பிரதமர் அலுவலகம்
மகாராஷ்டிராவில் ரூ.7,600 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார்
மகாராஷ்டிராவில் 10 அரசு மருத்துவக் கல்லூரிகளை தொடங்கி வைத்தார்
நாக்பூரில் உள்ள டாக்டர் பாபா சாஹேப் அம்பேத்கர் சர்வதேச விமான நிலைய மேம்பாட்டு பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்
ஷீரடி விமான நிலையத்தில் புதிய ஒருங்கிணைந்த முனைய கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டினார்
மும்பையில் இந்திய திறன் நிறுவனத்தையும் மகாராஷ்டிரா மாநிலத்தில் கல்வி ஆராய்ச்சி மையத்தையும் தொடங்கி வைத்தார்
மகாராஷ்டிராவில் தொடங்கப்படும் திட்டங்கள் உள்கட்டமைப்பை மேம்படுத்தி, போக்குவரத்து இணைப்பை அதிகரித்து, இளைஞர்களுக்கு அதிகாரம் அளிக்கும்: பிரதமர்
Posted On:
09 OCT 2024 3:06PM by PIB Chennai
மகாராஷ்டிர மாநிலத்தில் ரூ.7,600 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (09.10.2024) காணொலிக் காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார். நாக்பூரில் உள்ள டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் சர்வதேச விமான நிலைய மேம்பாட்டுக்கு அடிக்கல் நாட்டுதல், ஷீரடி விமான நிலையத்தில் புதிய ஒருங்கிணைந்த முனைய கட்டடம் ஆகியவை இன்று மேற்கொள்ளப்பட்ட திட்டப் பணிகளில் அடங்கும். மகாராஷ்டிராவில் 10 அரசு மருத்துவக் கல்லூரிகளின் செயல்பாட்டையும் தொடங்கி வைத்த திரு நரேந்திர மோடி, மும்பையில் இந்திய திறன் நிறுவனத்தையும், மகாராஷ்டிர மாநிலத்தில் கல்வி ஆராய்ச்சி மையத்தையும் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், மகாராஷ்டிராவில் 10 புதிய மருத்துவக் கல்லூரிகள், நாக்பூர் விமான நிலைய நவீனமயமாக்கல், அதன் விரிவாக்கம், ஷீரடி விமான நிலையத்திற்கான புதிய முனைய கட்டடம் கட்டுமானம் உள்ளிட்ட முக்கிய உள்கட்டமைப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்படுவதை சுட்டிக் காட்டினார். தற்போதைய வளர்ச்சித் திட்டங்களுக்காக மகாராஷ்டிர மக்களுக்கு அவர் வாழ்த்துத் தெரிவித்தார்.
ரூ.30,000 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக, அண்மையில் மும்பைக்கும், தானேவுக்கும் சென்றதை நினைவு கூர்ந்த பிரதமர், மெட்ரோ ரயில் கட்டமைப்பை விரிவுபடுத்துதல், விமான நிலையங்களை மேம்படுத்துதல், நெடுஞ்சாலை திட்டங்கள், உள்கட்டமைப்பு, சூரிய சக்தி, ஜவுளி பூங்காக்கள் போன்ற பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் இதற்கு முன்பு பல்வேறு மாவட்டங்களில் தொடங்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டினார். விவசாயிகள், மீனவர்கள், கால்நடை வளர்ப்போர் உள்ளிட்ட பிரிவினருக்குப் புதிய திட்டங்கள் தொடங்கப்பட்டதை சுட்டிக்காட்டிய திரு நரேந்திர மோடி, இந்தியாவின் மிகப்பெரிய கொள்கலன் துறைமுகமான வாதவன் துறைமுகத்திற்கும் மகாராஷ்டிராவில் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது என்றார். மகாராஷ்டிராவின் வரலாற்றில் ஒருபோதும் பல்வேறு துறைகளில் இவ்வளவு விரைவாக, இவ்வளவு பெரிய அளவில் வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டதில்லை என்று பிரதமர் குறிப்பிட்டார்.
