பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் பெண்களை மையமாகக் கொண்ட மிகப்பெரிய திட்டமான 'சுபத்ரா' திட்டத்தைப் பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கிவைத்தார்


10 லட்சத்துக்கும் அதிகமான பெண்களின் வங்கிக் கணக்குகளுக்கு பணம் விடுவிப்பதைத் தொடங்கிவைத்தார்

ரூ.2800 கோடிக்கும் அதிக மதிப்பிலான ரயில்வே திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார்

ரூ.1000 கோடிக்கும் அதிக மதிப்பிலான தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்

பிரதமரின் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் பயன்பெற்ற 26 லட்சம் பயனாளிகளின் புதுமனைப் புகுவிழா கொண்டாட்டங்களில் பங்கேற்றார்

கூடுதல் வீடுகளின் கணக்கெடுப்புக்கான ஆவாஸ்+ 2004 செயலியை அறிமுகப்படுத்தித் தொடங்கி வைத்தார்

பிரதமரின் நகர்ப்புற வீட்டுவசதித் திட்டம் 2.0-ன் செயல்பாட்டு வழிகாட்டுதல்களைத் தொடங்கி வைத்தார்

"இந்த மாநிலம் எங்கள் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளது. மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற நாங்கள் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம்"

"மத்தியில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் 100 நாட்களில், ஏழைகள், விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள் ஆகியோருக்கு அதிகாரம் அளிக்கப் பெரிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன"

"மக்கள் தொகையில் சரிபாதியாக உள்ள நமது பெ

Posted On: 17 SEP 2024 2:37PM by PIB Chennai

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில்  ஒடிசா அரசின் முன்னோடித் திட்டமான 'சுபத்ரா' திட்டத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (17.09.2024) தொடங்கி வைத்தார். இது பெண்களை மையமாகக் கொண்ட மிகப்பெரிய திட்டமாகும். மேலும் இது 1 கோடிக்கும் அதிகமான பெண்களுக்கு  பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 10 லட்சத்துக்கும் அதிகமான பெண்களின் வங்கிக் கணக்குகளுக்கு நிதி பரிமாற்றத்தையும் பிரதமர் தொடங்கி வைத்தார். ரூ.2800 கோடிக்கும் அதிக மதிப்பிலான ரயில்வே திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய திரு நரேந்திர மோடி ரூ.1,000 கோடிக்கும் அதிக மதிப்பிலான தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். சுமார் 14 மாநிலங்களில் பிரதமரின் கிராம்பபுற  வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் கிட்டத்தட்ட 10 லட்சம் பயனாளிகளுக்கு முதல் தவணை உதவியை பிரதமர் விடுவித்தார். நாடு முழுவதும் இருந்து வீட்டு வசதித் திட்டத்தின் 26 லட்சம் பயனாளிகளுக்கான கிரகப் பிரவேச கொண்டாட்டங்களில் பிரதமர் பங்கேற்றார். பயனாளிகளுக்கு வீட்டுச் சாவிகளையும் அவர் வழங்கினார். பிரதமரின் கிராமப்புற வீட்டு வசதித் திட்டத்தில் கூடுதல் வீடுகளின் கணக்கெடுப்பு, பிரதமரின் நகர்ப்புற நகர்ப்புற வீட்டு வசதித் திட்டம் 2.0-ன் செயல்பாட்டு வழிகாட்டுதல்களுக்கான ஆவாஸ் + 2004 (Awaas+ 2024) செயலியை அவர் அறிமுகப்படுத்தினார்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், இன்றைய நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த மக்களுக்கு நன்றி தெரிவித்தார். மக்களுக்கும், பகவான் ஜகந்நாதருக்கும் சேவை செய்ய ஒரு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என்றார்.

தற்போதைய விநாயகர் சதுர்த்தி, இன்றைய புனித சந்தர்ப்பமான அனந்த சதுர்த்தசி, விஸ்வகர்மா பூஜை ஆகியவற்றை பிரதமர் குறிப்பிட்டார். உலகிலேயே விஸ்வகர்மாக்களின் திறமையையும், உழைப்பையும் வழிபடும் ஒரே நாடு இந்தியா என்று அவர் கூறினார். இந்த நிகழ்ச்சியில் அவர் தனது நல்வாழ்த்துக்களை தெரிவித்தார். இத்தகைய புனிதமான தருணத்தில், ஒடிசாவின் தாய்மார்கள், சகோதரிகளுக்காக சுபத்ரா திட்டத்தை தொடங்கி வைக்கும் வாய்ப்பு தனக்கு கிடைத்ததாக பிரதமர் கூறினார்.

