உள்துறை அமைச்சகம்
மத்தியப் பிரதேசத்தில் ரூ.486 கோடி செலவில் கட்டப்பட்ட பிரதமரின் சிறப்புக் கல்லூரிகளை மத்திய அமைச்சர் திரு அமித் ஷா திறந்து வைத்தார்
Posted On:
14 JUL 2024 8:14PM by PIB Chennai
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் இருந்து மாநிலத்தின் 55 மாவட்டங்களிலும் பிரதமரின் சிறப்புக் கல்லூரிகளை மத்திய உள்துறை அமைச்சரும், கூட்டுறவுத் துறை அமைச்சருமான திரு அமித் ஷா தொடங்கி வைத்தார். மத்தியப் பிரதேச முதலமைச்சர் டாக்டர் மோகன் யாதவ், மத்திய அமைச்சர் திருமதி சாவித்ரி தாக்கூர் உள்ளிட்ட பல பிரமுகர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
தொடக்க விழாவில் உரையாற்றிய திரு அமித் ஷா, 2047-ஆம் ஆண்டில் நமது 100-வது சுதந்திர ஆண்டை நிறைவு செய்யும் போது, உலகின் ஒவ்வொரு துறையிலும் இந்தியா முதலிடத்தில் இருக்க வேண்டும் என்ற தொலைநோக்கு இலக்கைப் பிரதமர் திரு நரேந்திர மோடி நிர்ணயித்துள்ளார் என்று கூறினார். கல்வியின் அடித்தளத்தை வலுப்படுத்தாமல் அதைச் செய்ய முடியாது என்றும், எனவே அவரது தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப, 2020-ஆம் ஆண்டில் புதிய கல்விக் கொள்கையைப் பிரதமர் அறிமுகப்படுத்தினார் என்றும் அவர் தெரிவித்தார். அடுத்த 25 ஆண்டுகளுக்கான நமது தேவைகளை மனதில் வைத்து புதிய கல்விக் கொள்கை கொண்டு வரப்பட்டுள்ளது என்று திரு ஷா கூறினார். புதிய கல்விக் கொள்கை, நமது மாணவர்கள் உலக அளவில் போட்டியிடுவதற்கும், அதே நேரத்தில் நமது பண்டைய கலாச்சாரத்துடன் மொழிகளுடன் இணைந்திருப்பதற்கும் சாதகமான சூழலை உருவாக்கும் என்றார் அவர்.
புதிய கல்விக் கொள்கையின் கீழ், நமது கல்வி முறை 21-ஆம் நூற்றாண்டின் உலகத் தரத்திற்கு இணையாக இருக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சர் கூறினார். புதிய கல்விமுறை, புத்தகங்களை மனப்பாடம் செய்வதை விட யோசனைகளை உருவாக்குவதற்கு முக்கியத்துவம் அளிக்கும் என்று அவர் மேலும் கூறினார். மாணவர்களுக்குப் பட்டம் வழங்குவதை விடுத்து அவர்களின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார். இளைஞர்கள் தங்களுக்கான இலக்குகளை நிர்ணயிப்பதன் முக்கியத்துவத்தைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்தார். கடின உழைப்புக்கு மாற்று இல்லை என்றும், நமது நாட்டின் இளைஞர்கள் தங்களுக்கென ஓர் இலக்கை நிர்ணயித்துக் கொண்டு, அதை அடைய கடுமையாக உழைக்க வேண்டிய நேரம் இது என்றும் அவர் மாணவர்களிடம் கூறினார்.
புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள 55 சிறப்புக் கல்லூரிகள், உயிரி தொழில்நுட்பம், கணினி அறிவியல், கலாச்சாரம், கலை போன்ற பல்வேறு பாடங்களில் மாணவர்கள் தங்கள் ஆர்வத்திற்கு ஏற்ப படிக்கும் வாய்ப்பை வழங்கும் என்று திரு அமித் ஷா கூறினார். பி.எட்., பி.எஸ்.சி வேளாண்மை போன்ற படிப்புகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன என்றும், பி.எஸ்.சி வேளாண்மை போன்ற படிப்பு இளைஞர்களை விவசாயத்துடன் இணைப்பதுடன், சுய தொழிலுக்கான பல புதிய வாய்ப்புகளையும் உருவாக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.
***
(Release ID: 2033172)
SMB/RS/BR/RR
(Release ID: 2033219)
Visitor Counter : 67