செம்மொழியாக மராத்தி மொழி அண்மையில் அங்கீகரிக்கப்பட்டதை நினைவுகூர்ந்த பிரதமர், ஒரு மொழிக்கு உரிய மரியாதை கிடைக்கும்போது, அது ஒட்டுமொத்த தலைமுறையினருக்கும் அதிகாரம் அளிக்கிறது என்று குறிப்பிட்டார். இதன் மூலம் கோடிக்கணக்கான மராத்தி சகோதரர்களின் கனவு நிறைவேறியது என்றும் அவர் கூறினார். மராத்தி செம்மொழியாக அங்கீகரிக்கப்பட்டதை மகாராஷ்டிர மக்கள் கொண்டாடுவதாக திரு நரேந்திர மோடி குறிப்பிட்டார். மகாராஷ்டிராவின் கிராமங்களைச் சேர்ந்த மக்களிடமிருந்து மகிழ்ச்சியும், நன்றி உணர்வும் அடங்கிய செய்திகள் தமக்கு வருவதாகவும் அவர் கூறினார். மகாராஷ்டிர மக்களின் ஆசீர்வாதத்தால் மராத்தி மொழி செம்மொழியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்றும் திரு நரேந்திர மோடி குறிப்பிட்டார். சத்ரபதி சிவாஜி மகராஜ், பாபா சாஹேப் அம்பேத்கர், ஜோதிபா பூலே, சாவித்ரிபாய் பூலே போன்ற மேதைகளின் ஆசீர்வாதத்தால் மகாராஷ்டிராவின் வளர்ச்சிப் பணிகள் நடைபெற்று வருவதாக பிரதமர் குறிப்பிட்டார்.
ஹரியானா மாநிலம், ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் வெளியான சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் நாட்டு மக்களின் மனநிலையை வெளிப்படுத்தியுள்ளன என்று பிரதமர் குறிப்பிட்டார். இரண்டு பதவிக்காலங்களை வெற்றிகரமாக நிறைவு செய்த பின்னர் ஹரியானாவில் தொடர்ந்து மூன்றாவது முறையாக வெற்றி பெற்றது வரலாற்று சிறப்புமிக்கது என்று அவர் மேலும் கூறினார்.
பிளவுபடுத்தும் அரசியல் செய்து தவறாக வழிநடத்துபவர்கள் குறித்து, வாக்காளர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். அரசியல் ஆதாயங்களுக்காக சமூகத்தை சீர்குலைக்க முயற்சிப்பவர்களுக்கு திரு நரேந்திர மோடி எச்சரிக்கை விடுத்தார். சமுதாயத்தில் பிளவை ஏற்படுத்தும் முயற்சிகளை மகாராஷ்டிர மக்கள் நிராகரிப்பார்கள் என்று பிரதமர் தெரிவித்தார்.
கடந்த 10 ஆண்டுகளில், நாட்டின் வளர்ச்சிக்காக நவீன உள்கட்டமைப்பை உருவாக்கும் மாபெரும் பணிகளை அரசு தொடங்கியுள்ளது என்று பிரதமர் கூறினார். லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்காக மாநிலத்தில் 10 புதிய மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்கி வைத்ததைக் குறிப்பிட்ட பிரதமர், இன்று, நாம் கட்டடங்களை மட்டும் கட்டவில்லை என்றும் வளமான, ஆரோக்கியமான மகாராஷ்டிராவுக்கான அடித்தளத்தை அமைத்துள்ளதாகவும் கூறினார். தானே, அம்பர்நாத், மும்பை, நாசிக், ஜல்னா, புல்தானா, ஹிங்கோலி, வாஷிம், அமராவதி, பங்க்தாரா, கட்சிரோலி ஆகிய மாவட்டங்கள் லட்சக்கணக்கான மக்களுக்கு சேவை மையங்களாக மாறும் என்று அவர் கூறினார். 10 புதிய மருத்துவக் கல்லூரிகள் மகாராஷ்டிரத்தில் மேலும், 900 மருத்துவ இடங்களை அதிகரிக்கும் என்றும், மாநிலத்தில் மொத்த மருத்துவ இடங்களின் எண்ணிக்கை சுமார் 6,000 ஆக உயரும் என்றும் பிரதமர் சுட்டிக்காட்டினார். செங்கோட்டையிலிருந்து 75,000 புதிய மருத்துவ இடங்களை உருவாக்கும் தமது தீர்மானத்தை நினைவுகூர்ந்த பிரதமர், இன்றைய நிகழ்ச்சி இந்த பாதையில் ஒரு பெரிய முன்னேற்றமாகும் என்று கூறினார்.
