நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கரீஃப் பருவத்தில் வெங்காயம் பயிரிடல் பரப்பை 27 சதவீதம் அதிகரிக்க இலக்கு - உருளைக்கிழங்கின் பயிரிடல் பரப்பளவை கடந்த ஆண்டை விட 12 சதவீதம் உயர்த்த இலக்கு

Posted On: 05 JUL 2024 5:45PM by PIB Chennai

இந்த ஆண்டு நல்ல மழை மற்றும் சரியான நேரத்தில் பருவமழை பெய்துள்ளது. இதனால் வெங்காயம், தக்காளி மற்றும் உருளைக்கிழங்கு போன்ற தோட்டக்கலை பயிர்களைப் பயிரிடுதல் அதிகரித்துள்ளது.  மாநில அரசுகள் அளித்த தகவலின் அடிப்படையில் மத்திய வேளாண் அமைச்சகம் இது தொடர்பான மதிப்பீடுகளை வெளியிட்டுள்ளது. அதன்படி வெங்காயம், தக்காளி மற்றும் உருளைக்கிழங்கு போன்ற முக்கிய காய்கறிப் பயிர்கள் பயிரிடுவது, கரீஃப் பருவத்தில் ஆண்டை விட குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளது.

இந்த ஆண்டு கரீஃப் பருவத்தில் வெங்காய பயிரிடல் பரப்பளவு இலக்கு 3.61 லட்சம் ஹெக்டேர் ஆகும். இது கடந்த ஆண்டை விட 27% அதிகமாகும். கரீஃப் பருவத்தில் வெங்காயம் உற்பத்தி செய்யும் முக்கிய மாநிலமான கர்நாடகாவில், அதன் இலக்கு பரப்பளவான 1.50 லட்சம் ஹெக்டேரில் 30% விதைப்பு நிறைவடைந்துள்ளது. மேலும் சில மாநிலங்களில் விதைப்புப் பணி நல்ல முன்னேற்றம் அடைந்து வருகிறது.

உருளைக்கிழங்கு ஒரு ராபி பயிர் என்றாலும், கர்நாடகா, இமாச்சலப் பிரதேசம், உத்தரகண்ட், மேகாலயா, மகாராஷ்டிரா மற்றும் தமிழ்நாட்டில்  கரீஃப் பருவத்தில் உருளைக்கிழங்கு உற்பத்தி செய்யப்படுகிறது.  இந்த ஆண்டு கரீஃப் பருவ உருளைக்கிழங்குப் பயிரிடல் பரப்பளவு கடந்த ஆண்டை விட 12% அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

தக்காளி, கடந்த ஆண்டு கரீஃப் பருவத்தில் விதைக்கப்பட்ட 2.67 லட்சம் ஹெக்டேரிலிருந்து, அதிகரிக்கப்பட்டு இந்த ஆண்டு 2.72 லட்சம் ஹெக்டேராக இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆந்திராவின் சித்தூர் மற்றும் கர்நாடகாவின் கோலார் போன்ற தக்காளி உற்பத்தி செய்யும் முக்கிய பகுதிகளில் பயிர் நிலைமை நன்றாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கோலாரில், தக்காளி பறிக்கும் பணி தொடங்கியுள்ளது, இன்னும் சில நாட்களில் அது சந்தைக்கு வரும். சித்தூர் மற்றும் கோலாரில் உள்ள மாவட்ட தோட்டக்கலை அதிகாரிகள், இந்த ஆண்டு தக்காளி விளைச்சல் கடந்த ஆண்டை விட கணிசமாக அதிகரித்துள்ளதாகத் தெரிவித்தனர்.


(Release ID: 2031231) Visitor Counter : 83