பிரதமர் அலுவலகம்

பசுமை ஹைட்ரஜன் குறித்த 2-வது சர்வதேச மாநாட்டில் பிரதமர் வெளியிட்ட காணொளிச் செய்தி

Posted On: 11 SEP 2024 11:25AM by PIB Chennai

மதிப்பிற்குரிய பிரமுகர்களே,

விஞ்ஞானிகளே, புதுமைப் படைப்பாளர்களே, தொழில்துறைத் தலைவர்களே, எனதருமை நண்பர்களே, உங்கள் அனைவருக்கும் எனது அன்பான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். பசுமை ஹைட்ரஜன் குறித்த 2 வது சர்வதேச மாநாட்டிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

 

நண்பர்களே, உலகம் ஒரு முக்கியமான மாற்றத்தை சந்தித்து வருகிறது. காலநிலை மாற்றம் என்பது, எதிர்காலத்தின் விஷயம் மட்டுமல்ல என்ற உணர்வு அதிகரித்து வருகிறது. காலநிலை மாற்றத்தின் தாக்கம் இங்கு இப்போது உணரப்படுகிறது. இதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரமும் இங்கே, இப்போது உள்ளது. எரிசக்தி மாற்றம் மற்றும் நிலைத்தன்மை ஆகியவை உலகளாவிய கொள்கை விவாதத்தின் மையமாக மாறியுள்ளன.

 

நண்பர்களே, தூய்மையான மற்றும் பசுமையான பூமியை உருவாக்க இந்தியா உறுதிபூண்டுள்ளது. பசுமை எரிசக்தி குறித்த பாரீஸ் மாநாட்டில் அளித்த உறுதிமொழிகளை நிறைவேற்றிய ஜி20 நாடுகளில் நாம்தான் முதலாவதாக இருந்தோம். இந்த வாக்குறுதிகள் 2030 இலக்குக்கு 9 ஆண்டுகளுக்கு முன்னதாகவே நிறைவேற்றப்பட்டுள்ளன. இந்தியாவின் நிறுவப்பட்ட புதைபடிமம் அல்லாத எரிபொருள் திறன் கடந்த 10 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 300% அதிகரித்துள்ளது. இதே காலகட்டத்தில், நமது சூரிய மின்சக்தி திறன் 3,000% அதிகரித்துள்ளது. ஆனால், இந்த சாதனைகளில் நாம் ஓய்வெடுக்கவில்லை. தற்போதுள்ள தீர்வுகளை வலுப்படுத்துவதில் நாங்கள் கவனம் செலுத்துகிறோம். புதிய மற்றும் புதுமையான பகுதிகளையும் நாங்கள் கவனித்து வருகிறோம். இங்குதான் பசுமை ஹைட்ரஜன் வருகிறது.

 

நண்பர்களே, பசுமை ஹைட்ரஜன் உலகின் எரிசக்தி நிலப்பரப்பில் ஒரு நம்பிக்கைக்குரிய கூடுதல் எரி பொருளாக உருவாகி வருகிறது. மின்மயமாக்க கடினமாக இருக்கும் தொழில்களை, கரியமிலவாயு வெளியேற்றம் இல்லாதவையாக மாற்ற இது உதவும். சுத்திகரிப்பு ஆலைகள், உரங்கள், எஃகு, கனரக போக்குவரத்து போன்ற பல துறைகள் பயனடையும்,.பசுமை ஹைட்ரஜன் உபரி, புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கான சேமிப்பு தீர்வாகவும் செயல்படும். இந்தியா ஏற்கனவே, 2023-ம் ஆண்டில் தேசிய பசுமை ஹைட்ரஜன் இயக்கத்தை தொடங்கியுள்ளது .

 

பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி, பயன்பாடு மற்றும் ஏற்றுமதிக்கான உலகளாவிய மையமாக இந்தியாவை மாற்ற நாங்கள் விரும்புகிறோம். தேசிய பசுமை ஹைட்ரஜன் இயக்கம், கண்டுபிடிப்பு, உள்கட்டமைப்பு, தொழில் மற்றும் முதலீட்டிற்கு உத்வேகம் அளிக்கிறது. அதிநவீன ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் நாங்கள் முதலீடு செய்து வருகிறோம். தொழில்துறை மற்றும் கல்வியாளர்களுக்கு இடையே கூட்டாண்மை உருவாக்கப்பட்டு வருகிறது. இந்தத் துறையில் பணியாற்றும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மற்றும் தொழில்முனைவோர் ஊக்குவிக்கப்படு கிறார்கள். பசுமை வேலைகள் சூழல் அமைப்பை உருவாக்குவதற்கான பெரும் சாத்தியக்கூறுகளும் உள்ளன. இதை செயல்படுத்தும் வகையில், இந்தத் துறையில் உள்ள நமது இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டிலும் நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம்.

