பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

Posted On: 15 AUG 2024 2:30PM by PIB Chennai

பாரத் மாதா கி ஜே

பாரத் மாதா கி ஜே

பாரத் மாதா கி ஜே

பாரத் மாதா கி ஜே

எனதருமை நாட்டு மக்களே, எனது குடும்ப உறுப்பினர்களே!

நாட்டுக்காக தங்களின் வாழ்க்கையை தியாகம் செய்த தீரமிக்க எண்ணற்ற விடுதலைப் போராட்ட வீரர்களுக்கும், நாட்டின் விடுதலைக்காக தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்களுக்கும் நாம் மரியாதை செலுத்தும் இன்றைய தினம் மிகவும் உன்னதமான தருணமாகும். இவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் போராடினார்கள், பாரத் மாதா கி ஜே என்ற முழுக்கத்துடனும், துணிச்சலுடனும் தூக்குமேடை ஏறினார்கள். இவர்களின்  மனஉறுதியையும், தேச பக்தியையும் நினைவுகூர்வதற்கான விழாவாகும் இது. இந்த சுதந்திர தின விழாவில், நாம் சுதந்திரமாக சுவாசிக்கும் நல்ல தருணத்தை பெற்றிருப்பதற்கு வீரம் செறிந்த இவர்களே காரணமாவார்கள். இவர்களுக்கு நாடு மிகவும் கடன்பட்டுள்ளது. இத்தகைய மகத்தான ஆளுமைகள் ஒவ்வொருவருக்கும் நாம் மரியாதை செலுத்துவோம். 

எனதருமை நாட்டு மக்களே,

தேசக்கட்டுமானத்திற்கும், நாட்டைப் புதிய உச்சங்களுக்குக் கொண்டு செல்வதற்கும் உறுதியுடன் முழுமையாக அர்ப்பணித்துக்கொண்டு நாட்டைப் பாதுகாக்கும் அனைவருக்கும் இன்று நான் எனது வெகுவான மரியாதையை செலுத்துகிறேன். நமது விவசாயிகளாக இருந்தாலும், மிகுந்த மனஉறுதி கொண்ட இளைஞர்களாக இருந்தாலும், நமது அன்னையர், சகோதரிகளாக இருந்தாலும், தலித்துகள், ஒடுக்கப்பட்டவர்கள்,  சுரண்டப்பட்டவர்கள், வாய்ப்பு மறுக்கப்பட்டவர்களாக இருந்தாலும் ஜனநாயகத்தின் மீதான இவர்களின் வைராக்கியமும், நம்பிக்கையும் உலகத்திற்கு ஊக்கம் அளிப்பவையாக இருக்கின்றன. இவர்களுக்கு மிகுந்த மரியாதையுடன் நான் வணக்கம் செலுத்துகிறேன். 

எனதருமை நாட்டு மக்களே,

இந்த ஆண்டும்,  கடந்த சில ஆண்டுகளிலும் நமது கவலைக்கு மிகப்பெரும் காரணங்களாக இயற்கைப் பேரிடர்கள் மாறியிருக்கின்றன.  பலர் தங்களின் குடும்பத்தினரை, சொத்துக்களை இழந்துள்ளனர். இந்த நாடும் பல முறை ஏராளமான இழப்புகளை சந்தித்துள்ளது. உயிரிழந்தவர்களுக்கு இன்று நான் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த இக்கட்டான தருணத்தில், அவர்களுக்கு  நாடு உறுதுணையாக இருக்கிறது என்று  உறுதி கூறுகிறேன்.

எனதருமை நாட்டு மக்களே,

சுதந்திரத்துக்கு முந்தைய நாட்களை இப்போது நாம் நினைவுகூர்வோம். அடிமைத்தனத்தின் நூற்றாண்டுகளின் போது ஒவ்வொரு காலமும் போராட்டமாக இருந்துள்ளது. நமது இளைஞர்களாக இருந்தாலும், முதியவர்களாக இருந்தாலும். விவசாயிகளாக, பெண்களாக அல்லது பழங்குடி மக்களாக இருந்தாலும், அடிமைத்தனத்திற்கு எதிராக அவர்கள் தொடர்ந்து போராடியிருக்கிறார்கள்.  நன்கு நினைவில் நிற்கும் 1857 கலகத்திற்கு முன்னரும் கூட, நமது நாட்டின் பல பழங்குடியின பகுதிகளில் சுதந்திரத்திற்கான போராட்டங்கள் நடந்திருப்பதை வரலாறு நிரூபிக்கிறது.

நண்பர்களே,

சுதந்திரத்திற்கு முன் 40 கோடி மக்கள் தங்களின் அளப்பரிய உணர்வையும், திறமையையும் வெளிப்படுத்தினார்கள். அவர்கள் ஒரு கனவோடும், ஒரு தீர்மானத்தோடும் முன்னேறிச் சென்றார்கள். அயராது போராடினார்கள். அவர்களிடம் ஒரே ஒரு முழக்கம் இருந்தது. அது, “வந்தே மாதரம், ஒரே ஒரு கனவு இருந்தது. அது பாரதத்தின் விடுதலை. அவர்களின் ரத்தம் இன்று நமது ரத்த நாளங்களில் ஓடுவதற்காக நாம் பெருமிதம் கொள்கிறோம். அவர்கள் நமது முன்னோர்கள். அவர்கள் வெறுமனே 40 கோடி பேர். வெறும் 40 கோடி பேர்  உலகளாவிய சக்தியை சாய்த்தார்கள். அடிமைத் தளைகளை உடைத்தார்கள். நமது ரத்த நாளங்களில் ஓடும் நமது முன்னோர்களின் ரத்தம்  இதை சாதிக்க முடிந்தது என்றால், இன்று 140 கோடி மக்களாகிய நம்மால் அடிமைத்தளைகளை உடைக்க முடியும். 40 கோடி மக்களால்  சுதந்திரக் கனவை சாதிக்க முடிந்தது என்றால், 140 கோடி மக்களாகிய எனது குடும்ப உறுப்பினர்கள் ஒரு தீர்மானத்தோடு உறுதியான திசையில் முன்னேறி செல்லும் போது தோளோடு தோள் சேர்ந்து செல்லும் போது, எவ்வளவு பெரிய சவால்களும் ஒரு பொருட்டல்ல. பற்றாக்குறைகளும் ஆதார வளங்களுக்கான போராட்டமும் ஒரு பொருட்டல்ல. அனைத்து சவால்களையும் நம்மால் வெல்லமுடியும். வளம் மிக்க பாரதத்தைக் கட்டமைக்க முடியும். 2047-க்குள் வளர்ச்சியடைந்த பாரதம் என்ற இலக்கை நம்மால் சாதிக்க முடியும். 40 கோடி மக்கள் தங்களின் கடின உழைப்பு, அர்ப்பணிப்பு, தியாகம் ஆகியவற்றால் நமக்கு சுதந்திரத்தை வழங்க முடியும் என்றால், 140 கோடி மக்களால் அதே உணர்வுடன் வளமான பாரதத்தைக் கட்டமைக்கவும் முடியும்.

நண்பர்களே,

நாட்டுக்காக உயிர்தியாகம் செய்ய மக்கள் உறுதிபூண்ட காலம் இருந்தது. நாம் சுதந்திரத்தைப் பெற்றோம். இப்போது நாட்டுக்காக வாழ்வதற்கு உறுதி பூணும் காலமாகும். நாட்டிற்காக உயிர்த் தியாகம் செய்த உறுதி நமக்கு சுதந்திரத்தைத் தரமுடியும் என்றால், நாட்டிற்காக வாழும் உறுதி வளமான பாரதத்தை உருவாக்க முடியும்.

நண்பர்களே,

வளர்ச்சியடைந்த பாரதம் 2047 என்பது பேச்சுக்கான ஒரு தொடரல்ல. அதன் பின்னால் கடினமான உழைப்பு இருக்கிறது. நாடு முழுவதும் உள்ள பல மக்களிடமிருந்து பெற்ற ஆலோசனைகள் இருக்கின்றன. குடிமக்களிடமிருந்து ஆலோசனைகளை நாங்கள் பெற்றிருக்கிறோம். வளர்ச்சியடைந்த பாரதம் 2047 என்பதற்கு கோடிக்கணக்கான மக்கள் தெரிவித்த கருத்துகளுக்காக நான் மகிழ்ச்சியடைகிறேன். ஒவ்வொரு குடிமகனின் கனவையும் பிரதிபலிக்கிறது. ஒவ்வொரு குடிமகனின் தீர்மானமும் இதற்கு சாட்சியாக இருக்கிறது. நாடு தனது சுதந்திரத்தின் நூற்றாண்டு விழாவை கொண்டாடும் 2047-க்குள் வளர்ச்சியடைந்த பாரதத்தை கட்டடமைக்க இளைஞர்களும், மூத்தக் குடிமக்களும், கிராமவாசிகளும். விவசாயிகளும், தலித் மக்களும். பழங்குடியினரும் மலைகளில், வனங்களில் அல்லது  நகரங்களில் வசிப்போரும் மதிப்பு மிக்க ஆலோசனைகளை வழங்கியிருக்கிறார்கள்.

அந்தக் கருத்துகளை வாசிக்கும் போது நான் மிகவும் மகிழ்ச்சியைடந்தேன். அவர்கள் என்ன எழுதியிருந்தார்கள். இந்தியாவை உலகின் திறன் தலைநகரமாக மாற்ற வேண்டும் என்று சிலர் யோசனை தெரிவித்திருந்தனர். வளர்ச்சியடைந்த இந்தியா 2047-க்குள் உலகளாவிய உற்பத்தி மையமாக நாட்டை மாற்ற வேண்டும் என்று சிலர் யோசனை கூறியிருந்தார்கள். நமது பல்கலைக்கழகங்கள் உலகளாவிய அந்தஸ்தை பெற வேண்டும் என்பது சிலரின் கருத்தாக இருந்தது.  சுதந்திரம் அடைந்து பல ஆண்டுகள் ஆனபோதிலும் நமது ஊடகங்கள்  ஏன் உலகளாவியதாக இருக்கவில்லை என்ற கேள்வியையும் சிலர் எழுப்பியிருந்தனர். நமது திறன் மிக்க இளைஞர்கள் உலகின் முதலாவது தெரிவாக மாறுவார்கள் என்று சிலர் நம்பிக்கை தெரிவித்திருந்தனர். வெகு விரைவில் வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் பாரதம் தற்சார்புடையதாக மாற வேண்டும் என்று சிலர் யோசனை தெரிவித்திருந்தனர்.  நாம் ஸ்ரீ அன்னா என்று அழைக்கின்ற நமது விவசாயிகளால் உற்பத்தி செய்யப்படுகின்ற சிறுதானியங்கள் எனும் சிறந்த உணவு, உலக அளவில் அனைத்து உணவருந்தும் மேசைகளுக்கும் செல்ல வேண்டும் என்று பலர் கருத்து தெரிவித்திருந்தனர். உலகின் ஊட்டச்சத்தை நாம் வலுப்படுத்துவது போலவே, இந்தியாவின் சிறு விவசாயிகளுக்கும் ஆதரவாக இருக்க வேண்டும். உள்ளூர் தன்னாட்சி நிறுவனங்கள் உட்பட நாட்டில் உள்ள பல்வேறு நிறுவனங்களில் நிர்வாக சீர்திருத்தங்கள் செய்ய வேண்டியது  அவசியம் என்று பலர் எடுத்துரைத்தனர். நீதித்துறை அமைப்பில் ஏற்படும் தாமதங்கள் பற்றி கவலை தெரிவித்ததோடு, நீதித்துறை சீர்திருத்தங்களின் தேவைகளையும் எடுத்துரைக்கப்பட்டன. பல பசுமை நகரங்களை கட்டமைப்பது இந்தக் காலத்தின் தேவை என்று  பலர் எழுதியிருந்தனர். இயற்கை சீற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், அரசு மற்றும் நிர்வாகத்தின் திறன் கட்டமைப்புக்கான இயக்கத்தை தொடங்க வேண்டும் என்று ஒருவர் யோசனை தெரிவித்திருந்தார். வெகுவிரைவில் இந்தியாவுக்கு சொந்தமான விண்வெளி ஆய்வு நிலையத்தை அமைக்க வேண்டும் என்று வேறு சிலர் கருத்து கூறியிருந்தனர். உலகம் ஒட்டுமொத்த சுகாதார கவனிப்பை ஏற்றுக்கொண்டு இருக்கும் நிலையில் பாரம்பரிய மருந்து மற்றும் ஆரோக்கியத்தின் மையமாக இந்தியாவை மேம்படுத்த வேண்டும் என்று சிலர் வலியுறுத்தியிருந்தனர். உலகின் 3-வது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறுவதில் தாமதம் இருக்கக்கூடாது என்று மேலும் சிலர் கூறியிருந்தனர்.

நண்பர்களே,

இந்த ஆலோசனைகளை நான் படித்ததற்கான காரணம்  இவை எனதருமை நாட்டு மக்களால் வழங்கப்பட்டவையாகும். எனது நாட்டின் சாமானிய மக்களிடமிருந்து இந்த ஆலோசனைகள் வந்துள்ளன. இந்த நாட்டின் மக்கள் இத்தகையை சிறந்த சிந்தனைகளையும், மகத்தான கனவுகளையும் கொண்டிருக்கும்போது, இந்த வார்த்தைகளில் அவர்களின் உறுதி பிரதிபலிக்கும் போது நமக்குள் அது புதியதொரு கருத்தை வலுப்படுத்துவதாக நான் நம்புகிறேன். நமது தன்னம்பிக்கை  புதிய உச்சங்களை அடைந்துள்ளது.  மக்களின் மீதான நம்பிக்கை வெறுமனே அறிவார்ந்த விவாதத்துக்கு உரியவை அல்ல. இவை அனுபவங்களில் இருந்து உருவாகியிருப்பவை. இந்த நம்பிக்கை நீண்ட கால கடின உழைப்பின் விளைவாகும். எனவே, குறிப்பிட்ட கால வரம்புக்குள் இந்தியாவில் 18  ஆயிரம் கிராமங்களுக்கு மின்சாரம் வழங்கப்படும் என்று இந்த செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து வழங்கப்படும் வாக்குறுதியை சாமானிய மக்கள் கேட்டு அந்த வாக்குறுதியும் நிறைவேற்றப்படும்போது அவர்களின் நம்பிக்கை வலுவடைகிறது. சுதந்திரம் அடைந்து பல ஆண்டுகள் ஆன பிறகும் 2.5 கோடி குடும்பங்கள் மின்சாரம் இல்லாமல் இருளில் வாழ்கின்றன என்று  கூறும்போதும்,  2.5 கோடி வீடுகள் மின்சாரத்தை பெறும்போதும் சாமானிய மக்களின் நம்பிக்கை அதிகரிக்கிறது.  தூய்மை  இந்தியா பற்றி நாம் பேசும் போது அது சமூகத்தின் செல்வாக்கு மிக்க பிரிவுகளிடமிருந்து ஏழ்மையான காலனிகளில் வசிக்கும் மக்களுக்கும் கிராமப்புற குடும்பங்களுக்கும் அல்லது சிறு குழந்தைகளுக்கும் செல்லும் போது இன்று ஒவ்வொரு குடும்பமும் தூய்மையான சுற்றுச்சூழலை ஏற்றுக்கொண்டுள்ளன, தூய்மை குறித்த விவாதத்தை ஊக்கப்படுத்துகின்றன. தூய்மையான பழக்கவழக்கங்கள் மற்றும் சுற்றுச்சூழலை நோக்கிய சமூக மாற்றத்தை உறுதி செய்வதற்கு ஒவ்வொரு குடிமகனும் பொறுப்புடன் நடந்து கொள்கிறார். ஒருவர் மற்றொருவரை கண்காணிக்கிறார். நமது நாட்டுக்குள் வந்துள்ள புதிய மனஉணர்வின் உண்மையான பிரதிப்பலிப்பு இது என்று நான் நம்புகிறேன்.

ஜல்ஜீவன் இயக்கத்தின் மூலம் குறுகிய காலத்தில் 15 கோடி குடும்பங்கள் தூய்மையான குடிநீர் விநியோகத்தை தங்களது வீட்டில் குழாய்கள் மூலம் பெறுகிறார்கள். இந்த கோட்டைக் கொத்தளத்தில் இருந்து அறிவிக்கப்படும்  அதே நேரத்தில், அனைத்து குடும்பங்களும் சுத்தமான, தூய்மையான குடிநீரை பெறுவது அவசியமாகும். இந்த வசதிகள் மறுக்கப்பட்டவர்களாக இருந்தவர்கள் யார்? பின்தங்கிய நிலையில் விடப்பட்டவர்கள் யார்? சமூகத்தில் முன்னேறி இருப்பவர்கள் இத்தகையை வசதிகள் கிடைக்காமல் இருக்கவில்லை. தலித் மக்கள், விளிம்பு நிலை மக்கள். சுரண்டப்பட்ட பிரிவினர், பழங்குடியின சகோதர–சகோதரிகள், குடிசைப்பகுதிகளில் வாழ்வோர் ஆகியோர் தான் இத்தகையை அடிப்படை வசதிகள் கிடைக்காமல் இருந்துள்ளனர்.  இத்தகையை அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதற்கு, இதன் பயன்கள் சமூகத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும் கிடைப்பதற்கும் நாங்கள் முயற்சி மேற்கொண்டுள்ளோம்.

உள்ளூர் பொருட்களுக்கு ஆதரவு என்ற மந்திரத்தை நாம் வழங்கியிருக்கிறோம். இது பொருளாதார வளர்ச்சிக்கு புதிய மந்திரமாக மாறியிருப்பதற்கு நான் மகிழ்ச்சியடைகிறேன். ஒவ்வொரு மாவட்டமும் தற்போது தங்களின் உற்பத்தியில் பெருமிதம் கொள்கிறார்கள். ஒரு மாவட்டம் ஒரு உற்பத்தி பொருள் என்பது தற்போது புதிய அலையாக மாறியிருக்கிறது. இந்த திட்டத்தின் கீழ், ஒவ்வொரு மாவட்டமும் ஏற்றுமதி பொருட்கள் என்ற திசையில் சிந்திக்கத் தொடங்கியிருக்கின்றன. இந்த மாவட்டங்கள் புதுப்பிக்க வல்ல எரிசக்தி குறித்த தீர்மானத்தைக் கொண்டுள்ளன. ஜி20 நாடுகள் கூட்டாக மேற்கொள்வதை விட, இந்தத் துறையில் இந்தியா கூடுதல் சாதனையை படைத்துள்ளது.  எரிச்சக்தித் துறையில் தற்சார்புடையதாக  மாறுவதற்கும், உலகளாவிய வெப்பமடைதல் காரணத்தால் உருவாகும் சவால்களுக்கு தீர்வு காணவும் இந்தியா பாடுபடுகிறது.

நண்பர்களே,

ஃபின்டெக் எனும் நிதித் தொழில்நுட்பத்தில் நமது வெற்றிக்காக நாடு  மிகவும் பெருமிதம் கொள்கிறது. நம்மிடம் இருந்து கற்றுக்கொள்ள உலகம் விரும்புகிறது. இதனால்  நமது திறமைகள் குறித்து நாம் கூடுதல் பெருமிதம் கொள்கிறோம்.

நண்பர்களே,

கொரோனா பெருந்தொற்று காலத்தில் சந்தித்த நெருக்கடிகளை நாம் எவ்வாறு மறக்கமுடியும்?  உலகிலேயே நமது நாட்டில் தான் வெகு விரைவாக தடுப்பூசி இயக்கத்தை மேற்கொள்ள முடிந்தது. நமது ராணுவம் துல்லிய தாக்குதல்களையும் வான் வழி தாக்குதல்களையும் நடத்தியது இந்த தருணங்களில் இளைஞர்களின் இதயங்கள் பெருமிதத்தால் நிறைந்தன. அவர்களின்  தலைகள் உயர்ந்து நிமிர்ந்திருந்தன. இதன் காரணமாக 140 கோடி மக்கள் இன்று பெருமித உணர்வும், நம்பிக்கையும் கொண்டுள்ளனர்.

நண்பர்களே,

இந்த அனைத்து அம்சங்களுக்கும் குறிப்பிடத்தக்க முயற்சி இருந்தது. சீர்திருத்த பாரம்பரியம் மேலும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. அரசியல்  தலைமை அதிகாரமளித்தலைக் கொண்டு தீர்மானிக்கும் போது, வளர்ச்சியை நோக்கி உறுதியாக இருக்கும் போது அரசு எந்திரமும் அதனை சாத்தியமாக்கத்   தொடங்குகிறது. வலுவான அமலாக்கத்தை உறுதி செய்கிறது.  இந்தக் கனவுகள் நிறைவேற ஒவ்வொரு குடிமகனும் தீவிரமான பங்களிப்பை செய்ய தொடங்கும் போது விரும்பதக்க விளைவுகள் ஏற்படுகின்றன. 

எனதருமை நாட்டு மக்களே,

சுதந்திரத்தின் பல பத்தாண்டுகள் கடந்த பிறகும் கூட, கடுமையான சூழ்நிலைகளை ஒரு தேசம் என்ற முறையில் நாம் எதிர்கொண்டதை நம்மால் மறக்க இயலாது.  பரவாயில்லை என்ற அணுகுமுறையும் இருப்பதை ஏற்றுக்கொள்ளும் மனநிலையுமே இதற்கு காரணம். மாற்றத்தை ஏற்படுத்துவதில் நம்பிக்கையோ அல்லது பங்களிப்போ நம்மிடம் இருந்ததில்லை. இருக்கும் நிலையை நாம் எதிர்ப்பதில்லை. மேலும் பிரச்சனைகள் உருவாகும் என்பதால் புதியது எதையும் சிந்திப்பதில்லை. எது கிடைக்கிறதோ, அதை ஏற்றுக்கொள்ளும் சூழ்நிலை இருந்தது. மாற்றம் எதுவும் ஏற்பட்டு விடாது என்று மக்கள் நம்பினார்கள். இந்த மனநிலையை நாம் உடைக்கவேண்டியிருந்தது.  நம்பிக்கையை நமக்குள் நிரப்ப வேண்டியிருந்தது. இந்த திசையில் நாம் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருந்தது. “அடுத்த தலைமுறைக்காக நாம் ஏன் பாடுபட வேண்டும்? தற்போது இருப்பதில் கவனம் செலுத்துவோம்” என்று பலர் கூறுவார்கள். ஆனால் சாமானிய மக்கள் இதனை விரும்பவில்லை. அவர்கள் மாற்றத்திற்காக காத்திருக்கிறார்கள். அவர்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். அதற்காக ஆர்வம் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்களின் கனவுகளுக்கு, நம்பிக்கைகளுக்கு, விரும்பங்களுக்கு எவரும் முக்கியத்துவம் அளிப்பதில்லை. இதன் விளைவாக அவர்கள் சிரமங்களிலேயே உழல்கிறார்கள். அவர்கள் சீர்திருத்தங்களுக்காக காத்திருக்கிறார்கள்.  உங்களுக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. நாங்கள் குறிப்பிடத்தக்க சீர்திருத்தங்களை அமல்படுத்தியிருக்கிறோம்.  ஏழைகளாயினும். நடுத்தர வகுப்பினராயினும், உரிமை மறுக்கப்பட்டவர்களாயினும் அதிகரித்து வரும் நகர்ப்புற மக்களாயினும், இளைஞர்களின் கனவுகள் தீர்மானங்களாயினும், அவர்களின் விருப்பங்களாயினும், வாழ்க்கையில் மாற்றத்தை கொண்டு வர சீர்திருத்தப் பாதையை நாங்கள் தெரிவு செய்துள்ளோம்.  சீர்திருத்தகங்களுக்கான எங்களின் உறுதிப்பாடு பத்திரிகைகளின் தலையங்கங்களுக்கு மட்டுமானவை அல்ல என்று நாட்டு மக்களுக்கு நான் உறுதியளிக்க விரும்புகிறேன். சீர்திருத்தங்களுக்கான எங்களின் உறுதி சில நாள் கைத்தட்டல்களுக்காக அல்ல.  எங்களின் சீர்திருத்த நடைமுறைகள், நிர்ப்பந்தத்தால்  இயக்கப்படுபவையல்ல. தேசத்தை வலுப்படுத்தும் நோக்கத்தால் இயக்கப்படுபவை. எனவே, எங்களின் சீர்திருத்தப் பாதை வளர்ச்சியின் மூலவரைபடமாக இருக்கும் என்று  நான் உறுதியாக கூறுகிறேன்.  எங்களின் சீர்திருத்தங்கள், வளர்ச்சி, மாற்றம் என்பவை விவாத மன்றங்களுக்கான,  அறிவு ஜீவி சமுகத்திற்கான அல்லது நிபுணர்களுக்கான  வெறும் தலைப்புகளாக இருக்காது.

நண்பர்களே,

நாங்கள் இவற்றை செய்வது  அரசியல் நிர்பந்தங்களால் அல்ல. நாங்கள் எதைச் செய்தாலும் அரசியல் ஆதாரங்களையோ, இழப்புகளையோ கணக்கிடுவதில்லை. எங்களின் ஒரே தீர்மானம் தேசம் முதலில் தேசம் முதலில். தேசத்தின் நலனே மிக உயர்ந்தது என்பது மட்டும்தான். எனது இந்தியா மகத்தானதாக மாறவேண்டும் என்ற தீர்மானத்துடன் தான், நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொள்கிறோம்.

நண்பர்களே,

சீர்திருத்தங்கள் என்று வரும் போது அதற்கு நீண்ட வரலாறு உள்ளது. இதன் மீதான விவாதத்திற்கு நான் செல்வது என்றால் அதற்கு நீண்ட நேரம் பிடிக்கும். வங்கித்துறையின் பழைய நிலைபற்றி எண்ணிப் பாருங்கள். அதில் வளர்ச்சியோ, விரிவாக்கமோ, நம்பத்தன்மையோ இருந்ததில்லை.  அதுமட்டுமல்ல, செயல்பாடுகளின் வகைமை நமது வங்கிகளை நெருக்கடிக்குக்  கொண்டுசென்றது. வங்கித்துறையை பலப்படுத்த பல சீர்திருத்தங்களை நாங்கள் அமலாக்கினோம். அதன் விளைவாக, நமது வங்கிகள் உலகின் தெரிவு செய்யப்பட்ட வலுவான  வங்கிகளுக்கு இடையே தங்களின் இடத்தை பாதுகாத்துக் கொண்டுள்ளன. வங்கிகள்  வலுவடைந்த போது, வழக்கமான பொருளாதார சக்தியும் வலுவடைந்தது.  இதனால்  சாமானிய மக்களின் குறிப்பாக, நடுத்தர வகுப்பு குடும்பங்களின் தேவைகளை எதிர்கொள்ள மகத்தான பலமாக அது மாறியது.

வீட்டு வசதிக் கடன், வாகனக் கடன், எனது விவாசாயி டிராக்டர் வாங்குவதற்கான கடன், எனது இளைஞர் ஸ்டார்ட்அப் தொடங்குவதற்கான கடன், இளைஞருக்கான கல்விக்கடன், வெளிநாடு செல்வதற்கான கடன் என எதுவாக இருப்பினும், அனைத்தும் வங்கிகள் மூலமே சாத்தியமாயின. கால்நடை வளர்ப்போர், மீன்வளர்ப்பில் ஈடுபட்டுள்ள சகோதர- சகோதரிகள் இன்று வங்கிகள் மூலம் பயனடைவது குறித்து நான் மகிழ்ச்சியடைகிறேன். லட்சக்கணக்கான சாலையோர வியாபாரிகள் தற்போது வங்கிகளுடன் இணைந்து புதிய உச்சங்களை எட்டியிருப்பதற்கும் வளர்ச்சிப்பாதையில் பங்குதாரர்களாக மாறியிருப்பதற்கும் நான் மகிழ்ச்சியடைகிறேன். நமது குறு, சிறு நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு மிகப்பெரும் உதவியாக வங்கிகள் விளங்குகின்றன. மேலும் வளர்ச்சியடைய, அன்றாட செலவுகளுக்கு இவற்றுக்குப் பணம் தேவைப்படுகிறது. நமது வலுவான வங்கிகள் காரணமாக இன்று அது சாத்தியமாகியிருக்கிறது.

நண்பர்களே,

நமது நாடு சுதந்திரம் அடைந்திருந்தபோதும் துரதிருஷ்டவசமாக யாரையாவது சார்ந்திருக்கும் கலாச்சாரம் ஆழ வேரூன்றி இருந்தது. இதனால்,  பரிந்துரைகளை அரசுக்கு அனுப்புமாறு மக்கள் நிர்ப்பந்திக்கப்பட்டனர். ஆனால் நிர்வாகத்தில் நாங்கள் மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளோம்.  பயனாளிகளை நோக்கி அரசு செல்கிறது. வீடுகளுக்கு சமையல் எரிவாயு அடுப்புகளை அரசு வழங்குகிறது. வீடுகளுக்கு குடிநீர் விநியோகத்தை அளிக்கிறது. மின்சாரம் வழங்குகிறது. வளர்ச்சியின் புதிய உச்சங்களைத் தொடுவதற்கு ஊக்கப்படுத்த நிதியுதவி வழங்குகிறது. நமது இளைஞர்களின் திறன் மேம்பாட்டை அதிகரிக்க அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்கிறது.

நண்பர்களே,

எங்கள் அரசு மாபெரும் சீர்திருத்தங்களுக்கு உறுதிபூண்டுள்ளது. இந்த முயற்சிகள் மூலம் முன்னேற்றப்பாதையில் நாட்டைக் கொண்டு செல்வது எங்களின் நோக்கமாக உள்ளது.

நண்பர்களே,

புதிய நடைமுறைகள் நாட்டில் உருவாக்கப்பட்டுள்ளன. நாட்டை முன்னேற்ற, எண்ணற்ற நிதிக்கொள்கைகள் தொடர்ச்சியாக உருவாக்கப்படுகின்றன. இந்தப் புதிய நடைமுறைகளின் மேல் நாட்டின் நம்பிக்கை சீராக வளர்ந்து வருகிறது. தற்போது 20 முதல் 25 வயதுடைவர்கள் அதாவது, பத்தாண்டுகளுக்கு முன் 12 முதல் 15 வயதுவரை மட்டுமே இருந்தவர்கள், இந்த மாற்றத்தைத் தங்கள் கண்களால் காண்கிறார்கள்.  வெறும் பத்தாண்டுகளில் அவர்களின் கனவுகள் வடிவம்பெற்றுள்ளன. கூர்மையடைந்துள்ளன, புதிய தன்னம்பிக்கை உணர்வு தூண்டப்பட்டுள்ளது. இது நாட்டின் அசைக்க முடியாத பலமாக இப்போது  மாறியிருக்கிறது. இன்று இந்தியாவின் பெருமை உலகம் முழுவதும் பரவியிருக்கிறது. இந்தியா பற்றிய உலகின் கண்ணோட்டம் மாறியிருக்கிறது.

நமது இளைஞர்களுக்கு வாய்ப்பின் வாசல்கள் உலகம் முழுவதும் தற்போது அகலத் திறந்துள்ளன.  சுதந்திரத்திற்குப் பின் பல ஆண்டு காலத்திற்கு பிடிபடாமல் இருந்த எண்ணற்ற புதிய வேலை வாய்ப்புகள் இன்று அவர்களின் வீடுகளுக்கே செல்கின்றன, சாத்தியங்கள் அதிகரித்துள்ளன, புதிய வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. எனது நாட்டின் இளைஞர்கள் மெதுவாக செல்வது பற்றி இனிமேல் நினைக்க மாட்டார்கள். மாறாக, பாய்ச்சல் வேக மனநிலையில் அவர்கள் இருக்கிறார்கள். துணிச்சலான முயற்சிகளை மேற்கொள்வதன் மூலம் புதிய மைல்கற்களை அவர்கள் எட்டுவார்கள். இது இந்தியாவின் பொற்காலம் என்று நான் கூற விரும்புகிறேன். உலக நிலைமையோடு ஒப்பிடுகையில், உண்மையிலேயே இது நமது பொற்காலம் தான். 

எனதருமை நாட்டு மக்களே,

இந்த வாய்ப்பை நாம் நழுவ விட்டுவிடக்கூடாது. இந்தத் தருணத்தை நாம் கைப்பற்றிக்கொண்டு  நமது கனவுகளோடும், தீர்மானங்களோடும் முன்னேறிச் சென்றால், பொன்னான இந்தியாவுக்கான விருப்பங்களை நாம் நிறைவேற்ற முடியும். 2047-க்குள் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற நமது இலக்கை எட்டமுடியும். நூற்றாண்டு கால தளைகளிலிருந்து நாம் விடுபட முடியும்.

சுற்றுலாத்துறை, குறு, சிறு நடுத்தர தொழில்கள், கல்வி, சுகாதாரம், போக்குவரத்து, வேளாண்மை என எந்தத் துறையாக இருந்தாலும் இன்று புதிய, நவீன முறைகள்  செயல்படுத்தப்படுகின்றன. உலகம் முழுவதும் உள்ள சிறந்த நடைமுறைகளை ஏற்றுக்கொள்ளும் அதே வேளையில் நமது நாட்டின் தனித்துவமான நிலைகளுக்கேற்ப  முன்னேறுவதும் நமது நோக்கமாகும். தொழில்நுட்ப ஒருங்கிணைப்புக்கு முக்கியத்துவம் அளிப்பதுடன், அனைத்துத் துறைகளுக்கும் நவீன மயமும், புதிய கண்டுபிடிப்பும் தேவைப்படுகிறது.  அனைத்துத் துறைகளிலும் நமது புதிய கொள்கைகளுடன் இந்தத் துறைகள் புதிய ஆதரவையும், பலத்தையும் பெற்றுள்ளன.  தடைகளை அகற்றி, வீழ்ச்சிகளை வென்று முழு ஆற்றலோடு நாம் முன்னேறிச் செல்ல வேண்டும்.  நமது கனவுகளை நிறைவேற்றி வெற்றியை ஈட்டவேண்டும். இந்த கண்ணோட்டத்தை நாம் உள்வாங்கி இந்தத் திசையில் உறுதியாக முன்னேற வேண்டும்.

நடந்துகொண்டிருக்கும் மாபெரும் மாற்றத்தை இப்போது நீங்கள் காணமுடியும். மகளிர் சுயஉதவிக் குழுக்கள் மூலம் அடித்தள நிலையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் பற்றி நான் எடுத்துரைக்கிறேன். கடந்த பத்தாண்டுகளில் 10 கோடி சகோதரிகள் மகளிர் சுயஉதவிக் குழுக்களின் பகுதியாக மாறியிருக்கிறார்கள். தற்போது 10 கோடி புதிய சகோதரிகள், கிராமப்புற சாதாரண குடும்பங்களைச் சேர்ந்த 10 கோடி பெண்கள், பொருளாதார ரீதியில் சுதந்திரம் பெற்று தற்சார்பு  அடைந்திருப்பதற்காக நான் பெருமிதம் கொள்கிறேன். பொருளாதார ரீதியாக  பெண்கள் சுதந்திரம் பெறும்போது அவர்களின் குடும்பங்களில் முக்கிய முடிவுகள் எடுப்பதில் அவர்களின் பங்களிப்பைத் தொடங்குகிறார்கள். சமூக மாற்றங்களுக்கு உத்தரவாதம் அளிப்பவர்களாகவும், பாதுகாவலர்களாகவும் அவர்கள் மாறுகிறார்கள்.  இன்று உலகளாவிய நிலையில், இந்தியாவைச் சேர்ந்த பலர் தலைமை நிர்வாக அதிகாரிகளாக முக்கிய பங்களிப்பு செய்வது குறித்தும் நான் பெருமிதம் கொள்கிறேன். ஒருபக்கம் நமது தலைமை நிர்வாக அதிகாரிகளாக உலகளாவிய  வணிகத் தளத்தில் ஆதிக்கம் செலுத்தும் நிலையில், மறுபக்கம் ஒரு கோடி தாய்மார்களும், சகோதரிகளும் மகளிர் சுய உதவிக் குழுக்களில் சேர்ந்து லட்சாதிபதி சகோதரிகளாக மாறியிருக்கிறார்கள். இது எனக்கு பெருமைக்குரிய விஷயமாகும்.  மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான  நிதி ஒதுக்கீட்டை  10 லட்சம் கோடி ரூபாயிலிருந்து 20 லட்சம் கோடி ரூபாயாக அதிகரிக்க நாங்கள் முடிவு செய்துள்ளோம். இதுவரை மொத்தம்  9 லட்சம் கோடி ரூபாய் நிதி வங்கிகள் மூலம் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இது அவர்களின் பல்வேறு பணிகளுக்கு உதவியாக இருக்கும்.

எனது நண்பர்களே,

விண்வெளித் துறை திறக்கப்பட்டிருப்பது  புதிய எதிர் காலத்திற்கானது என்பதை எனது இளைஞர்கள் மனதில் கொள்ள வேண்டும்.  வளர்ச்சிக்கு மிக முக்கிமான அம்சம்  இது என்பதால், இதன் மீது நாம் கூடுதல் முக்கித்துவம் வழங்க வேண்டும். இந்தத் துறையில் பல புதிய சீர்திருத்தங்களை நாங்கள் அறிமுகம் செய்துள்ளோம். இந்தத் துறையின் வளர்ச்சிக்கு இடையூறாக இருந்த பல கட்டுப்பாடுகளை நாங்கள் நீக்கியிருக்கிறோம். விண்வெளித்துறையில் ஸ்டார்ட் அப் கள் அதிகரிப்பதை இந்தியா காண்கிறது. இந்தத் துறை மிகவும் துடிப்புள்ளதாக மாறி வருகிறது. நமது நாடு சக்திமிக்க நாடாக மாறுவதற்கு இது முக்கிய பங்காற்ற இருக்கிறது. இந்தத் துறையை  வலுப்படுத்தும் போது நமது  கணணோட்டத்தில் எதிர்காலத்தை நாம் கண்கிறோம். தனியார் செயற்கை கோள்களும், செலுத்து வாகனங்களும் நமது நாட்டிலிருந்து அனுப்பப்படுவது குறித்து நாம் பெருமிதம் கொள்கிறோம். கொள்கைகள்  சரியாக இருந்தால் நாட்டின் வளர்ச்சியை நோக்கிய  முழுமையான உறுதிபாட்டுடன்  நோக்கங்கள் உண்மையாக இருந்தால், மகத்தான விளைவுகளை நாம் சாதிக்க முடியும் என்று நான் உறுதி கூறுகிறேன்.

எனதருமை நாட்டு மக்களே,

இன்று நமது நாடு எண்ணற்ற புதிய வாய்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.  நமது பொருளாதார வளர்ச்சிக்கும், மேம்பாட்டுக்கும் உந்து விசையாக  மேலும் இரண்டு விசயங்களில் நாம் கவனம் செலுத்துவது அவசியம்.  இவற்றில் முதலாவது, நவீன அடிப்படைக் கட்டமைப்பை உருவாக்குவது, இரண்டாவது வாழ்க்கையை எளிதாக்குவது. சாமானிய மக்களும் குறைந்த செலவில் கண்ணியமான வாழ்க்கை முறையையும். அடிப்படை வசதிகளையும் பெற வேண்டும்.

கடந்த பத்தாண்டில் நவீன ரயில்வேக்கள், விமான நிலையங்கள், துறைமுகங்கள், வலுவான சாலைகள், அகண்ட அலைவரிசை  தொடர்புகள் என மிகப்பெரிய அடிப்படைக் கட்டமைப்பு மேம்பாட்டை நாம் கொண்டிருக்கிறோம். இதன் மூலம் தொலைதூரம் வரை வசதிகள் சென்றடைந்துள்ளன.  இதனால் ஒவ்வொரு கிராமமும். ஒவ்வொரு வனப்பகுதியும் கூட, பள்ளிகளை, நவீன மருத்துவ மனைகளைப் பெற்றுள்ளன. ஆயுஷ்மான் பாரத்  திட்டத்தின் மூலம் விளிம்பு நிலை மக்களுக்கு குறைந்த செலவில் மருத்துவ வசதி கிடைக்க தொலைதூர பகுதிகளிலும் ஆரோக்கிய மந்திர்கள் கட்டப்பட்டுள்ளன. பல மருத்துவக் கல்லூரிகள், மருத்துவமனைகள் கட்டப்பட்டுள்ளன.  ஆறாயிரம் குளங்கள் சீரமைக்கப்பட்டு நீர் நிரப்பப்பட்டுள்ளன.

கண்ணாடி இழை கட்டமைப்பு ஏற்கனவே இரண்டு லட்சம் ஊராட்சிகளில் அமைக்கப்பட்டுள்ளன. மிகப்பெரிய கால்வாய் கட்டமைப்புகளால் தற்போது ஏராளமான விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர். நான்கு கோடி உறுதியான வீடுகள் ஏழைகளுக்கு புதிய வாழ்க்கையை அளித்துள்ளன. இந்த தேசிய செயல்திட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் முயற்சியாக மூன்று கோடி புதிய வீடுகளுக்கு உறுதியளிக்கப்பட்டுள்ளது.

 நமது வடகிழக்கு இந்தியா தற்போது மருத்துவ உள்கட்டமைப்பின் மையமாக உள்ளது. இந்த மாற்றம் கடைசி மைல் வரை எளிதில் அணுகக்கூடிய சுகாதார சேவையை வழங்குவதன் மூலம் வாழ்க்கையை தொட உதவியுள்ளது. தொலைதூர கிராமங்கள் மற்றும் எல்லைகளை இணைக்கும் சாலைகளை நாங்கள் அமைத்து இந்தப் பகுதிகளை பிரதான நீரோட்டத்திற்கு கொண்டு வருகிறோம். இந்த வலுவான உள்கட்டமைப்பு  மூலம், தலித்துகள், சுரண்டப்பட்டவர்கள், வஞ்சிக்கப்பட்டவர்கள், பின்தங்கியவர்கள், பழங்குடியினர், பூர்வகுடிகள் மற்றும் வனங்கள், மலைகள் மற்றும் தொலைதூர எல்லைப் பகுதிகளில் வசிப்பவர்களின் தேவைகளை எங்களால் பூர்த்தி செய்ய முடிந்தது. மீன்வளம், கால்நடை வளர்ப்பு ஆகியவற்றில் ஈடுபட்டுள்ள நமது குடிமக்களுக்கு முழுமையான திட்டங்களை உறுதி செய்வதற்கான சீர்திருத்தங்களை வடிவமைப்பதில் இது ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.

நமது மீனவ சகோதர சகோதரிகளின் தேவைகளை நிறைவேற்றுவது, நமது கால்நடை வளர்ப்பாளர்களின் வாழ்க்கையை மாற்றியமைப்பது, விரிவான வளர்ச்சிக்காக பாடுபடுவது  ஆகியவை  நமது கொள்கைகள், நமது நோக்கங்கள், நமது சீர்திருத்தங்கள், நமது திட்டங்கள் மற்றும் நமது பணி பாணியின் ஒரு பகுதியாகும். இந்த முயற்சிகள் காரணமாக நமது  இளைஞர்கள் மிகப்பெரிய பயனைப் பெறுகிறார்கள். அவர்கள் புதிய வாய்ப்புகளைப் பெறுகிறார்கள், புதிய துறைகளில் காலடி எடுத்து வைப்பதற்கான புதிய வாய்ப்புகள் எழுகின்றன, இதுதான் அதிக வேலைவாய்ப்பை வழங்குகிறது, இந்தக் காலகட்டத்தில் அவர்களுக்கு வேலைவாய்ப்பு பெறுவதற்கான அதிக வாய்ப்புகள் உள்ளன.

 நமது நடுத்தரக் குடும்பங்களுக்கு இயல்பாகவே தரமான வாழ்க்கை அமையும் என்ற எதிர்பார்ப்பு இருக்கும். அவர்கள் நாட்டுக்கு கணிசமான பங்களிப்பை வழங்குகிறார்கள், எனவே தரமான வாழ்க்கைக்கான அவர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவது நாட்டின் பொறுப்பாகும். அதிகாரத்துவ தடைகளிலிருந்து அவர்களை விடுவிக்க நாங்கள் தொடர்ந்து முயற்சி செய்கிறோம். 2047 ஆம் ஆண்டுக்குள், வளர்ச்சியடைந்த பாரதம் என்ற கனவு நனவாகும் போது, சாதாரண குடிமக்களின் வாழ்க்கையில் அரசின் தலையீடு குறைவாக இருக்கும் என்பதே இந்தக் கனவின் ஒரு பகுதியாக இருக்கும் என்று நான் கற்பனை செய்துள்ளேன். தேவைப்படும் இடங்களில் அரசின் தாமதங்களால் எந்த பாதிப்பும் இல்லாத வகையிலான ஆட்சி முறையை பின்பற்ற நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்.

 எனதருமை சக குடிமக்களே,

 சின்னச் சின்ன தேவைகளுக்குக் கூட நாம் கவனம் செலுத்துகிறோம். சிறிய தேவைகளில் கூட கவனம் செலுத்துகிறோம், அதற்கேற்ப வேலை செய்கிறோம். நமது ஏழைக் குடும்பங்களில் அடுப்பு தொடர்ந்து எரிவதை உறுதி செய்வதாகட்டும், அல்லது ஒரு ஏழைத் தாய் தனது மனதில் கவலைகளுடன் தூங்கச் செல்ல வேண்டியதில்லை என்பதை உறுதி செய்வதாகட்டும், நாங்கள் ஒரு இலவச சுகாதாரத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம்.  மின்சாரம், நீர் மற்றும் சமையல் எரிவாயு இணைப்புகள் ஆகியவை இப்போது நிறைவு பெறும் நிலையில் உள்ளன. மேலும் நாம் நிறைவடைதல் பற்றி பேசும்போது, அது 100% என்று பொருள். நிறைவடைதல் நிகழும்போது, அது சாதியத்தின் நிறத்தையோ இடதுசாரி சித்தாந்தத்தின் நிறத்தையோ கொண்டிருக்கவில்லை. நிறைவடைதல் மந்திரம் ஏற்றுக்கொள்ளப்படும்போது, "அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம்" என்பதன் உண்மையான சாரம் உணரப்படுகிறது.

 மக்களின் வாழ்க்கையில் அரசின் தலையீட்டை குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். அரசு சாதாரண குடிமக்களுக்கு ஆயிரக்கணக்கான இணக்கங்களுடன் சுமையை ஏற்றியது. சட்டச் சிக்கல்களின் வலையில் குடிமக்கள் சிக்கிக் கொள்ளக்கூடாது என்பதற்காக 1,500-க்கும் மேற்பட்ட சட்டங்களை நாங்கள் நீக்கியுள்ளோம். மக்களை சிறைக்கு அனுப்பக்கூடிய சிறிய தவறுகளுக்கு சட்டங்கள் உருவாக்கப்பட்டன. சிறு குற்றங்களுக்காக சிறையில் அடைக்கும் வழக்கத்தை ஒழித்துள்ளோம், மக்களை சிறைக்கு அனுப்பும் சட்ட விதிகளை நீக்கியுள்ளோம். இன்று, நாம் பேசிக்கொண்டிருக்கும்போதே, நமது சுதந்திரத்தின் மீது பெருமிதம் கொள்ளும் பாரம்பரியத்தைப் பற்றி, பல நூற்றாண்டுகள் பழமையான குற்றவியல் சட்டங்களை மாற்றி, நியாய சட்டம் என்று அழைக்கப்படும் புதிய குற்றவியல் சட்டங்களை நாங்கள் கொண்டு வந்துள்ளோம். இதன் மையத்தில் தண்டனை அல்ல, மாறாக குடிமக்களுக்கு நீதியை உறுதி செய்வதற்கான யோசனை உள்ளது.

வாழ்க்கையை எளிதாக்குவதை உருவாக்கும் நாடு தழுவிய இயக்கத்தில் நாங்கள் பணியாற்றி வருகிறோம். அரசின் ஒவ்வொரு மட்டத்திலும் இதை நான் வலியுறுத்துகிறேன். தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து பிரதிநிதிகளும், கட்சி அல்லது மாநிலத்திற்கு அப்பாற்பட்டு, வாழ்க்கையை எளிதாக்குவதற்கான இயக்க முறையில் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன். நமது இளைஞர்கள், தொழில் வல்லுநர்கள் மற்றும் ஒவ்வொருவரும் தங்கள் தீர்வுகளுடன் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து அரசுக்கு தொடர்ந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறேன். அவர்கள் அரசுக்கு தெரிவிக்க வேண்டும். தேவையற்ற சிரமங்களை நீக்குவதில் எந்தத் தீங்கும் இல்லை. இன்றைய அரசுகள் உணர்வுபூர்வமானவை என்று நான் உறுதியாக நம்புகிறேன். உள்ளாட்சி அமைப்பாக இருந்தாலும் சரி, மாநில அரசாக இருந்தாலும் சரி, மத்திய அரசாக இருந்தாலும் சரி, அவர்கள் இந்தப் பிரச்சினைக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள்.

2047-க்குள் வளர்ச்சியடைந்த பாரதம் என்ற கனவுக்கு நிர்வாகத்தில் சீர்திருத்தங்கள் அவசியம். சாதாரண குடிமக்களின் வாழ்க்கையில் வாய்ப்புகளை உருவாக்கவும், தடைகளை அகற்றவும் இந்த சீர்திருத்தங்களை நாம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். குடிமக்கள் தங்கள் வாழ்க்கையில் கண்ணியத்தை அனுபவிக்க வேண்டும், "இது என் உரிமை, எனக்கு அது கிடைக்கவில்லை" என்று யாரும் சொல்ல வேண்டியதில்லை. மக்கள் தங்களுக்கு தகுதியானதைத் தேட வேண்டியதில்லை. எனவே, நிர்வாகத்தில் விநியோக முறையை மேலும் வலுப்படுத்த வேண்டும். நாட்டில் சீர்திருத்தங்களைப் பற்றி நாம் பேசும்போது என்ன நடக்கிறது என்று பாருங்கள். இன்று, நாடு முழுவதும் சுமார் 3 லட்சம் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. பஞ்சாயத்துகள், நகர் பஞ்சாயத்துகள், நகர் பாலிகாக்கள், மகாநகர் பாலிகாக்கள், யூனியன் பிரதேசங்கள், மாநிலங்கள், மாவட்டங்கள் அல்லது மத்திய அரசாக இருந்தாலும், இந்த 3 லட்சம் சிறிய அலகுகள் செயலில் உள்ளன. இந்த பிரிவுகளுக்கு நான் இன்று வேண்டுகோள் விடுக்கிறேன்: நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் மட்டத்தில் ஆண்டுக்கு இரண்டு சீர்திருத்தங்களை, சாதாரண மனிதனுக்கு நேரடியாக பயனளிக்கும் சீர்திருத்தங்களை மேற்கொண்டால், நான் அதிகம் கேட்கவில்லை நண்பர்களே. பஞ்சாயத்து, மாநில அரசு அல்லது வேறு எந்தத் துறையாக இருந்தாலும், ஆண்டுக்கு இரண்டு சீர்திருத்தங்களை அமல்படுத்தி, அவற்றை நடைமுறைப்படுத்துங்கள். இதன் தாக்கத்தை கற்பனை செய்து பாருங்கள் - இது ஆண்டுக்கு சுமார் 25-30 லட்சம் சீர்திருத்தங்களை ஏற்படுத்தும். 25-30 லட்சம் சீர்திருத்தங்கள் செய்யப்படும்போது, சாமானிய மக்களின் நம்பிக்கை உயரும். இந்த புதிய நம்பிக்கை நமது நாட்டை புதிய உயரங்களுக்கு எடுத்துச்செல்லும் கருவியாக இருக்கும். அதனால்தான் நமது சொந்த வட்டங்களுக்குள்ளேயே மாற்றங்களைத் தொடங்கவும், காலாவதியான அமைப்புகளிலிருந்து விடுபடவும், மாற்றத்தை உருவாக்க முன்வரவும், தைரியமாக செயல்படவும் நாம் முன்வர வேண்டும். சாமானிய மக்களின் தேவைகள் பெரும்பாலும் சிறியதாக இருந்தாலும், பஞ்சாயத்து அளவிலும் அவர்கள் சவால்களை எதிர்கொள்ள முடியும். இந்தப் பிரச்சினைகளுக்கு நாம் தீர்வு காண முடிந்தால், நமது கனவுகளை நனவாக்க முடியும் என்று நான் நம்புகிறேன்.

எனதருமை நாட்டு மக்களே,

இன்று, நமது தேசம் விருப்பங்களால் நிரம்பி வழிகிறது. நமது நாட்டின் இளைஞர்கள் புதிய உயரங்களைத் தொடவும், மகத்தான சாதனைகளை தொடவும் ஆர்வமாக உள்ளனர். எனவே, மூன்று முக்கிய பகுதிகளில் கவனம் செலுத்தி, ஒவ்வொரு துறையிலும் முன்னேற்றத்தை விரைவுபடுத்துவதே எங்கள் நோக்கமாகும். முதலாவதாக, அனைத்து துறைகளிலும் புதிய வாய்ப்புகளை நாம் உருவாக்க வேண்டும். இரண்டாவதாக, அமைப்புகளை உருவாக்குவதற்குத் தேவையான உள்கட்டமைப்பை வலுப்படுத்த நாம் பணியாற்ற வேண்டும். மூன்றாவதாக, நமது குடிமக்களுக்கான அடிப்படை வசதிகளுக்கு முன்னுரிமை அளித்து மேம்படுத்த வேண்டும். இந்த மூன்று அம்சங்களும் பாரதத்தில்  விருப்பங்கள் நிறைந்த சமுதாயத்தை வளர்த்துள்ளன, இதன் விளைவாக நம்பிக்கை நிறைந்த ஒரு சமுதாயம் உருவாகியுள்ளது. நமது குடிமக்களின் விருப்பங்களை நமது இளைஞர்களின் ஆற்றலுடனும், நமது தேசத்தின் வலிமையுடனும் இணைப்பதன் மூலம் மிகுந்த ஆர்வத்துடன் நாம் முன்னேறி வருகிறோம். வேலைவாய்ப்பு மற்றும் சுயவேலைவாய்ப்பில் புதிய சாதனைகளைப் படைப்பதில் நாம் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளோம் என்று நான் நம்புகிறேன். இன்று, தனிநபர் வருமானத்தை வெற்றிகரமாக இரட்டிப்பாக்கியுள்ளோம். உலகளாவிய வளர்ச்சிக்கு இந்தியாவின் பங்களிப்பு கணிசமாக உள்ளது, நமது ஏற்றுமதி தொடர்ந்து அதிகரித்து வருகிறது, நமது அந்நியச் செலாவணி கையிருப்பு இரட்டிப்பாகியுள்ளது, உலகளாவிய நிறுவனங்கள் பாரதத்தின் மீது அதிக அளவில் நம்பிக்கை வைத்துள்ளன. பாரதம் சரியான பாதையில் செல்கிறது, வேகமாக முன்னேறி வருகிறது, நமது கனவுகளுக்கு பெரும் சக்தி இருக்கிறது என்று நான் நம்புகிறேன். இவை அனைத்துடனும், நமது உணர்திறன் பாதை நம்மை உற்சாகப்படுத்துகிறது மற்றும் ஒரு புதிய சிந்தனையை எழுப்புகிறது. இரக்கம் எங்கள் அணுகுமுறையின் மையமாகும். எங்கள் பணியின் மையத்தில் சமத்துவம் மற்றும் இரக்கம் இரண்டையும் கொண்டு நாங்கள் முன்னேறி வருகிறோம்.

நண்பர்களே,

கொரோனா காலத்தைப் பற்றி நான் நினைக்கும் போது, உலகளாவிய தொற்றுநோய்க்கு மத்தியில் தனது பொருளாதாரத்தை விரைவாக மேம்படுத்திய ஒரு நாடு உண்டென்றால், அது பாரதம்தான். இது நாம் சரியான பாதையில் செல்கிறோம் என்பதை உறுதி செய்கிறது. சாதி, மத வேறுபாடுகளைக் கடந்து, ஒவ்வொரு வீட்டிலும் மூவர்ணக் கொடி பெருமிதத்துடன் பறக்கும்போது, நாடு சரியான திசையில் செல்கிறது என்பதை அது உறுதிப்படுத்துகிறது. இன்று, முழு தேசமும் மூவர்ணக் கொடியின் கீழ் ஒன்றுபட்டுள்ளது - ஒவ்வொரு வீடும் அதனால் அலங்கரிக்கப்பட்டுள்ளது, சாதி, இனம், மேல்,கீழ் என்ற பாகுபாடுகள் இல்லை; நாம் அனைவரும் இந்தியர்கள். இந்த ஒற்றுமை நமது திசையின் வலிமைக்கு ஒரு சான்றாகும். 25 கோடி மக்களை நாம் வறுமையிலிருந்து உயர்த்தும்போது, நாம் நமது வேகத்தைத் தக்க வைத்துக் கொண்டிருக்கிறோம், நமது கனவுகள் விரைவில் நனவாகும் என்ற நமது நம்பிக்கையை அது வலுப்படுத்துகிறது. 100-க்கும் மேற்பட்ட ஆர்வமுள்ள மாவட்டங்கள், அந்தந்த மாநிலங்களில் உள்ள சிறந்த மாவட்டங்களுடன் போட்டியிடும்போது, நமது வளர்ச்சிக்கான வேகமும்,  நிச்சயமாக வலுவாக இருப்பதாக நாங்கள் உணர்கிறோம். நமது பழங்குடி மக்கள் தொகை சிறியது, ஆனால் தொலைதூர இடங்களில் நாடு முழுவதும் சிறிய குழுக்களாக சிதறிக்கிடக்கிறது, மேலும் அவர்களின் நல்வாழ்வு மற்றும் வளர்ச்சியில் அரசு அக்கறை கொண்டுள்ளது. கிராமங்கள், மலைகள் மற்றும் காடுகளில் உள்ள பல்வேறு தொலைதூர குடியிருப்புகளில் உள்ள ஒவ்வொருவருக்கும் பிரதமர் ஜன் மன் திட்டங்களின் பலன்கள் சென்றடைவதை உறுதி செய்வது அரசுக்கு ஒரு சவாலாக உள்ளது, ஆனால் நாங்கள் எந்த முயற்சியையும் விட்டுவிடவில்லை. கருணையுடன் உழைத்தால் மனநிறைவு கிடைக்கும். நாம் பெண்களை மதிப்பது மட்டுமல்லாமல், அவர்களின் நலனுக்காக கருணையுடன் முடிவுகளை எடுக்க வேண்டும். இந்த வகையில், பணிபுரியும் பெண்களுக்கு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பை 12 வாரங்களில் இருந்து 26 வாரங்களாக நாங்கள் நீட்டித்துள்ளோம். அவள் மடியில் இருக்கும் குழந்தைக்கு நாம் பொறுப்பு, தாயைக் கவனித்துக் கொண்டால் மட்டுமே நல்ல குடிமகனாக வர முடியும். இது நம் நாட்டின் பெண்களுக்காக கருணையுடன் முடிவுகளை எடுக்க நம்மை ஊக்குவிக்கிறது.

எனது மாற்றுத்திறனாளி சகோதர சகோதரிகள் இந்திய சைகை மொழியில் தொடர்பு கொள்ளத் தொடங்கும் போது, அல்லது அணுகக்கூடிய பாரதம் மூலம் அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் அணுகக்கூடிய தேசம் என்ற பிரச்சாரத்திலிருந்து பயனடையும்போது, அவர் மதிக்கப்படுவதாகவும், நாட்டின் குடிமகனாக கண்ணியத்தை அனுபவிப்பதாகவும் உணர்கிறார். பாராலிம்பிக்கில் நமது விளையாட்டு வீரர்கள் பறக்கும் வண்ணங்களில் வெளியே வருவதைப் பார்ப்பது ஆச்சரியமாக இருக்கிறது. நமது இரக்கத்திலிருந்து அவை வலிமையைப் பெறுகின்றன. புறக்கணிக்கப்பட்ட நமது திருநங்கை சமூகத்தின் மீது அதிக உணர்திறனுடன் நாங்கள் சமமான முடிவுகளை எடுத்து வருகிறோம், அவர்கள் பிரதான நீரோட்டத்தில் ஊடுருவுவதற்கு புதிய சட்டங்களை அறிமுகப்படுத்துவதன் மூலமும், அனைவருக்கும் கண்ணியம், மரியாதை மற்றும் சமத்துவத்தை உறுதி செய்வதன் மூலமும். இதனால், மாற்றத்திற்கான சரியான திசையில் நாம் சென்று கொண்டிருக்கிறோம். நாம் மூன்று வழிப் பாதையில் அடியெடுத்து வைக்கிறோம், அனைவருக்கும் சேவை மனப்பான்மையின் நேரடி பலனை நாம் காண்கிறோம்.

60 ஆண்டுகளுக்குப் பிறகு, தொடர்ந்து மூன்றாவது முறையாக தேசத்திற்கு சேவை செய்ய நாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளோம். 140 கோடி மக்கள் எனக்கு அளித்துள்ள ஆசீர்வாதங்களுக்கு பதிலளிக்கும் வகையில், எனக்கு ஒரே ஒரு செய்தி மட்டுமே உள்ளது: உங்கள் ஒவ்வொருவருக்கும், ஒவ்வொரு குடும்பத்திற்கும், ஒவ்வொரு பகுதிக்கும் சேவை செய்ய நாங்கள் இங்கு வந்துள்ளோம்.  உங்கள் ஆசீர்வாதங்களின் இந்தச் சக்தியுடன், வளர்ச்சியின் புதிய உயரங்களை அடைய நாங்கள் விரும்புகிறோம். வளர்ச்சியடைந்த இந்தியா என்ற கனவை இன்று செங்கோட்டையின் கொத்தளத்திலிருந்து நனவாக்க, நம்மை ஆசீர்வதித்ததற்காகவும், தேசத்திற்கு சேவை செய்ய எங்களைத் தேர்ந்தெடுத்ததற்காகவும் கோடிக்கணக்கான நாட்டு மக்களுக்கு நன்றியுடன் தலைவணங்குகிறேன், நன்றி தெரிவிக்கிறேன். புதிய உத்வேகத்துடன், புதிய உச்சங்களை நோக்கி நாம் முன்னேறிச் செல்ல வேண்டும் என்று உங்கள் அனைவருக்கும் உறுதியளிக்கிறேன். பக்கவாட்டில் இருந்து பார்த்து சின்னச் சின்ன சாதனைகளின் மகிமையைக் கண்டு மகிழ்பவர்களில் நாம் இல்லை.  நாம் புதிய அறிவு மற்றும் நெகிழ்ச்சியைத் தேடும் கலாச்சாரத்திலிருந்து வந்தவர்கள்; உயர்ந்த சாதனைகளை அயராது விரும்புபவர்கள். வளர்ச்சியின் புதிய உச்சங்களை எட்ட நாங்கள் விரும்புகிறோம், இந்தப் பழக்கத்தை நமது குடிமக்களிடையே வளர்க்க விரும்புகிறோம்.

எனதருமை நாட்டு மக்களே,

இன்று, புதிய கல்விக் கொள்கையின் மூலம், 21 ஆம் நூற்றாண்டின் தேவைகளுக்கு ஏற்ப தற்போதைய கல்வி முறையை மாற்ற விரும்புகிறோம். வேகமான வளர்ச்சியின் எதிர்பார்ப்புகளை எதிர்கொள்ளும் வகையில், இந்தியாவில் எதிர்காலத்தில் தயாராக உள்ள திறன் வாய்ந்த வளங்களை நாம் தயார் செய்ய வேண்டும். இந்தியாவில் புதிய திறமைகளை தக்க வைத்துக் கொள்வதில் புதிய கல்விக் கொள்கை பெரும் பங்கு வகிக்கிறது. எனது நாட்டின் இளைஞர்கள் வெளிநாட்டில் படிக்க கட்டாயப்படுத்தப்படுவதை நான் விரும்பவில்லை. ஒரு நடுத்தர குடும்பம் தங்கள் குழந்தைகளை வெளிநாட்டுக்கு படிக்க அனுப்ப லட்சக்கணக்கான, கோடிக்கணக்கான ரூபாய் செலவழிக்கிறது. நம் நாட்டு இளைஞர்கள் வெளிநாடு செல்லத் தேவையில்லாத வகையில் கல்வி முறையை உருவாக்க விரும்புகிறோம். நம் நடுத்தரக் குடும்பங்கள் லட்சக்கணக்கில், கோடிக்கணக்கில் செலவு செய்யத் தேவையில்லை. அது மட்டுமல்ல, வெளிநாடுகளில் இருந்து மக்களை பாரதத்திற்கு வரவழைக்கும் நிறுவனங்களை உருவாக்கவும் விரும்புகிறோம். சமீபத்தில், நாளந்தா பல்கலைக்கழகத்தை புனரமைத்ததன் மூலம், பீகாரின் பெருமைமிகு வரலாற்றின் பெருமைக்கு நாம் புத்துயிர் அளித்திருக்கிறோம். நாளந்தா பல்கலைக்கழகம் மீண்டும் தனது செயல்பாடுகளை தொடங்கியுள்ளது. எனினும், நாம் மீண்டும் ஒருமுறை, கல்வித் துறையில், பல நூற்றாண்டுகள் பழமையான நாளந்தா உணர்வுக்கு புத்துயிர் அளிக்க வேண்டும், நாளந்தா உணர்வை வாழ வைக்க வேண்டும், மிகுந்த நம்பிக்கையுடன், கல்வித் துறையில் உலக அறிவுப் பாரம்பரியத்தில் புதிய விழிப்புணர்வைக் கொண்டுவர பாடுபட வேண்டும். புதிய கல்விக் கொள்கை தாய்மொழியின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது என்று நான் உறுதியாக நம்புகிறேன். மொழியின் காரணமாக நாட்டின் திறமை தடைபடக்கூடாது என்று மாநில அரசுகளையும், நாட்டில் உள்ள அனைத்து நிறுவனங்களையும் நான் கேட்டுக்கொள்கிறேன். மொழி ஒரு தடையாக இருக்கக் கூடாது. தாய்மொழியின் வலிமை, நமது நாட்டில் உள்ள மிகவும் ஏழ்மையான குழந்தையும் தங்கள் கனவுகளை நனவாக்கும் அதிகாரத்தை அளிக்கிறது. எனவே, தாய்மொழியில் படிப்பதன் முக்கியத்துவத்தையும், வாழ்க்கையில் தாய்மொழியின் பங்கையும், குடும்பத்தில் அதன் இடத்தையும் நாம் வலியுறுத்த வேண்டும்.

எனதருமை சக குடிமக்களே,

இன்று உலகில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை நாம் காணும்போது, திறன்களின் முக்கியத்துவம் பெரிதும் அதிகரித்துள்ளது. எனவே, திறன்களுக்கு புதிய உத்வேகத்தை அளிக்க நாங்கள் விரும்புகிறோம். தொழில்துறை 4.0-ஐ மனதில் கொண்டு, திறன் மேம்பாட்டை நோக்கமாகக் கொண்டுள்ளோம். வேளாண் துறை உட்பட வாழ்க்கையின் ஒவ்வொரு துறையிலும் திறன் மேம்பாட்டை நாங்கள் விரும்புகிறோம். நமது துப்புரவு துறையிலும் புதிய திறன்களை வளர்ப்பதில் நாங்கள் கவனம் செலுத்த விரும்புகிறோம். எனவே, இந்த முறை திறன் இந்தியா திட்டத்தை இன்னும் விரிவான அளவில் நாங்கள் கொண்டு வந்துள்ளோம். இந்த ஆண்டு பட்ஜெட்டில் இதற்காக ஒரு பெரிய நிதியை ஒதுக்கியுள்ளோம். பட்ஜெட்டில் உள்ளகப் பயிற்சிக்கு நாங்கள் முக்கியத்துவம் அளித்துள்ளோம். இதன் மூலம் நமது இளைஞர்கள் அனுபவத்தைப் பெறவும், திறன் மேம்பாட்டை வளர்த்துக் கொள்ளவும், சந்தையில் தங்கள் திறன்களை வெளிப்படுத்தவும் முடியும். இந்த முறையில் திறமையான இளைஞர்களை உருவாக்க விரும்புகிறேன். நண்பர்களே, இன்றைய உலகளாவிய நிலைமையை கவனித்துப் பார்க்கும் போது, பாரதத்தின் திறன் வாய்ந்த மனித சக்தி, நமது திறமை வாய்ந்த இளைஞர்கள் உலக வேலைவாய்ப்பு சந்தையில் தங்கள் முத்திரையைப் பதிப்பார்கள் என்பதை என்னால் தெளிவாகக் காண முடிகிறது, அந்தக் கனவுடன் நாம் முன்னேறி வருகிறோம்.

நண்பர்களே,

உலகம் வேகமாக மாறி வருகிறது மற்றும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் முக்கியத்துவம் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் அதிகரித்து வருகிறது. அறிவியலுக்கு நாம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். சந்திரயான் திட்டத்தின் வெற்றிக்குப் பிறகு, பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் புதிய ஆர்வம் ஏற்பட்டிருப்பதை நான் கவனித்தேன். இந்தப் புதிய உற்சாகத்தை நமது கல்வி நிறுவனங்கள் வளர்க்க வேண்டும். இந்திய அரசும் ஆராய்ச்சிக்கான ஆதரவை அதிகரித்துள்ளது. அதிக இருக்கைகள்  அமைத்துள்ளோம். ஆராய்ச்சியை தொடர்ந்து வலுப்படுத்தும் ஒரு நிரந்தர அமைப்பை உருவாக்குவதற்கான சட்டக் கட்டமைப்பை வழங்கும் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளையை நாங்கள் உருவாக்கியுள்ளோம். அந்தப் பணியை இந்த ஆராய்ச்சி அறக்கட்டளை மேற்கொள்ளும். நமது நாட்டின் இளைஞர்களின் சிந்தனைகளை நனவாக்கும் வகையில், ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புகளுக்காக பட்ஜெட்டில் ஒரு லட்சம் கோடி ரூபாய் ஒதுக்க நாங்கள் முடிவு செய்திருப்பது மிகவும் பெருமைக்குரியதாகும்.

நண்பர்களே,

இன்றும் நம் பிள்ளைகள் மருத்துவக் கல்விக்காக வெளிநாடு செல்கின்றனர். அவர்களில் பெரும்பாலோர் நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்தவர்கள், மேலும் அவர்கள் பெரும் தொகையை செலவிடுகிறார்கள். கடந்த 10 ஆண்டுகளில், மருத்துவ இடங்களின் எண்ணிக்கையை கிட்டத்தட்ட ஒரு லட்சமாக உயர்த்தியுள்ளோம். ஒவ்வொரு ஆண்டும் சுமார் 25,000 இளைஞர்கள் மருத்துவக் கல்விக்காக வெளிநாடுகளுக்குச் செல்கின்றனர். சில நேரங்களில், மருத்துவக் கல்வியைத் தொடர அவர்கள் செல்ல வேண்டிய நாடுகளைப் பற்றி கேள்விப்பட்டால் நான் ஆச்சரியப்படுகிறேன். எனவே, அடுத்த ஐந்து ஆண்டுகளில் மருத்துவத் துறையில் 75,000 புதிய இடங்களை உருவாக்க நாங்கள் முடிவு செய்துள்ளோம்.

எனதருமை நாட்டு மக்களே,

2047-ல் அமையும் வளர்ந்த பாரதமும் ஆரோக்கியமான பாரதமாக இருக்க வேண்டும். இதை உறுதி செய்ய, வளர்ந்த இந்தியாவின் முதல் தலைமுறை என்பதால், இன்று முதல் குழந்தைகளின் ஊட்டச்சத்தில் நாம் கவனம் செலுத்த வேண்டும். அதனால்தான் அவர்களின் நலனில் சிறப்புக் கவனம் செலுத்தி ஊட்டச்சத்து இயக்கத்தை நாங்கள் தொடங்கியுள்ளோம். ஊட்டச்சத்துக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் தேசிய ஊட்டச்சத்து இயக்கத்தை நாங்கள் தொடங்கியுள்ளோம்.

எனதருமை நாட்டு மக்களே,

நமது விவசாய முறையை மாற்றுவது மிகவும் முக்கியமானது மற்றும் காலத்தின் தேவை. பல நூற்றாண்டுகளாக நம்மைத் தடுத்து நிறுத்தி வைத்திருக்கும் பழமையான பாரம்பரியத்திலிருந்து நாம் விடுபட வேண்டும். இந்த முயற்சியில் நமது விவசாயிகளுக்கு நாம் தீவிரமாக ஆதரவு அளித்து வருகிறோம். இந்த மாற்றத்தை நோக்கி நாங்கள் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம். இன்று, நாங்கள் விவசாயிகளுக்கு எளிதான கடன்களை வழங்குகிறோம் மற்றும் சமீபத்திய தொழில்நுட்பத்துடன் அவர்களுக்கு உதவுகிறோம். விவசாயிகளின் விளைபொருட்களுக்கு மதிப்பு கூட்டுவதை உறுதி செய்ய நாங்கள் உதவி வருகிறோம். விவசாயிகளுக்கு முழுமையான உதவிகள் கிடைக்கும் வகையில் அவர்களின் விளைபொருட்களை சந்தைப்படுத்துவதற்கான விரிவான ஏற்பாடுகளையும் நாங்கள் செய்து வருகிறோம், மேலும் இந்தத் திசையில் முன்னேற நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.

இன்று உலகம் முழுவதும் அன்னை பூமியின் மீது அக்கறை கொண்டுள்ள நிலையில், உரங்களின் பயன்பாட்டால் நமது மண்ணின் ஆரோக்கியம் நாளுக்கு நாள் மோசமடைந்து வருவதை நாம் காண்கிறோம். நமது அன்னை பூமியின் (மண்) உற்பத்தித் திறனும் குறைந்து வருகிறது. இந்த முக்கியமான நேரத்தில், இயற்கை விவசாயத்தின் பாதையைத் தேர்ந்தெடுத்து, நமது அன்னை பூமியை போற்றிப் பாதுகாக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்ட நமது நாட்டில் உள்ள லட்சக்கணக்கான விவசாயிகளுக்கு எனது நன்றியைத் தெரிவிக்க விரும்புகிறேன். இந்த ஆண்டு பட்ஜெட்டில், இயற்கை விவசாயத்தை ஊக்குவிப்பதற்கும் ஆதரிப்பதற்கும் குறிப்பிடத்தக்க ஏற்பாடுகளைச் செய்துள்ளோம் மற்றும் கணிசமான திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளோம்.

எனதருமை நாட்டு மக்களே,

இன்று உலகின் நிலையை நான் கவனித்த போது, ஒட்டுமொத்த உலகமும் முழுமையான சுகாதாரத்தை நோக்கி திரும்பி வருவதை நான் காண்கிறேன், அங்கு இயற்கை உணவு விருப்பமான தேர்வாக உருவெடுத்துள்ளது. இயற்கை உணவு என்ற உலகளாவிய உணவுக் களஞ்சியத்தை உருவாக்கக்கூடிய ஒரு நாடு உண்டென்றால், அது நமது  நாடும் அதன் விவசாயிகளும்தான். அதனால்தான் வரும் நாட்களில் இந்தத் தொலைநோக்குடன் முன்னேற நாங்கள் விரும்புகிறோம், இதனால் நமது நாடு உலகின் இயற்கை உணவுக் கூடையாக மாற முடியும், ஏனெனில் அது இயற்கை உணவை அதிகளவில் கோருகிறது.

விவசாயிகளின் வாழ்க்கை எளிதாக்கப்படுவதையும், கிராமங்களில் உயர்தர இணைய இணைப்பு இருப்பதையும், விவசாயிகளுக்கு சுகாதார வசதிகள் கிடைப்பதையும், அவர்களது குழந்தைகளுக்கு ஸ்மார்ட் பள்ளிகள் கிடைப்பதையும், வேலைவாய்ப்புகளைப் பெறுவதையும் உறுதி செய்ய நாங்கள் முயற்சி செய்து வருகிறோம். சிறிய துண்டு நிலங்களில் ஒரு முழுக் குடும்பத்தையும் பராமரிப்பதில் உள்ள சவால்களைக் கருத்தில் கொண்டு, புதிய வேலைகளைப் பெறுவதற்கும் கூடுதல் வருமான ஆதாரங்களை உருவாக்குவதற்கும் தேவையான திறன்களுடன் இளைஞர்களைச் உருவாக்க நாங்கள் விரிவான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்.

சமீபத்திய ஆண்டுகளில், பெண்கள் தலைமையிலான மேம்பாட்டு மாதிரியில் நாங்கள் கவனம் செலுத்தியுள்ளோம். புதிய கண்டுபிடிப்புகள், வேலைவாய்ப்பு அல்லது தொழில்முனைவு என எதுவாக இருந்தாலும், பெண்கள் ஒவ்வொரு துறையிலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்து வருகின்றனர். இது பங்கேற்பை அதிகரிப்பது மட்டுமல்ல, பெண்கள் தலைமைப் பாத்திரங்களையும் ஏற்றுக்கொள்கிறார்கள். இன்று, பாதுகாப்புத் துறையாகட்டும், விமானப்படை, ராணுவமாகட்டும், கடற்படையாகட்டும், நமது விண்வெளித் துறையாகட்டும், பல துறைகளில் நாம் நமது பெண்களின் வலிமை மற்றும் திறன்களைக் காண்கிறோம்.                                                     

மறுபுறம், சில அழுத்தமான கவலைகள் எனக்கு மிகுந்த அதிர்ச்சியைத் தருகின்றன, எனவே, அவற்றை மீண்டும் ஒருமுறை செங்கோட்டையின் கொத்தளத்திலிருந்து முன்னிலைப்படுத்த விரும்புகிறேன். ஒரு சமூகமாக நாம் நமது தாய்மார்கள், சகோதரிகள் மற்றும் மகள்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் குறித்து தீவிரமாக கவனம் செலுத்த வேண்டும். இந்தக் கொந்தளிப்பு நாட்டிலும், நாட்டு மக்கள் மத்தியிலும் காணப்படுகிறது. இந்தச் சீற்றத்தை என்னால் உணர முடிகிறது. இந்தத் தீய செயலை அரசுகளும், சமூகமும், தேசமும் தீவிரமாகக் கவனிக்க வேண்டும். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து தாமதமின்றி விசாரணை நடத்த வேண்டும். அரசு, நீதித்துறை மற்றும் சிவில் சமூகத்தின் மீதான நம்பிக்கையை மீண்டும் நிலைநாட்ட இதுபோன்ற அரக்கத்தனமான செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது ஆரம்பக் கட்டத்திலேயே வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும். பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்டவர்கள் - நமது தாய்மார்கள் மற்றும் மகள்கள் ஊடகங்கள் அனைத்திலும் முன்னிலைப்படுத்தப்பட்டு சமூகத்தில் விவாதிக்கப்படுகிறார்கள் என்பதையும் நான் குறிப்பிட விரும்புகிறேன், இருப்பினும் பாதிப்பை ஏற்படுத்தியவர் செய்தியில் இடம்பெறவில்லை. இப்போது காலத்தின் தேவை என்னவென்றால், தண்டிக்கப்படும் குற்றவாளிகளைப் பற்றி ஒரு பரந்த விவாதம் இருக்க வேண்டும், இதனால் அத்தகைய பாவங்களைச் செய்பவர்கள் கூட தூக்கிலிடப்படுவது உள்ளிட்ட விளைவுகளுக்கு அஞ்சுவார்கள். இந்தப் பயத்தை உருவாக்குவது மிகவும் முக்கியம் என்று நான் உணர்கிறேன்.

எனதருமை நாட்டு மக்களே,

ஒரு தேசமாக நமது சொந்த முயற்சிகளையும் சாதனைகளையும் குறைத்து மதிப்பிடுவதை நாம் வழக்கமாகக் கொண்டுள்ளோம். துரதிர்ஷ்டவசமாக எந்தக் காரணத்திற்காகவும் நாங்கள் எங்கள் தேசியத்தைப் பற்றி பெருமைப்படுவதை நிறுத்திவிட்டோம். ஒரு வழக்கமான இந்திய மனநிலையாக 'தாமதமாக வருவது' என்று கேட்பது பல முறை அவமானமாக இருந்தது. உலக அளவில் இந்தியர்களின் பார்வையை மேம்படுத்த நாங்கள் கடுமையாக உழைத்து வருகிறோம். கடந்த காலங்களில் இந்தியாவில் பொம்மைகள் கூட இறக்குமதி செய்யப்பட்டன. இதுபோன்ற நாட்களை நாமும் பார்த்திருக்கிறோம். ஆனால் இன்று நமது பொம்மைத் தொழிற்சாலையும் உலகச் சந்தையில் சிறப்பான ஒரு பெயராக மாறியுள்ளது என்பதில் நாம் பெருமிதம் கொள்கிறோம். பொம்மைகளை ஏற்றுமதி செய்யத் தொடங்கியுள்ளோம். ஒரு காலத்தில் மொபைல் போன்கள் இறக்குமதி செய்யப்பட்டு வந்தன, ஆனால் இன்று இந்தியாவில் மொபைல் போன்களின் உற்பத்தி சுற்றுச்சூழல் அமைப்பின் ஒரு பெரிய மையம் உள்ளது, அவற்றை உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யத் தொடங்கியுள்ளோம். இதுதான் இந்தியாவின் வலிமை. 

நண்பர்களே,

உலகின் எதிர்காலம் செமி கண்டக்டர்கள். நவீன தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளது. செமிகண்டக்டர் இயக்கத்தை நாங்கள் தொடங்கியுள்ளோம், மேலும் உலகிற்கு போட்டித்தன்மையான  விலையில் கிடைக்கக்கூடிய மேட் இன் இந்தியா தயாரிப்புகளை உருவாக்க விரும்புகிறோம். நம்மிடம் சிறந்த திறமைகளே நிறைய உள்ளன, நமது இளைஞர்கள் இந்தத் துறையில் பெரிய கனவு காண வேண்டும். இந்தியா ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளது, இப்போது நாம் உற்பத்தியையும் நோக்கி நகர வேண்டும். இந்தத் துறையில் உலகிற்கு  இறுதி வரை தீர்வுகளை வழங்குவதற்கான திறனும் வலிமையும் நம்மிடம் உள்ளது.

நண்பர்களே,

2ஜி-க்காக கூட நாம் கஷ்டப்பட்ட நாட்களையும் பார்த்திருக்கிறோம். இன்று நாட்டின் அட்சரேகை மற்றும் தீர்க்கரேகை முழுவதும் 5ஜி-யின் விண்கல் அளவிடுதல் மற்றும் சேவை ஆகியவற்றைக் காணலாம்.  நண்பர்களே, நாங்கள் விரைவில் எங்கும் நிறுத்தப் போவதில்லை. 5ஜி-யில் மட்டும் நிறுத்திக் கொள்ள நாங்கள் ஒப்புக் கொள்ள மாட்டோம்.  நாங்கள் ஏற்கனவே 6ஜி-க்கான விரைவாக பணியாற்றி வருகிறோம், மேலும் நமது முன்னேற்றத்தால் உலகை ஆச்சரியப்படுத்துவோம். இதை நான் முழு நம்பிக்கையுடன் சொல்ல முடியும்.

எனதருமை நண்பர்களே,

பாதுகாப்புத் துறையைப் பற்றி பேசுகையில், பாதுகாப்பு பட்ஜெட்டில் எந்தவொரு அதிகரிப்பையும் கேள்வி எழுப்புவதை நாங்கள் வழக்கமாகக் கொண்டிருந்தோம். நிதி எங்கு பயன்படுத்தப்பட்டது என்பதை அறிய யாரும் முயற்சிக்கவில்லை. பாதுகாப்பு பட்ஜெட் மற்ற நாடுகளில் இருந்து ஏற்றுமதி செய்ய செலவிடப்பட்டது. இந்தத் துறையிலும் நமது பாதுகாப்புப் படையினர் தற்சார்பு அடைவார்கள் என்ற அவர்களின் வாக்குறுதியை நாம் காணும் வேளையில், நான் அவர்களுக்கு மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். இனி ஏற்றுமதி செய்வதில்லை என்று தீர்மானித்த விஷயங்களின் பட்டியலை அவர்கள் பகிர்ந்துள்ளனர். நாம் நமது ராணுவத்திடம் இருந்து உண்மையான தேசபக்தியைக் கற்றுக் கொள்ள வேண்டும். இந்த உத்வேகத்துடன், பாதுகாப்புத் துறையில் நாம் தற்சார்புடையவர்களாக மாறி வருகிறோம்.  பாதுகாப்புத் தளவாட உற்பத்தித் துறையிலும் இந்தியா தனது இருப்பைக் குறித்துள்ளது. சிறிய பொருட்களைக் கூட ஏற்றுமதி செய்வதையே நம்பியிருந்த நமது பாதுகாப்புத் துறை, படிப்படியாக எழுச்சி பெற்று, பல்வேறு பாதுகாப்புத் தளவாடங்களின் ஏற்றுமதியாளராகவும், உற்பத்தியாளராகவும் தன்னை நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் கூறுவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

வேலையின்மையை நிவர்த்தி செய்வதற்கு உற்பத்தித் துறை முக்கியமானது என்பதால் நாங்கள் உற்பத்தித் துறையை ஊக்குவிக்க விரும்புகிறோம். இன்று, உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை (பி.எல்.ஐ) திட்டம் பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. அந்நிய நேரடி முதலீட்டு சீர்திருத்தங்களும் நமக்கு குறிப்பிடத்தக்க பலத்தை அளித்துள்ளன. குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் கணிசமான வேகத்தைப் பெற்றுள்ளன. ஒரு புதிய அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது, இதன் விளைவாக, நமது உற்பத்தித் துறை உலகளாவிய உற்பத்தி மையமாக மாறும் பாதையில் உள்ளது. இவ்வளவு பெரிய இளைஞர் மக்கள்தொகை மற்றும் அதைப் பயன்படுத்துவதற்கான திறனைக் கொண்ட ஒரு நாட்டுடன், உற்பத்தி உலகில் பெரும் வலிமையுடன், குறிப்பாக தொழில்துறை 4.0 இல் முன்னேறுவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம். இதற்குத் தேவையான திறன் மேம்பாட்டிலும் நாங்கள் கவனம் செலுத்தியுள்ளோம். திறன் மேம்பாட்டில் புதிய மாதிரிகளை அறிமுகப்படுத்தியுள்ளோம். உடனடித் தேவைகளுக்கு ஏற்ப திறன்களை விரைவாக வளர்த்துக் கொள்ளும் வகையில் பொதுமக்களின் பங்களிப்பை நாங்கள் ஊக்குவித்துள்ளோம். செங்கோட்டையின் கொத்தளத்திலிருந்து நான் பேசிக் கொண்டிருக்கும் வேளையில், பாரதம் ஒரு தொழில்துறை உற்பத்தி மையமாக மாறும் நாள் வெகு தொலைவில் இல்லை என்றும், உலகம் அதை உற்று நோக்கும் என்றும் நான் உறுதியாக நம்புகிறேன்.

தற்போது, உலகின் முன்னணி தொழில் நிறுவனங்களில் பெரும்பாலானவை இந்தியாவில் முதலீடு செய்ய விரும்புகின்றன. தேர்தலுக்கு பிறகு நான் இதனை கவனித்தேன், எனது மூன்றாவது ஆட்சிக்காலத்தில் என்னை சந்திக்க விரும்பியவர்களில் பெரும்பாலானோர் முதலீட்டாளர்கள் ஆவர். சர்வதேச முதலீட்டாளர்களான இவர்கள், இந்தியாவுக்கு வரவும், இங்கு முதலீடு செய்யவும் விரும்புபவர்கள். இது ஒரு பெரிய பொன்னான வாய்ப்பாகும். முதலீட்டாளர்களை ஈர்க்க தெளிவான கொள்கைகளை வகுக்குமாறு மாநில அரசுகளை நான் வலியுறுத்திகிறேன். அவர்களுக்கு நல்லாட்சிக்கான உத்தரவாதத்தை வழங்கி சட்டம் ஒழுங்கு தொடர்பாக நம்பிக்கையை ஏற்படுத்துங்கள். முதலீட்டாளர்களை ஈர்ப்பதில் மாநிலங்கள் ஆரோக்கியமான போட்டியில் ஈடுபட வேண்டும். இந்த போட்டி அவர்களது மாநிலங்களுக்கு முதலீட்டை கொண்டு வருவதோடு, உள்ளூர் இளைஞர்களுக்கு வாய்ப்புகளையும், வேலைகளையும் உருவாக்கும்.

 

கொள்கைகளை மாற்றம் செய்ய வேண்டியிருந்தால், மாநிலங்கள் அவற்றை சர்வதேச தேவைகளுக்கேற்ப மாற்ற வேண்டும். நிலம் தேவைப்பட்டால், மாநிலங்கள் நில வங்கி ஒன்றை உருவாக்க வேண்டும். ஆக்கப்பூர்வமான மாநிலங்கள், ஒரு திசை கவனத்துடன் நல்லாட்சி வழங்க முயற்சி மேற்கொள்வதுடன், இத்தகைய முதலீட்டாளர்கள் நீண்ட காலத்திற்கு தொழில் புரிவதற்கேற்ப   பாடுபட்டு வருகின்றன.  இதனை மத்திய அரசால் மட்டும் செய்ய முடியாது: மாநில அரசுகளும் இதில் முக்கியப் பங்கு வகிக்க வேண்டும், ஏனெனில், மாநிலங்களில் தான் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. திட்டங்களை வெற்றி பெற செய்ய மாநில அரசுகளுடன் தினசரி கலந்துரையாடுவது அவசியம். எனவே, உலக நாடுகளை இந்தியாவின் பக்கம் ஈர்த்து, இங்கு முதலீடு செய்ய உத்தரவாதம் பெறும் போது, தெளிவான கொள்கைகளுடன் முன்னோக்கி செல்வதுடன், பழைய பழக்கங்களை புறந்தள்ளுமாறு  மாநிலங்களை நான் கேட்டுக்கொள்கிறேன், இதன் விளைவை நீங்கள் உங்கள் மாநிலத்தில் காணலாம் என்பதோடு, உங்களது மாநிலம் மிளிரும் என்று நான் உத்தரவாதம் அளிக்கிறேன்.

 

 நண்பர்களே,

இந்தியா அதன் மிகச்சிறந்த தரத்திற்காக அங்கீகரிக்கப்படுவது அவசியம். உலகிற்காக தற்போது நாம் வடிவமைப்பில் கவனம் செலுத்தி, “இந்தியாவில் வடிவமைப்பீர்” என்று வலியுறுத்த வேண்டும். இந்திய தரங்கள் சர்வதேச தரத்திற்கு ஏற்ப அமையும் வகையில் நாம் பாடுபட வேண்டும். இந்திய தரங்கள் சர்வதேச தரமாக மாறினால், நமது பொருட்கள் உலக நாடுகளால் எளிதில் ஏற்றுக்கொள்ளப்படும். இது நமது உற்பத்தியின் தரம், நமது சேவைகைளின் தரம் மற்றும் நமது அனுகுமுறையின் தரத்தை பொருத்து அமையும். எனவே, நாம் முன்னேறிச் செல்வதற்கு தரத்தில் கவனம் செலுத்த வேண்டும். நம்மிடம் அதற்கான திறமை உள்ளது. வடிவமைப்புத் துறையில் உலகிற்கு நம்மால் பல புதிய வடிவங்களை வழங்க முடியும். “இந்தியாவில் வடிவமைப்பீர்” என்ற அழைப்பை பின்பற்றி, “இந்தியாவில் வடிவமைப்பீர், உலகிற்காக வடிவமைப்பீர்” என்ற முழக்கத்துடன் முன்னேறிச் செல்ல வேண்டும்.

விளையாட்டுத் துறையில் பெரும் சந்தை வாய்ப்புகள் உருவாகி வருவதை நான் காண்கிறேன். எனினும், தற்போது கூட, விளையாட்டின் தாக்கமும், இந்த விளையாட்டுகளை உருவாக்குவதால் கிடைக்கும் லாபத்தையும், வெளிநாட்டு நிறுவனங்கள் தான் வைத்துள்ளன. உலகம் முழுவதும் உள்ள குழந்தைகளை, நம் நாட்டில் உருவாக்கப்படும் விளையாட்டுகளின்பால் ஈர்க்க வேண்டும். இந்திய குழந்தைகள், இந்திய இளைஞர்கள், இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு வல்லுநர்கள், விளையாட்டுத்துறையில் முன்னோடியாக திகழ வேண்டும் என நான் விரும்புகிறேன். விளையாட்டு உலகில் நமது பொருட்கள் சர்வதேச கவனத்தை ஈர்க்க வேண்டும். நமது அனிமேஷன் கலைஞர்கள், உலகளவில் பணியாற்றும் திறன் பெற்றவர்கள் ஆவர். அனிமேஷன் தொழிலில் நம்மால் வலுவாக தடம் பதிக்க முடியும் என்பதால், அதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

எனது அருமை நாட்டு மக்களே,

தற்போது புவி வெப்பமயமாதல் மற்றும் பருவநிலை மாற்றம் ஆகியவை முக்கியமான பிரச்சனைகளாக உருவெடுத்திருப்பதுடன், உலகம் முழுவதும் பல்வேறு துறைகளாலும் விவாதிக்கப்படுகிறது. இந்த விவகாரத்தில் இந்தியா எண்ணற்ற முன்முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.  வார்த்தையில் மட்டுமின்றி, உறுதியான செயல்பாடுகள் வாரியாகவும் நமது வாக்குறுதிகளை நிறைவேற்றியிருப்பதோடு, உலகையே வியக்க வைக்கும் முடிவுகளை அடைந்திருக்கிறோம். ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை தடை செய்வதில் நாம் முன்னணியில் இருப்பதோடு, புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கான முயற்சிகளையும் குறிப்பிடத்தக்க அளவுக்கு மேம்படுத்தியிருப்பதுடன், இத்துறையில் புதிய வலிமைகளை புகுத்தியிருக்கிறோம். வருங்காலத்தில் கரியமில வாயு வெளியேற்றம் இல்லாத நிலையை நோக்கி நாம் சென்று கொண்டிருப்பதோடு, பாரிஸ் உடன்படிக்கையில், குறிப்பிடப்பட்டுள்ள இலக்குகளையும் நினைத்துப் பார்க்கிறேன். எனது நாட்டு மக்களின் சாதனைகளை செங்கோட்டையில் இருந்து சுட்டிக்காட்ட நான் விரும்புகிறேன். ஜி-20 நாடுகளால் நிறைவேற்ற முடியாததை நமது குடிமக்கள் நிறைவேற்றியுள்ளனர். ஜி-20 அமைப்பில் உள்ள வேறு எந்த நாடாவது பாரிஸ் உடன்படிக்கையில் உள்ள இலக்குகளை முன்கூட்டியே எட்டியிருக்கிறார்களா, இந்தியா மட்டும் தான், எனது இந்தியா தான் அதனை எட்டியுள்ளது. இதில், நான் மிகுந்த பெருமிதம் அடைகிறேன். நமது புதுப்பிக்கத்தக்க எரிசக்தி இலக்குகளை நாம் எட்டியிருப்பதோடு, 2030-க்குள் 500 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி என்ற இலக்கை நோக்கி வேகமாக சென்று கொண்டிருக்கிறோம். உண்மையிலேயே இது ஒரு பெரிய இலக்காகும்! இந்த இலக்கால் உலகமே வியந்து பார்த்தாலும், நாம் இந்த இலக்கை எட்டுவோம் என்று நாட்டு மக்களுக்கு உறுதியாக உத்தரவாதம் அளிக்கிறேன். இது, மனித குலத்திற்கு பலன் அளிப்பதோடு, நமது எதிர்காலத்தை பாதுகாப்பதுடன், நமது குழந்தைகளின் ஒளிமயமான எதிர்காலத்தையும் உறுதி செய்யும். அத்துடன், நமது ரயில்வே துறையையும், 2030-க்குள் கரியமில வாயு வெளியேற்றம் இல்லாத துறையாக மாற்ற உறுதி பூண்டுள்ளோம்.

நண்பர்களே,

பிரதமரின் வீட்டு சூரியசக்தி இலவச மின் திட்டம், புதிய வலிமையை அளிக்க இருப்பதோடு, அதன் பலனை நம் நாட்டில் உள்ள சராசரி குடும்பத்தினரும், குறிப்பாக, நடுத்தர வகுப்பினர் தங்களது மின் கட்டணத்தை செலுத்த வேண்டியிருக்காது என்ற நிலையை உணரக்கூடும். மின்சார வாகனங்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது. பிரதமரின் சூரிய சக்தி வீடு திட்டத்தின் கீழ், சூரிய சக்தி மின்சாரத்தை உற்பத்தி செய்வோர் தங்களது எரிபொருள் செலவில் சேமிப்பை ஏற்படுத்தலாம்.

நண்பர்களே,

பசுமை ஹைட்ரஜன் இயக்கத்தின் மூலம், உலகளாவிய மையமாக மாற நாம் முயற்சித்து வருகிறோம். கொள்கைகள் வேகமாக உருவாக்கப்படுவதோடு, அவற்றின் செயலாக்கமும் துரிதமாக மேற்கொள்ளப்படுகிறது. பசுமை ஹைட்ரஜனை புதிய எரிசக்தி ஆதாரமாக மாற்ற இந்தியா உறுதி பூண்டுள்ளது. இதுபோன்ற முயற்சிகள், பருவநிலை மாற்றம் மற்றும் புவி வெப்பமயமாதல் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதோடு, பசுமை வேலை வாய்ப்பு உருவாக்கத்திலும் கணிசமான வாய்ப்புக்கு வழிவகுக்கின்றன. எனவே, அண்மைக்காலத்தில் பசுமை வேலையின் முக்கியத்துவம் விரிவடையும் போது, இந்த வாய்ப்புகளை பயன்படுத்தி, நமது இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவதுடன், பசுமை வேலை வாய்ப்புத்துறையை ஊக்குவித்து, விரிவுப்படுத்துவதில் நாம் கவனம் செலுத்த வேண்டும்.

எனது அருமை நாட்டு மக்களே,

தற்போது, சர்வதேச ஒலிம்பிக் அரங்கில், இந்தியாவின் சார்பில், பெருமிதத்துடன் பங்கேற்ற இளம் தடகள வீரர்களுடன் நாம் இந்த மூவண்ணக்கொடியின் கீழ் இணைந்திருக்கிறோம். 140 கோடி சக இந்தியர்கள் சார்பில், இந்த தடகள வீரர்களுக்கும், நம் நாட்டின் விளையாட்டு வீரர்களுக்கும் தனது வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன். புதுப்பிக்கப்பட்ட கனவுகளுடன் கூடிய புதிய இலக்குகள், உறுதிப்பாடுகள் மற்றும் உறுதியான முயற்சிகளுடன் நாம் தொடர்ந்து களமிறங்குவோம் என்ற நம்பிக்கையுடன் எனது நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். பாரிஸ் பாராலிம்பிக் போட்டியில் பங்கேற்பதற்காக இந்திய குழு ஒன்று, இன்னும் சில தினங்களில் புறப்பட தயாராக உள்ளது. அவர்களுக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

நண்பர்களே,

இந்தியா ஜி-20 மாநாட்டை நடத்தியது, இந்த மாநாடு நம்நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள நகரங்களில் ஏற்பாடு செய்யப்பட்டது. 200-க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன! இதற்கு முன்பு ஜி-20 மாநாடு இவ்வளவு பிரம்மாண்டமாக நடத்தப்பட்டதில்லை என்பதோடு, ஈடு இணையற்ற விருந்தோம்பலும் இடம் பெற்றது. இவையனைத்தும் நிறைவேற்றப்பட்டதன் மூலம், 2036 ஒலிம்பிக் போட்டியை இந்திய மண்ணில் நடத்துவது என்ற நமது குறிக்கோளில் தெளிவாக இருக்கிறோம். இதற்காக நாம் ஆயத்தமாகி வருவதோடு, அதில், குறிப்பிடத்தக்க முன்னேற்றமும் அடைந்துள்ளோம்.

நண்பர்களே,

சமுதாயத்தில் மிகவும் நலிவடைந்த தரப்பினருக்கு ஆதரவு அளிப்பது நமது சமூக பொறுப்பாகும். யாரையாவது நாம் புறந்தள்ளுவோமேயானால், அது நமது ஒட்டுமொத்த வளர்ச்சியை பாதிக்கும். எனவே, பின்தங்கி இருப்பவர்களை முன்னேற்றினால் தான், நம்மால் உண்மையிலேயே முன்னேற முடியும். புறக்கணிக்கப்பட்ட பகுதிகள், சமுதாயத்தின் நலிந்த பிரிவினர், சிறு விவசாயிகள், காடுகளில் வசிக்கும் பழங்குடியின சகோதர-சகோதரிகள், நல்ல தாய்மார்கள், சகோதரிகள், தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களை நமது நிலைக்கு கொண்டு வருவதை உறுதி செய்வதற்கான முயற்சிகளை மேற்கொள்வது நமது கடமையாகும். இந்த முயற்சியின் வேகம் ஏற்கனவே, அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த சமுதாயத்தினர் விரைவில் நம்மை எட்டி பிடிப்பார்கள், அதன் மூலம், நமது கூட்டு வல்லமை வலுப்பெறும். இந்த பணியை நாம் மிகுந்த பொறுப்புணர்வுடன் அணுகி, நம்மை எதிர்நோக்கியுள்ள வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

உணர்வுகளை வலுப்படுத்துவதை விட, வேறு சிறந்த தருணம் எதுவாக இருக்க முடியும்? 1857ஆம் ஆண்டு சுதந்திரப் போராட்டம் தொடங்குவதற்கு முன்பே, நம் நாட்டைச் சேர்ந்த ஒரு பழங்குடியின இளைஞர், பிரிட்டிஷாரை உறுதியாக எதிர்த்து நின்றார். 20-22 ஆவது வயதில் ஆக்ரோஷமாக சவால் விடுத்த அவர் தான் தற்போது பகவான் பிர்சா முண்டா என்று அழைக்கப்படுகிறார். பகவான் பிர்சா முண்டாவின் 150-வது பிறந்த நாளை நாம் நெருங்கி வரும் வேளையில், அவரது மரபில் இருந்து நாம் உத்வேகம் பெறுவோம். தனி ஆளாக இருந்த போதும், தலை சிறந்த தேசப்பற்றை வெளிப்படுத்திய பகவான் பிர்சா முண்டாவை விட, சிறந்த உத்வேகத்துடன் பணியாற்ற வேறு யாரால் முடியும்? பகவான் பிர்சா முண்டாவின் பிறந்த நாளை நாம் கொண்டாடும் வேளையில், சமுதாயத்தின் மீதான நமது பொறுப்பும், கருணையும் மேலும் அதிகரிக்கும். நமது சமுதாயத்தில் உள்ள ஒவ்வொருவரையும் – ஏழைகள், தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினரை இணைத்துக்கொள்ள நாம் உறுதியேற்று, இந்த உறுதிப்பாட்டுடன், அனைவரும் இணைந்து முன்னேறுவோம்.

எனது அருமை நாட்டு மக்களே,

நாம் தீர்க்கமான முடிவுகளோடு, முன்னேறி செல்வதுடன், குறிப்பிடத்தக்க முன்னேற்றமும் அடைந்துள்ளோம். எனினும், சில தனி நபர்களால் இந்த முன்னேற்றத்தை பாராட்ட முடியவில்லை என்பது தான் உண்மை. தங்களது சுய நலத்திற்கு அப்பால் வேறு எதை பற்றியும் சிந்திக்காதவர்கள், பிறரது நலனைப்பற்றி அக்கறை காட்டாதவர்கள், அலைபாயும் மனம் கொண்டவர்களாக இருப்பது கவலைக்குரியது. இத்தகைய நபர்களை, விரக்தியில் இருப்பவர்களை நாடு புறக்கணிக்க வேண்டும். எதிர்வினைகளால் ஈர்க்கப்பட்டு, ஒன்று சேர்ந்த இத்தகைய தனி நபர்கள், விஷத்தை பரப்பும் போது, அது சர்வாதிகாரம், பேரழிவு மற்றும் குழப்பங்களுக்கு வழி வகுத்து பெரும் பின்னடைவை ஏற்படுத்தும், இத்தகைய பின்னடைவை சரிசெய்ய பெரும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். இத்தகைய அவநம்பிக்கை கொண்ட நபர்கள் நம்பிக்கைக்கு உரியவர்கள் அல்ல என்பதோடு, அவர்கள் பேரழிவு பற்றி கனவு காணும் எதிர்மறை எண்ணங்களை வளர்ப்பவர்களாகவும், நமது கூட்டு முன்னேற்றத்தை குறைத்து மதிப்பிடக் கூடியவர்களாகவும் உள்ளனர். இத்தகைய அச்சுறுத்தல்களை நாடு அங்கீகரிக்க வேண்டியுள்ளது. இருப்பினும், நமது நல்ல நோக்கம், ஒருமைப்பாடு மற்றும் நாட்டிற்கான அர்ப்பணிப்புடன், நம்மை எதிர்ப்பவர்களை நாம் வெற்றிகொள்வோம் என்று நான் நாட்டு மக்களுக்கு உறுதியளிக்க விரும்புகிறேன். நம் நாட்டை முன்னேற்றுவது என்ற உறுதிப்பாட்டிலிருந்து நாம் ஒருபோதும் தடுமாறப் போவதில்லை என்பதோடு, இந்த உறுதியை நாம் நிலைநாட்டுவோம் என்றும் நான் உறுதியளிக்கிறேன்.

நண்பர்களே,

உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் இருந்தும் ஏராளமான சவால்கள் வருகின்றது. நாம் வலிமையாக வளர்ச்சியடைந்து, அதிக கவனத்தை ஈர்க்கும் போது, இத்தகைய சவால்களும் அதிகரிக்கத்தான் செய்யும். அந்நிய சவால்கள், குறிப்பாக, மோதலை ஏற்படுத்தக்கூடியவை என்பதை நான் நன்கு அறிவேன். எனினும், இந்தியாவின் முன்னேற்றம் எந்தவொரு நாட்டிற்கும் அச்சுறுத்தலாகாது என்று நான் அவர்களுக்கு தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். கடந்த காலத்திலும், நாம் வளமாக இருந்த போதும், நாம் உலகை ஒருபோதும் போருக்கு இழுத்தது இல்லை. நாம் புத்தரின் பூமியை சேர்ந்தவர்கள், போர் நமது பாதையல்ல. எனவே, உலகம் கவலைப்பட தேவையில்லை. இந்தியா முன்னேறும் போது, உலக சமுதாயம் இந்தியாவின் நற்பண்புகள் மற்றும் ஆயிரமாயிரம் ஆண்டுகால அதன் வரலாற்றை புரிந்துகொள்ள வேண்டும். எங்களை அச்சுறுத்தலாக நினைக்க வேண்டாம். ஒட்டுமொத்த மனிதகுலத்தின் நலனுக்கும் பங்களிப்பை வழங்கும் திறன் பெற்ற பூமியை மேலும் கடினமாக்குவதற்கான உத்திகளை பின்பற்ற வைக்காதீர்கள். ஆனால், எனது அருமை நாட்டு மக்களுக்கு நான் சொல்ல விரும்புவது என்னவென்றால், நாம் எத்தனை சவால்களை சந்தித்தாலும், சவால்களை எதிர்கொள்வது இந்தியாவின் தன்மை என்பதில் மாற்றுக்கருத்து ஏதுமில்லை. நாம் தடுமாறுபவர்களோ, அயர்ந்து விடுபவர்களோ, நிறுத்திக் கொள்பவர்களோ அல்லது தலை வணங்குபவர்களோ அல்ல. 140 கோடி மக்களின் தலைவிதியை மாற்றி, அவர்களது எதிர்காலத்தைப் பாதுகாத்து, நாட்டின் கனவுகளை நனவாக்குவதற்கான உறுதிப்பாடுகளை நிறைவேற்றுவதற்கான எந்த வாய்ப்பையும் நாம் தவறவிட மாட்டோம். அனைத்து தீய எண்ணங்களையும், நமது நல்ல எண்ணங்களால் முறியடித்து வெற்றி வாகை சூடுவோம் என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன்.

எனது அருமை நாட்டு மக்களே,

சமூக கட்டமைப்பில் ஏற்படும் மாற்றங்கள் கூட சில நேரங்களில் குறிப்பிடத்தக்க சவாலாக மாறும். ஒவ்வொரு குடிமகனும் ஊழல் கரையானால்  பாதிக்கப்படுகின்றனர். ஊழல் என்பது, அரசு நடைமுறை மீதான சாமானிய மனிதனின் நம்பிக்கையை சீர்குலைத்துள்ளது. ஒருவரது திறமைக்கு அநீதி இழைக்கப்படுவதால் ஏற்படும் கோபம், நாட்டின் முன்னேற்றத்தை பாதிக்கும். எனவே தான், ஊழலுக்கு எதிராக நான் பெரும் யுத்தத்தை தொடங்கியிருக்கிறேன். இந்த சண்டை எனது நற்பெயருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை நான் அறிவேன். ஆனாலும், நாட்டை விட, நற்பெயர் எனக்கு முக்கியமானதல்ல, நாட்டின் கனவை விட, வேறு எந்த கனவும் எனக்கு பெரிதல்ல. எனவே, ஊழலுக்கு எதிரான எனது போராட்டம் உண்மையான அக்கறையுடனும், வேகமாகவும் தொடரும் என்பதோடு, ஊழல்வாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும். ஊழல்வாதிகள் அஞ்சக்கூடிய சூழலை உருவாக்க நான் விரும்புகிறேன், அப்போது தான், சாமானிய மக்களை சுரண்டும் போக்கு முடிவுக்கு வரும். எனினும், புதிதாக தோன்றியுள்ள பெரிய சவால், ஊழலை எதிர்கொள்வதோடு  மட்டுமின்றி, உயர்மட்ட சமுதாயத்தினரிடையே ஏற்பட்டுள்ள மாற்றத்தையும் எதிர்கொள்வதாகும். நம்மிடம் தலைசிறந்த அரசியல் சாசனம் உள்ளது. நமது சொந்த நாட்டில் இருக்கும் சிலரே, ஊழலை போற்றுவதை யாராலும் நினைத்துப் பார்க்க முடியுமா? அவர்கள் வெளிப்படையாகவே ஊழலை கொண்டாடுகின்றனர். சமுதாயத்தின் அத்தகைய வித்துக்களை விதைப்பதற்கான முயற்சிகளும், ஊழலைப் போற்றுவதும், ஊழலை ஏற்றுக்கொள்ள வைப்பதற்கான தொடர் முயற்சிகளும், ஆரோக்கியமான சமுதாயத்திற்கு பெரும் சவாலாக மாறி கவலைக்குரியதாக ஆகியுள்ளது. சமுதாயத்தில் உள்ள ஊழல்வாதிகளிடம் இருந்து நமக்கு நாமே விலகிக்கொள்வதன்  மூலம், ஊழல்வாதிகள் அச்சப்படக்கூடிய சூழலை நம்மால் உருவாக்க முடியும். எனினும், ஊழலைப் போற்றுவோமேயானால், தற்போது, நேர்மையாக உள்ளவர்களும் கூட, இதனை ஒரு கவுரமாக கருதி, இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது ஏற்றுக்கொள்ளத்தக்கது என்ற மனநிலையை ஏற்படுத்திவிடும்.

எனது அருமை நாட்டு மக்களே,

பங்களாதேஷில் அண்மையில் ஏற்பட்ட நிகழ்வுகள், தொடர்பான கவலையை, குறிப்பாக, நமது அண்டை நாடு என்ற நெருக்கத்தால் ஏற்பட்ட கவலையை நான் உணர்ந்துள்ளேன். அங்கு விரைவில் இயல்பு நிலை திரும்பும் என்று நான் நம்புகிறேன். பங்களாதேஷில் வசிக்கும் சிறுபான்மையினரான இந்துக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்பதே 140 கோடி இந்தியர்களின் பெரும் கவலையாக உள்ளது.  நமது அண்டை நாடுகள் எப்போதும் மனநிறைவு மற்றும் சமாதானப் பாதையை பின்பற்ற வேண்டும் என்பதே இந்தியாவின் விருப்பமாக உள்ளது. அமைதிக்கான நமது உறுதிப்பாடு, நமது கலாச்சாரத்தில் வேரூன்றியதாகும். வரும் காலங்களில், பங்களாதேஷின் வளர்ச்சிப் பயணத்தில் நமது நேர்மறை எண்ணங்கள் தொடரும், ஏனெனில், நாம் மனிதகுல நலனுக்காக நம்மை அர்ப்பணித்துக் கொண்டவர்களாக இருக்கிறோம்.

எனது அருமை நாட்டு மக்களே,

நமது அரசியல் சாசனம் இயற்றப்பட்டதன் 75-வது ஆண்டு விழாவை கொண்டாடும் வேளையில், நமது தேசத்தை ஒன்றிணைத்து, வலிமைப்படுத்துவதில் அதன் தலையாயப் பங்களிப்பை பிரதிபலிப்பது முக்கியமானதாகும். இந்த 75 ஆண்டுகளில் இந்தியாவின் ஜனநாயகத்தை கட்டிக்காப்பதிலும், நமது தலித்துகள், சமுதாயத்தில் உள்ள ஒடுக்கப்பட்ட, சுரண்டப்பட்ட மற்றும் நலிந்த பிரிவினரின் உரிமைகளைப் பாதுகாப்பதிலும், அரசியல் சாசனம் முக்கியப் பங்கு வகித்துள்ளது. இந்திய அரசியல் சாசனத்தின் 75-வது ஆண்டை நாம் கொண்டாடும் வேளையில், குடிமக்களும், அரசியல் சாசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கடமைகளில் கவனம் செலுத்துவது அவசியம் என்பதோடு, கடமை பற்றி நான் பேசினாலும், மக்கள் மீது சுமையை சுமத்த நான் விரும்பவில்லை. இந்த பொறுப்புணர்வு, மத்திய அரசு, அதன் ஊழியர்கள், மாநில அரசுகள், மாநில அரசுகளின் ஊழியர்கள், பஞ்சாயத்து, நகராட்சி, மாநகராட்சி போன்ற உள்ளாட்சி அமைப்புகள், தாலுக்கா அல்லது மாவட்டத்திற்கும், மக்களுக்கும் இடையிலானது என்பதற்கு அப்பாற்பட்டதாகும். எனினும், 140 கோடி மக்களும் அவர்களது கடமைகளை உணர வேண்டும். நாம் அனைவரும் நமது பொறுப்புகளை கூட்டாக நிறைவேற்றினால், இயற்கையிலேயே நாம், ஒருவர் மற்றவரின் உரிமைகளை பாதுகாப்பவர்களாக மாறி விடுகிறோம். நமது கடமைகைளை நிறைவேற்றுவதன் மூலம், எந்த வகையான கூடுதல் முயற்சிக்கான அவசியமுமின்றி, இத்தகைய உரிமைகளை நம்மால் பாதுகாக்க முடியும். நாம் அனைவரும் இத்தகைய மன நிலையைப் பின்பற்றி நமது ஜனநாயகத்தை வலுப்படுத்துவதோடு மட்டுமின்றி, நமது கூட்டு வலிமையை மேம்படுத்தி, புதிய சக்தியுடன் முன்னோக்கிச் செல்லலாம்.

எனது அருமை நாட்டு மக்களே,

நம் நாட்டில் பொது சிவில் சட்டம் தொடர்பான பிரச்சனையை உச்சநீதிமன்றம் தொடர்ந்து தீர்வு கண்டு வருகிறது. எண்ணற்ற உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டிருப்பது, நமது மக்கள் தொகையில் குறிப்பிடத்தக்க தரப்பினர் மீதான நம்பிக்கையை பிரதிபலிப்பதோடு, தற்போதைய சிவில் சட்டம் பாகுபாடானது என்பதையும் வெளிப்படுத்துகிறது.  அரசியல் சாசனத்தின் 75-வது ஆண்டை கொண்டாடும் வேளையில், இந்த அம்சம் குறித்து மாற்றம் செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ள கருத்து குறித்து விரிவான விவாதங்கள் நடத்தப்பட வேண்டும். அரசியல் சாசனத்தை உருவாக்கியவர்களின் தொலைநோக்குப் பார்வையை நிறைவேற்ற வேண்டியது நம் அனைவரின் கூட்டுப் பொறுப்பாகும். மாறுபட்ட கருத்துக்கள் மற்றும் யோசனைகளையும் நாம் வரவேற்க வேண்டும். மதத்தின் அடிப்படையில் நாட்டை பிளவுப்படுத்தி, பாகுபாட்டை ஊக்குவிக்கும் சட்டங்களுக்கு நவீன சமுதயாத்தில் இடமில்லை. எனவே, மதச் சார்பற்ற சிவில் சட்டம் வேண்டும் என நாடு கோருவதற்கு இதுவே உரிய தருணமாகும். மதவாத சிவில் சட்டம் 75 ஆண்டுகளாக நடைமுறையில் உள்ள நிலையில், மதச்சார்பற்ற சிவில் சட்டத்தை நோக்கி செல்வது முக்கியமானதாகும். இந்த மாற்றம் நடந்தேறிவிட்டால், அது மத ரீதியான பாகுபாட்டை ஒழிப்பதுடன், சாமானிய மக்களால் உணரப்படும் இடைவெளியை இணைக்கும்.

எனது அருமை நாட்டு மக்களே,

நாட்டில் நிலவும் வாரிசு அரசியல் மற்றும் சாதிய மனப்பான்மை பற்றி நான் அடிக்கடி பேசி வந்தாலும், அவை இந்திய ஜனநாயகத்தின் மீது, குறிப்பிடத்தக்க பாதிப்பை ஏற்படுத்துவதாக நான் நம்புகிறேன். இந்த நாட்டையும், அரசியலையும் வாரிசு அரசியல் மற்றும் சாதிய மனப்பான்மையிலிருந்து விடுவிக்க வேண்டியது அவசியம்.  தற்போது, என் முன்பாக கூடியுள்ள இளைஞர்கள், “மை பாரத்” அமைப்புடன் தொடர்புடையவர்கள் என்று கருதுகிறேன். இது மிக அருமையாக எழுதப்பட்டுள்ளது.  “மை பாரத்” பல்வேறு இயக்கங்களை கொண்டதாகும். அதில் ஒரு இயக்கம், கூடிய விரைவில் ஒரு லட்சம் இளைஞர்களை அரசியல் பிரதிநிதிகளாக கொண்டு வருவதாகும். தொடக்கத்தில், அரசியல் பின்னணி ஏதுமில்லாத குறிப்பாக, எந்த தலைமுறையிலும் பெற்றோர், உடன்பிறந்தோர், சித்தப்பா, மாமா போன்ற உறவினர்கள் யாரும் அரசியலில் தொடர்பு இல்லாத குடும்பங்களைச் சேர்ந்த ஒரு லட்சம் இளைஞர்களை அரசியலுக்கு கொண்டுவர விரும்புகிறோம். புது ரத்தம் பாய்ச்ச விரும்புகிறோம். அதுபோன்ற ஒரு லட்சம் திறமை வாய்ந்த இளைஞர்கள், பஞ்சாயத்து, நகராட்சி, மாநகராட்சி, மாவட்ட ஊராட்சி, மாநில சட்டப்பேரவை அல்லது மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். அரசியல் பின்புலம் இல்லாத புதிய இளைஞர்கள் அரசியலில் ஈடுபடுவதை நாங்கள் விரும்புகிறோம், இதன் மூலமே, நம்மை சாதிய மனப்பான்மை மற்றும் வாரிசு அரசியலில் இருந்து விடுவித்து ஜனநாயகத்தை செழுமைப்படுத்த முடியும். அவர்கள் குறிப்பிட்ட கட்சியில் தான் சேர வேண்டும் என்பது அல்ல. அவர்கள் விரும்பும் எந்த கட்சியிலும் சேர்ந்து மக்கள் பிரதிநிதி ஆகலாம். இதுவரை அரசியலில் ஈடுபடாத, அதுபோன்ற ஒரு லட்சம் இளைஞர்கள் வருங்காலத்தில் அரசியலில் ஈடுபடுவது பற்றி நாடு முடிவு செய்ய வேண்டும், இது புதிய சிந்தனை மற்றும் புதிய திறமைகளுக்கு வழி வகுப்பதோடு, ஜனநாயகத்தையும் செழுமைப்படுத்தும். எனவே, நாம் இதனை நோக்கிச் செல்ல வேண்டும். அடிக்கடி தேர்தல் நடைபெறுவதும், நாட்டின் வளர்ச்சிக்கு இடையூறாக அமைந்து, பல்வேறு தடைகளை ஏற்படுத்துகிறது என்பதையும் நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். தற்போது, எந்தவொரு திட்டத்தையும் தேர்தலுடன் தொடர்புபடுத்துவது எளிதாகிவிட்டது, ஏனெனில், ஒவ்வொரு மூன்று அல்லது ஆறு மாதங்களுக்கு ஒருமுறை நாட்டில் ஏதாவது ஒரு பகுதியில் தேர்தல் நடந்துகொண்டிருக்கிறது. எப்போது எந்த திட்டத்தை அறிவித்தாலும், அதனை தேர்தலுடன் தொடர்புபடுத்துவதை ஊடகங்களில் நீங்கள் காணலாம். ஒவ்வொரு திட்டத்திற்கும் தேர்தல் சாயம் பூசப்படுகிறது. எனவே, இதுபற்றி நாட்டில் விரிவான விவாதம் நடத்தப்பட வேண்டும். அனைத்து அரசியல் கட்சிகளும் அவரவர் கருத்தை தெரிவித்துள்ளன. அரசால் அமைக்கப்பட்ட குழுவும், மிகச்சிறந்த அறிக்கையை தயாரித்துள்ளது. “ஒரே நாடு, ஒரே தேர்தல்” என்ற கருத்தை ஏற்றுக்கொள்ள நாடு முன்வர வேண்டும். இந்த செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து மூவண்ணக்கொடி சாட்சியாக, “ஒரே நாடு, ஒரே தேர்தல்” என்பதை செயலாக்கத்திற்கு கொண்டு வந்து, இந்தியாவின் முன்னேற்றத்திற்கும், நாட்டில் உள்ள வளங்களை சாமானிய மக்கள் அதிகளவில் பயன்படுத்தவும், வழிவகுக்குமாறு அரசியல் கட்சிகளிடமும், அரசியல் சாசனத்தை புரிந்து கொண்டவர்களையும் நான் கேட்டுக்கொள்கிறேன்.

எனது அருமை நாட்டு மக்களே,

இது இந்தியாவின் பொற்காலம் ஆகும். 2047-ல் வளர்ச்சியடைந்த இந்தியா நமக்காக காத்திருக்கிறது. தடைகள், சவால்களை எதிர்கொண்டு, முன்னேறிச் செல்ல இந்த நாடு உறுதி பூண்டுள்ளது. நண்பர்களே, எனது சிந்தனையில் எந்த தயக்கமும் இல்லை என்று நான் கருதுகிறேன். எனது கனவுகளுக்கு முன்பாக எந்த முகத்திரையும் இல்லை. நமது முன்னோர்களின் ரத்தம் 140 கோடி மக்களின் நரம்புகளிலும் ஓடுவதை நான் தெளிவாக பார்க்கிறேன். அந்த 40 கோடி மக்களால் சுதந்திரத்தின் கனவை பூர்த்தி செய்ய முடிகிறது என்றால் 140 கோடி மக்களால் வளமான இந்தியா என்ற கனவை நனவாக்க முடியும். 140 கோடி மக்களும் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற கனவை நனவாக்குவார்கள். நான் ஏற்கனவே கூறியது போல, இந்த நாடு எனது மூன்றாவது ஆட்சிக் காலத்திலேயே உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறும், அதற்காக நான் மூன்று மடங்கு கடினமாக, மூன்று மடங்கு வேகத்தில், மூன்று மடங்கு அளவுக்கு பாடுபட்டு வருகிறேன். இதன் மூலம் நாட்டிற்காக நாம் கானும் கனவு விரைவில் நனவாகும். எனது ஒவ்வொரு மணித்துளியும், இந்த நாட்டிற்காகத்தான் உள்ளது; ஒவ்வொரு வினாடியும் நாட்டிற்காக அர்ப்பணிக்கப்பட்டது; எனது உடலின் ஒவ்வொரு அங்கமும், பாரத அன்னைக்கு அர்ப்பணிக்கப்பட்டது. எனவே, 24x7 வேலை என்ற உறுதிப்பாட்டுடனும், 2047-க்குள் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற தொலைநோக்குடனும், நமது முன்னோர்களின் விருப்பங்களை நனவாக்கி, நமது எண்ணங்களை அவற்றோடு இணைத்து, நமது முயற்சிகளையும் இணைக்க முன்வருமாறு நாட்டு மக்களை கேட்டுக்கொள்கிறேன். 21-ஆம் நூற்றாண்டு, இந்தியாவிற்கான நூற்றாண்டு என்பதை உறுதி செய்ய நமது எதிர்பார்ப்புகள் மற்றும் முயற்சிகளை ஒன்றிணைத்து, ‘பொற்கால இந்தியாவை உருவாக்கி, இந்த நூற்றாண்டிலேயே வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்கி, முன்னோர்களின் கனவுகளை நனவாக்க பாடுபடுவோம். 75 ஆண்டுகால பயணத்திற்கு பிறகு சுதந்திர இந்தியா புதிய மைல்கல்லை எட்டுகிறது என்றால் எந்த வாய்ப்பையும் நாம் தவறவிடக்கூடாது. நீங்கள் என்னிடம் கொடுத்துள்ள பொறுப்புகளை நிறைவேற்றுவதற்கான எந்த வாய்ப்பையும் நான் தவறவிட மாட்டேன். கடினமாக உழைக்க நான் ஒருபோதும் தயங்கியதில்லை. தைரியத்திலிருந்து நான் ஒருபோதும் பின்வாங்கியதில்லை; சவால்களை கண்டு நான் ஒருபோதும் அஞ்சியதில்லை. ஏனெனில் நான் உங்களுக்காக வாழ்கிறேன், உங்களது எதிர்காலத்திற்காக வாழ்கிறேன், இந்திய தாயின் ஒளிமயமான எதிர்காலத்திற்காக வாழ்கிறேன். தேசியக்கொடியின் நிழலில், மூவண்ணக்கொடியின் நிழலில், அந்த கனவுகளை நனவாக்க நாம் முன்னேறிச் செல்வோம். நான் சொல்வதை திரும்ப சொல்லுங்கள்:

பாரத் மாதா கி ஜே!

பாரத் மாதா கி ஜே!

பாரத் மாதா கி ஜே!

வந்தே மாதரம்!

வந்தே மாதரம்!

வந்தே மாதரம்!

வந்தே மாதரம்!

ஜெய்ஹிந்த்!

ஜெய்ஹிந்த்!

ஜெய்ஹிந்த்!

------------


(Release ID: 2045560)

AD/SMB/PKV/MM/RS/RJ/KV


(Release ID: 2045744) Visitor Counter : 113