தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
தொழிலாளர் அரசு ஈட்டுறுதிக் கழகத்தின் 194-வது கூட்டத்திற்கு டாக்டர் மன்சுக் மாண்டவியா தலைமை தாங்கினார்
சென்னை கே.கே.நகர் இஎஸ்ஐ மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் துணை மருத்துவம் மற்றும் பி.எஸ்சி (செவிலியர்) படிப்புகள் தொடங்க முடிவு
Posted On:
08 OCT 2024 6:15PM by PIB Chennai
புதுதில்லியில் உள்ள தொழிலாளர் அரசு ஈட்டுறுதிக் கழகத் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற தொழிலாளர் அரசு ஈட்டுறுதிக் கழகத்தின் 194-வது கூட்டத்திற்கு மத்திய தொழிலாளர் நலன், வேலைவாய்ப்பு, இளைஞர் நலன், விளையாட்டுத் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா தலைமை தாங்கினார். இந்தக் கூட்டத்தில் மத்திய தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்பு, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை இணையமைச்சர் செல்வி ஷோபா கரந்த்லாஜே கலந்து கொண்டார். கூட்டத்தில், இஎஸ்ஐசி-ன் உள்கட்டமைப்பு மற்றும் மருத்துவ வசதிகளை மேலும் வலுப்படுத்த தொழிலாளர் அரசு ஈட்டுறுதிக் கழகத்தின் பல முக்கிய முடிவுகளை மத்திய அமைச்சர் அறிவித்தார்.
10 புதிய தொழிலாளர் அரசு ஈட்டுறுதிக் கழக மருத்துவக் கல்லூரிகள் நிறுவுதல்
அந்தேரி (மகாராஷ்டிரா), பசைதராபூர் (தில்லி), குவஹாத்தி-பெல்டோலா (அசாம்), இந்தூர் (மத்தியப் பிரதேசம்), ஜெய்ப்பூர் (ராஜஸ்தான்), லூதியானா (பஞ்சாப்), நரோடா-பாபுநகர் (குஜராத்), நொய்டா & வாரணாசி (உத்தரப் பிரதேசம்), ராஞ்சி (ஜார்க்கண்ட்) ஆகிய இடங்களில் 10 புதிய இஎஸ்ஐசி மருத்துவக் கல்லூரிகளை அமைக்க தொழிலாளர் அரசு ஈட்டுறுதிக் கழகம் கொள்கை அளவில் ஒப்புதல் அளித்துள்ளது.
அடுத்த 5 ஆண்டுகளில் புதிதாக 75,000 மருத்துவ இடங்களை உருவாக்குவதாக சுதந்திர தின (2024) உரையின் போது பிரதமர் அறிவித்த அறிவிப்பை செயல்படுத்த இந்த முடிவு உதவும்.
அடல் பீமித் வியாக்தி கல்யாண் யோஜனா திட்டத்தை 01.07.2024 முதல் 30.06.2026 வரை நீட்டித்தல்
வேலையிழந்த காப்பீடுதாரர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக, "காப்பீடுதாரர்களுக்கான அடல் நல்வாழ்வுத் திட்டம் " என்பது தொழிலாளர் அரசு ஈட்டுறுதிக் கழகத்தில் முன்னோடித் திட்டமாக 01.07.2018 முதல் இரண்டாண்டு காலத்திற்கு அறிமுகம் செய்யப்பட்டது.
இத்திட்டம் தொடங்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்த பின்னர், 01.07.2020 முதல் 30.06.2021 வரை மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டது. இது 30.06.2022 வரையும் பின்னர் 30.06.2024 வரையும் நீட்டிக்கப்பட்டது.
இத்திட்டம் தற்போது 01.07.2024 முதல் 30.06.2026 வரை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஆயுஷ்மான் பாரத்-பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டத்தின் நிரந்தர கணக்கு எண் அடிப்படையில் இஎஸ்ஐசி பயனாளிகளுக்கு மருத்துவ வசதி அளித்தல்
இந்த முடிவு தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழக பயனாளிகள், ஆயுஷ்மான் பாரத் – பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டத்தின் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் நாட்டில் சேவை இல்லாத / பற்றாக்குறையான பகுதிகளில் சிகிச்சை பெற உதவும். ஆயுஷ்மான் பாரத் – பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டத்தின் கீழ் பட்டியலிடப்பட்ட மருத்துவமனைகளில் இ.எஸ்.ஐ.சி.யின் காப்பீடு செய்தவர்களுக்கு எந்த செலவு வரம்பும் இருக்காது.
தொழிலாளர் அரசு ஈட்டுறுதிக் கழக மருத்துவக் கல்லூரிகளில் துணை மருத்துவம் மற்றும் பி.எஸ்சி (செவிலியர்) படிப்புகள் தொடங்குதல்
ஆல்வார் (ராஜஸ்தான்), பிஹ்தா (பீகார்), ஃபரிதாபாத் (ஹரியானா), ஜோகா (மேற்கு வங்கம்), கே.கே.நகர் (தமிழ்நாடு), சனத்நகர் (தெலங்கானா), ராஜாஜிநகர் (கர்நாடகா) ஆகிய இடங்களில் இஎஸ்ஐசி மருத்துவக் கல்லூரியில் பாரா மெடிக்கல் (துணை மருத்துவம்) மற்றும் பி.எஸ்சி (நர்சிங்) படிப்புகளை இஎஸ்ஐ கழகம் அனுமதித்துள்ளது.
எய்ம்ஸ் ஆட்சேர்ப்பு கொள்கை அடிப்படையில் நார்செட் மூலம் நர்சிங் அதிகாரி பணிநியமனம்
செவிலியர் பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்ய, எய்ம்ஸ் ஆட்சேர்ப்பு கொள்கைக்கு இணங்க நார்செட் மூலம் செவிலியர் அதிகாரி பணி நியமனத்திற்கு தொழிலாளர் அரசு ஈட்டுறுதி கழகம் ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் தொழிலாளர் அரசு ஈட்டுறுதிக் கழக மருத்துவமனைகள், கல்லூரிகள் மற்றும் மருந்தகங்களில் செவிலியர் பற்றாக்குறை மற்றும் காலியிடங்கள் இல்லை என்பது உறுதி செய்யப்படும்.
பல்வேறு இடங்களில் மருத்துவமனைகள் / மருந்தகங்கள் கட்டுவதற்கு நிலம் கையகப்படுத்த தொழிலாளர் அரசு ஈட்டுறுதிக் கழகம் ஒப்புதல் அளித்துள்ளது
தொழிலாளர் அரசு ஈட்டுறுதிக் கழகத்தின் 194-வது கூட்டத்தில் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திருமதி டோலா சென், மக்களவை உறுப்பினர் திரு பிரவீன் கண்டேல்வால், மக்களவை உறுப்பினர் திரு என்.கே.பிரேமச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தின் போது மாநில அரசுகளின் முதன்மைச் செயலாளர்கள் / செயலாளர்கள், தொழில் உரிமையாளர்களின் பிரதிநிதிகள், ஊழியர்கள் மற்றும் மருத்துவத் துறை நிபுணர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
****
SMB/RS/DL
(Release ID: 2063291)
Visitor Counter : 92