இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தேசிய விளையாட்டு தினத்தை கொண்டாடுவதில் நாடு தழுவிய பங்கேற்புக்கு மத்திய அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா அழைப்பு

Posted On: 24 AUG 2024 4:00PM by PIB Chennai

தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு அனைத்து மக்களும் குறைந்தது ஒரு மணி நேரமாவது வெளிப்புற விளையாட்டுகளில் பங்கேற்க வேண்டும் என்று மத்திய இளைஞர் விவகாரங்கள், விளையாட்டு, தொழிலாளர், வேலைவாய்ப்பு அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா அழைப்பை விடுத்துள்ளார்.

"கேலேகா இந்தியா -கிலேகா இந்தியா" (இந்திய மக்கள் விளையாடும்போது - இந்தியா மலர்ச்சி அடையும்) என்ற பிரதமரின் வார்த்தைகளைக் குறிப்பிட்ட திரு மாண்டவியா, இந்தியாவை சிறந்த விளையாட்டு தேசமாக மாற்றுவதே பிரதமர் திரு நரேந்திர மோடியின் கனவு என்றார். அவரால் கற்பனை செய்யப்பட்ட உடல் திறன் இந்தியா (ஃபிட் இந்தியா) இயக்கம், ஒவ்வொரு குடிமகனுக்குமான ஒரு திட்டமாகும் என்று அமைச்சர் கூறினார். மேலும் இந்த ஆண்டு தேசிய விளையாட்டு தினத்தில் நாடு தழுவிய கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக மக்கள் அனைவரும் இருக்க அழைப்பு விடுப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமரின் ஃபிட் இந்தியா இயக்கத்தை முன்னெடுத்துச் செல்வதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த மத்திய அமைச்சர், தங்கள் ஆரோக்கியத்தை பராமரிப்பதும் சுறுசுறுப்பாக இருப்பதும் ஒவ்வொரு இந்தியரின் பொறுப்பு என்பதை வலியுறுத்தினார். எந்த விளையாட்டாக இருந்தாலும் விளையாடுங்கள், உடல்திறனுடன் இருங்கள்!" என்று கூறியுள்ஏ அமைச்சர், அனைவரையும் இந்த முன்முயற்சியில் சேர ஊக்குவித்தார்.

தேசிய விளையாட்டு தினம் நமது விளையாட்டு நாயகர்களை கௌரவிப்பதற்கான ஒரு வாய்ப்பு மட்டுமல்லாமல் ஆரோக்கியமான வாழ்க்கையை பராமரிக்க விளையாட்டு எவ்வாறு உதவும் என்பதை நினைவூட்டுவதும் ஆகும் என்று திரு மாண்டவியா எடுத்துரைத்தார். தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு ஒவ்வொருவரும் தங்கள் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் விளையாட்டில் ஈடுபட வேண்டும் என்றும்சுறுசுறுப்பான இந்தியாவை உருவாக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பின்னணி:

ஹாக்கி ஜாம்பவான் மேஜர் தயான் சந்தின் பிறந்த நாளான ஆகஸ்ட் 29-ஆம் தேதி ஒவ்வொரு ஆண்டும் தேசிய விளையாட்டு தினமாக கொண்டாடப்படுகிறது. சர்வதேச அரங்கில் நாட்டிற்கு பெருமை சேர்க்கும் நமது விளையாட்டு வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் தேசிய விளையாட்டு தினம் கொண்டாடப்படுகிறது.

*****

PLM / KV


(Release ID: 2048508) Visitor Counter : 101