நிதி அமைச்சகம்

உலகளாவிய பிரச்சனைகளுக்கு இடையிலும் இந்தியாவின் வங்கி மற்றும் நிதித்துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது

Posted On: 22 JUL 2024 3:15PM by PIB Chennai

தொடர்ச்சியான புவி அரசியல் சவால்களுக்கு இடையிலும், இந்தியப்  பொருளாதாரத்தின் நிதி மற்றும் வங்கித் துறைகள்  வலுவான செயல்பாட்டைக் கொண்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று அவர் தாக்கல் செய்த பொருளாதார ஆய்வறிக்கையில், வங்கிகளின் வாராக் கடன், பெருமளவு குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதத்திற்கேற்ப சந்தை மூலதன மயமாக்கலில், இந்தியா, தற்போது உலக அளவில் 5-வது இடத்தில் உள்ளது. தொடக்கநிலை வசதிகளுக்கான முதலீடு 2024-ம் ஆண்டில் ரூ.10.9 லட்சம் கோடி அளவிற்கு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நிதிக் கொள்கை

ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை குழு, ரெஃபோ வட்டி விகிதத்தை 2024-ம் நிதியாண்டில் 6.5 சதவீதமாகவே  பின்பற்றியது.

வங்கிக் கடன்

சேவைத் துறைகள் மற்றும் தனிநபர் கடன்களைப் பொருத்தவரை, கடன்  வளர்ச்சி விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் வழங்கும் கடன்கள் அதிகரிக்கப்பட்டதால் 2024-ம் ஆண்டு மார்ச் இறுதியில் கடன் வழங்கும் விகிதம் 15 சதவீத வளர்ச்சியை எட்டியது.

வேளாண் கடன்கள் 1.5 மடங்கு அதிகரிக்கப்பட்டு  2024-ம் நிதியாண்டில் ரூ.20.7 லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ளது.  கிசான்  கடன் அட்டைகள் 2023-ம் ஆண்டு இறுதிவரை 7.4 கோடி பேருக்கு  வழங்கப்பட்டு விவசாயிகளுக்கு தடையின்றி உரிய நேரத்தில் கடனுதவி வழங்கப்படுகிறது.

வங்கித்துறை

கடன் வாங்குவோரை தேர்வு செய்யும் நடைமுறை மேம்பாடு, மேலும் திறமையான முறையில் கடன் வசூல் செய்தல் மற்றும் கடன் விழிப்புணர்வு நடவடிக்கைகள் அதிகரிகப்பட்டதன் காரணமாக வங்கிகளில் கடன் தர மேலாண்மை கணிசமான அளவுக்கு மேம்பட்டுள்ளது. வர்த்தக வங்கிகளின் வாராக் கடன், கடந்த 12 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெகுவாகக் குறைந்து 2024 மார்ச் இறுதியில் 2.8 சதவீதமாக  உள்ளது.  

காப்பீடு

வரும் காலங்களில் இந்தியாவின் காப்பீட்டு சந்தை, மிக விரைவாக வளர்ந்து வரும் சந்தைகளில் ஒன்றாக உருவெடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆயுஷ்மான் பாரத், பிரதமரின் மக்கள் ஆரோக்கியாத் திட்டத்தின் கீழ் இந்தியா முழுவதும் 34.2 கோடி ஆயுஷ்மான் அட்டைகள் உருவாக்கப்பட்டுள்ளது, இதில் 49.3 சதவீதத்தினர் பெண்கள் ஆவர். 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்   https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2034950

***

SMB/MM/KPG/DL



(Release ID: 2035381) Visitor Counter : 8


Read this release in: English , Urdu , Hindi , Gujarati