பகவான் ஜகந்நாதரின் நிலத்திலிருந்து நாடு முழுவதும் 30 லட்சத்துக்கும் அதிகமான  குடும்பங்களுக்கு பாதுகப்பான வீடுகள் இன்று ஒப்படைக்கப்பட்டதை குறிப்பிட்ட பிரதமர், கிராமப்புறங்களில் 26 லட்சம் வீடுகளும், நகர்ப்புறங்களில் 4 லட்சம் வீடுகளும் ஒப்படைக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்தார். ஒடிசாவில் இன்று ஆயிரக்கணக்கான கோடிக்கும் அதிக மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்துள்ளதற்காக ஒடிசா மக்களுக்கும், நாட்டு மக்களுக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார்.

புதிய அரசு பதவியேற்ற பிறகு, ஒடிசாவுக்கு தாம் மேற்கொள்ளும் முதல் பயணம் இது என்பதை நினைவுகூர்ந்த பிரதமர், இதற்கு முன்பு ஒடிசாவின் புதிய அரசின் பதவியேற்பு விழாவில் தாம் பங்கேற்றதை நினைவுகூர்ந்தார். தேர்தல் பிரச்சாரத்தின்போது, இரட்டை இன்ஜின் கொண்ட அரசு அமலுக்கு வந்தால், ஒடிசா வளர்ச்சி, வளத்தை நோக்கி உந்திச் செல்லும் என்று தாம் கூறியதை அவர் மக்களுக்கு நினைவூட்டினார். கிராமவாசிகள், அடித்தட்டு மக்கள், தலித்துகள், பழங்குடியினர், பெண்கள், இளைஞர்கள், நடுத்தர வர்க்க குடும்பங்கள் என சமூகத்தின் பல்வேறு பிரிவினரின் கனவுகள் இப்போது நனவாகும் என்று திரு நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்தார். அளித்த வாக்குறுதிகள் வேகமாக நிறைவேற்றப்பட்டு வருவது குறித்து அவர் மகிழ்ச்சி தெரிவித்தார். இதுவரை நிறைவேற்றப்பட்ட வாக்குறுதிகளை பட்டியலிட்ட அவர், ஸ்ரீ ஜெகந்நாதர் பூரி கோயிலின் நான்கு கதவுகளும் பொதுமக்களுக்கு திறக்கப்பட்டதுடன் கோயிலின் ரத்னா பந்தரும் திறக்கப்பட்டது என்றார். ஒடிசா மாநில மக்களின் சேவைக்காக இந்த அரசு பாடுபட்டு வருவதாக கூறிய திரு நரேந்திர மோடி, மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படுவதை உறுதி செய்ய அரசே மக்களிடம் நேரடியாகச் செல்வது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார். இதற்காக ஒட்டுமொத்த ஒடிசா அரசையும் திரு நரேந்திர மோடி பாராட்டினார்.

 

தற்போதைய அரசு இன்று 100 நாட்களை நிறைவு செய்வதால் இன்று சிறப்பு வாய்ந்தது என்று பிரதமர் கூறினார். இந்த நேரத்தில், இந்தியாவின் ஏழைகள், விவசாயிகள், இளைஞர்கள், பெண்களின் நலனுக்காக முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன என்று பிரதமர் கூறினார். கடந்த 100 நாட்களின் சாதனைகளை பட்டியலிட்ட பிரதமர், ஏழைகளுக்காக 3 கோடி பாதுகாப்பான வீடுகள் கட்டும் முடிவு, இளைஞர்களுக்கு ரூ.2 லட்சம் கோடி மதிப்புள்ள பிரதமரின் தொகுப்புத் திட்ட அறிவிப்பு, மருத்துவக் கல்லூரிகளில் 75,000 புதிய இடங்களைச் சேர்த்தல், 25,000 கிராமங்களுக்கு தரமான சாலைகளுக்கான ஒப்புதல் ஆகியவற்றை எடுத்துரைத்தார். பழங்குடியினர் நல  அமைச்சகத்திற்கான பட்ஜெட் ஒதுக்கீடு ஏறத்தாழ  இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது, சுமார் 60,000 பழங்குடியின கிராமங்களின் மேம்பாட்டிற்கான சிறப்புத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது, அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதுதொழில் வல்லுநர்கள், வணிக உரிமையாளர்கள், தொழில்முனைவோருக்கான வருமான வரி குறைக்கப்பட்டுள்ளது என்பன போன்றவற்றையும் பிரதமர் குறிப்பிட்டார்.

