சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

புற்றுநோய்க்கான 3 முக்கிய மருந்துகளுக்கு சுங்க வரியிலிருந்து விலக்கு

Posted On: 24 JUL 2024 9:24AM by PIB Chennai

மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்டில், டிராஸ்டுஜுமாப் டெரக்ஸ்டெக்கான், ஒசிமெர்டினிப், துர்வாலுமாப் ஆகிய மூன்று முக்கிய புற்றுநோய் மருந்துகளுக்கு சுங்க வரியிலிருந்து விலக்கு அளிப்பதாக அறிவித்தார்.

 

நாட்டில் 27 லட்சம் புற்றுநோயாளிகள் இருப்பதைக் கருத்தில் கொண்டு இந்தக் கோரிக்கையை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் நிதி அமைச்சகத்துக்கு அனுப்பியது. இந்தக் கோரிக்கையை ஏற்று இந்த மருந்துகளுக்கு சுங்க வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

 

இந்த 3 மருந்துகளும் வெவ்வேறு வகையான புற்றுநோய்களுக்கு பயன்படுத்தப்படுகின்றன.

  1. டிராஸ்டுஜுமாப் டெரக்ஸ்டெக்கான் - மார்பக புற்றுநோய்
  2. ஒசிமெர்டினிப் - நுரையீரல் புற்றுநோய்;
  3. துர்வாலுமாப் - நுரையீரல் புற்றுநோய், பித்தநீர் பாதை புற்றுநோய்

 

எக்ஸ்ரே குழாய்கள், பிளாட் பேனல் டிடெக்டர்களுக்கான சுங்க வரி விகிதங்களையும் மத்திய நிதியமைச்சர் மாற்றியமைத்துள்ளார். இந்த திருத்தப்பட்ட விகிதங்கள் குறைந்த செலவில் பாகங்கள் கிடைப்பதை மேம்படுத்துவதன் மூலம் எக்ஸ்ரே இயந்திரத் தொழிலில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாற்றம் உள்நாட்டு மருத்துவ சாதனத் துறையை ஊக்குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

தேசிய சுகாதார இயக்கத்திற்கு, இந்தப் பட்ஜெட்டில் ரூ.4000 கோடி அதிகரித்து, ரூ.36,000 கோடியாக ஒதுக்கப்பட்டுள்ளது. தேசிய சுகாதார இயக்கம் மத்திய நிதியுதவி பெறும் திட்டமாகும். இது நாட்டில் முதன்மை, இரண்டாம் நிலை சுகாதார சேவைகளை வழங்குகிறது. பொதுமக்கள் தங்கள் கையிலிருந்து செலவிடுவதைக் குறைப்பதே அரசின் நோக்கமாகும்.

 

மேலும், 2024-25 மத்திய பட்ஜெட்டில், தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களில் 100 வாராந்திர "ஹாட்ஸ்" அல்லது தெரு உணவு மையங்களை உருவாக்கவும் முன்மொழிவு செய்யப்பட்டுள்ளது. இந்த முயற்சி உள்ளூர் பொருளாதாரங்களை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பை காணவும் - https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2036143

 

***

(Release ID: 2036143)
PKV/RR/KR



(Release ID: 2036182) Visitor Counter : 26