உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

குஜராத்தின் அகமதாபாதில் அமீன் பிஜேகேபி வித்யார்த்தி பவனையும், நவீன பன்னோக்கு மருத்துவமனையையும் மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா திறந்து வைத்தார்

Posted On: 07 JUL 2024 4:46PM by PIB Chennai

குஜராத் மாநிலம் அகமதாபாதில் அமீன் பிஜேகேபி வித்யார்த்தி பவனை மத்திய உள்துறை, கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு அமித் ஷா இன்று (07-07-2024) திறந்து வைத்தார். குஜராத் முதலமைச்சர் திரு பூபேந்திர படேல் உட்பட பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

அகமதாபாதில் ஸ்லிம்ஸ் (எஸ்.எல்..எம்.எஸ்) நவீன பன்னோக்கு மருத்துவமனையையும் திரு அமித் ஷா திறந்து வைத்தார்.

முன்னதாக, அகமதாபாதில் உள்ள ஜெகன்நாதர் கோவிலில் திரு அமித் ஷா மங்கள ஆரத்தி செய்தார்.

மஹாபிரபு ஜெகன்நாதரின் ரத யாத்திரையை முன்னிட்டு மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா சமூக ஊடக எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், நாட்டு மக்களுக்கு தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். மஹாபிரபு ஜெகன்நாதரின் ரத யாத்திரை நாட்டின் கோடிக்கணக்கான பக்தர்களால் மிகுந்த பக்தியுடன் கொண்டாடப்படுகிறது என்று கூறியுள்ளார். ஆற்றல் மிக்க இந்திய கலாச்சாரத்தில் இந்த யாத்திரை ஓர் அடையாளமாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்அனைவரின் நலனுக்காகவும் முன்னேற்றத்திற்காகவும் மஹாபிரபு ஜெகன்நாதர், வீர பாலபத்ரா, மாதா சுபத்ரா ஆகியோரைப் பிரார்த்தனை செய்வதாக திரு அமித் ஷா தமது எக்ஸ் தள பதிவில் தெரிவித்துள்ளார்

அமீன் பிஜேகேபி வித்யார்த்தி பவனைத் திறந்து வைத்த பின்னர் பேசிய திரு அமித் ஷா, ஒரு நிறுவனம் ஒட்டுமொத்த சமூகத்தின் ஆதரவைப் பெற்றால்தான் அது 100 ஆண்டுகளை நிறைவு செய்ய முடியும் என்றார். இந்த நிறுவனம் 92 ஆண்டுகளாக ஆயிரக்கணக்கான குழந்தைகளின் வாழ்க்கையில் அறிவு ஒளியைத் தொடர்ந்து பரப்பி வருவதாகவும், குஜராத்திற்கும் நாட்டிற்கும் சேவை செய்த பல நபர்களை இந்த நிறுவனம் வழங்கியுள்ளது என்றும் அவர் கூறினார்.

இன்றைய தலைமுறையைச் சேர்ந்த மாணவர்கள் வாழ்க்கையில் எதைச் செய்தாலும், அதை நாட்டுக்காக செய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். நம் வாழ்நாள் முழுவதும் நாட்டுக்காக உழைக்கும் ஆர்வத்தை நாம் கொண்டிருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

 உயர்கல்வி வசதி இல்லாத பகுதிகளைச் சேர்ந்த மாணவர்களும் இங்கு வந்து கல்வி கற்க முடியும் என்றும், இது அவர்களின் வாழ்க்கையில் ஒளியேற்றும் என்றும் அவர் கூறினார். குஜராத்தின் வளர்ச்சிக்கு கத்வா படேல் சமூகத்தினர் பெரும் பங்களிப்பு செய்துள்ளனர் என்று அவர் தெரிவித்தார். படேல் சமூகத்தின் வளர்ச்சியுடன், குஜராத்தும் வளர்ச்சியடைந்துள்ளது என்று அவர் கூறினார். படேல் சமூகம் கடினமாக உழைக்கும் சமூகம் என்றும், கல்வி, வணிக மனப்பான்மை, துணிவு, சமூகத்தை ஒருங்கிணைத்து முன்னேற்றுதல் போன்ற பண்புகளைக் கொண்டுள்ளது என்றும் அவர் கூறினார். இந்த சமூகத்தினர் குஜராத் வளர்ச்சிக்கும் நாட்டின் வளர்ச்சிக்கும் பெரும் பங்களிப்பை வழங்கியுள்ளனர் என அவர் தெரிவித்தார்.

இங்கு வரும் அனைத்து மாணவர்களும் வரலாற்று சிறப்புமிக்க இடத்தில் படிக்கும் வாய்ப்பைப் பெற்றிருப்பதாக அமைச்சர் கூறினார். மாணவர்கள் தங்கள் வாழ்க்கையில் ஓர் இலக்கை நிர்ணயிக்க வேண்டும் என்றும், அதை அடைய கடின முயற்சிகளை மேற்கொள்வது மிகவும் முக்கியம் என்றும் அவர் அறிவுறுத்தினார். இலக்கை அடைய வாழ்க்கையில் கடினமாக உழைப்பது முக்கியம் என்று கூறிய திரு அமித் ஷா ஒருபோதும் குறுக்கு வழிகளைப் பின்பற்றக்கூடாது என்பதை வலியுறுத்தினார்.

***

 

SMB/PLM/KV

 


(Release ID: 2031432) Visitor Counter : 86