 

நண்பர்களே, பருவநிலை மாற்றம் மற்றும் எரிசக்தி மாற்றம் ஆகியவை உலகளாவிய கவலைகளாக உள்ளன. நமது பதில்களும் உலகளாவிய தன்மையுடையதாக இருக்க வேண்டும். கரியமிலவாயு வெளியேற்றம் இல்லாத பசுமை ஹைட்ரஜனின் தாக்கத்தை ஊக்குவிப்பதில் சர்வதேச கூட்டாண்மை முக்கியமானது. உற்பத்தியை அதிகரிப்பது, செலவுகளைக் குறைப்பது மற்றும் உள்கட்டமைப்பை உருவாக்குவது ஆகியவை, ஒத்துழைப்பின் மூலம் விரைவாக மேற்கொள்ள முடியும். தொழில்நுட்பத்தை மேலும் முன்னெடுத்துச் செல்ல ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளில் நாம் கூட்டாக முதலீடு செய்ய வேண்டியது அவசியம். செப்டம்பர் 2023-ல், G20 உச்சி மாநாடு இந்தியாவில் நடந்தது. இந்த உச்சி மாநாட்டில், பசுமை ஹைட்ரஜன் மீது சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது. புதுதில்லி ஜி-20 தலைவர்களின் பிரகடனம், ஹைட்ரஜன் குறித்த ஐந்து உயர்மட்ட தன்னார்வ கொள்கைகளை ஏற்றுக்கொண்டது. இந்த கோட்பாடுகள் ஒரு ஒருங்கிணைந்த செயல்திட்டத்தை உருவாக்க நமக்கு உதவுகின்றன. நாம் அனைவரும் நினைவில் கொள்ள வேண்டியது யாதெனில், – நாம் இப்போது எடுக்கும் முடிவுகள், நமது எதிர்கால சந்ததியினரின் வாழ்க்கையை தீர்மானிக்கும்.

 

நண்பர்களே, இதுபோன்ற முக்கியமான துறையில், துறைசார் வல்லுநர்கள் வழிகாட்டுவதும், ஒன்றிணைந்து பணியாற்றுவதும் முக்கியமானதாகும். குறிப்பாக, பல்வேறு அம்சங்களை ஆராய, உலகளாவிய விஞ்ஞானிகள் ஒன்றிணைய வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.விஞ்ஞானிகள் மற்றும் கண்டுபிடிப்பாளர்கள், பசுமை ஹைட்ரஜன் துறைக்கு உதவ, பொதுக் கொள்கையில் மாற்றங்களை பரிந்துரைக்கலாம். விஞ்ஞான சமூகம் கவனிக்கக்கூடிய பல கேள்விகளும் உள்ளன. பசுமை ஹைட்ரஜன் உற்பத்தியில் எலக்ட்ரோலைசர்கள் மற்றும் பிற கூறுகளின் செயல்திறனை மேம்படுத்த முடியுமா? கடல் நீர் மற்றும் நகராட்சி கழிவு நீரை உற்பத்திக்கு பயன்படுத்துவது குறித்து ஆராயலாமா? பொது போக்குவரத்து, கப்பல் போக்குவரத்து மற்றும் உள்நாட்டு நீர்வழிகளில் பசுமை ஹைட்ரஜனைப் பயன்படுத்துவதை எவ்வாறு செயல்படுத்துவது? இதுபோன்ற தலைப்புகளை ஒன்றாக ஆராய்வது, உலகெங்கிலும் பசுமை ஆற்றல் மாற்றத்திற்கு பெரிதும் உதவும். இதுபோன்ற பிரச்சினைகள் குறித்து, பல்வேறு கருத்துக்களை பரிமாறிக் கொள்ள இந்த மாநாடு உதவும் என்று நான் நம்புகிறேன்.

 

நண்பர்களே, மனிதகுலம் கடந்த காலங்களில் பல சவால்களை எதிர்கொண்டுள்ளது. ஒவ்வொரு முறையும், கூட்டு மற்றும் புதுமையான தீர்வுகள் மூலம் துன்பங்களை நாங்கள் சமாளித்தோம். இத்தகைய, கூட்டு மற்றும் புதுமையான செயல்பாட்டின் உணர்வுதான் நீடித்த எதிர்காலத்தை நோக்கி நம்மை வழிநடத்தும். நாம் ஒன்றாக இருந்தால் எதையும் சாதிக்க முடியும். பசுமை ஹைட்ரஜனின் வளர்ச்சி மற்றும் வரிசைப்படுத்தலை துரிதப்படுத்த பணியாற்றுவோம்.

 

பசுமை ஹைட்ரஜன் குறித்த 2-வது சர்வதேச மாநாட்டில் பங்கேற்ற அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

***

(Release ID: 2053634)

MM/RS/KR



(Release ID: 2053662) Visitor Counter : 41