சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

2020-ம் ஆண்டில் அதிகப்படியான இறப்புகள் பற்றிய ஊடகச் செய்திக்கு மறுப்பு

Posted On: 20 JUL 2024 12:14PM by PIB Chennai

கோவிட் -19  பெருந்தொற்று காலத்தில்  2020 ஆம் ஆண்டில் இந்தியாவில் அதிக இறப்புகள் நடந்ததாக வெளியான செய்திக்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.

அறிவியல் முன்னேற்றங்கள் என்ற கல்வி இதழில் இன்று வெளியிடப்பட்ட ஒரு ஆய்வறிக்கையின் கண்டுபிடிப்புகளை சில ஊடகங்கள்  எடுத்துக்காட்டியுள்ளன. இவை ஏற்றுக்கொள்ள முடியாத, தவறான மதிப்பீடுகளை அடிப்படையாகக் கொண்டவையாகும் .

தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு -5-ஐ பகுப்பாய்வு செய்வதற்கான நிலையான முறையாகப் பின்பற்றுவதாக ஆசிரியர்கள் கூறினாலும், முறையியலில் முக்கியமான குறைபாடுகள் உள்ளன. 2021 ஜனவரி மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கு இடையில் குடும்ப சுகாதாரக்  கணக்கெடுப்பில் சேர்க்கப்பட்ட குடும்பங்களின் துணைக்குழுவை எடுத்து, 2020 ஆம் ஆண்டில் இந்த வீடுகளில் இறப்பு விகிதத்தை 2019 உடன் ஒப்பிட்டு, முடிவுகளை நாடு முழுமைக்கும்  விரிவுபடுத்தியுள்ளது மிக முக்கியமான குறைபாடாகும்.

14 மாநிலங்களின் ஒரு பகுதியிலிருந்து இந்த பகுப்பாய்வில் சேர்க்கப்பட்ட 23% குடும்பங்களை நாட்டின் பிரதிநிதித்துவம் கொண்டவையாக கருத முடியாது. மற்றொரு  முக்கியமான குறைபாடு கோவிட் -19 தொற்றுநோயின் உச்சத்தில், இந்த தரவு சேகரிக்கப்பட்டுள்ளது.

 

இந்தியா உள்ளிட்ட குறைந்த மற்றும் நடுத்தர வருமான நாடுகளில் முக்கியமான பதிவு முறை பலவீனமாக உள்ளது என்று கூறி இதுபோன்ற பகுப்பாய்வுகளின் தேவை குறித்து இந்த அறிக்கை தவறாக வாதிடுகிறது. இது சரியானதல்ல. இந்தியாவில் சிவில் பதிவு முறை மிகவும் வலுவானது.

இந்த அமைப்பின் தரவுகள், 2019 உடன் ஒப்பிடும்போது 2020 ஆம் ஆண்டில் இறப்பு பதிவு 4.74 லட்சம் அதிகரித்துள்ளது என்பதைக் காட்டுகிறது. முந்தைய ஆண்டுகளை விட 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் இறப்பு பதிவில் 4.86 லட்சம் மற்றும் 6.90 லட்சம் அதிகரித்துள்ளது.

ஒரு வருடத்தில் ஏற்பட்ட அனைத்து அதிகப்படியான இறப்புகளுக்கும் தொற்றுநோய் காரணமல்ல. பெருந்தொற்றின் போது அதிகப்படியான இறப்பு என்பது அனைத்து காரணங்களாலும் ஏற்படும் இறப்புகளின் அதிகரிப்பைக் குறிக்கிறது, மேலும் கோவிட் -19 ஆல் நேரடியாக ஏற்பட்ட இறப்புகளுடன் ஒப்பிட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆராய்ச்சியாளர்களால் வெளியிடப்பட்ட மதிப்பீடுகளின் தவறான தன்மை இந்தியாவின் மாதிரி பதிவு முறையின் தரவுகளால் மேலும் உறுதிப்படுத்தப்படுகிறது. நாட்டின் 36 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் 8842 மாதிரி அலகுகளில் உள்ள 24 லட்சம் வீடுகளில் உள்ள சுமார் 84 லட்சம் மக்கள் தொகையை மாதிரி பதிவு அமைப்பு உள்ளடக்கியது. வெளியிடப்பட்ட ஆய்வறிக்கையில் பல  முரண்பாடான மற்றும் விளக்க முடியாத முடிவுகள் அதன் கூற்றுக்கள் மீதான நம்பிக்கையை மேலும் குறைக்கின்றன.

முடிவில், இந்தியாவில் முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது 2020 ஆம் ஆண்டில் அனைத்து காரணங்களுக்கும் அதிகமான இறப்பு விகிதம் அறிவியல் முன்னேற்ற ஆய்வறிக்கையில் பதிவான 11.9 லட்சம் இறப்புகளை விட குறிப்பிடத்தக்க வகையில் குறைவாக உள்ளது. இன்று வெளியிடப்பட்ட ஆய்வறிக்கை முறையியல் ரீதியாக குறைபாடுடையது  என்பதுடன்  ஏற்றுக்கொள்ள முடியாத தவறான  முடிவுகளைக் காட்டுகிறது.

 

***

PKM/DL


(Release ID: 2034589) Visitor Counter : 134