பிரதமர் அலுவலகம்

உதவி செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள 2022-ம் ஆண்டு தொகுப்பின் ஐஏஎஸ் பயிற்சி அதிகாரிகளுடன் பிரதமர் கலந்துரையாடினார்


சமூக நீதியை உறுதிசெய்யவும் பாகுபாட்டை தடுக்கவும் உதவுகின்ற செறிவான அணுகுமுறையுடன் பணியாற்ற அனைத்து அதிகாரிகளையும் பிரதமர் வலியுறுத்தினார்

சேவை வழங்குவதில் வேகத்தடைகளாக இருக்கப்போகிறீர்களா அல்லது அதிவேக நெடுஞ்சாலையாக இருக்கப்போகிறீர்களா என்பது உங்களின் தெரிவுதான்: பிரதமர்

தங்களின் கண்களுக்கு முன்னால் நிகழும் மாற்றங்களைக் காணும்போது கிரியா ஊக்கிகளாக இருக்கவும் திருப்தி அடையவும் வேண்டும் என்று அதிகாரிகளைப் பிரதமர் கேட்டுக்கொண்டார்

நோக்கம் தேசம் முதலில் என்பது தமது வாழ்க்கையின் நோக்கம் என்று கூறிய பிரதமர் இந்தப் பயணத்தில் தம்முடன் அனைத்து அதிகாரிகளும் இணைய வேண்டுமென்று கேட்டுக்கொண்டார்

நிர்வாகப் பிரமிடில் மேலிருந்து கீழ்வரை இளம் அதிகாரிகளுக்கு அனுபவக் கற்றலின் வாய்ப்பை வழங்குவது உதவிச் செயலாளர் நிகழ்வின் பின் உள்ள நோக்கமாகும்: பிரதமர்

Posted On: 11 JUL 2024 7:28PM by PIB Chennai

பல்வேறு  அமைச்சகங்கள், துறைகளின் உதவிச் செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள 2022-ம் ஆண்டு தொகுப்பைச் சேர்ந்த 181 ஐஏஎஸ் பயிற்சி அதிகாரிகளுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று புதுதில்லியில் உள்ள சுஷ்மா சுவராஜ் பவனில் கலந்துரையாடினார்.

இந்த கலந்துரையாடலின் போது, இவர்கள் பயிற்சி மேற்கொண்ட காலத்தின் அனுபவங்களை அதிகாரிகள் பகிர்ந்துகொண்டனர். 2022-ம் ஆண்டில் ஆராரம்ப் நிகழ்வின் போது அவர்களுடன் தாம் கலந்துரையாடியதைப் பிரதமர் நினைவு கூர்ந்தார். உதவிச் செயலாளர் நிகழ்வு பற்றி பேசிய அவர், நிர்வாகப் பிரமிடில் மேலிருந்து கீழ்வரை இளம் அதிகாரிகளுக்கு  அனுபவக் கற்றலின் வாய்ப்பை வழங்குவது உதவிச் செயலாளர் நிகழ்வின் பின் உள்ள  நோக்கமாகும் என்றார்.

விருப்பமில்லாத  அணுகுமுறையில் இந்தியா திருப்தி அடையவில்லை என்றும், ஆக்கப்பூர்வமான செயல்பாட்டைக் கோருகிறது என்றும் குறிப்பிட்ட பிரதமர், அனைத்துக் குடிமக்களுக்கும் தங்களால் இயன்ற சிறந்த நிர்வாகத்தையும், தரமான வாழ்க்கையையும் அளிக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்றார். லட்சாதிபதி சகோதரி, ட்ரோன் சகோதரி, பிரதமரின் வீட்டுவசதித் திட்டம் போன்ற திட்டங்கள் பற்றி பேசிய அவர், இந்தத் திட்டங்களை மேலும் கூடுதலாக மக்களிடம் கொண்டு செல்ல செறிவான  அணுகுமுறையுடன் அனைவரும் பணியாற்ற வேண்டும் என்று கூறினார். சமூக நீதியை உறுதிசெய்யவும், பாகுபாட்டை தடுக்கவும், செறிவான அணுகுமுறை உதவும் என்றும் அவர் கூறினார். சேவை வழங்குவதில் வேகத்தடைகளாக இருக்கப்போகிறீர்களா அல்லது அதிவேக நெடுஞ்சாலையாக இருக்கப்போகிறீர்களா என்பது இப்போது உங்களின் தெரிவுதான் என்று அவர் தெரிவித்தார். தங்களின் கண்களுக்கு முன்னால் நிகழும் மாற்றங்களைக் காணும்போது கிரியா ஊக்கிகளாக இருக்கவும், திருப்தி அடையவும் விருப்பம் கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார்.

தேசம் முதலில் என்பது வெறும் முழக்கம் அல்ல என்றும்,தமது வாழக்கையின் நோக்கம் என்றும் கூறிய பிரதமர் இந்தப் பயணத்தில் தம்முடன் அனைத்து அதிகாரிகளும் இணைய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.  ஐஏஎஸ் அதிகாரியாக தேர்வான பின் அவர்கள் பெற்ற பாராட்டுகள் கடந்த கால விஷயம் என்று கூறிய பிரதமர் கடந்த காலத்தில் மூழ்கியிருப்பதற்கு பதிலாக அவர்கள் எதிர்காலத்தை நோக்கி முன்னேற வேண்டும் என்று கூறினார்.

இந்தக் கலந்துரையாடல் நிகழ்வின் போது, ஊழியர் நலத்துறை இணையமைச்சர் திரு ஜிதேந்திர சிங், பிரதமரின் முதன்மைச் செயலாளர் திரு பி கே மிஸ்ரா, அமைச்சரவை செயலாளர் திரு ராஜீவ் கௌபா, உள்துறை, ஊழியர், பயிற்சித்துறை செயலாளர் திரு ஏகே பல்லா மற்றும் மூத்த அதிகாரிகள் உடனிருந்தனர்.

***


SMB/RS/DL



(Release ID: 2032570) Visitor Counter : 41