பிரதமர் அலுவலகம்
கார்கில் வெற்றி தினத்தை பிரதமர் லடாக் பயணம் போரில் உயிர்த்தியாகம் புரிந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்
பாதுகாப்பு முக்கியததுவம் வாய்ந்த ஷின்குன் லா சுரங்கப்பாதை பணிகளைப் பார்வையிட்டார்
கார்கில் போர் வெற்றி நாட்டுக்கு சொந்தமானது என பெருமிதம்
அக்னிபாத் திட்டம் நாட்டின் வலிமையை அதிகரிக்கும் என விளக்கம்
Posted On:
26 JUL 2024 11:33AM by PIB Chennai
25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி கலந்து கொண்டார். போரில் உயிர்த்தியாகம் புரிந்த துணிச்சல்மிக்க வீரர்களுக்கு அவர் அஞ்சலி செலுத்தினார். தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் கார்கில் போர் குறித்து கேட்டறிந்த பிரதமர், அழியாத நினைவு குடிலையும், வீர பூமியையும் பார்வையிட்டார்.
லடாக்கில் ஷின்குன் லா சுரங்கப்பாதை திட்டத்தின் பணிகளை பிரதமர் காணொலி மூலம் இன்று பார்வையிட்டார். ஷின்குன் லா சுரங்கப்பாதை திட்டம் லேவுக்கு அனைத்து பருவ காலத்திலும் இணைப்பை வழங்குவதற்காக நிமு – படும் – தர்ச்சா சாலையில் சுமார் 15,800 அடி உயரத்தில் கட்டப்படவுள்ளது. இது 4.1 கி.மீ நீளமுள்ள இரட்டை-குழாய் சுரங்கப்பாதையைக் கொண்டுள்ளது.
ஸ்ரீ அஞ்சலி சமரோஹ் கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், கார்கில் வெற்றி தினத்தின் 25-வது ஆண்டுக்கு சாட்சியாக லடாக் பகுதி திகழ்கிறது என்று கூறினார். "கார்கில் வெற்றி தினம் நாட்டிற்காக செய்யப்பட்ட தியாகங்கள் அழியாதவை என்பதை நமக்கு நினைவூட்டுகிறது" என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார். மாதங்கள், ஆண்டுகள், தசாப்தங்கள் மற்றும் நூற்றாண்டுகள் கடந்துவிட்டாலும், நாட்டின் எல்லைகளைப் பாதுகாப்பதற்காக அர்ப்பணிக்கப்பட்ட உயிர்கள் பற்றிய நினைவுகளை அழிக்க முடியாது என்பதை பிரதமர் அடிக்கோடிட்டுக் காட்டினார். "நமது ஆயுதப்படைகளின் வலிமைமிக்க வீரர்களுக்கு தேசம் என்றென்றும் நன்றிக் கடன்பட்டுள்ளது" என்று பிரதமர் மோடி கூறினார்.
கார்கில் போர் நாட்களை நினைவு கூர்ந்த பிரதமர், அந்தக் காலத்தில் வீரர்களுடன் இருந்தது தமது அதிர்ஷ்டம் என்று கூறினார். இவ்வளவு உயரத்தில் நமது வீரர்கள் எவ்வாறு கடினமான பணியை மேற்கொண்டார்கள் என்பதை இன்னும் நினைவில் வைத்திருப்பதாக அவர் கூறினார். "தாய்நாட்டைப் பாதுகாக்க மிக உயர்ந்த தியாகம் செய்த நாட்டின் துணிச்சலான புதல்வர்களுக்கு நான் வணக்கம் செலுத்துகிறேன்" என்று திரு மோடி கூறினார்.
