பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

மகாராஷ்டிர மாநிலத்தில் ரூ.7,600 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் அக்டோபர் 9-ம் தேதி அடிக்கல் நாட்டுகிறார்


நாக்பூரில் உள்ள டாக்டர் பாபா சாஹேப் அம்பேத்கர் சர்வதேச விமான நிலைய மேம்பாட்டுத் திட்டத்திற்கு பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார்

ஷீரடி விமான நிலையத்தில் புதிய ஒருங்கிணைந்த முனைய கட்டிடத்திற்கு பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார்

மும்பை இந்திய திறன் நிறுவனத்தையும், மகாராஷ்டிராவில் கல்வி ஆராய்ச்சி மையத்தையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார்

Posted On: 08 OCT 2024 7:31PM by PIB Chennai

மகாராஷ்டிர மாநிலத்தில் ரூ.7,600 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி அக்டோபர் 9-ம் தேதி பிற்பகல் 1 மணிக்கு காணொலிக் காட்சி மூலம் அடிக்கல் நாட்டுகிறார்.

சுமார் ரூ.7,000 கோடி திட்ட மதிப்பீட்டில் நாக்பூரில் உள்ள டாக்டர் பாபா சாஹேப் அம்பேத்கர் சர்வதேச விமான நிலைய மேம்பாட்டுப் பணிக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டுவார். உற்பத்தி, விமானப் போக்குவரத்து, சுற்றுலா, தளவாடங்கள் மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் வளர்ச்சிக்கு இது ஒரு உந்துசக்தியாக இருக்கும். இது நாக்பூர் நகரம், விதர்பா பிராந்தியத்திற்கு பயனளிக்கும்.

ஷீரடி விமான நிலையத்தில் ரூ.645 கோடி மதிப்பிலான புதிய ஒருங்கிணைந்த முனைய கட்டிடத்திற்கு பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார். இது ஷீரடிக்கு வரும் ஆன்மீகச்  சுற்றுலாப் பயணிகளுக்கு உலகத் தரம் வாய்ந்த வசதிகளை வழங்கும். உத்தேச முனையத்தின் கட்டுமானக் கருப்பொருள், சாய் பாபாவின் ஆன்மீக வேப்ப மரத்தை அடிப்படையாகக் கொண்டது.

அனைவருக்கும் குறைந்த செலவில், எளிதில் கிடைக்கக்கூடிய சுகாதார சேவையை உறுதி செய்வதை உறுதி செய்யும் வகையில், மகாராஷ்டிராவின் மும்பை, நாசிக், ஜல்னா, அமராவதி, கட்சிரோலி, புல்தானா, வாஷிம், பண்டாரா, ஹிங்கோலி மற்றும் அம்பர்நாத் (தானே) ஆகிய 10 அரசு மருத்துவக் கல்லூரிகளின் செயல்பாட்டையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார். இக்கல்லூரிகள், இளநிலை, முதுநிலை மருத்துவ இடங்களை அதிகரிக்கும் அதே வேளையில், மக்களுக்கு சிறப்பான மருத்துவ சேவையையும் வழங்கும்.

"உலகின் திறன் தலைநகரமாக" இந்தியாவை நிலைநிறுத்தும் பிரதமரின் பார்வைக்கு ஏற்ப, அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் நேரடிப் பயிற்சியுடன் தொழிற்சாலையில் பணியாற்றுவதற்கான  தொழிலாளர் படையை உருவாக்கும் நோக்கத்துடன் மும்பையில் உள்ள இந்திய திறன் நிறுவனத்தையும் பிரதமர் திறந்து வைக்கிறார். பொது - தனியார் கூட்டாண்மை மாதிரியின் கீழ் நிறுவப்பட்ட இது டாடா கல்வி, வளர்ச்சி அறக்கட்டளை மற்றும் மத்திய அரசின்  ஒத்துழைப்பில் மேற்கொள்ளப்படுகிறது. மெக்கட்ரானிக்ஸ், செயற்கை நுண்ணறிவு, தரவு பகுப்பாய்வு, இண்டஸ்ட்ரியல் ஆட்டோமேஷன் மற்றும் ரோபாட்டிக்ஸ் போன்ற உயர் சிறப்பு பிரிவுகளில் பயிற்சி அளிக்க இந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

மேலும், மகாராஷ்டிராவின் கல்வி ஆராய்ச்சி மையத்தையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார். இந்த மையத்தின் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு ஸ்மார்ட் வருகைப் பதிவேடு, சுயகற்றல் போன்ற நேரடி சாட்போட்கள் மூலம் முக்கியமான கல்வி மற்றும் நிர்வாக தரவுகளுக்கான அணுகலை வழங்கும். வளங்களை திறம்பட நிர்வகிப்பதற்கும், பெற்றோருக்கும், அரசுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவதற்கும், பொறுப்புள்ள பதில்  அளிப்பதற்கான ஆதரவை வழங்குவதற்கும் பள்ளிகளுக்கு உயர்தர நுண்ணறிவுகளை இது வழங்கும். கற்பித்தல் நடைமுறைகள் மற்றும் மாணவர்களின் கற்றலை மேம்படுத்துவதற்கான தொகுக்கப்பட்ட கற்பித்தல் வளங்களையும் இது வழங்கும்.

***

MM/KPG/DL


(Release ID: 2063294) Visitor Counter : 63