குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

இணையதள குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக சட்ட உதவிகள் வழங்கப்பட வேண்டியது அவசியம்: குடியரசுத் துணைத் தலைவர் திரு ஜக்தீப் தன்கர்

Posted On: 13 JUL 2024 8:01PM by PIB Chennai

இணைய தளக் குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, குறிப்பாக ஊரகப் பகுதிகளில் உள்ளவர்களுக்கு உடனடியாக சட்ட உதவி வழங்க வேண்டியதன் அவசியத்தை குடியரசுத் துணைத் தலைவர் திரு ஜக்தீப் தன்கர் வலியுறுத்தியுள்ளார்.  புதுதில்லி விஞ்ஞான் பவனில் நடைபெற்ற உலகளாவிய பயங்கரவாத எதிர்ப்பு கவுன்சில் (ஜிசிடிசி) ஏற்பாடு செய்திருந்த 3-வது இணையதளப் பாதுகாப்பு மாநாட்டில் சிறப்பு விருந்தினராக குடியரசுத் துணைத் தலைவர் திரு ஜக்தீப் தன்கர் பங்கேற்று நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்தார்.

 நிறைவு அமர்வில்  உரையாற்றிய குடியரசுத் துணைத் தலைவர், நாட்டின் தொலைதூர மூலையிலும் தகவல் பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்ட வேண்டியதன் முக்கியத்துவத்தை சுட்டிக் காட்டினார். இந்தியா 820 மில்லியனுக்கும் அதிகமான இணையதள பயன்பாட்டாளர்களைக் கொண்டுள்ளது என்று அவர் கூறினார். 2023-ம் ஆண்டில் உலகளாவிய டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் 50 சதவீதம் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

தொழில்நுட்பத்தின் மூலம் சேவைகள் வழங்குவதில் இந்தியாவின் சாதனைகளைப் பாராட்டிய குடியரசுத் துணைத் தலைவர், சிறு கிராமங்கள் வரை இந்தியாவில் தொழில்நுட்பம் பெரிய அளவில் பயன்படுத்தப்படுவது குறித்து உலகம் ஆச்சரியம் அடைந்துள்ளது என்றார். 

நவீன தொழில்நுட்பங்களின் அளப்பரிய ஆற்றலால்  பொருளாதாரம், வர்த்தகம், தனிநபர் உற்பத்தித்திறன் ஆகியவை மேம்படுவதாக கூறினார்.  வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் சில சவால்களையும் கொண்டுள்ளன எனவும் அதை முறியடிக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.  

போர் என்பது எல்லைகளைக் கடந்து, நிலம், விண்வெளி, கடல் ஆகியவற்றைத் தாண்டி புதிய தொழில்நுட்ப தளங்களுக்கு விரிவடைந்துள்ளது என்று அவர் கூறினார். மென்மையான ராஜதந்திர அதிகாரம் ஒரு நாட்டின் தொழில்நுட்ப வலிமையில் உள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இந்தியாவின் டிஜிட்டல் பாதுகாப்பை வலுப்படுத்த அரசு மேற்கொண்டு வரும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை  திரு ஜக்தீப் தன்கர் விரிவாக எடுத்துரைத்தார்.  

ஜிசிடிசி-யின் ஆலோசகர் பேராசிரியர் வி.எம்.பன்சால், ஜிசிடிசி செயற்குழு உறுப்பினர்கள்,  பிற பிரமுகர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

*** 

PLM/KV


(Release ID: 2033143) Visitor Counter : 51