உள்துறை அமைச்சகம்
மும்பை சமாச்சாரின் '200 நாட் அவுட்' ஆவணப்படத்தை மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா வெளியிட்டார்
Posted On:
08 SEP 2024 10:23PM by PIB Chennai
மும்பை சமாச்சாரின் '200 நாட் அவுட்' ஆவணப்படத்தை மத்திய உள்துறை அமைச்சரும், கூட்டுறவுத் துறை அமைச்சருமான திரு அமித் ஷா மும்பையில் வெளியிட்டார். மகாராஷ்டிர முதலமைச்சர் திரு. ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்ட பிரமுகர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய திரு அமித் ஷா, இரண்டு நூற்றாண்டுகளுக்கும் மேலாக எந்தவொரு நிறுவனத்தையும் நடத்துவது மிகவும் கடினம் என்றும், மும்பை சமாச்சார் நம்பகத்தன்மைக்கு உதாரணமாகத் திகழ்கிறது என்றும் கூறினார். இத்தகைய நம்பகத்தன்மையைப் பெற ஒருவர் மிகவும் கடினமாக உழைக்க வேண்டும் என்று திரு ஷா தெரிவித்தார்.
இந்தியாவின் மொழிகள் அதன் பாரம்பரியம் என்றும், உலகில் எந்த நாட்டிலும் இவ்வளவு பேச்சு வழக்குகள் மற்றும் மொழிகள் இல்லை என்றும் திரு அமித் ஷா கூறினார். அதனால்தான் பிரதமர் திரு நரேந்திர மோடி கொண்டு வந்துள்ள புதிய கல்விக் கொள்கையில் தாய்மொழியில் ஆரம்பக் கல்வி கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார். அனைவரும் தங்கள் வீடுகளில் தங்களது தாய் மொழியில் பேச வேண்டும் என்று வலியுறுத்திய உள்துறை அமைச்சர், இது குழந்தைகள் தங்கள் மொழிகளைக் கற்க உதவும் என்று தெரிவித்தார். நமது மொழியைப் பாதுகாத்து, வளர்த்து, மேலும் அர்த்தமுள்ளதாகவும், நெகிழ்வானதாகவும் மாற்றி, நமது சொற்களஞ்சியத்தை அதன் சகோதர மொழிகளுடன் வளப்படுத்துவதன் மூலம், நமது சொற்களஞ்சியம் வளம் பெறும் என்று மத்திய உள்துறை அமைச்சர் கூறினார்.
பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், நாடு வேகமாக முன்னேறி வருகிறது என்றும், 11 வது இடத்திலிருந்து உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக நாம் மாறியுள்ளோம் என்றும் திரு அமித் ஷா கூறினார். இன்று ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை ஒரு பிரகாசமான இடமாக கருதுகிறது என்று அவர் கூறினார். இன்று ஜி-20 நாடுகளிடையே இந்தியா மிக உயர்ந்த வளர்ச்சி விகிதத்தைக் கொண்டுள்ளது என்றும், விரைவில் நாம் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறப் போகிறோம் என்றும் திரு ஷா கூறினார்.ஆகஸ்ட் 15, 2047 அன்று, உலகின் ஒவ்வொரு துறையிலும் இந்தியா முதலிடத்தைப் பிடிக்கும் என்ற பிரதமரின் உறுதிப்பாட்டை நாட்டின் 140 கோடி குடிமக்கள் ஏற்றுக்கொண்டதாக உள்துறை அமைச்சர் குறிப்பிட்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2053024
BR/KR
***
(Release ID: 2053047)
Visitor Counter : 44