"கார்கிலில், நாம் போரை வென்றதுடன் மட்டுமல்லாமல், 'உண்மை, கட்டுப்பாடு, வலிமை' ஆகியவற்றின் வியப்பூட்டும் உதாரணத்தை நாம் முன்வைத்தோம்" என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார். அமைதியை நிலைநாட்ட இந்தியா அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வரும் நேரத்தில் பாகிஸ்தானின் வஞ்சகத்தை பிரதமர் சுட்டிக்காட்டினார். "பொய்யும் பயங்கரவாதமும் உண்மையால் மண்டியிட வைக்கப்பட்டன" என்று அவர் மேலும் கூறினார்.
பயங்கரவாதத்திற்கு கண்டனம் தெரிவித்த பிரதமர், பாகிஸ்தான் எப்போதுமே கடந்த காலங்களில் தோல்வியைச் சந்தித்துள்ளது என்றார். பாகிஸ்தான் தனது கடந்த காலத்திலிருந்து எதையும் கற்றுக்கொள்ளவில்லை. பயங்கரவாதம் மற்றும் மறைமுக போர்கள் என்ற போர்வையில் தொடர்ந்து போர் நடத்தி வருகிறது" என்று திரு மோடி கூறினார். பயங்கரவாதிகளின் தீய நோக்கங்கள் ஒருபோதும் நிறைவேறாது என்று பிரதமர் உறுதிபடக் கூறினார். "நமது துணிச்சலான வீரர்கள் அனைத்து பயங்கரவாத முயற்சிகளையும் காலில் போட்டு மிதிப்பார்கள்" என்று அவர் கூறினார்.
“லடாக் அல்லது ஜம்மு காஷ்மீர் என வளர்ச்சியின் பாதையில் வரும் அனைத்து சவால்களையும் இந்தியா முறியடிக்கும்" என்று பிரதமர் மீண்டும் உறுதிபடத் தெரிவித்தார். இன்னும் சில நாட்களில் 370-வது சட்டப்பிரிவை ரத்து செய்த தினமான ஆகஸ்ட் 5-ம் தேதி வரவுள்ளது. இந்தச் சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டதன் 5 ஆண்டுகள் அப்போது நிறைவடையும் என்றும், இன்றைய ஜம்மு-காஷ்மீர் கனவுகள் நிறைந்த புதிய எதிர்காலத்தைப் பற்றி பேசுகிறது என்றும் அவர் நினைவுபடுத்தினார். முன்னேற்றத்திற்கான உதாரணங்களை எடுத்துரைத்த பிரதமர், யூனியன் பிரதேசத்தில் ஜி20 கூட்டங்களை நடத்துவது, உள்கட்டமைப்பு மேம்பாடு, சுற்றுலாவில் அரசு கவனம் செலுத்துவது, திரையரங்குகள் திறப்பு, 35 ஆண்டுகளுக்குப் பிறகு டாசியா ஊர்வலம் தொடங்கப்படுவது ஆகியவற்றைக் குறிப்பிட்டார். "பூமியின் இந்த சொர்க்கம் அமைதி மற்றும் வளத்தை நோக்கி வேகமாக நகர்ந்து வருகிறது" என்று பிரதமர் மேலும் கூறினார்.
லடாக்கில் நடைபெற்று வரும் முன்னேற்றங்களை அடிக்கோடிட்டுக் காட்டிய பிரதமர், ஷின்குன் லா சுரங்கப்பாதை மூலம், யூனியன் பிரதேசம் ஆண்டு முழுவதும், ஒவ்வொரு பருவத்திலும் நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்கப்படும் என்றார். இந்தச் சுரங்கப்பாதை லடாக்கின் வளர்ச்சி மற்றும் சிறந்த எதிர்காலத்திற்கான புதிய வாய்ப்புகளுக்கான கதவுகளைத் திறக்கும். லடாக் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர், இந்தச் சுரங்கப்பாதை அவர்களின் வாழ்க்கையை மேலும் எளிதாக்கும் என்றும், இப்பகுதியின் மோசமான வானிலை காரணமாக அவர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு கஷ்டங்கள் தளர்த்தப்படும் என்றும் கூறினார்.
