பிரதமர் அலுவலகம்
ஆஸ்திரிய-இந்திய தலைமைச் செயல் அதிகாரிகள் கூட்டத்தில் பிரதமர் உரையாற்றினார்
Posted On:
10 JUL 2024 7:01PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடியும், ஆஸ்திரிய பிரதமர் திரு கார்ல் நெஹாமரும், உள்கட்டமைப்பு, வாகன உற்பத்தி, எரிசக்தி, பொறியியல், புதிய தொழில்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த முன்னணி ஆஸ்திரிய, இந்திய நிறுவனங்களைச் சேர்ந்த தலைமைச் செயல் அதிகாரிகளிடையே இன்று (10.07.2024) கூட்டாக உரையாற்றினர்.
இந்தியா- ஆஸ்திரியா இடையே இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதிலும், பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்துவதிலும் தொழில்துறையினரின் பங்களிப்பை இரு தலைவர்களும் பாராட்டினர். கடந்த சில ஆண்டுகளாக இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தகமும், முதலீடுகளும் அதிகரித்து வருவதாக அவர்கள் குறிப்பிட்டனர். ஒத்துழைப்பை அதிகரிப்பதன் மூலம் இந்தியா-ஆஸ்திரியா இடையிலான கூட்டு செயல்பாடுகளை மேம்படுத்த வேண்டும் என்று அவர்கள் கேட்டுக்கொண்டனர்.
அடுத்த சில ஆண்டுகளில் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா உருவெடுக்கும் என்று இக்கூட்டத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி கூறினார். இந்தியாவில் வேகமாக அதிகரித்து வரும் வாய்ப்புகளை ஆஸ்திரிய தொழில் துறையினர் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று பிரதமர் கேட்டுக் கொண்டார். கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா சிறந்த முன்னேற்றத்தை அடைந்துள்ளது என்று குறிப்பிட்ட அவர், அரசியல் நிலைத்தன்மை, சிறந்த கொள்கைகள், சீர்திருத்தங்கள் ஆகியவற்றால் இந்தியா தொடர்ந்து முன்னேற்றப் பாதையில் செல்லும் என்று அவர் கூறினார். வர்த்தகம் செய்வதை எளிதாக இந்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி எடுத்துரைத்தார். இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறித்துப் பேசிய பிரதமர், புதிய தொழில்கள் தொடங்குவதில் இந்தியா அடைந்துள்ள வெற்றியையும் குறிப்பிட்டார். அடுத்த தலைமுறைக்கான உள்கட்டமைப்புகளை உருவாக்குதல், பசுமை செயல்திட்டம் ஆகியவற்றில் இந்தியாவின் உறுதிப்பாட்டை அவர் எடுத்துரைத்தார். இந்தியா-ஆஸ்திரியா இடையேயான புத்தொழில் ஒத்துழைப்பு சிறந்த பலன்களை அளிக்கும் என்று அவர் கூறினார். இது தொடர்பாக, இரு நாடுகளும் ஒன்றிணைந்து ஹேக்கத்தான் போட்டிகளை நடத்த வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். இந்தியாவில் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு மேம்பாடு, சரக்குப் போக்குவரத்து மேம்பாடு ஆகியவை குறித்தும் பிரதமர் எடுத்துரைத்தார்.
இந்தியாவில் உற்பத்தி திட்டத்தின் கீழ், உயர்தரமாகவும், குறைந்த செலவிலும் உற்பத்தி செய்வதற்கு வாய்ப்புகள் உள்ளதாகவும், இதனை ஆஸ்திரியாவைச் சேர்ந்த பெரிய நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். குறைக்கடத்திகள், மருத்துவ சாதனங்கள், சூரிய ஒளி மின்கலன்கள் உள்ளிட்ட துறைகளில் உலகளாவிய உற்பத்தி நிறுவனங்களை ஈர்ப்பதற்காக இந்தியாவில், உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகைத் திட்டம் செயல்படுத்தப்படுவதாக அவர் தெரிவித்தார். திறன்கள், தொழில்நுட்பம், வர்த்தகம் ஆகியவற்றில் இந்தியாவும், ஆஸ்திரியாவும் இயற்கையான ஒத்துழைப்பு நாடுகளாக உள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்தியாவில் உள்ள முதலீட்டு வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளுமாறும், இந்தியாவின் சிறந்த வளர்ச்சி சூழலில் ஒரு பகுதியாக பங்கேற்குமாறும் ஆஸ்திரிய தொழில் துறையினருக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி அழைப்பு விடுத்தார்.
***
VL/SMB/PLM/AG/DL
(Release ID: 2032235)
Visitor Counter : 77
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Hindi_MP
,
Assamese
,
Assamese
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam