கூட்டுறவு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் கூட்டுறவு விரிவாக்கம் குறித்த ஆய்வுக் கூட்டத்திற்கு மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு அமித் ஷா தலைமை வகித்தார்


பிரதமர் திரு நரேந்திர மோடியின் கனவான கூட்டுறவின் மூலம் வளம் என்பதை நனவாக்க நாட்டின் ஒவ்வொரு ஊராட்சியிலும் கூட்டுறவு சங்கம் உருவாக்கப்பட்டு வருகிறது: திரு அமித் ஷா

Posted On: 25 AUG 2024 5:13PM by PIB Chennai

சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில், மாநிலத்தில் கூட்டுறவு விரிவாக்கம் குறித்த ஆய்வுக் கூட்டத்திற்கு மத்திய உள்துறை, கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு அமித் ஷா தலைமை வகித்தார். 33 மாவட்டங்களில் தொடக்க வேளாண் கடன் சங்கத்தையும் (பிஏசிஎஸ்) திரு அமித் ஷா தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், சத்தீஸ்கர் முதலமைச்சர் திரு. விஷ்ணு தியோ சாய், மத்திய கூட்டுறவு இணையமைச்சர் திரு முரளிதர் மொஹால், சத்தீஸ்கர் துணை முதலமைச்சர் திரு அருண் சாவ், மத்திய கூட்டுறவு அமைச்சகத்தின் செயலாளர் டாக்டர் ஆஷிஷ் குமார் பூடானி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அன்னையின் பெயரில் மரக் கன்று நடும் இயக்கத்தின் ஒரு பகுதியாக மரக்கன்றுகளை நட்டு, சத்தீஸ்கர் அரசின் பல்வேறு வளர்ச்சிப் பணிகளும் தொடங்கி வைக்கப்பட்டன.

கூட்டுறவு ஆய்வுக் கூட்டத்தில் பேசிய மத்திய கூட்டுறவு அமைச்சர், பிரதமர் திரு நரேந்திர மோடியின் கூட்டுறவின் மூலம் வளம் என்ற கனவை நனவாக்க நாட்டின் ஒவ்வொரு ஊராட்சியிலும் ஒரு கூட்டுறவு சங்கம் உருவாக்கப்பட்டு வருவதாகக் கூறினார்.

சத்தீஸ்கரின் அனைத்து 2058 தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களும் மாதிரி துணை விதிகளை ஏற்றுக்கொண்டுள்ளதாக மத்திய அமைச்சர் தெரிவித்தார். சத்தீஸ்கரில் வறண்ட பகுதியைக் கண்டறிய தேசிய கூட்டுறவு தரவுத்தளம் பயன்படுத்தப்பட வேண்டும் எனவும் இது கூட்டுறவுகளின் விரிவாக்கத்திற்கு உதவும் என்றும் அவர் கூறினார்.

எத்தனால் உற்பத்திக்காக கூட்டுறவு அமைப்புகளான என்சிசிஎஃப், என்ஏஎஃப்இடி ஆகியவற்றுக்கும் மாநில அரசுகளுக்கும் இடையே ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் திரு அமித் ஷா கூறினார்.

 சத்தீஸ்கரில் 4 கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் உள்ளன எனவும் அவற்றில் ஒரு ஆலையில் மட்டுமே எத்தனால் உற்பத்தி நடைபெறுகிறது என்றும் அவர் கூறினார். மீதமுள்ள 3 கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் 6 மாதங்களுக்குள் பல்வகை எத்தனால் உற்பத்தி ஆலைகள் அமைக்கப்பட வேண்டும் என்று திரு அமித் ஷா வலியுறுத்தினார். இதற்கு மத்திய அரசு உதவும் என்றும் அவர் உறுதியளித்தார்.

தற்போது, சத்தீஸ்கரின் 33 மாவட்டங்களில் மொத்தம் 6 மாவட்ட கூட்டுறவு மத்திய வங்கிகள் (டிசிசிபி) உள்ளன என்றும், எதிர்காலத்தில் மாநிலத்தில் தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் கடன் சங்கங்கள் (பிஏசிஎஸ்) விரிவடைவதை மனதில் கொண்டு, குறைந்தது மேலும் 4 டிசிசிபி-க்கள் நிறுவப்பட வேண்டும் என்றும் திரு அமித் ஷா கூறினார். சத்தீஸ்கரின் கிராமப்புற, பழங்குடியின மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்கான ஒட்டுமொத்த அணுகுமுறையின் கீழ் மாநில அரசின் கால்நடை பராமரிப்பு, விவசாயம், பழங்குடியினர் நலன், கூட்டுறவுத் துறைகள் இணைந்து செயல்பட வேண்டும் என்று திரு அமித் ஷா கேட்டுக் கொண்டார்.

*****

PLM / KV

 

 


(Release ID: 2048764) Visitor Counter : 61