பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

அமெரிக்காவில் 4 நாள் பயணமாக வாஷிங்டன் சென்றடைந்தார் பாதுகாப்புத்துறை அமைச்சர்

Posted On: 23 AUG 2024 2:08PM by PIB Chennai

உலகில் அமைதி, வளம் மற்றும் நிலைத்தன்மையை உறுதி செய்யக்கூடிய வலிமையான சக்தியாக, இந்தியாவும், அமெரிக்காவும் திகழ்கின்றன. அமெரிக்காவில் நான்கு நாள் பயணமாக 2024 ஆகஸ்ட் 22, அன்று வாஷிங்டன் சென்றடைந்த பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், இந்திய  வம்சாவளியினருடன் கலந்துரையாடிய போது இதனைத் தெரிவித்தார். இந்தியாவும், அமெரிக்காவும் இயற்கையான நட்பு நாடுகள் என்றும், அவை வலுவான கூட்டாளிகளாக இருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த ஒத்துழைப்பு தொடர்ந்து வளர்ந்து வருவதாகவும் பாதுகாப்புத்துறை அமைச்சர் கூறினார்.

பிரதமர் திரு நரேந்திர மோடியின் ஆற்றல்மிக்க தலைமையின் கீழ், உலக அரங்கில் இந்தியாவின் அந்தஸ்து வளர்ந்துள்ளது என்ற உண்மையை திரு ராஜ்நாத் சிங் மீண்டும் வலியுறுத்தினார். "முன்பு, சர்வதேச அரங்குகளில் இந்தியாவின் வார்த்தைகள் கவனிக்கப்படவில்லை; ஆனால் இன்று, ஓட்டுமொத்த உலகமும் கூர்ந்து கவனிக்கிறது" என்று அவர் கூறினார்.

முதலீட்டு நிறுவனமான மோர்கன் ஸ்டான்லியால் உருவாக்கப்பட்ட 2014 ஆம் ஆண்டுக்கு முன்பு, இந்தியா 'பலவீனமான ஐந்து' நாடுகளில் ஒன்றாக இருந்தது என்றும், இன்று உலகின் 'அற்புதமான ஐந்து' பொருளாதாரங்களில் ஒன்றாக இந்தியா தன்னைக் காண்கிறது என்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் சுட்டிக்காட்டினார். 2027 -ம் ஆண்டில் இந்தியா மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக மாறும் என்று அந்நிறுவனத்தின் சமீபத்திய அறிக்கையை அவர் மேற்கோள் காட்டினார். கொவிட்-19 தொற்றுநோய்க்கு அரசு மேற்கொண்ட நடவடிக்கையால், மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியப் பொருளாதாரம் மோசமாக பாதிக்கப்படவில்லை என்பதை உறுதி செய்ததாக அவர் குறிப்பிட்டார்  .

25 கோடி மக்களை அரசு வெற்றிகரமாக வறுமைக் கோட்டிற்கு மேலே கொண்டு வந்துள்ளது என்ற உண்மையை திரு ராஜ்நாத் சிங் எடுத்துரைத்தார் . சமீபத்திய தரவுகளின்படி, சில்லறை பணவீக்கம் ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 3.54% ஆக குறைந்துள்ளதுடன், அந்நியச் செலாவணி கையிருப்பும் இதுவரை இல்லாத அளவுக்கு 675 பில்லியன் டாலரை எட்டியுள்ளதாகக் கூறினார்.

5,000-க்கும் மேற்பட்ட பொருட்களை உள்ளடக்கிய நேர்மறையான சுதேசி மயமாக்கல் பட்டியல்களை அறிவிப்பது உட்பட, பாதுகாப்புத் துறையில் 'தற்சார்பை' அடைய அரசு எடுத்த நடவடிக்கைகளை பாதுகாப்புத்துறை அமைச்சர் பட்டியலிட்டார். உள்நாட்டு நிறுவனங்களால் அதிநவீன பாதுகாப்பு சாதனங்கள் இந்திய மண்ணில் தயாரிக்கப்படுவதை உறுதி செய்ய, நிலையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் வலியுறுத்தினார்.

தற்போதைய அரசு ஆட்சிக்கு வருவதற்கு முன்பு ரூ.600 கோடியாக இருந்த பாதுகாப்பு தளவாட ஏற்றுமதி, தற்போது கணிசமாக உயர்ந்து ரூ.21,000 கோடியாக உயர்ந்துள்ளதாக திரு ராஜ்நாத் சிங் தெரிவித்தார். புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் காரணமாக, நாட்டில் 2014-ல் 400 ஆக இருந்த புத்தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை, 1.20 லட்சமாக உயர்ந்துள்ளது என்றும் அவர் கூறினார் . இந்த சாதனைகளுக்கு அரசின் கொள்கைகள் மற்றும் திட்டமிடலுடன்  கூடிய மன உறுதியே காரணம் என்று அவர் கூறினார். பிரதமரின் தொலைநோக்குப் பார்வைக்கு குரல் கொடுத்த அவர், "இந்தியாவை ஒரு வலுவான, பாதுகாப்பான மற்றும் வளமான தேசமாக உருவாக்க நாங்கள் விரும்புகிறோம்" என்று தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2048053

***

MM/AG/KR


(Release ID: 2048111) Visitor Counter : 65