுகிறது
2024 நவம்பர் 20 முதல் 28-ம் தேதி வரை கோவாவில் நடைபெறவுள்ள இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் (ஐஎப்எப்ஐ) 55-வது பதிப்பில், ஆஸ்திரேலியா "கவனம் செலுத்தப்படும் நாடு" என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதனை அறிவிப்பதில் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் பெருமிதம் கொள்கிறது. இந்தச் சிறப்பு அங்கீகாரம் உலகளாவிய திரைப்படத் துறைக்கு ஆஸ்திரேலிய சினிமாவின் ஆற்றல்மிக்க பங்களிப்பைக் கொண்டாடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அதன் வளமான கதை சொல்லல் மரபுகள், துடிப்பான திரைப்பட கலாச்சாரம் மற்றும் புதுமையான சினிமா நுட்பங்களை எடுத்துக்காட்டுகிறது. இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் ஏற்கனவே ஆடியோ விஷுவல் கூட்டுத் தயாரிப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
ஐஎப்எப்ஐ-ல் கவனம் செலுத்தப்படும் நாடு என்ற
"ஃபோகஸ் நாடு" பிரிவு ஐஎப்எப்ஐ-ன் முக்கிய அம்சமாகும். இது ஒரு நாட்டின் சிறந்த சமகாலத் திரைப்படங்களை பிரத்யேகமாக திரையிடுவதைக் குறிக்கிறது. ஆஸ்திரேலியாவின் மாறுபட்ட கலாச்சாரப் பின்னணி மற்றும் உலகளவில் பாராட்டப்பட்ட திரைப்பட இயக்குநர்கள் சினிமாவில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளனர். இது இந்த ஆண்டிற்கான பொருத்தமான தேர்வாக அமைகிறது. இந்த உள்ளடக்கம் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியத் திரைப்படத் தொழில்களுக்கு இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதைப் பிரதிபலிக்கிறது.
ஆஸ்திரேலிய திரைப்படங்களின் பிரத்யேகக் காட்சி
விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட நாடகங்கள் முதல் சக்திவாய்ந்த ஆவணப்படங்கள், அதிர்ச்சியூட்டும் த்ரில்லர்கள் மற்றும் இலகுவான நகைச்சுவைகள் வரை பல்வேறு வகைக் கலவையை வழங்கும் ஏழு ஆஸ்திரேலிய திரைப்படங்களை ஐஎப்எப்ஐ கவனமாக தேர்ந்தெடுத்து வழங்கும். இந்தத் திரைப்படங்கள் ஆஸ்திரேலியாவின் தனித்துவமான கலாச்சார அடையாளத்தை வெளிப்படுத்தும். அதன் பழங்குடி மற்றும் சமகால சமூகங்கள் குறித்த கதைகளின் துடிப்பான நிறமாலையைப் பிரதிபலிக்கும்.
இந்திய சர்வதேச திரைப்பட விழாவுடன் (ஐ.எஃப்.எஃப்.ஐ) நடைபெறும் தெற்காசியாவின் மிகப்பெரிய திரைப்படச் சந்தையான பிலிம் பஜாரில் ஆஸ்திரேலியா பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள்.ஸ்கிரீன் ஆஸ்திரேலியா, அரசு திரைப்படக் கமிஷன்கள் மற்றும் ஆஸ்திரேலியாவை ஒரு படப்பிடிப்பு இடமாக ஊக்குவிக்கும் ஏஜென்சியான ஆஸ்ஃபிலிம் ஆகியவற்றிலிருந்து குறிப்பிடத் தக்க எண்ணிக்கையில் ஆஸ்திரேலியாவின் பங்கேற்பு இருக்கும். சிறப்பு திரைப்பட அலுவலக கண்காட்சி பகுதியில் ஆஸ்திரேலியாவின் பிரபலமான இடங்கள் மற்றும் படபிடிப்புக்கான ஊக்கத்தொகை உள்ளிட்ட தங்கள் சலுகைகளை அவர்கள் காட்சிப்படுத்துவார்கள். ஆஸ்திரேலிய அரசிடமிருந்து நிதியுதவி பெறும் ஆறு இயக்குநர்களைக் கொண்ட குழு ஃபிலிம் பஜாரில் கலந்து கொண்டு, கூட்டுத் தயாரிப்பு வாய்ப்புகளை ஆராயும். பிலிம் பஜாரில் சிறப்பு ஆஸ்திரேலிய கூட்டுத் தயாரிப்பு தினம் என்ற நிகழ்ச்சி ஒரு நாள் நடைபெறும்.