கடந்த 100 நாட்களில், 11 லட்சத்துக்கும் அதிகமான பெண்கள் லட்சாதிபதிகளாக மாறியுள்ளதாகவும், எண்ணெய் வித்துக்கள், வெங்காய விவசாயிகளுக்காக முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்திய விவசாயிகளை ஊக்குவிக்க வெளிநாடுகளில் உற்பத்தி செய்யப்படும் எண்ணெய்களுக்கான இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், ஏற்றுமதியை ஊக்குவிக்க பாசுமதி அரிசி மீதான ஏற்றுமதி வரி குறைக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார். பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்த்தப்பட்டுள்ளதன் மூலம் கோடிக்கணக்கான விவசாயிகள் சுமார் ரூ. 2 லட்சம் கோடி பயன்களைப் பெற்றுப் பயனடைந்துள்ளனர் என அவர் தெரிவித்தார். கடந்த 100 நாட்களில் அனைவரின் நலனுக்காக பல குறிப்பிடத்தக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று பிரதமர் திரு நரேந்திர மோடி கூறினார். 

எந்தவொரு நாடும் அதன் மக்கள் தொகையில் பாதியாக உள்ள மகளிர் சக்தியின் பங்களிப்பு சமமாக இருந்தால் மட்டுமே வேகமாக முன்னேறும் என்பதை  சுட்டிக்காட்டிய திரு நரேந்திர மோடி, பெண்களின்  முன்னேற்றம், அவர்களுக்கு அதிகாரமளித்தல் ஆகியவை ஒடிசாவின் வளர்ச்சிக்கு முக்கியப் பங்கு வகிக்கும் என்றார். ஒடிசாவின் நாட்டுப்புறக் கதைகளிலிருந்து ஒரு பக்கத்தை எடுத்துக்கொண்ட திரு மோடி, பகவான் ஜகந்நாதருடன் சுபத்ரா தேவி இங்கு இருப்பது பெண்களுக்கு அதிகாரமளித்தல் பற்றி நமக்கு உணர்த்துகிறது என்று கூறினார். "சுபத்ரா தேவியின் வடிவில் அனைத்து தாய்மார்கள், சகோதரிகள் மற்றும் மகள்களை நான் வணங்குகிறேன்" என்று திரு நரேந்திர மோடி கூறினார்.

ஒடிசா மாநில அரசு, தாய்மார்கள், சகோதரிகளுக்கு சுபத்ரா திட்டம் என்ற பரிசை வழங்கியதற்குப் பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்தார். இதன் மூலம் ஒடிசாவைச் சேர்ந்த 1 கோடிக்கும் அதிகமான  பெண்கள் பயனடைவார்கள் என்றும் அவர் கூறினார். இந்த திட்டத்தின் கீழ், பெண்களுக்கு மொத்தம் ரூ. 50,000 வழங்கப்படும் என்றும், அது பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக வரவு வைக்கப்படும் என்றும் திரு நரேந்திர மோடி விளக்கினார். இந்த திட்டம் ரிசர்வ் வங்கியின் டிஜிட்டல் நாணயத்தின் பைலட் திட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார். நாட்டிலேயே முதன்முறையாக இந்த வகையான டிஜிட்டல் நாணயத் திட்டத்தில் இணைந்த ஒடிசா பெண்களை திரு நரேந்திர மோடி வாழ்த்தினார்.

