குடியரசுத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

குடியரசுத் தலைவர் நேற்று மவுரித்தானியாவுக்குப் பயணம் மேற்கொண்டார்

மவுரித்தானியா அதிபரை சந்தித்து பேச்சுவார்த்தை

மவுரித்தானியாவில் இந்திய சமூகத்தினரிடையே குடியரசுத் தலைவர் முர்மு உரையாற்றினார்

இந்திய சமூகத்தின் திறன்கள், நிபுணத்துவம் மற்றும் அனுபவம் இந்தியாவின் முன்னேற்றத்திற்கு முக்கியம்: குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு

தூதர்களுக்கான பயிற்சி, கலாச்சார பரிமாற்றம், விசா விலக்கு உள்ளிட்ட துறைகளில் நான்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டு பரிமாறிக் கொள்ளப்பட்டன

Posted On: 17 OCT 2024 11:12AM by PIB Chennai

அல்ஜீரியா, மவுரித்தானியா, மலாவி ஆகிய நாடுகளுக்கான அரசுமுறைப் பயணத்தின் இரண்டாம் கட்டமாக குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு நேற்று (அக்டோபர் 16, 2024) மவுரித்தானியா சென்றார். நோவாக்சோட்-அம்டான்சி விமான நிலையத்தில் வந்திறங்கிய திருமதி திரௌபதி முர்முவை மவுரித்தானியா இஸ்லாமிய குடியரசின் அதிபர் திரு முஹம்மது ஓல்ட் கசௌனி அன்புடன் சம்பிரதாய முறைப்படி வரவேற்றார். இந்த நிகழ்ச்சியில் மவுரித்தானியாவின் பிரதமர் மற்றும் அமைச்சர்களும் கலந்து கொண்டனர்.

 

இந்திய குடியரசுத்தலைவர் ஒருவர் மவுரித்தானியா செல்வது இதுவே முதல் முறையாகும். குடியரசுத் தலைவருடன் இணையமைச்சர் திரு. சுகநாதா மஜும்தார், நாடாளுமன்ற உறுப்பினர்கள் திரு. முகேஷ்குமார் தலால் மற்றும் திரு. அதுல் கார்க் ஆகியோர் சென்றிருந்தனர்.

 

மவுரித்தானியாவுக்கான இந்திய தூதர் அளித்த வரவேற்பு நிகழ்ச்சியில், இந்திய சமூகத்தினரிடையே குடியரசுத் தலைவர் உரையாற்றினார்.

 

இந்திய சமூகத்தினரிடையே உரையாற்றிய குடியரசுத் தலைவர், மவுரித்தானியாவின் சமூக-பொருளாதார வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியதற்காக இந்திய சமூகத்தினரைப் பாராட்டினார். அவர்களின் திறன்கள், நிபுணத்துவம் மற்றும் அனுபவமும் இந்தியாவின் முன்னேற்றத்திற்கு முக்கியமானவை என்று அவர் கூறினார்.

 

இந்திய சமூகத்தினருக்கு ஆதரவளித்து வரும் மவுரித்தானியா அரசையும், மக்களையும் குடியரசுத் தலைவர் பாராட்டினார் . அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் வரவேற்கும் உணர்வின் காரணமாக, மவுரித்தானியாவில் உள்ள இந்திய சமூகம் செழிப்பாக உள்ளது என்று அவர் கூறினார்.

 

சமூக வரவேற்பு நிகழ்வின் பின்னர், அதிபர் மாளிகைக்கு சென்ற  குடியரசுத் தலைவர், அங்கு மவுரித்தானியா அதிபர் முஹம்மது ஓல்ட் கசௌனியைச் சந்தித்தார். இருநாடுகளுக்கும் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர். அதைத் தொடர்ந்து, தூதுக்குழு அளவிலான பேச்சுவார்த்தைக்குத் தலைமை தாங்கிய அவர்கள், தூதர்கள் பயிற்சி, கலாச்சார பரிமாற்றம், விசா விலக்கு மற்றும் வெளியுறவு அலுவலக ஆலோசனைகள் ஆகிய துறைகளில் நான்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டு, பரிமாறிக் கொள்ளப்பட்டது.

 

முன்னதாக, மவுரித்தானியாவின் வெளிவிவகாரங்கள், ஒத்துழைப்புத் துறை அமைச்சர் திரு முகமது சலீம் ஓல்ட் மெர்சூக் குடியரசுத் தலைவரைச் சந்தித்தார்.

 

மூன்று நாடுகளுக்கான தமது பயணத்தின் இறுதிக் கட்டமாக குடியரசுத் தலைவர் மலாவிக்கு புறப்பட்டுச் சென்றார்.

***

PKV/KV/KR


(Release ID: 2065665) Visitor Counter : 55