பிரதமர் அலுவலகம்
மனதின் குரல் நிகழ்ச்சியின் 111-வது அத்தியாயத்தில் 30.06.2024 அன்று பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
Posted On:
30 JUN 2024 11:45AM by PIB Chennai
எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். இன்றைய நாளுக்காகத் தான் நாம் ஃபிப்ரவரி மாதம் முதல் காத்துக் கிடந்தோம். நான் மனதின் குரல் மூலமாக மீண்டும் ஒருமுறை உங்களிடையே, என் குடும்பத்தாரிடையே வந்திருக்கிறேன். ஒரு மிகவும் இனிமையான பயன்பாடு உண்டு – இதி விதா புனர்மிலனாய என்பார்கள். இதன் பொருளும் கூட மிகவும் இனிமையானது, நான் விடை பெறுகிறேன், மீண்டும் சந்திப்போம் என்பதாகும் அது. இந்த உணர்வோடு தான் நான், தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு மீண்டும் சந்திக்கிறேன் என்று ஃபிப்ரவரி மாதம் உங்களிடம் கூறியிருந்தேன், இன்று மனதின் குரலோடு உங்களிடையே மீண்டும் வந்திருக்கிறேன். நீங்கள் அனைவரும் நலமாய் இருப்பீர்கள், உங்கள் வீடுகளில் அனைவரும் ஆரோக்கியமாக இருப்பார்கள் என்று நம்புகிறேன். இப்போது பருவமழைக்காலமும் வந்து விட்டது, பருவமழைக்காலம் வரும் போது, மனமும் குதூகலத்தில் துள்ளுகிறது. இன்று மீண்டும் ஒருமுறை நாம் மனதின் குரலில், தங்களுடைய செயல்பாடுகளால் தேசத்தில் மாற்றமேற்படுத்திய நாட்டுமக்களைப் பற்றி விவாதிக்க இருக்கிறோம். மேலும் நாம் நமது வளமான கலாச்சாரம், கௌரவமான வரலாறு, வளர்ச்சியை நோக்கிய பாரதத்தின் முயற்சிகளைப் பற்றி விவாதிக்க இருக்கிறோம்.
நண்பர்களே, ஃபிப்ரவரி தொடங்கி இப்போது வரை, எப்போதெல்லாம் மாதத்தின் கடைசி ஞாயிறு வருகிறதோ, அப்போதெல்லாம் உங்களுடன் உரையாட முடியவில்லையே என்ற உணர்வு என்னை அழுத்தியது. ஆனால் கடந்த மாதங்களில் நீங்கள் எல்லாம் எனக்கு இலட்சக்கணக்கான செய்திகளை அனுப்பியிருக்கிறீர்கள் என்பதைக் காணும் போது, என் மனதிற்கு மிகவும் உவப்பாக இருக்கிறது. மனதின் குரல் என்ற வானொலி நிகழ்ச்சி, சில மாதங்களுக்கு என்னமோ தடைப்பட்டிருக்கலாம் ஆனால், மனதின் குரலில் ஏற்படுத்திய உணர்வினால், தேசத்தில், சமூகத்தில், ஒவ்வொரு நாளும் நல்ல பணிகள், சுயநலமற்ற உணர்வோடு புரியப்படும் பணிகள், சமூகத்தில் நல்ல ஆக்கப்பூர்வமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தன. தேர்தல் காலத்துச் செய்திகளுக்கு இடையே கண்டிப்பாக மனதைத் தொடக்கூடிய செயல்கள்-செய்திகள் மீது உங்கள் கவனம் செலுத்தப்பட்டிருக்கும்.
நண்பர்களே, நமது அரசியலமைப்புச்சட்டம் மற்றும் தேசத்தின் ஜனநாயக அமைப்புகள் மீது தங்களுடைய அசைக்கமுடியாத நம்பிக்கையை மீண்டும் நிரூபித்திருக்கும் நமது நாட்டுமக்களுக்கு நான் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். 2024ஆம் ஆண்டின் தேர்தல், உலகின் மிகப்பெரிய தேர்தலாகும். உலகின் எந்த ஒரு தேசத்திலும், இத்தனை பெரிய தேர்தல் இதுவரை எப்போதும் நடந்ததில்லை. இதிலே 65 கோடி மக்கள் வாக்களித்தார்கள். நான் தேர்தல் ஆணையத்திற்கும், வாக்களிப்பு முறையோடு தொடர்புடைய அனைத்து பேருக்கும், இந்தக் காரணத்திற்காக பாராட்டுக்களைத் தெரிவிக்கிறேன்.