மருத்துவக் கல்வியை அரசு எளிதாக்கியுள்ளது என்று குறிப்பிட்ட பிரதமர், மகாராஷ்டிர இளைஞர்களுக்கு புதிய வழிகளுக்கான கதவுகள் திறக்கப்பட்டுள்ளன என்றார். ஏழை, நடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்த பல குழந்தைகள் மருத்துவர்களாக வேண்டும் என்றும், அவர்களின் கனவுகள் நனவாவதை உறுதி செய்வதே அரசின் முன்னுரிமை என்றும் அவர் கூறினார். ஒரு காலத்தில், இது போன்ற சிறப்பு படிப்புகளுக்கு தாய்மொழியில் புத்தகங்கள் கிடைக்காதது பெரும் சவாலாக இருந்தது என்று திரு நரேந்திர மோடி கூறினார். இந்த சிக்கலை அரசு முடிவுக்குக் கொண்டு வந்து, மகாராஷ்டிர இளைஞர்கள் மராத்தி மொழியில் மருத்துவம் படிக்க வாய்ப்பை ஏற்படுத்தி உள்ளது என்று பிரதமர் குறிப்பிட்டார். மருத்துவர்களாக வேண்டும் என்ற இளைஞர்களின் கனவை தாய்மொழியில் படிப்பதன் மூலம் நிறைவேறும் என்றும் அவர் கூறினார்.
வாழ்க்கையை வசதியானதாக மாற்றுவதற்கான அரசின் முயற்சிகள் வறுமைக்கு எதிரான போராட்டத்தில் ஒரு முக்கிய அங்கம் என்று பிரதமர் குறிப்பிட்டார். வறுமையை முந்தைய அரசுகள், அரசியல் ஆதாயத்திற்காகப் பயன்படுத்தியதாக அவர் குற்றம் சாட்டினார். தமது அரசு பத்து ஆண்டுகளுக்குள் 25 கோடி மக்களை வறுமையிலிருந்து மீட்டுள்ளது என்றும் அவர் கூறினார். நாட்டில் சுகாதார சேவைகளில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை விவரித்த திரு நரேந்திர மோடி, இன்று ஒவ்வொரு ஏழை நபரும் இலவச மருத்துவ சிகிச்சைக்காக ஆயுஷ்மான் அட்டையை பெற்றுள்ளனர் என்றார். மக்கள் மருந்தகங்களில் அத்தியாவசிய மருந்துகள் மிகக் குறைந்த விலையில் கிடைப்பதாகவும் இதய நோயாளிகளுக்கான ஸ்டெண்டுகள் 80 முதல் 85 சதவீதம் வரை விலை மலிவாகி உள்ளது என்றும் திரு நரேந்திர மோடி குறிப்பிட்டார். புற்றுநோய் சிகிச்சைக்குத் தேவையான மருந்துகளின் விலையையும் அரசு குறைத்துள்ளது என்று அவர் கூறினார். அரசு மருத்துவக் கல்லூரிகள், அரசு மருத்துவமனைகள் ஆகியவற்றின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் மருத்துவ சிகிச்சை செலவு குறைந்ததாக மாறியுள்ளது என்று கூறிய திரு நரேந்திர மோடி, இந்த அரசு ஏழைகளுக்கு சமூகப் பாதுகாப்பு என்ற வலுவான கேடயத்தை வழங்கியுள்ளது என்றார்.
ஒரு நாட்டின் இளைஞர்கள் தன்னம்பிக்கைமிக்கவர்களாக இருந்தால் மட்டுமே உலகம் அதன் மீது நம்பிக்கை வைக்கிறது என்று பிரதமர் கூறினார். இன்றைய இளம் இந்தியாவின் நம்பிக்கை நாட்டின் புதிய எதிர்காலத்தின் கதையை எழுதுகிறது என்று குறிப்பிட்ட அவர், உலகெங்கிலும் கல்வி, சுகாதாரம் மற்றும் மென்பொருள் மேம்பாடு ஆகியவற்றில் பரந்த வாய்ப்புகளைக் கொண்ட மனித வளத்திற்கான குறிப்பிடத்தக்க மையமாக இந்தியாவை உலக சமூகம் பார்க்கிறது என்பதை எடுத்துரைத்தார். இந்த வாய்ப்புகளுக்கு இந்திய இளைஞர்களைத் தயார்படுத்த, உலகத் தரத்திற்கு ஏற்ப அவர்களின் திறன்களை அரசு ஒருங்கிணைத்து வருவதாக பிரதமர் தெரிவித்தார். கல்விக் கட்டமைப்பை முன்னெடுத்துச் செல்வதை நோக்கமாகக் கொண்ட வித்யா சமிக்ஷா கேந்திரா உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மகாராஷ்டிராவில் தொடங்கப்பட்டதையும், மும்பையில் இந்திய திறன் கல்வி நிறுவனத்தைத் தொடங்கியதையும் குறிப்பிட்ட பிரதமர், சந்தையின் தேவைகளுக்கு ஏற்ப, இளைஞர்களின் திறமையை ஒருங்கிணைக்க எதிர்காலம் சார்ந்த பயிற்சிகள் அளிக்கப்படும் என்றார். மேலும், இந்திய வரலாற்றில் முதன்முறையாக இளைஞர்களுக்கு ஊதியத்துடன் கூடிய தொழில் பழகுநர் பயிற்சி வழங்கும் அரசின் முன்முயற்சியை திரு மோடி எடுத்துரைத்தார். இதன் மூலம் மாணவர்கள் தங்கள் கல்வி உதவித்தொகையின் போது ரூ.5,000 உதவித்தொகையைப் பெறுவார்கள். இந்த முயற்சியின் ஒரு பகுதியாக ஆயிரக்கணக்கான நிறுவனங்கள் பதிவு செய்து வருவது குறித்து அவர் மகிழ்ச்சி தெரிவித்தார். இதன் மூலம் இளைஞர்கள் மதிப்புமிக்க அனுபவங்களைப் பெறவும், அவர்களுக்கு புதிய வாய்ப்புகளைத் ஏற்படுத்தவும் உதவுகிறார்கள் என்று தெரிவித்தார்.
இளைஞர்களுக்காக இந்தியா மேற்கொண்டு வரும் முயற்சிகள் குறிப்பிடத்தக்க பலன்களை அளித்து வருவதாக பிரதமர் கூறினார். இந்தியாவின் கல்வி நிறுவனங்கள் உலகளவில் உள்ள தலைசிறந்த கல்வி நிறுவனங்களுக்கு இணையாக திகழ்கின்றன என்று கூறிய அவர், இந்தியாவில் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சியின் தரம் வளர்ந்து வருவதை எடுத்துரைத்தார்.
ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறியுள்ளதால் உலகின் பார்வை இப்போது இந்தியாவின் மீது உள்ளன என்று திரு மோடி கூறினார். "உலகப் பொருளாதாரத்தின் எதிர்காலம் இந்தியாவில் உள்ளது" என்று குறிப்பிட்ட பிரதமர், பொருளாதார முன்னேற்றத்தால் கொண்டு வரப்பட்டுள்ள புதிய வாய்ப்புகள், குறிப்பாக பல பத்தாண்டுகளாக புறக்கணிக்கப்பட்ட துறைகளில் என்று குறிப்பிட்டார். சுற்றுலாவை உதாரணம் காட்டிய அவர், மகாராஷ்டிராவின் விலைமதிப்பற்ற பாரம்பரியம், அழகான இயற்கை தளங்கள் மற்றும் ஆன்மீக மையங்களை முழுமையாகப் பயன்படுத்தி கடந்த காலத்தில் இழந்த வாய்ப்புகளை சுட்டிக்காட்டி, மாநிலத்தை ஒரு பில்லியன் டாலர் பொருளாதாரமாக மேம்படுத்த வலியுறுத்தினார்ள
தற்போதைய அரசு வளர்ச்சி மற்றும் பாரம்பரியம் ஆகிய இரண்டையும் உள்ளடக்கியது என்று பிரதமர் கூறினார். இந்தியாவின் வளமான கடந்த காலத்தை கருத்தில் கொண்டு பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்க வேண்டும் என்று குறிப்பிட்ட பிரதமர், ஷீரடி விமான நிலையத்தில் புதிய முனையம், நாக்பூர் விமான நிலையத்தின் நவீனமயமாக்கல் மற்றும் மகாராஷ்டிராவில் நடைபெற்று வரும் இதர வளர்ச்சித் திட்டங்கள் பற்றி குறிப்பிட்டார். ஷீரடி விமான நிலையத்தின் புதிய முனையம் சாய்பாபாவின் பக்தர்களுக்கு பெரிதும் பயனளிக்கும் என்றும், நாடு முழுவதிலும் இருந்தும் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் அதிக பார்வையாளர்களை அனுமதிக்கும் என்றும் அவர் கூறினார். மேம்படுத்தப்பட்ட சோலாப்பூர் விமான நிலையத்தை திறந்து வைப்பது குறித்தும் அவர் பேசினார். இதன் மூலம் அருகிலுள்ள ஆன்மீக இடங்களான சனி ஷிங்னாபூர், துல்ஜா பவானி மற்றும் கைலாஸ் கோயில் ஆகியவற்றிற்கு பக்தர்கள் செல்ல முடியும். இதன் மூலம் மகாராஷ்டிராவின் சுற்றுலா பொருளாதாரத்தை மேம்படுத்தி வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும் என்று தெரிவித்தார்ள
