தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்

கடந்த ஓராண்டில் வருடத்தில் 7.3 கோடி இணைய சந்தாதாரர்கள் மற்றும் 7.7 கோடி பிராட்பேண்ட் சந்தாதாரர்கள் இணைந்துள்ளனர்

Posted On: 20 AUG 2024 2:00PM by PIB Chennai

இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) வெளியிட்டுள்ள ஆண்டறிக்கையின்படி, 2023-2024 நிதியாண்டில் இந்திய தொலைத் தொடர்புத் துறை குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டுள்ளது.

இந்த அறிக்கை, பல்வேறு சேவைகளில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி போக்குகள் மற்றும் முக்கிய அளவுருக்களை எடுத்துக்காட்டுகிறது. சேவை வழங்குவோரால் அளிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில், அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஒட்டுமொத்த தொலைத்தொடர்பு அடர்த்தி மார்ச் 2023 இறுதியில் 84.51%-லிருந்து மார்ச் 2024 இறுதியில் 85.69% என 1.39% ஆண்டு வளர்ச்சி விகிதத்தில் அதிகரித்துள்ளது என்று அந்த  அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிக்கையில் உள்ள முக்கிய கண்டுபிடிப்புகள்:

மொத்த இணைய சந்தாதாரர்களின் வளர்ச்சி: மொத்த இணைய சந்தாதாரர்களின் எண்ணிக்கை மார்ச் 2023 இறுதியில் 88.1 கோடியிலிருந்து, மார்ச் 2024 இறுதியில் 95.4 கோடியாக அதிகரித்துள்ளது, தன் ஆண்டு வளர்ச்சி விகிதம் 8.30% ஆகும், இது கடந்த ஒரு வருடத்தில், 7.3 கோடி இணைய சந்தாதாரர்களைச் சேர்க்க வழிவகுத்தது.

பிராட்பேண்ட் சந்தாதாரர்களின் ஆதிக்கம்: பிராட்பேண்ட் சேவைகள் அவற்றின் மேல்நோக்கிய பாதையைத் தக்க வைத்துக் கொண்டன, பிராட்பேண்ட் சந்தாதாரர்களின் எண்ணிக்கை மார்ச் 2023-ல் 84.6 கோடியிலிருந்து மார்ச் 2024-ல் 92.4 கோடியாக அதிகரித்துள்ளது. 7.8 கோடி பிராட்பேண்ட் சந்தாதாரர்களுடன் 9.15% வலுவான வளர்ச்சி விகிதம், அதிவேக இணைப்பின் முக்கியத்துவத்தை சுட்டிக் காட்டுகிறது.

அதிவேக தரவு நுகர்வு: வயர்லெஸ் தரவு சந்தாதாரர்களின் எண்ணிக்கை, மார்ச் 2023 இறுதியில் 84.6 கோடியிலிருந்து மார்ச் 2024 இறுதியில் 91.3 கோடியாக அதிகரித்து, ஆண்டு வளர்ச்சி விகிதம் 7.93% ஆக உள்ளது. மேலும், வயர்லெஸ் தரவு பயன்பாட்டின் மொத்த அளவு 2022-23-ம் ஆண்டில் 1,60,054 PB-லிருந்து 2023-24 ஆம் ஆண்டில் 1,94,774 PB-ஆக 21.69% வருடாந்திர வளர்ச்சியுடன் அதிகரித்துள்ளது.

தொலைத்தொடர்பு அடர்த்தியில் உயர்வு: இந்தியாவில் தொலைபேசி சந்தாதாரர்களின் எண்ணிக்கை மார்ச் 2023 இறுதியில் 117.2 கோடியிலிருந்து மார்ச் 2024 இறுதியில் 119.9 கோடியாக அதிகரித்து, ஆண்டு வளர்ச்சி விகிதத்தை 2.30% பதிவு செய்தது. இந்தியாவில் ஒட்டுமொத்த தொலைத்தொடர்பு அடர்த்தி, மார்ச் 2023 இறுதியில் 84.51%-லிருந்து மார்ச் 2024 இறுதியில் 85.69% ஆக 1.39% ஆண்டு வளர்ச்சி விகிதத்தில் அதிகரித்துள்ளது.

ஒரு சந்தாதாரரின், மாதாந்திர சராசரி பயன்பாட்டு நிமிடங்கள் (MOUs) 2022-23 ஆம் ஆண்டில் 919 ஆக இருந்த நிலையில், 2023-24 ஆம் ஆண்டில் 963 ஆக, 4.73% வருடாந்திர வளர்ச்சி விகிதத்துடன் அதிகரித்துள்ளது.

சரிசெய்யப்பட்ட மொத்த வருவாயும் (AGR) 2022-23 ஆம் ஆண்டில் ரூ .2,49,908 கோடியிலிருந்து 2023-24 ஆம் ஆண்டில் ரூ .2,70,504 கோடியாக 8.24% ஆண்டு வளர்ச்சி விகிதத்துடன் அதிகரித்துள்ளது.

இந்த அறிக்கை 2023-24 நிதியாண்டில் இந்தியாவில் தொலைத் தொடர்பு சேவைகளுக்கான முக்கிய அளவுருக்கள் மற்றும் வளர்ச்சிப் போக்குகளை முன்வைக்கும் அதே வேளையில், தொலைத் தொடர்பு சேவைகள் குறித்த பரந்த கண்ணோட்டத்தை வழங்குவதுடன், மற்றும் பல்வேறு பங்குதாரர்கள், ஆராய்ச்சி முகமைகள் மற்றும் ஆய்வாளர்களுக்கு ஒரு குறிப்பு ஆவணமாக செயல்படுகிறது.

***

(Release ID: 2046870)

MM/AG/KR



(Release ID: 2046920) Visitor Counter : 41