அங்கு இரு நாடுகளின் திரைப்பட இயக்குநர் பிரதிநிதிகளுக்கு கூட்டு தயாரிப்பு குறித்து முடிவு எடுக்க வாய்ப்பு வழங்கப்படும். ஆஸ்திரேலிய திட்டமான ஹோம் பிஃபோர் நைட்டை இணை தயாரிப்பு பிரிவில் திரையிட பிலிம் பஜார் தேர்ந்தெடுத்துள்ளது.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு இடையில் வளர்ந்து வரும் கூட்டுறவின் அடிப்படையில் பிரத்யேக குழு ஒன்று "அறிவு" தொடரில் இணை தயாரிப்பு குறித்து விவாதிக்கும். தயாரிப்பாளர்கள் மற்றும் திரைத்தொழில் நிபுணர்கள் கொண்ட குழு இணை தயாரிப்பின் படைப்பாக்க மற்றும் விநியோக அம்சங்களுக்கான வாய்ப்புகளைக் கண்டறியும்.
மேட் மேக்ஸ்: ப்யூரி ரோட், தி இங்கிலீஷ் பேஷண்ட் போன்ற புகழ்பெற்ற படங்களில் பணியாற்றியதற்காக அறியப்பட்ட அகாடமி விருது பெற்ற ஒளிப்பதிவாளர் ஜான் சீல் தலைமையிலான ஒளிப்பதிவு மாஸ்டர் வகுப்பு ஒரு முக்கிய ஈர்ப்பாக இருக்கும். இந்த அமர்வு அவரது கலைப் பயணத்தை ஆராய்ந்து, வளர்ந்து வரும் திரைப்பட இயக்குநர்கள் மற்றும் ஆர்வலர்களுக்கு விலைமதிப்பற்ற தொழில்நுட்ப நுண்ணறிவுகளை வழங்கும்.
55-வது ஐ.எஃப்.எஃப்.ஐ உலக சினிமாவின் ஒரு உற்சாகமான கொண்டாட்டமாக அமைக்கப்பட்டுள்ளது.இது உலகெங்கிலும் உள்ள திரைப்படங்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுப்பை பார்வையாளர்களுக்கு வழங்கும். குழு விவாதங்கள், சிந்தையை ஈர்க்கக்கூடிய பயிலரங்குகள் மற்றும் பிரத்யேக திரையிடல்கள் இருக்கும்.இந்த ஆண்டின் "கவனம் செலுத்தப்படும் நாடு" என்ற பிரிவில் ஆஸ்திரேலியா மீதான கவனம் கலாச்சாரப் பரிமாற்றத்தை வளர்ப்பதற்கும் எல்லைகளைக் கடந்த சினிமாக் கலையை ஊக்குவிப்பதற்கும் உதவும். இது ஐஎப்எப்ஐ-ன் நோக்கத்தை மேம்படுத்துவது உறுதி.
1952-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்திய சர்வதேச திரைப்பட விழா ஆசியாவின் மிக முக்கியமான திரைப்பட விழாக்களில் ஒன்றாக விளங்குகிறது.இது உலகெங்கிலும் உள்ள திரைப்பட இயக்குநர்கள் தங்கள் படைப்புகளை திரையிடுவதற்கான தளமாக செயல்படுகிறது. கோவாவில் ஆண்டுதோறும் நடைபெறும், ஐஎப்எப்ஐ இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்கள் மற்றும் திரைப்பட ஆர்வலர்களை உலக சினிமாவின் சிறப்பானவற்றைக் கொண்டாட ஈர்க்கிறது.
***
TS/PKV/AG/KR/DL
(Release ID: 2067385)
Visitor Counter : 42
Read this release in:
Malayalam
,
English
,
Gujarati
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Telugu
,
Kannada