சுபத்ரா திட்டம் ஒடிசாவின் ஒவ்வொரு தாய், சகோதரி, மகளையும் சென்றடையும் வகையில் மாநிலம் முழுவதும் பல நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பது பற்றி பிரதமர் பேசினார். இந்த திட்டம் தொடர்பான அனைத்து தகவல்கள் குறித்தும்  பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதாக அவர் கூறினார். மாநிலத்தில் தற்போதைய ஆட்சியைச் சேர்ந்த பல தொண்டர்களும் இந்த சேவையில் முழு வீரியத்துடன் ஈடுபட்டு வருவதை எடுத்துரைத்த அவர், இந்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக அரசு, நிர்வாகம், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் கட்சித் தொண்டர்களுக்கும் அவர் வாழ்த்து தெரிவித்தார்.

பிரதமரின் வீட்டு வசதித் திட்டம் என்பது இந்தியாவில் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதன் பிரதிபலிப்பாகும் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி குறிப்பிட்டார். சொத்து இப்போது பெண்களின் பெயரில் பதிவு செய்யப்படுகிறது என்று கூறினார். நாடு முழுவதிலும் இருந்து சுமார் 30 லட்சம் குடும்பங்கள் இன்று புதுமனைப் புகுவிழாவை  மேற்கொண்டுள்ளதாகவும், 15 லட்சம் புதிய பயனாளிகளுக்கு இன்று ஒப்புதல் கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், 100 நாட்கள் என்ற குறுகிய காலத்தில் 10 லட்சத்துக்கும் அதிகமான  பயனாளிகளின் வங்கிக் கணக்குகளுக்கு நிதி மாற்றப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். ஒடிசாவின் புனித பூமியிலிருந்து இந்த நல்ல பணியை நாங்கள் செய்துள்ளோம் எனவும் ஒடிசாவின் ஏராளமான ஏழை குடும்பங்களும் இதில் சேர்க்கப்பட்டுள்ளன என்றும் பிரதமர் திரு நரேந்திர மோடி மேலும் கூறினார். நிரந்தர வீடுகளைப் பெற்ற லட்சக்கணக்கான குடும்பங்களின் வாழ்க்கையில் புதிய தொடக்கம் இன்று ஏற்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.

முன்னதாக பழங்குடியினக் குடும்பம் ஒன்றில் நடைபெற்ற புதுமனைப் புகுவிழாவில் பங்கேற்ற அனுபவத்தைப் பகிர்ந்து கொண்ட பிரதமர், அவர்களது மகிழ்ச்சியையும், அவர்கள் முகத்தில் தோன்றிய திருப்தியையும் தன்னால் என்றும் மறக்க முடியாது என்றார். இந்த அனுபவம், இந்த உணர்வு என் முழு வாழ்க்கையின் பொக்கிஷம் என்று அவர் கூறினார். ஏழைகள், தலித்துகள், பழங்குடியினரின் வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தின் விளைவாக ஏற்பட்டுள்ள இந்த மகிழ்ச்சி, கடினமாக உழைக்க எனக்கு ஆற்றலை அளிக்கிறது என்று பிரதமர் திரு நரேந்திர மோடி உறுதிபடக் கூறினார்.

வளர்ந்த மாநிலத்திற்கு தேவையான அனைத்தும் ஒடிசாவில் உள்ளன என்று குறிப்பிட்ட திரு நரேந்திர மோடி, அதன் இளைஞர்களின் திறமை, பெண்களின் வலிமை, இயற்கை வளங்கள், தொழிற்சாலைகளுக்கான வாய்ப்புகள், சுற்றுலாவின் மகத்தான வாய்ப்புகள் அனைத்தும் இதில் உள்ளன என்று கூறினார். கடந்த 10 ஆண்டுகளாக, மத்தியில் ஆட்சியில் இருந்தபோது, மத்திய அரசு எப்போதும் ஒடிசாவை முக்கிய முன்னுரிமையாகப் பார்த்தது என்று அவர் மேலும் கூறினார். 10 ஆண்டுகளுக்கு முன்பு மத்திய அரசிடமிருந்து ஒடிசா மாநிலம் நிதியுதவி பெற்றதை விட இம்முறை மூன்று மடங்கு நிதி அதிகமாக  ஒடிசா மாநிலம் பெறுகிறது என்றும் பிரதமர் கூறினார். இதுவரை செயல்படுத்தப்படாத நல்ல திட்டங்கள் செயல்படுத்தப்படுவது குறித்து அவர் மகிழ்ச்சி தெரிவித்தார். ஆயுஷ்மான் திட்டம் குறித்து பேசிய பிரதமர், ஒடிசா மக்களும் ரூ.5 லட்சம் வரை இலவச சிகிச்சை மூலம் பயனடைவார்கள் என்றும், 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு வருமான அளவைப் பொருட்படுத்தாமல் ரூ. 5 லட்சம் வரை இலவசமாக சிகிச்சை அளிக்கப்படும் என்றும் சுட்டிக் காட்டினார். மக்களவைத் தேர்தலின் போது தாம் அளித்த வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

