பிரதமர் அலுவலகம்
ரஷ்யாவில் இந்திய சமூகத்தினரிடையே பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
Posted On:
09 JUL 2024 2:25PM by PIB Chennai
வணக்கம்.
மூன்றாவது முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின், வெளிநாடுவாழ் இந்தியர்களுடனான எனது முதல் கலந்துரையாடல் இங்கே மாஸ்கோவில் நடைபெறுவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.
நண்பர்களே,
ஒரு மாதத்திற்கு முன், ஜூன் 9 அன்று, நான் தொடர்ந்து மூன்றாவது முறையாக இந்தியாவின் பிரதமராகப் பதவியேற்றேன், அந்த நாளில், நான் ஒரு உறுதிமொழியை அளித்தேன். எனது மூன்றாவது பதவிக்காலத்தில் மூன்று மடங்கு பலத்துடனும், மூன்று மடங்கு வேகத்துடனும் பணியாற்றுவேன் என்று சபதம் எடுத்தேன். எங்கள் அரசின் பல இலக்குகளில் மூன்றாவது எண் முக்கிய இடம் வகிக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தப் பதவிக்காலத்தில் இந்தியாவை உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாற்றுவது, ஏழைகளுக்கு மூன்று கோடி வீடுகளைக் கட்டுவது, மூன்று கோடி 'லட்சாதிபதி சகோதரிகளை' உருவாக்குவது ஆகியவை எங்கள் இலக்குகளில் அடங்கும். 2014-ஆம் ஆண்டில், சில நூறு புத்தொழில் நிறுவனங்கள் மட்டுமே இருந்தன; இன்று, லட்சக்கணக்கானவை உள்ளன. காப்புரிமை தாக்கலிலும், ஆராய்ச்சி வெளியீடுகளிலும் இந்தியா இப்போது சாதனைகளை முறியடித்துள்ளது
நண்பர்களே,
கடந்த பத்தாண்டுகளில் இந்தியா அடைந்துள்ள வளர்ச்சியின் வேகத்தைக் கண்டு உலகம் வியக்கிறது. இந்தியாவுக்கு வருகை தரும் பார்வையாளர்கள் நாட்டின் மாற்றத்தைப் பற்றி அடிக்கடி குறிப்பிடுகிறார்கள். ஜி-20 உச்சிமாநாடு போன்ற நிகழ்வுகளை இந்தியா வெற்றிகரமாக நடத்தும்போது, இந்தியாவின் பரிணாம வளர்ச்சியை உலகம் போற்றுகிறது. வெறும் பத்தாண்டுகளில் இந்தியாவின் விமான நிலையங்கள் விரைவாக இரட்டிப்பாக்கப்பட்டுள்ளன. 40,000 கிலோமீட்டருக்கும் அதிகமான ரயில் பாதை மின்மயமாகியுள்ளது. இது இந்தியாவின் திறன்களை மேலும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
இந்தியா உண்மையிலேயே மாறி வருகிறது என்பது அனைவருக்கும் தெளிவாகத் தெரிகிறது. உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உள்ள 140 கோடி குடிமக்களின் வலிமை மீதான இந்தியாவின் நம்பிக்கையால் இந்த மாற்றம் ஊக்கம் பெறுகிறது. நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு விவசாயி, இளைஞர், பின்தங்கிய தனிநபர் ஆகியோரின் விடாமுயற்சிகளில் மாற்றத்திற்கான இந்த உறுதிப்பாடு காணப்படுகிறது.
நண்பர்களே,
உலகளாவிய வளத்தை மேம்படுத்த இந்தியாவும் ரஷ்யாவும் நெருக்கமாக ஒத்துழைத்து வருவது குறித்து நான் மகிழ்ச்சி அடைகிறேன். இங்கு கூடியிருக்கும் நீங்கள் ஒவ்வொருவரும் நமது நாடுகளுக்கு இடையேயான உறவை புதிய உயரத்திற்குக் கொண்டு சென்று, உங்களது கடின உழைப்பாலும், நேர்மையாலும் ரஷ்ய சமுதாயத்திற்கு பங்களிக்கிறீர்கள்.
நண்பர்களே,
இந்தியா-ரஷ்யா இடையேயான நீடித்த நட்புறவை 20 ஆண்டுகளுக்கும் மேலாக வளர்த்து வந்ததற்காக எனது அருமை நண்பர் அதிபர் புடினின் தலைமையை நான் பாராட்ட வேண்டும். கடந்த 10 ஆண்டுகளில் நான் 6 முறை ரஷ்யாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளேன். இந்த ஆண்டுகளில் 17 முறை அதிபர் புடினை சந்தித்துள்ளேன். ஒவ்வொரு சந்திப்பும் எங்களின் பரஸ்பர நம்பிக்கையையும் மரியாதையையும் வலுப்படுத்தியுள்ளது. மோதல்களின் போது எங்களின் மாணவர்களைப் பாதுகாப்பாக இந்தியாவிடம் திருப்பி அனுப்ப அதிபர் உதவினார். இந்த ஆதரவுக்காக ரஷ்ய மக்களுக்கும், எனது நண்பர் அதிபர் புடினுக்கும் மீண்டும் ஒரு முறை எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கசானிலும், யெகாடெரின்பர்க்கிலும் இரண்டு புதிய துணைத் தூதரகங்களை நிறுவ முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை நமது நாடுகளுக்கு இடையே பயணத்தை எளிதாக்குவதோடு, வர்த்தக வாய்ப்புகளையும் மேம்படுத்தும்.
நண்பர்களே,
நமது விடாமுயற்சியால், ஒவ்வொரு இலக்கும் அடையப்படும். இந்த நம்பிக்கையுடன், உங்கள் அனைவருக்கும் எனது பாராட்டுகளை மீண்டும் ஒருமுறை தெரிவித்துக் கொள்கிறேன்.
நன்றி.
பொறுப்புத்துறப்பு: இது பிரதமர் உரையின் தோராயமான மொழிபெயர்ப்பு. பிரதமர் தமது உரையை இந்தியில் வழங்கியிருந்தார்.
***
(Release ID: 2031686)
SMB/BR/RR
(Release ID: 2033221)
Visitor Counter : 51
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Hindi_MP
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam