குடியரசுத் தலைவர் செயலகம்
நியூசிலாந்தில், அந்நாட்டின் கவர்னர் ஜெனரல், பிரதமர், துணைப் பிரதமர் ஆகியோரைக் குடியரசுத்தலைவர் சந்தித்தார்
நியூசிலாந்து சர்வதேச கல்வி மாநாட்டில் உரையாற்றினார்
Posted On:
08 AUG 2024 7:21PM by PIB Chennai
குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு தமது ஃபிஜி, நியூசிலாந்து, திமோர்-லெஸ்டே ஆகிய நாடுகளுக்கான அரசுமுறைப் பயணத்தின் இரண்டாம் கட்டமாக இன்று காலை (ஆகஸ்ட் 8, 2024) நியூசிலாந்தின் வெலிங்டனில் தரையிறங்கினார்.
நியூசிலாந்து கவர்னர் ஜெனரல் டேம் சின்டி கிரோ குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி திர்முவை அரசு மாளிகையில் வரவேற்றார். பாரம்பரிய மவோரி "போஹிரி" நிகழ்வுடன் அவர் வரவேற்கப்பட்டார். அவருக்கு ராயல் கார்ட் ஆஃப் ஹானர் வழங்கப்பட்டது. இந்த சந்திப்பின் போது, இந்தியா- நியூசிலாந்து இடையேயான நட்புறவை இரு தலைவர்களும் பாராட்டியதுடன், பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பு குறித்தும் விவாதித்தனர். பரஸ்பரம் பயனளிக்கும் ஒத்துழைப்பு மற்றும் கூட்டாண்மைகளை, குறிப்பாக வர்த்தக வாய்ப்புகளை ஏற்படுத்துவதன் மூலம் இந்தியா-நியூசிலாந்து பொருளாதார உறவுகளை விரிவுபடுத்துவதற்கான முயற்சிகளை, தொடர வேண்டியதன் அவசியம் பற்றி அவர்கள் விவாதித்தனர்.
இதைத்தொடர்ந்து நியூசிலாந்து சர்வதேச கல்வி மாநாட்டில் குடியரசுத்தலைவர் உரையாற்றினார்.
நிகழ்ச்சியில் பேசிய அவர், அறிவைத் தேடுவதில் வளமான இந்தியப் பாரம்பரியம் பற்றியும் கல்வித் துறையில் சமகால முன்னேற்றம் பற்றியும் விரிவாக எடுத்துரைத்தார். பன்முக கற்றல், விமர்சன சிந்தனை, உலகளாவிய போட்டித்திறன் ஆகியவற்றை ஊக்குவிப்பதன் மூலம் இந்தியக் கல்வித் தளத்தை மாற்றுவதை நோக்கமாகக் கொண்ட தேசிய கல்விக் கொள்கை பற்றியும் அவர் பேசினார்.
ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு, உள்ளடக்கம் மற்றும் சிறப்பான கவனம் செலுத்தும் உயர்தர கல்விக்கு நியூசிலாந்து புகழ்பெற்றது என்று அவர் கூறினார். பல இந்திய மாணவர்கள் நியூசிலாந்தில் உள்ள பல்வேறு நிறுவனங்களில் தரமான கல்வியைப் பெறுவதற்கான அணுகலைப் பெற்று வருவதாக அவர் தெரிவித்தார்.
செயற்கை நுண்ணறிவு, இயந்திரக் கற்றல், தொழில் மற்றும் திறன் அடிப்படையிலான பயிற்சி, பருவநிலை மற்றும் சுற்றுச்சூழல் ஆய்வுகள், கலாச்சார பரிமாற்ற திட்டங்கள், ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு ஆகியவற்றில் நிறுவனங்களுக்கு இடையே அதிக கல்விப் பரிமாற்றங்கள் மற்றும் ஒத்துழைப்பு பற்றி குடியரசுத்தலைவர் எடுத்துரைத்தார்.
நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சனும் குடியரசுத்தலைவரை சந்தித்தார். கலாச்சார உறவுகளை ஆழப்படுத்துவது முதல் பிராந்திய மற்றும் உலகளாவிய பாதுகாப்புக்கான உறுதிப்பாடு வரை பல்வேறு பிரச்சினைகள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர்.
முன்னதாக, நியூசிலாந்து துணைப் பிரதமரும், வெளியுறவுத் துறை அமைச்சருமான வின்ஸ்டன் பீட்டர்ஸும் குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்முவை சந்தித்துப் பேசினார். இருதரப்பு உறவுகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டதுடன், ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வழிகள் குறித்து விவாதித்தனர்.
வெலிங்டன் ரயில் நிலையத்தில் உள்ள மகாத்மா காந்தியின் சிலைக்கு மலர் அஞ்சலி செலுத்திய குடியரசுத்தலைவர், வெலிங்டனில் உள்ள தேசிய போர் நினைவிடத்தில், வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
வெலிங்டனில் கவர்னர் ஜெனரல் அளித்த விருந்தில் குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத்தலைவர், இந்தியாவும் நியூசிலாந்தும் கடந்த பல ஆண்டுகளாக ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி ஆகியவற்றில் வேரூன்றியுள்ள பகிரப்பட்ட மாண்புகளின் அடிப்படையில் நட்புறவை வளர்த்துள்ளன என்று கூறினார். பன்முகத்தன்மை மற்றும் உள்ளடக்கிய தன்மையை நாங்கள் மதிக்கிறோம், இது நமது சமூகங்களின் பன்முக கலாச்சார கட்டமைப்பில் தெளிவாகத் தெரிகிறது என்று அவர் குறிப்பிட்டார்.
உலக அரங்கில், பருவநிலை மாற்றம், நீடித்த வளர்ச்சி, சர்வதேச அமைதி, பாதுகாப்பு போன்ற முக்கிய சவால்களை எதிர்கொள்ள இந்தியாவும் நியூசிலாந்தும் தொடர்ந்து இணைந்து பணியாற்றி வருவது குறித்து குடியரசுத்தலைவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.
அரசுமுறைப் பயணத்தின் போது இரு தலைவர்களுக்கு இடையே நடைபெற்ற சிறப்பான, சுமூகமான கலந்துரையாடல்கள், அவர்களுக்கிடையேயான நல்ல தொடர்பையும், நெருக்கத்தையும் வெளிப்படுத்தியது. கவர்னர் ஜெனரல் டேம் சிண்டி கிரோ இந்தப் பதவியை வகிக்கும் மவோரி வம்சாவளியைச் சேர்ந்த முதல் பெண் ஆவார், அதே போல் குடியரசுத்தலைவர் முர்மு, பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த இந்தியாவின் முதல் பெண் குடியரசுத்தலைவர்ஆவார்.. இரு தலைவர்களும் கல்வித் துறையில் பொதுவான ஆர்வத்தையும் அனுபவத்தையும் பகிர்ந்துகொண்டனர்.
வில்லிங்டனில் அரசு நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக முடித்த பின்னர், ஆக்லாந்து புறப்பட்டுச் சென்ற குடியரசுத்தலைவர், அங்கு அவர் இந்திய சமூகத்தினரிடையே உரையாற்றுகிறார்.
BR/KR
(Release ID: 2043315)
***
(Release ID: 2043500)
Visitor Counter : 41