வறுமைக்கு எதிரான இயக்கத்தின் மூலம் ஒடிசாவில் வசிக்கும் தலித்துகள், நலிவடைந்த, பழங்குடியின சமூகத்தினர்தான் அதிக அளவில் பயனடைந்துள்ளனர் என்பதை பிரதமர் சுட்டிக் காட்டினார். பழங்குடியின சமூகத்தின் நலனுக்காக தனி அமைச்சகத்தை உருவாக்குவதாகட்டும், பழங்குடியின சமூகத்திற்கு, காடுகள் மற்றும் நிலத்தின் மீதான உரிமைகளை வழங்குவதாகட்டும், பழங்குடியின இளைஞர்களுக்கு கல்வி- வேலைவாய்ப்புகளை வழங்குவதாகட்டும், அல்லது ஒடிசாவைச் சேர்ந்த பழங்குடியினப் பெண்ணை நாட்டின் குடியரசுத் தலைவராக்குவதாகட்டும், இதுபோன்ற பணிகளை தற்போதுள்ள  மத்திய அரசு முதன்முறையாக மேற்கொண்டுள்ளது என்று பிரதமர் எடுத்துரைத்தார்.

ஒடிசாவில் பல பழங்குடி பகுதிகளும், குழுக்களும் பல தலைமுறைகளாக வளர்ச்சியை இழந்திருந்தன என்பதைப்  பிரதமர் திரு நரேந்திர மோடி சுட்டிக்காட்டினார். பழங்குடியினரில் மிகவும் பின்தங்கியவர்களுக்கு ஆதரவளிக்கும் பிரதமர் ஜன்மன் திட்டம் பற்றி பேசிய அவர், ஒடிசாவில் இதுபோன்ற 13 பழங்குடியினர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவித்தார். ஜன்மன் திட்டத்தின் கீழ், இந்த அனைத்து சமூகங்களுக்கும் வளர்ச்சித் திட்டங்களின் பலன்களை அரசு வழங்குகிறது என்று பிரதமர் விளக்கினார். அரிவாள்செல் ரத்த சோகையிலிருந்து பழங்குடியினரை விடுவிக்க ஒரு இயக்கம் நடத்தப்படுகிறது என்றார். கடந்த 3 மாதங்களில், இந்த இயக்கத்தின் கீழ் 13 லட்சத்துக்கும் அதிகமானோர் பரிசோதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் கூறினார்.

 

முன்னெப்போதும் இல்லாத வகையில் பாரம்பரியத் திறன்களை பாதுகாப்பதில் இந்தியா இன்று கவனம் செலுத்தி வருகிறது என்று கூறிய பிரதமர், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நாட்டில் கைவினைக் கலைஞர்கள் தனிச்சிறப்புடன் பணியாற்றி வருவதாக கூறினார். கடந்த ஆண்டு விஸ்வகர்மா ஜெயந்தி அன்று விஸ்வகர்மா திட்டம் தொடங்கப்பட்டது எனவும் இந்த திட்டத்திற்காக அரசு ரூ.13,000 கோடி செலவிடுகிறது என்றும் அவர் கூறினார். இத்திட்டத்தின் கீழ் இதுவரை 20 லட்சம் பேர் பதிவு செய்து பயிற்சி பெற்று வருகின்றனர் என்று அவர் தெரிவித்தார். நவீன கருவிகளை வாங்குவதற்கும், உத்தரவாதம் இன்றி வங்கிகளிடமிருந்து குறைந்த வட்டியில் கடன் வழங்குவதற்கும் ஆயிரக்கணக்கான நிதி உதவி வழங்கப்படுகிறது என அவர் சுட்டிக்காட்டினார். அவர்களது சமூக, பொருளாதார பாதுகாப்புக்கான இந்த உத்தரவாதம், வளர்ந்த இந்தியாவின் உண்மையான பலமாக மாறும் என்று திரு நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்தார்.