லடாக் மக்களுக்கான அரசின் முன்னுரிமைகளை எடுத்துரைத்த பிரதமர், கோவிட் -19 பெருந்தொற்றின் போது ஈரானில் இருந்து கார்கில் பிராந்தியத்திலிருந்து குடிமக்களை பாதுகாப்பாக வெளியேற்ற தனிப்பட்ட முறையில் முயற்சிகள் மேற்கொண்டதைச் சுட்டிக்காட்டினார். ஜெய்சால்மரில் ஒரு தனிமைப்படுத்தப்பட்ட மண்டலம் நிறுவப்பட்டதை அவர் நினைவு கூர்ந்தார். அங்கு அவர்கள் லடாக்கிற்கு அனுப்பப்படுவதற்கு முன்பு பரிசோதிக்கப்பட்டனர். வாழ்க்கையை எளிதாக்குவதற்கும், லடாக் மக்களுக்கு அதிக சேவைகளை வழங்குவதற்கும் அரசின் முயற்சிகளை சுட்டிக்காட்டிய பிரதமர், கடந்த 5 ஆண்டுகளில் பட்ஜெட்டில் சுமார் ஆறு மடங்கு அதிகரித்து ரூ.1100 கோடியிலிருந்து ரூ.6000 கோடியாக உயர்த்தப்பட்டதாக குறிப்பிட்டார். "சாலைகள், மின்சாரம், தண்ணீர், கல்வி, மின்சார விநியோகம், வேலைவாய்ப்பு, லடாக்கின் ஒவ்வொரு திசையும் மாறுகிறது" என்று பிரதமர் மோடி கூறினார், முதல் முறையாக முழுமையான திட்டமிடலின் பயன்பாட்டை அவர் எடுத்துரைத்தார். ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ் லடாக் வீடுகளில் 90 சதவீதத்திற்கும் அதிகமான குடிநீர் பாதுகாப்பு, லடாக் இளைஞர்களுக்கு தரமான உயர் கல்விக்கான வரவிருக்கும் சிந்து மத்திய பல்கலைக்கழகம், முழு லடாக் பிராந்தியத்திலும் 4ஜி நெட்வொர்க்கை நிறுவுவதற்கான பணிகள் தேசிய நெடுஞ்சாலை ஒன்றில் அனைத்து பருவநிலைக்கும் ஏற்ற 13 கிலோமீட்டர் நீளமுள்ள ஜோஜிலா சுரங்கப்பாதைக்கான பணிகள் நடந்து வருவதை அவர் விளக்கினார்.
எல்லைப் பகுதிகளுக்கான லட்சிய இலக்குகள் பற்றி குறிப்பிட்ட பிரதமர், எல்லைச் சாலை அமைப்பு (பி.ஆர்.ஓ) சேலா சுரங்கப்பாதை உட்பட 330-க்கும் மேற்பட்ட திட்டங்களை நிறைவு செய்துள்ளது என்றும், இது புதிய இந்தியாவின் திறன்கள் மற்றும் திசையை வெளிப்படுத்துகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
ராணுவ தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய பிரதமர், மாறிவரும் உலக சூழ்நிலைகளில், நமது பாதுகாப்புப் படைக்கு நவீன பாணி வேலை ஏற்பாடுகளுடன் சமீபத்திய ஆயுதங்கள், உபகரணங்கள் ஆகியவை தேவைப்படுகின்றன என்றார். கடந்த காலங்களிலும் பாதுகாப்புத் துறையை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை உணர்ந்ததாக திரு மோடி கூறினார், ஆனால் துரதிர்ஷ்டவசமாக, இப்பிரச்சினைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்றார். இருப்பினும், கடந்த 10 ஆண்டுகளில், பாதுகாப்பு சீர்திருத்தங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது, இது நமது படைகளை அதிகத் திறன் மற்றும் தன்னம்பிக்கை கொண்டவர்களாக ஆக்குகிறது" என்று