கலாசாரத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

வீடுகள் தோறும் தேசியக் கொடி இயக்கம் தொடர்பான இருசக்கர வாகனப் பேரணி - தில்லியில் கலாச்சார அமைச்சகம் நடத்தியது

Posted On: 13 AUG 2024 4:36PM by PIB Chennai

வீடுகள் தோறும் தேசியக் கொடி இயக்கம் (ஹர் கர் திரங்கா) தொடர்பான இருசக்கர வாகனப் பேரணி இன்று (13 ஆகஸ்ட் 2024) தில்லியில் நடைபெற்றது. இது தேசத்தின் பெருமையையும் சமூக உணர்வின் உற்சாகத்தையும் வெளிப்படுத்துவதாக அமைந்தது. நாடு தழுவிய இயக்கத்தின் ஒரு பகுதியாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த பேரணியில், நூற்றுக்கணக்கானர்கள் கலந்து கொண்டு, தேசபக்தி, ஒற்றுமை, தேசிய அடையாளம் ஆகியவற்றை வெளிப்படுத்தும் வகையில் தேசியக் கொடிகளை ஏந்திச் சென்றனர்.

இந்த இருசக்கர வாகனப் பேரணியை குடியரசுத் துணைத் தலைவர் திரு ஜக்தீப் தன்கர் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய அவர், விடுதலையின் அமிர்தப் பெருவிழாவின் ஒரு பகுதியாக தொடங்கப்பட்ட வீடுகள் தோறும் தேசியக் கொடி முன்முயற்சி ஒரு பரவலான மக்கள் இயக்கமாக உருவெடுத்துள்ளது என்று கூறினார்.  முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு எழுச்சி பெற்று வரும் நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது என்று அவர் தெரிவித்தார். இந்த எழுச்சி தொடரும் என்றும் நமது சுதந்திரத்தின் நூற்றாண்டைக் கொண்டாடும் 2047-ம் ஆண்டில் இந்தியா வளர்ந்த நாடாக மாறும் என்றும் அவர் கூறினார்.  

கலாச்சார, சுற்றுலாத்துறை அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசுகையில்இந்த இருசக்கர வாகனப் பேரணி நமது நாட்டின் சுதந்திரத்தின் கொண்டாட்டம் மட்டுமல்ல என்றும், நம்மை ஒன்றாக இணைக்கும் ஒற்றுமை நிகழ்வாகவும் இது அமைந்துள்ளது என்றும் கூறினார்.

பேரணி பாரத் மண்டபத்தில் இருந்து தொடங்கியது, பங்கேற்பாளர்கள் தங்கள் இருசக்கர வாகனங்களை இயக்கி, தேசியக் கொடியை பெருமையுடன் காட்சிப்படுத்தினர். கலாச்சார அமைச்சகத்தால் தொடங்கப்பட்ட இந்த இயக்கம், மக்களை தங்கள் வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றவும், நாட்டின் பாரம்பரியத்தைக் கொண்டாடும் நடவடிக்கைகளில் பங்கேற்கவும் ஊக்குவிக்கிறது. இந்த இருசக்கர வாகனப் பேரணி இந்த இயக்கத்தின் வெற்றிக்கு ஒரு சான்றாக அமைந்தது.

நிகழ்ச்சியில் நாடாளுமன்ற விவகாரங்கள், சிறுபான்மையினர் விவகாரங்களுக்கான அமைச்சர் திரு கிரண் ரிஜிஜு, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா, சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு கிஞ்சரப்பு ராம் மோகன் நாயுடு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். தயான் சந்த் மைதானத்தில் நடைபெற்ற ஒரு விழாவுடன் பேரணி நிறைவடைந்தது.

***********

(Release ID: 2044847)


(Release ID: 2044868) Visitor Counter : 64