ஏராளமான கனிம வளங்களும், இயற்கை வளங்களும் நிறைந்த ஒடிசாவின் நீண்ட கடற்கரைப் பகுதியை சுட்டிக்காட்டிய திரு நரேந்திர மோடி, இந்த ஆதாரங்களை ஒடிசாவின் வலிமையாக மாற்ற வேண்டும் என்று குறிப்பிட்டார். அடுத்த 5 ஆண்டுகளில், ஒடிசாவின் சாலை, ரயில் இணைப்பை புதிய உயரத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்று அவர் மேலும் கூறினார். இன்று புதிதாக தொடங்கி வைக்கப்பட்ட ரயில், சாலை தொடர்பான திட்டங்கள் பற்றிப் பேசிய திரு நரேந்திர மோடி, லாஞ்சிகர் சாலை – அம்போடலா – தோய்கலு ரயில் பாதை, லட்சுமிபூர் சாலை – சிங்காரம் – திக்ரி ரயில் பாதை, தேன்கனல் – சதாசிவபூர் – ஹிண்டோல் சாலை ரயில் பாதை  ஆகியவற்றை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் பாக்கியம் தனக்கு கிடைத்ததாக கூறினார். ஜெய்ப்பூர்-நவரங்பூர் புதிய ரயில் பாதைக்கு அடிக்கல் நாட்டுவதுடன், பாரதீப் துறைமுகத்திலிருந்து போக்குவரத்தை அதிகரிப்பதற்கான பணிகளும் இன்று தொடங்கப்பட்டதாகவும் அவர் கூறினார். புதிய உள்கட்டமைப்புத் திட்டங்கள் ஒடிசா இளைஞர்களுக்கு அதிக எண்ணிக்கையிலான புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்று திரு நரேந்திர மோடி குறிப்பிட்டார். பூரி – கோனார்க் ரயில் பாதை, உயர் தொழில்நுட்ப 'நமோ பாரத் துரித ரயில்' பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்றும், நவீன உள்கட்டமைப்பு ஒடிசாவுக்கு புதிய வாய்ப்புகளின் கதவுகளை திறக்கும் என்றும் அவர் கூறினார்.

இன்று நாடு முழுவதும் 'ஹைதராபாத் விடுதலை தினம்' கொண்டாடப்படுகிறது என்று பிரதமர் கூறினார். அசாதாரண மன உறுதியை வெளிப்படுத்தி நாட்டை ஒன்றிணைத்து, அந்த நேரத்தில் நிலவிய மிகவும் கொந்தளிப்பான சூழ்நிலையில் இந்திய எதிர்ப்பு அடிப்படைவாத சக்திகளை அடக்கி ஹைதராபாத்தை விடுவிப்பதற்கு சர்தார் படேல் எடுத்த முயற்சிகளை அவர் பாராட்டினார். ஹைதராபாத் விடுதலை தினம் என்பது வெறும் தேதி அல்ல எனவும் நாட்டின் ஒருமைப்பாட்டிற்கும், தேசத்துக்கான நமது கடமைகளுக்கும் இது ஒரு உத்வேகம் அளிக்கிறது என்றும் திரு நரேந்திர மோடி கூறினார்.

இந்தியாவை பின்னோக்கி இழுக்கும் சவால்கள் குறித்துப் பேசிய பிரதமர், இந்திய சுதந்திரப் போராட்டத்தில் கணேஷ் உத்சவத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.  தேசத்தின் உணர்வுக்கு புத்துயிர் அளிக்கவும், காலனி ஆட்சியாளர்களின் பிளவுபடுத்தும் தந்திரங்களை எதிர்கொள்ளவும் லோகமான்ய திலகரால் இது ஏற்பாடு செய்யப்பட்டது என்று விளக்கினார். விநாயகர் சதுர்த்தி, ஒற்றுமையின் அடையாளமாகவும், பாகுபாட்டுக்கும் சாதியத்திற்கும் அப்பாற்பட்ட அடையாளமாகவும் மாறியுள்ளது என்று கூறிய பிரதமர், விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களின் போது ஒட்டுமொத்த சமூகமும் ஒற்றுமையாக காட்சியளிக்கிறது என்றார்.

இன்று சமூகத்தை மதம், சாதி அடிப்படையில் பிளவுபடுத்த முயற்சிப்பவர்களைப் பிரதமர் எச்சரித்தார். விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்கள் தொடர்பாக சிலர் வெறுக்கத்தக்க சிந்தனைகளை ஏற்படுத்துவது நாட்டிற்கு மிகவும் ஆபத்தானது என்று அவர் கூறினார். இதுபோன்ற வெறுக்கத்தக்க சக்திகளை முன்னோக்கி செல்ல அனுமதிக்க வேண்டாம் என்று அவர் அனைவரையும் கேட்டுக்கொண்டார்.

ஒடிசாவையும் நாட்டையும் வெற்றியின் புதிய உயரங்களுக்கு எடுத்துச் செல்லும் வகையில் பல பெரிய மைல்கற்களை எட்ட முடியும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். வளர்ச்சியின் வேகம் வரும் காலங்களில் வேகமெடுக்கும் என்று உறுதியளித்து பிரதமர் திரு நரேந்திர மோடி தமது உரையை நிறைவு செய்தார்.

ஒடிசா ஆளுநர் திரு ரகுபர் தாஸ், ஒடிசா முதலமைச்சர் திரு மோகன் சரண் மஞ்சி உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

 

பின்னணி

சுபத்ரா திட்டத்தின் கீழ், 21 முதல் 60 வயதுக்குட்பட்ட அனைத்து தகுதியான பயனாளிகளும் 2024-25 முதல் 2028-29 வரையிலான 5 ஆண்டுகளில் ரூ.50,000/- பெறுவார்கள். இரண்டு சம தவணைகளில் ஆண்டுக்கு ரூ.10,000 / - பயனாளியின் ஆதார், நேரடிப் பயன் பரிமாற்றத்தால் இயக்கப்பட்ட வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும். இந்த வரலாற்று தருணத்தில், 10 லட்சத்திற்கும் அதிகமான  பெண்களின் வங்கிக் கணக்குகளுக்கு நிதி மாற்றத்தை பிரதமர் தொடங்கி வைத்தார்.

புவனேஸ்வரில் ரூ.2800 கோடிக்கும் அதிக மதிப்பிலான ரயில்வே திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டி நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்த ரயில்வே திட்டங்கள் ஒடிசாவில் ரயில்வே உள்கட்டமைப்பை மேம்படுத்துவதோடு, பிராந்திய வளர்ச்சி மற்றும் இணைப்பை மேம்படுத்தும். ரூ.1000 கோடிக்கும் அதிக மதிப்பிலான தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கும் அவர் அடிக்கல் நாட்டினார்.

சுமார் 14 மாநிலங்களில் பிரதமர் வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் சுமார் 10 லட்சம் பயனாளிகளுக்கு முதல் தவணை உதவியை பிரதமர் விடுவித்தார். நாடு முழுவதும் உள்ள பிரதமர் வீட்டு வசதித் திட்டத்தின் 26 லட்சம் பயனாளிகளுக்கான புதுமனைப் புகு விழாக்களும்  இந்த நிகழ்ச்சியின் போது நடைபெற்றன. வீட்டின் சாவிகளை பயனாளிகளிடம் பிரதமர் ஒப்படைத்தார். மேலும் பிரதமரின் வீட்டு வசதித் திட்டத்துக்கான கூடுதல் வீடுகளை கணக்கெடுப்பதற்காக ஆவாஸ்+2024 (Awaas+ 2024) செயலியையும் தொடங்கிவைத்தார். பிரதமரின் நகர்ப்புற வீட்டு வசதித் திட்டம் 2.0-ன் செயல்பாட்டு வழிகாட்டுதல்களையும் பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்டார்.

***

SMB/DL


(Release ID: 2055820) Visitor Counter : 75