நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சகம்

நாடாளுமன்ற அனைத்து கட்சித் தலைவர்களுடன் அரசு ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது

Posted On: 21 JUL 2024 5:06PM by PIB Chennai

நாடாளுமன்றம் சுமூகமாக நடைபெற அனைத்து அரசியல் கட்சிகளிடமிருந்தும் ஒத்துழைப்பு கோரப்படுகிறது: திரு. கிரண் ரிஜிஜு, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர்

நாடாளுமன்றத்தின் புனிதம் எப்போதும் பேணப்பட வேண்டும்: பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங்

2024 நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை தொடங்குவதற்கு முன்னதாகபாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் தலைமையில் இன்று அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களுடனான அரசின் கூட்டம் நடைபெற்றது.

18-வது மக்களவை அமைக்கப்பட்ட பிறகு நடைபெறும் இந்தக் கூட்டத்திற்கு கட்சிகளின் தலைவர்கள்  அனைவரையும் அமைச்சர் வரவேற்றார். மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் திரு கிரண் ரிஜிஜு தமது தொடக்க உரையில், நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் 2024 ஜூலை 22 திங்கட்கிழமை தொடங்கும் என்றும், அரசு அலுவல்களுக்கு உட்பட்டு, கூட்டத்தொடர் ஆகஸ்ட் 12, 2024 திங்கட்கிழமை முடிவடையும் என்றும் தெரிவித்தார். இந்த கூட்டத்தொடரில் 22 நாட்கள் 16 அமர்வுகள் நடைபெறும். இந்த அமர்வு முக்கியமாக 2024-25 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் தொடர்பான நிதி கோரிக்கைகளுக்கு  அர்ப்பணிக்கப்படும் என்றும், இது 2024 ஜூலை 23 செவ்வாய்க்கிழமை மக்களவையில் தாக்கல் செய்யப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். இருப்பினும், அத்தியாவசியமான பிற அலுவல்களும் கூட்டத்தொடரின் போது எடுத்துக் கொள்ளப்படும். இந்திய பொருளாதார ஆய்வறிக்கை 2024 ஜூலை 22 திங்கட்கிழமை நாடாளுமன்ற அவைகளின் முன் வைக்கப்படும். 2024 ஆம் ஆண்டுக்கான ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்திற்கான பட்ஜெட்டும் 2024 ஜூலை 23 அன்று தாக்கல் செய்யப்படும். உத்தேசமாக, 6 சட்ட அலுவல்களும், 3 நிதி அலுவல்களும் இந்தக் கூட்டத்தொடரில் எடுத்துக் கொள்ளப்படுவதற்காக அடையாளம் காணப்பட்டுள்ளன என்று அவர் தெரிவித்தார்.

நடைமுறை விதிகள் மற்றும் அலுவல் நடத்தை விதிகளின் கீழ் சம்பந்தப்பட்ட தலைமை அலுவலர்களால் அனுமதிக்கப்பட்ட எந்தவொரு பிரச்சினையையும் இந்த அவையில் விவாதிக்க அரசு எப்போதும் தயாராக உள்ளது என்று அவர் கூறினார். நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் சுமூகமான செயல்பாட்டிற்கு அனைத்து கட்சித் தலைவர்களும் தீவிர ஒத்துழைப்பையும் ஆதரவையும் வழங்குமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

இந்தக் கூட்டத்தில் மாநிலங்களவை முன்னவரான, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலம், ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர்  திரு ஜகத் பிரகாஷ் நட்டாசட்டம் மற்றும் நீதித்துறை , நாடாளுமன்ற விவகாரத்துறை  இணை அமைச்சர் திரு அர்ஜுன் ராம் மேக்வால், நாடாளுமன்ற விவகாரங்கள், தகவல் ஒலிபரப்புத் துறை இணை அமைச்சர் டாக்டர் எல் முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தின் நிறைவாகப் பேசிய  பாதுகாப்புத் துறை  அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்ட முக்கிய பிரச்சினைகள் மீது கவனத்தை ஈர்த்ததற்காக அனைத்து தலைவர்களுக்கும் நன்றி தெரிவித்தார். நாடாளுமன்ற நடவடிக்கைகளின் போது அதன் புனிதத்தை நாம் பேண வேண்டும் என்றும் அவர் கூறினார். இந்தப் பிரச்சினைகள் அனைத்தின் மீதும் நாடாளுமன்றத்தின் அந்தந்த அவைகளின் விதிகள் மற்றும் சம்பந்தப்பட்ட வைகளின் தலைவர்களின் முடிவுகளுக்கு உட்பட்டு விவாதம் நடத்த அரசு தயாராக உள்ளது என்று அவர்தெரிவித்தார்.

மொத்தம் 41 அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 55 தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

18-வது மக்களவையின் 2-வது கூட்டத்தொடர் மற்றும் மாநிலங்களவையின் 265-வது கூட்டத்தொடரில் எடுத்துக் கொள்ளப்படவுள்ள மசோதாக்களின் பட்டியல்

 

I – சட்ட அலுவல்:-

1.    நிதி (எண் 2) மசோதா, 2024

2.    பேரிடர் மேலாண்மை (திருத்தம்) மசோதா, 2024

3.    கொதிகலன்கள் மசோதா, 2024

4.    பாரதிய வாயுயன் விதேயக், 2024

5.    காபி (ஊக்குவிப்பு மற்றும் மேம்பாடு) மசோதா, 2024

6.    ரப்பர் (ஊக்குவிப்பு மற்றும் மேம்பாடு) மசோதா, 2024

 

II – நிதி அலுவல் :-

1.    மத்திய பட்ஜெட், 2024-25 குறித்த பொது விவாதம்

2.    2024-25 ஆம் ஆண்டுக்கான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் மற்றும் வாக்கெடுப்பு. தொடர்புடைய ஒதுக்கீட்டு மசோதாவை அறிமுகப்படுத்துதல், பரிசீலித்தல் மற்றும் நிறைவேற்றுதல் / திருப்பி அனுப்புதல்.

3.    2024-25 நிதியாண்டுக்கான ஜம்மு & காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் மற்றும் வாக்கெடுப்பு. தொடர்புடைய ஒதுக்கீட்டு மசோதாவை அறிமுகப்படுத்துதல், பரிசீலித்தல் மற்றும் நிறைவேற்றுதல்/திருப்பி அனுப்புதல்.

***

PKV/DL



(Release ID: 2034800) Visitor Counter : 32