நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav g20-india-2023

பருவநிலை மாற்றம் குறித்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் இந்தியா முன்னோடி நாடாக திகழ்கிறது

Posted On: 22 JUL 2024 2:21PM by PIB Chennai

உலகில் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் ஒன்றாக இந்தியா உருவெடுத்துள்ள போதிலும், பருவநிலை மாற்றம் குறித்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் இந்தியா முன்னோடி நாடாக திகழ்கிறது என்று மத்திய நிதி பெருநிறுவன  விவகாரங்கள் துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த பொருளாதார ஆய்வறிக்கை 2023-24 கூறுகிறது.

2 டிகிரி சென்டிகிரேட் வெப்பமயமாதல் பிரச்சினையில் சர்வதேச நிதிக் கழகத்தின் ஆய்வறிக்கைக்கு ஏற்ப ஜி 20 நாடுகளில் இந்தியா மட்டுமே தனித்துவமாக திகழ்கிறது என்பதை ஆய்வறிக்கை எடுத்துக்காட்டுகிறது. பருவநிலை மாற்றத்தின் தாக்கத்தை நிர்வகிப்பதும், வளர்ச்சி முன்னுரிமைகளில் தேவையான கவனம் செலுத்துவதும் இந்தியாவின் வளர்ச்சி உத்தியின் தனிச்சிறப்பு என்று ஆய்வில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பருவநிலை நடவடிக்கையில் இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளது. இந்தியாவின் வருடாந்தர தனிநபர் கார்பன் உமிழ்வு உலகளாவிய சராசரியில் மூன்றில் ஒரு பங்காக மட்டுமே உள்ளது என்று ஆய்வறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

இந்தியா அளித்த உறுதிமொழிகளில் பெரும்பாலான இலக்குகளை இந்தியா முன்கூட்டியே எட்டியுள்ளது. 2030-ம் ஆண்டில் இலக்குக்கு மாறாக, ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னதாக, 2021-ம் ஆண்டே புதைபடிம எரிபொருள் அல்லாத எரிசக்தி மூலங்களிலிருந்து 40 சதவீத ஒட்டுமொத்த மின் சக்தி நிறுவு திறனை நாடு அடைந்தது.

நிறுவப்பட்ட மின்சார உற்பத்தி திறனில் புதைபடிமம் அல்லாத ஆதாரங்களின் பங்கு ஏப்ரல் 2014-ல் 32 சதவீதமாக இருந்தது, 2024-ம் ஆண்டு மே 31-ம் தேதி நிலவரப்படி, 45.4 சதவீதத்தை எட்டியுள்ளது.

வளர்ந்து வரும் பொருளாதாரத்தின் வளர்ச்சி முன்னுரிமைகளைப் பூர்த்தி  செய்ய 2047 ஆம் ஆண்டில் இந்தியாவின் எரிசக்தி தேவை 2 முதல் 2.5 மடங்கு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வளங்கள் குறிப்பிட்ட அளவே இருக்கும் என்பதைக் கருத்தில் கொண்டு, ஆற்றல் மாற்றத்தின் வேகம், நீடித்த, சமூக, பொருளாதார வளர்ச்சிக்கு காரணியாக இருக்க வேண்டும் என்று ஆய்வறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

பருவநிலை மாற்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் சர்வதேச முயற்சிகளில் இந்தியா முன்னிலை வகிக்கிறது. சர்வதேச சூரியசக்தி கூட்டணி, ஒரே உலகம், ஒரே சூரியன், ஒரே தொகுப்பு, பேரழிவு நெகிழ்திறன் உள்கட்டமைப்புக்கான கூட்டணி, நெகிழ்திறன் தீவு நாடுகளுக்கான உள்கட்டமைப்பு, தொழில்துறை மாற்றத்திற்கான தலைமைக் குழு ஆகியவை இத்தகைய சில முக்கியமான எடுத்துக்காட்டுகளாகும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2034915

******

SMB/PKV/KV/DL



(Release ID: 2035221) Visitor Counter : 58