விவசாயத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

எண்ணெய் பனை உற்பத்தி மற்றும் வேளாண்மை சார்ந்த பிற துறைகளில், இந்தியாவும், மலேசியாவும் ஒத்துழைப்பை அதிகரிக்க உள்ளன

Posted On: 18 JUL 2024 5:13PM by PIB Chennai

இந்தியா, மலேசியா ஆகிய இருநாடுகளும், வேளாண்மை துறையில் குறிப்பாக, எண்ணெய் பனை உற்பத்தி உள்ளிட்ட துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை அதிகரிக்க முடிவு செய்துள்ளன.  மத்திய வேளாண், உழவர் நலன், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌகான், மலேசியா நாட்டின் தோட்டப்பயிர்கள் துறை அமைச்சர் திரு டத்தோ ஸ்ரீ ஜொஹாரி அப்துல் கனியை சந்தித்த போது, இது குறித்து விவாதிக்கப்பட்டது.

2024 ஜூலை 16 முதல் 19 வரை இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மலேசிய அமைச்சர், புதுதில்லியில் உள்ள க்ரிஷி பவனில் மத்திய வேளாண்துறை அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌகானை இன்று (18.07.2024) சந்தித்து பேசினார். அப்போது இந்தியா மற்றும் மலேசியா இடையேயான வேளாண்துறை ஒத்துழைப்புகளை மேலும் வலுப்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

சமையல் எண்ணெய் - எண்ணெய் பனை உற்பத்திக்கான தேசிய இயக்கத்தில் ஒத்துழைப்பை மேற்கொள்ள, இருதரப்பும் விருப்பம் தெரிவித்ததுடன், வேளாண் மற்றும் அதனைச் சார்ந்த பொருட்களுக்கான சந்தை அணுகுதலில் உள்ள பிரச்சனைகள் குறித்தும், வேளாண் துறை ஒத்துழைப்பை, அமைப்பு ரீதியாக்குவது குறித்தும், தோட்டக்கலைத் துறையில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

மலேசிய அமைச்சர் இந்தியாவில் மேற்கொண்ட பயணம் வெற்றிகரமாக அமைந்ததற்கு நன்றி தெரிவித்த மத்திய வேளாண் அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌகான், வேளாண்மை மற்றும் பிற துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை தொடர விருப்பம் தெரிவித்தார்.

***

(Release ID:2034036)

MM/AG/DL


(Release ID: 2034061) Visitor Counter : 74