அவர் மேலும் கூறினார். இன்று பாதுகாப்பு கொள்முதலில் பெரும் பங்கு இந்திய பாதுகாப்பு தொழில்துறைக்கு வழங்கப்படுவதாக கூறிய திரு மோடி, பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி மேம்பாட்டு பட்ஜெட்டில் தனியார் துறைக்கு 25 சதவீதம் ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார். இந்த முயற்சிகளின் விளைவாக, இந்தியாவின் பாதுகாப்பு உற்பத்தி ரூ. 1.5 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது. ஆயுதங்களை இறக்குமதி செய்யும் நாடு என்று கடந்த காலத்தில் கருதப்பட்ட ஒரு நாடு என்ற அதன் கடந்த கால பிம்பத்திற்கு மாறாக, இன்று இந்தியா ஆயுத ஏற்றுமதியாளராகவும் தனது முத்திரையை பதித்து வருகிறது என்று பிரதமர் மேலும் கூறினார். 5000-க்கும் மேற்பட்ட ஆயுதங்கள், ராணுவ தளவாடங்களை இறக்குமதி செய்வதை நிறுத்த நமது படை முடிவு செய்திருப்பது குறித்து திரு மோடி மகிழ்ச்சி தெரிவித்தார்.
பாதுகாப்புத் துறையில் சீர்திருத்தங்களுக்காக பாதுகாப்புப் படைகளைப் பாராட்டிய பிரதமர், அக்னிபாத் திட்டம் முக்கியமான சீர்திருத்தங்களில் ஒன்று என்று விளக்கினார். இந்தியாவின் கவனம் செலுத்தும் சராசரி வயது உலக சராசரியை விட அதிகமாக இருப்பது குறித்து நீண்டகாலமாக நிலுவையில் உள்ள கவலையை குறிப்பிட்ட பிரதமர், அக்னிபாத் திட்டத்தின் மூலம் தற்போது தீர்க்கப்படும் இந்த முக்கியமான கவலையை சமாளிக்க கடந்த காலத்தில் மன உறுதி இல்லை என்று கூறினார். "அக்னிபாத்தின் நோக்கம் படைகளை இளமையாகவும், தொடர்ந்து போருக்குத் தயாராகவும் வைத்திருப்பது" என்று கூறிய பிரதமர், இந்த உணர்வுபூர்வமான விஷயத்தை அப்பட்டமாக அரசியலாக்குவது குறித்து வருத்தம் தெரிவித்தார். கடந்த கால மோசடிகள், விமானப்படை கடற்படையை நவீனமயமாக்குவதில் கடந்த கால விருப்பமின்மை ஆகியவற்றை அவர் விமர்சித்தார். உண்மை என்னவென்றால், அக்னிபாத் திட்டம் நாட்டின் வலிமையை அதிகரிக்கும், மேலும் நாட்டில் திறமையான இளைஞர்களும் கிடைப்பார்கள். தனியார் துறை, துணை ராணுவப் படைகளிலும் அக்னி வீரர்களுக்கு முன்னுரிமை அளிக்க அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன" என்று அவர் கூறினார்.
அக்னிபாத் திட்டத்தின் பின்னணியில் ஓய்வூதியச் சுமையை மிச்சப்படுத்தும் நோக்கம் முக்கிய காரணம் என்ற பிரச்சாரத்தை நிராகரித்த பிரதமர், இன்று ஆட்சேர்ப்பு செய்யப்படும் வீரர்களின் ஓய்வூதியச் சுமை 30 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் என்பதை நினைவூட்டினார். "ஆயுதப்படையினர் எடுத்த இந்த முடிவை நாங்கள் மதிக்கிறோம், ஏனென்றால் எங்களுக்கு அரசியலை விட நாட்டின் பாதுகாப்பு முக்கியமானது" என்று அவர் தெரிவித்தார்.
இன்று நாட்டின் இளைஞர்களை தவறாக வழிநடத்துபவர்களுக்கு கடந்த காலங்களில் ஆயுதப்படையினர் மீது எந்த அக்கறையும் இல்லை என்று பிரதமர் சுட்டிக்காட்டினார். ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் குறித்து முந்தைய அரசுகள் அளித்த பொய்யான வாக்குறுதிகளை நினைவுகூர்ந்த பிரதமர், முன்னாள் படைவீரர்களுக்கு ரூ.1.25 லட்சம் கோடிக்கு மேல் வழங்கப்பட்ட திட்டத்தை தற்போதைய அரசுதான் அமல்படுத்தியது என்பதைச் சுட்டிக்காட்டினார். கடந்த அரசாங்கங்களின் புறக்கணிப்பை சுட்டிக்காட்டிய அவர், "சுதந்திரம் அடைந்து 7 தசாப்தங்களுக்குப் பிறகும் தியாகிகளுக்கு போர் நினைவுச்சின்னத்தை கட்டாதவர்கள், எல்லையில் நிறுத்தப்பட்டுள்ள நமது வீரர்களுக்கு போதுமான குண்டு துளைக்காத ஜாக்கெட்டுகளை வழங்காதவர்கள், கார்கில் வெற்றி தினத்தை புறக்கணித்தவர்கள் இவர்கள்" என்று கூறினார்.
"கார்கில் போரின் வெற்றி எந்த ஒரு அரசுக்கோ, எந்தவொரு கட்சிக்கோ கிடைத்த வெற்றி அல்ல. இந்த வெற்றி நாட்டுக்கு சொந்தமானது. இந்த வெற்றி நாட்டின் பாரம்பரியம். இது நாட்டின் பெருமை மற்றும் சுயமரியாதைக்கான திருவிழா” என்று கூறி தமது உரையை பிரதமர் நிறைவு செய்தார். துணிச்சலான வீரர்களுக்கு ஒட்டுமொத்த நாட்டின் சார்பிலும் வணக்கம் செலுத்திய அவர், கார்கில் வெற்றியின் 25 ஆண்டுகளுக்காக நாட்டுமக்கள் அனைவருக்கும் தமது நல்வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
லடாக் துணைநிலை ஆளுநர் பிரிகேடியர் (டாக்டர்) பி.டி.சர்மா, மத்திய பாதுகாப்புத் துறை இணையமைச்சர் திரு சஞ்சய் சேத், பாதுகாப்புப் படைகளின் தலைவர் ஜெனரல் அனில் சவுகான், முப்படைகளின் தளபதிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
பின்னணி
ஷின்குன் லா சுரங்கப்பாதை திட்டம் 4.1 கி.மீ நீளமுள்ள இரட்டை-குழாய் சுரங்கப்பாதையைக் கொண்டுள்ளது, இது லேவுக்கு அனைத்து பருவ காலத்திலும் இணைப்பையும் வழங்குவதற்காக நிமு - படும் - தர்ச்சா சாலையில் சுமார் 15,800 அடி உயரத்தில் கட்டப்படும். இந்த சுரங்கப்பாதை கட்டி முடிக்கப்பட்டால், இது உலகின் மிக உயரமான சுரங்கப்பாதையாக இருக்கும். ஷின்குன் லா சுரங்கப்பாதை நமது ஆயுதப் படைகள், தளவாடங்களின் விரைவான, திறமையான போக்குவரத்து இயக்கத்தை உறுதி செய்வது மட்டுமல்லாமல், லடாக்கில் பொருளாதார, சமூக வளர்ச்சியையும் ஊக்குவிக்கும்.
***
(Release ID: 2037288)
PKV/KV/KR
(Release ID: 2037485)
Visitor Counter : 63
Read this release in:
Odia
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Hindi_MP
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam