குடியரசுத் தலைவர் செயலகம்
இந்திய காவல் பணி பயிற்சி அதிகாரிகள் குடியரசுத் தலைவரை சந்தித்தனர்
Posted On:
30 SEP 2024 2:06PM by PIB Chennai
76 RR (2023 தொகுப்பு) இந்திய காவல் பணி பயிற்சி அதிகாரிகள், இன்று (செப்டம்பர் 30, 2024) குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்முவை, குடியரசுத் தலைவர் மாளிகையில் சந்தித்தனர்.
பயிற்சி அதிகாரிகளிடையே உரையாற்றிய குடியரசுத் தலைவர், பல்வேறு அகில இந்திய பணிகளில், இந்திய காவல் பணி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று கூறினார். சட்டம் ஒழுங்கு என்பது நிர்வாகத்தின் அடித்தளம் மட்டுமல்ல; அதுவே நவீன அரசின் அடிப்படையாகும். எளிமையான சொற்களில், பல இடங்களில், பல சூழ்நிலைகளில், அவர்கள் சக குடிமக்களுக்கு அரசின் முகமாக இருப்பார்கள் என்றும், அவர்கள் அரசின் நிர்வாக இயந்திரத்துடன் முதல் இடைமுகமாக இருப்பார்கள் என்றும் கூறலாம்.
வரும் ஆண்டுகளில், இந்தியா, புதிய உச்சங்களை எட்டுவதை நோக்கமாகக் கொண்டுள்ள நிலையில், ஐபிஎஸ் அதிகாரிகளின் பங்கு மிகவும் முக்கியமானதாக உள்ளது என்று குடியரசுத் தலைவர் கூறினார். சட்டத்தின் ஆட்சி நிலைநிறுத்தப்படும் போது மட்டுமே பொருளாதார வளர்ச்சியும், சமூக வளர்ச்சியும் சாத்தியமாகும். சட்டம் ஒழுங்கை நிலைநாட்டாமல், நீதியை உறுதி செய்யாமல், குடிமக்களின் உரிமைகளைப் பாதுகாக்காமல், முன்னேற்றம் என்பது அர்த்தமற்ற வார்த்தையாக மாறிவிடும்.
சமீப ஆண்டுகளில், பெண் ஐபிஎஸ் அதிகாரிகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்திருப்பது குறித்து குடியரசுத் தலைவர் மகிழ்ச்சி தெரிவித்தார். அவர்களின் அதிகரித்து வரும் எண்ணிக்கை காவல்துறையின் ஒட்டுமொத்த தன்மையை சிறப்பாக மாற்றும், காவல்துறை-சமூக உறவுகளை மேம்படுத்தும், மேலும் நாட்டிற்கும் பயனளிக்கும் என்பதை நிரூபிக்கும் என்று அவர் கூறினார்.
சட்டம்-ஒழுங்கு பராமரிப்பு, குற்றத் தடுப்பு, கண்டுபிடிப்பு மற்றும் காவல்துறையின் பிற அம்சங்கள் தொழில்நுட்ப வளர்ச்சியால் பயனடைந்துள்ளன என்று குடியரசுத் தலைவர் கூறினார். இருப்பினும், மறுபக்கம் என்னவென்றால், குற்றவாளிகள் மற்றும் பயங்கரவாதிகளும் தொழில்நுட்பத்தை நாடுகின்றனர். உலகெங்கிலும் சைபர் குற்றங்கள் மற்றும் சைபர் யுத்தம் அதிகரித்து வரும் போது, ஐபிஎஸ் அதிகாரிகள் தொழில்நுட்ப ஆர்வலர்களாகவும், குற்றவாளிகளை விட ஒரு படி மேலே உள்ளவர்களாகவும் இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐபிஎஸ் அதிகாரிகளின் தோள்களில் சுமத்தப்படும் பெரும் பொறுப்புகள் சில நேரங்களில் மிகவும் மன அழுத்தத்தை ஏற்படுத்தும் என்று குடியரசுத் தலைவர் குறிப்பிட்டார். எனவே, அவர்கள் ஒருபோதும் தங்கள் மன நலனை புறக்கணிக்கக்கூடாது. யோகா, பிராணாயாமம் மற்றும் தளர்வு நுட்பங்களை தங்கள் வழக்கத்தின் ஒரு பகுதியாக மாற்றுமாறு அவர் கூறினார். 'ஐ.பி.எஸ்'-ல் உள்ள 'எஸ்' என்பது சேவையைக் குறிக்கிறது என்பதை நினைவில் கொள்ளுமாறும் அவர் அறிவுறுத்தினார். எல்லாவற்றிற்கும் மேலாக அவர்களின் ஒரே தாரக மந்திரம், தேசத்திற்கும் அதன் குடிமக்களுக்கும் சேவை செய்வதாகும் என்று குடியரசுத்தலைவர் தெரிவித்தார்.
***
(Release ID: 2060234)
SRI/MM/AG/RR
(Release ID: 2060253)
Visitor Counter : 61