"எங்கள் அரசின் ஒவ்வொரு முடிவும், ஒவ்வொரு கொள்கையும் ஒரே ஒரு இலக்கை நோக்கி அர்ப்பணிக்கப்பட்டுள்ளது –வளர்ச்சியடைந்த பாரதம்!" என்று திரு மோடி புகழாரம் சூட்டினார். ஏழைகள், விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் பெண்கள் நலனே அரசின் தொலைநோக்குப் பார்வை என்றும் அவர் கூறினார். எனவே, ஒவ்வொரு வளர்ச்சித் திட்டமும் ஏழை கிராமவாசிகள், தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது என்று அவர் மேலும் கூறினார். ஷீரடி விமான நிலையத்தில் கட்டப்பட்டு வரும் தனி சரக்கு வளாகம் விவசாயிகளுக்கு மிகவும் உதவும் என்றும், பல்வேறு வகையான வேளாண் பொருட்களை உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் ஏற்றுமதி செய்ய முடியும் என்றும் திரு மோடி எடுத்துரைத்தார். ஷீரடி, லாசல்கான், அஹில்யாநகர் மற்றும் நாசிக் விவசாயிகள் வெங்காயம், திராட்சை, கொய்யா மற்றும் மாதுளை போன்ற பொருட்களை பெரிய சந்தைக்கு எளிதாக கொண்டு செல்வதன் மூலம் சரக்கு வளாகத்தால் பயனடைவார்கள் என்று அவர் மேலும் கூறினார்.
பாசுமதி அரிசி மீதான குறைந்தபட்ச ஏற்றுமதி விலையை ரத்து செய்வது, பாசுமதி அல்லாத அரிசி ஏற்றுமதி மீதான தடையை நீக்குவது, புழுங்கல் அரிசி மீதான ஏற்றுமதி வரியை பாதியாக குறைப்பது போன்ற விவசாயிகளின் நலனுக்காக தேவையான நடவடிக்கைகளை அரசு தொடர்ந்து எடுத்து வருவதாக பிரதமர் குறிப்பிட்டார். மகாராஷ்டிராவின் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க, வெங்காயம் மீதான ஏற்றுமதி வரியையும் அரசு பாதியாக குறைத்துள்ளது என்றும் அவர் கூறினார். கடுகு, சோயாபீன் மற்றும் சூரியகாந்தி போன்ற பயிர்களுக்கு அதிக விலை கொடுத்து இந்திய விவசாயிகள் பயனடைய உதவும் வகையில், சமையல் எண்ணெய்களின் இறக்குமதிக்கு 20 சதவீத வரி விதிக்கவும், சுத்திகரிக்கப்பட்ட சோயாபீன், சூரியகாந்தி மற்றும் பாமாயில் மீதான சுங்க வரியை கணிசமாக அதிகரிக்கவும் அரசு முடிவு செய்துள்ளது என்றும் திரு மோடி கூறினார். ஜவுளித் தொழிலுக்கு அரசு ஆதரவளிக்கும் விதம் மகாராஷ்டிராவின் பருத்தி விவசாயிகளுக்கு பெரிதும் பயனளிக்கும் என்றும் திரு மோடி கூறினார்.
மகாராஷ்டிராவை வலுப்படுத்துவதே தற்போதைய அரசின் தீர்மானம் என்றார். மாநிலத்தின் வளர்ச்சி வேகம் குறித்து மகிழ்ச்சி தெரிவித்த அவர், இன்றைய அனைத்து வளர்ச்சித் திட்டங்களுக்கும் மகாராஷ்டிரா மக்களை பாராட்டி பிரதமர் தமது உரையை நிறைவு செய்தார்.
மகாராஷ்டிரா ஆளுநர் திரு சி பி ராதாகிருஷ்ணன், மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் திரு நிதின் கட்கரி, மகாராஷ்டிர முதலமைச்சர் திரு. ஏக்நாத் ஷிண்டே, மகாராஷ்டிர துணை முதலமைச்சர் திரு. தேவேந்திர ஃபட்னாவிஸ் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் காணொலி காட்சி மூலம் கலந்து கொண்டனர்.
பின்னணி
நாக்பூரில் உள்ள டாக்டர் பாபாசாஹேப் அம்பேத்கர் சர்வதேச விமான நிலையத்தை ரூ.7,000 கோடி திட்ட மதிப்பீட்டில் மேம்படுத்தும் திட்டத்திற்கும் பிரதமர் அடிக்கல் நாட்டினார். உற்பத்தி, விமானப் போக்குவரத்து, சுற்றுலா, தளவாடங்கள் மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் வளர்ச்சிக்கு இது ஒரு ஊக்கியாக செயல்படும், இது நாக்பூர் நகரம் மற்றும் பரந்த விதர்பா பிராந்தியத்திற்கு பயனளிக்கும்.
ஷீரடி விமான நிலையத்தில் ரூ.645 கோடி மதிப்பிலான புதிய ஒருங்கிணைந்த முனைய கட்டிடத்திற்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார். இது ஷீரடிக்கு வரும் ஆன்மீக சுற்றுலாப் பயணிகளுக்கு உலகத் தரம் வாய்ந்த வசதிகளையும் வழங்கும். முன்மொழியப்பட்ட முனையத்தின் கட்டுமானக் கருப்பொருள் சாய் பாபாவின் ஆன்மீக வேப்ப மரத்தை அடிப்படையாகக் கொண்டது.
அனைவருக்கும் குறைந்த செலவில் மருத்துவ வசதி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்ற தனது உறுதிப்பாட்டுக்கு ஏற்ப, மும்பை, நாசிக், ஜல்னா, அமராவதி, கட்சிரோலி, புல்தானா, வாஷிம், பண்டாரா, ஹிங்கோலி, அம்பர்நாத் (தானே) ஆகிய இடங்களில் மகாராஷ்டிராவில் 10 அரசு மருத்துவக் கல்லூரிகளை செயல்படுத்தும் திட்டத்தை பிரதமர் தொடங்கி வைத்தார். இளங்கலை மற்றும் முதுகலை இடங்களை உயர்த்தும் அதே வேளையில், கல்லூரிகள் மக்களுக்கு சிறப்பு மூன்றாம் நிலை சுகாதார சேவையையும் வழங்கும்.
'உலகின் திறன் தலைநகராக' இந்தியாவை நிலைநிறுத்த வேண்டும் என்ற தனது தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப, அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் நேரடி பயிற்சியுடன் தொழில்துறைக்கு ஏற்ற தொழிலாளர் படையை உருவாக்கும் நோக்கத்துடன் மும்பையில் இந்திய திறன் நிறுவனத்தையும் பிரதமர் திறந்து வைத்தார். பொது-தனியார் கூட்டாண்மை மாதிரியின் கீழ் நிறுவப்பட்ட இது டாடா கல்வி மற்றும் மேம்பாட்டு அறக்கட்டளை, மத்திய அரசு ஆகியவற்றின் ஒத்துழைப்பாகும். மெக்கட்ரானிக்ஸ், செயற்கை நுண்ணறிவு, தரவு பகுப்பாய்வு மற்றும் ரோபாட்டிக்ஸ் போன்ற மிகவும் சிறப்பு வாய்ந்த துறைகளில் பயிற்சி அளிக்க இந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
மேலும், மகாராஷ்டிராவின் வித்யா சமிக்ஷா கேந்திராவையும் பிரதமர் தொடங்கி வைத்தார். வி.எஸ்.கே மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு ஸ்மார்ட் உபத்திதி, ஸ்வாத்யாய் போன்ற நேரடி சாட்போட்கள் மூலம் முக்கியமான கல்வி மற்றும் நிர்வாக தரவுகளுக்கான அணுகலை வழங்கும். வளங்களை திறம்பட நிர்வகிப்பதற்கும், பெற்றோருக்கும் அரசுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவதற்கும், பதிலளிக்கக்கூடிய ஆதரவை வழங்குவதற்கும் பள்ளிகளுக்கு உயர்தர நுண்ணறிவுகளை இது வழங்கும். கற்பித்தல் நடைமுறைகள் மற்றும் மாணவர்களின் கற்றலை மேம்படுத்துவதற்கான தொகுக்கப்பட்ட கற்பித்தல் வளங்களையும் இது வழங்கும்.
*****
(Release ID: 2063445)
PLM/IR/KPG/RS/KR
(Release ID: 2063499)
Visitor Counter : 48
Read this release in:
Odia
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam