கப்பல் போக்குவரத்து அமைச்சகம்
2-வது தேசிய கலங்கரை விளக்க விழா ஒடிசாவின் பூரியில் தொடங்கியது- மத்திய இணையமைச்சர்கள் திரு சாந்தனு தாக்கூர், திரு சுரேஷ் கோபி பங்கேற்பு
Posted On:
19 OCT 2024 4:39PM by PIB Chennai
2-வது தேசிய கலங்கரை விளக்க விழாவின் முதல் நாளில், துறைமுகங்கள், கப்பல், நீர்வழிகள் அமைச்சகம் இன்று (19.10.2024) பூரியில் கலங்கரை விளக்க சுற்றுலா மாநாடு 2024-ஐ நடத்தியது. இதில் அரசு அதிகாரிகள், சுற்றுலா வல்லுநர்கள் உட்பட 100 க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டனர். கலங்கரை விளக்க சுற்றுலாவின் பரந்த திறனையும், கடல்சார் கட்டமைப்புகளைப் பாதுகாப்பதற்கான உத்திகளையும், சுற்றுலா வளர்ச்சியை பாரம்பரிய பாதுகாப்புடன் இணைப்பதையும் இந்த நிகழ்வு நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த மாநாட்டில் மத்திய சுற்றுலாத் துறை இணையமைச்சர் திரு சுரேஷ் கோபி, ஒடிசாவின் துணை முதலமைச்சர் திருமதி பிரவதி பரிதா, பூரியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் திரு சம்பித் பத்ரா உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். பாரம்பரிய முறையில் விளக்கேற்றி விழா தொடங்கியதைத் தொடர்ந்து, துறைமுகங்கள், கப்பல் நீர்வழிகள் துறை இணை அமைச்சர் திரு சாந்தனு தாக்கூர் சிறப்புரையாற்றினார். உள்ளூர் பொருளாதாரங்களை உயர்த்துவதற்கும் இந்தியாவின் வளமான கடல்சார் பாரம்பரியத்தை பாதுகாப்பதற்கும் ஒரு வழிமுறையாக கலங்கரை விளக்க சுற்றுலாவை வளர்ப்பதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார்.
இந்தியாவின் கடல்சார் பாரம்பரியத்தின் மகத்தான திறனை வெளிப்படுத்தும் வகையில் துறைமுகங்கள், கப்பல், நீர்வழிகள் அமைச்சகம் நமது வரலாற்றுச் சிறப்பு மிக்க கலங்கரை விளக்கங்களுக்கு புத்துயிர் அளிப்பதாக அவர் கூறினார்.
நமது அடையாளங்களை ஆராய்ந்து, அவை வழங்கும் பாரம்பரியம் மற்றும் நவீனத்துவத்தின் தனித்துவமான கலவையை அனுபவிக்க அனைத்து பார்வையாளர்களுக்கும் அவர் அழைப்பு விடுத்தார்.
கலங்கரை விளக்க இயக்குநரகம் இந்தியாவில் கலங்கரை விளக்க சுற்றுலாவின் தற்போதைய நிலை மற்றும் எதிர்கால வாய்ப்புகளை விளக்கியது. 2023-24-ம் நிதியாண்டில் மட்டும், 75 பிரத்யேக கலங்கரை விளக்கங்கள் 16 லட்சம் பார்வையாளர்களை ஈர்த்துள்ளன. செப்டம்பர் 2024 நிலவரப்படி, நடப்பு நிதியாண்டான 2024-25-ல் ஏற்கனவே 10 லட்சத்துக்கும் அதிகமான பார்வையாளர்கள் இவற்றைப் பார்த்துள்ளனர். இவை வேலைவாய்ப்புகளையும் உருவாக்கியுள்ளன.
விளக்க நிகழ்வைத் தொடர்ந்து இரண்டு குழு அமர்வுகள் நடைபெற்றன. "கலங்கரை விளக்க சுற்றுலா மற்றும் பாரம்பரியம்", "கலங்கரை விளக்கங்களின் பாதுகாப்பு" ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது.
இந்த மாநாட்டின் மூலம், துறைமுகங்கள், கப்பல், நீர்வழிகள் அமைச்சகம் கலங்கரை விளக்கங்களின் வரலாறு, சுற்றுலாவின் தனித்துவமான அம்சம் ஆகியவை குறித்து, எதிர்கால சந்ததியினருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
*****
PLM/ KV
(Release ID: 2066348)
Visitor Counter : 67