எனதருமை நாட்டுமக்களே, இன்று ஜூன் மாதம் 30ஆம் தேதி மிகவும் மகத்துவம் வாய்ந்ததாகும். இந்த நாளைத் தான் நமது பழங்குடியின சகோதர சகோதரிகள், ஹூல் தினம் என்ற வகையிலே கொண்டாடுகிறார்கள். இந்த நாள், வீரர்களான சித்தோ-கான்ஹூவின் அசாத்தியமான சாகசத்தோடு தொடர்புடையது. இவர்கள் அந்நிய ஆட்சியாளர்களின் கொடுமைகளை வலிமையாக எதிர்த்தார்கள். வீரர்கள் சித்தோ-கான்ஹூ, ஆயிரக்கணக்கான சந்தாலி சகாக்களை ஒன்றிணைத்து, ஆங்கிலேயர்களுக்கு எதிரான தீவிரமான போராட்டத்தை மேற்கொண்டார்கள், இது எப்போது என்று உங்களுக்குத் தெரியுமா? இது 1855ஆம் ஆண்டு நடந்தது, அதாவது 1857 பாரதத்தின் முதல் சுதந்திரப் போருக்கு ஈராண்டுகள் முன்னமேயே நடந்தது. அப்போது ஜார்க்கண்டின் சந்தால் பர்கனாவிலே, நம்முடைய பழங்குடி சகோதர சகோதரிகள், அந்நிய ஆட்சியாளர்களுக்கு எதிராக, ஆயுதமேந்திய போராட்டத்தைத் துவக்கினார்கள். நம்முடைய சந்தாலி பழங்குடியின சகோதர சகோதரிகளின் மீது ஆங்கிலேயர்கள் பலவகையான கொடுமைகளைப் புரிந்தார்கள், அவர்கள் மீது பலவிதமான கட்டுப்பாடுகளையும் விதித்திருந்தார்கள். இந்தப் போராட்டத்தில் அற்புதமான வீரத்தை வெளிப்படுத்திய வீரர்களான சித்தோவும் கான்ஹூவும் பலிதானிகளாகினார்கள். ஜார்க்கண்டின் பூமியின் இந்த அமரகாதை படைத்த சத்புத்திரர்களின் பலிதானம், இன்றும் கூட, நாட்டுமக்களுக்கு உத்வேகமளித்து வருகின்றது. இவர்களுக்கு சமர்ப்பிக்கப்பட்ட ஒரு பாடலை, சந்தாலி மொழியிலே கேட்போம் வாருங்கள்.
Audio Clip
எனக்குப் பிரியமான நண்பர்களே, உலகின் மிகவும் விலைமதிப்பில்லாத உறவு எது என்று நான் உங்களிடம் வினவினால், நீங்கள் கண்டிப்பாக அம்மா என்றே கூறுவீர்கள். நம்மனைவரின் வாழ்க்கையிலும் அம்மாவுக்கான இடம் மிகவும் உயர்வானதாகவே இருக்கும். அம்மா அனைத்து துக்கங்களையும் சகித்துக் கொண்டு, தனது மக்களை நன்கு வளர்க்கிறாள். ஒவ்வொரு அன்னையும் தனது குழந்தைகளின் மீது அன்பைச் சொரிகிறாள். நம் ஒவ்வொருவரையும் பெற்ற அன்னையின் அன்பு, நம் அனைவரின் மீதும், நாம் என்றுமே திருப்பிச் செலுத்த முடியாத ஒரு கடனைப் போன்றது. நாம் நமது அன்னையர்க்கு ஏதாவது திரும்பச் செலுத்த முடியுமா என்று நான் எண்ணிப் பார்க்கிறேன் ஆனால், ஏதாவது செய்ய முடியுமா சொல்லுங்கள்? இந்த எண்ணத்தால் உந்தப்பட்டுத் தான் நான் இந்த ஆண்டு உலக சுற்றுச்சூழல் தினத்தன்று ஒரு சிறப்பான இயக்கத்தை ஆரம்பித்தேன், இந்த இயக்கத்தின் பெயர் – ஒரு மரம் அன்னையின் பெயரில். நானும் கூட என் அன்னையின் பெயரிலே ஒரு மரத்தை நட்டிருக்கிறேன். நமது அன்னையரோடு இணைந்து அல்லது அவர்களின் பெயரில் ஒரு மரத்தைக் கண்டிப்பாக நடுங்கள் என்று நாட்டு மக்கள் அனைவரிடத்திலும், உலகின் அனைத்து நாடுகளைச் சேர்ந்தவர்களிடத்திலும் நான் வேண்டுகோள் விடுத்தேன். அன்னையின் நினைவாக, அவருக்கு மரியாதை அளிக்கும் விதமாக, இந்த மரம் நடும் இயக்கம் விரைவாக வளர்ந்து வருகிறது என்பதைக் காணும் போது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. மக்கள் தங்கள் அன்னையோடு இணைந்தோ, அவர்களின் புகைப்படத்தின் முன்பாகவோ மரம் நடும் படங்களை சமூக வலைத்தளங்களில் தரவேற்றி வருகிறார்கள். அனைவரும் தங்கள் அன்னைக்காக மரங்களை நட்டுக் கொண்டிருக்கிறார்கள் – அவர்கள் ஏழைகளாகட்டும் செல்வந்தர்களாகட்டும், வேலைக்குச் செல்லும் பெண்களாகட்டும் இல்லத்தரசிகளாகட்டும். இந்த இயக்கமானது தங்கள் அன்னையரின்பால் தங்களுடைய அன்பை வெளிப்படுத்தும் சமமான சந்தர்ப்பத்தை அனைவருக்கும் அளிக்கிறது. அவர்கள் தங்களின் படங்களை #Plant4Mother மற்றும் #एक_पेड़_मां_के_नाम என்பதில் தரவேற்றுவதோடு மற்றவர்களுக்கும் ஊக்கமளித்து வருகிறார்கள்.
நண்பர்களே, இந்த இயக்கத்தினால் மேலும் ஒரு ஆதாயம் உண்டு. பூமித்தாயும் நமது தாய்க்கு நிகராக நம்மை கவனித்துக் கொள்கிறாள். பூமித்தாய் தான் நம் அனைவரின் வாழ்க்கைக்கும் ஆதாரம், ஆகையால் நாம் பூமித்தாயைக் கவனித்துக் கொள்ள வேண்டியது நம் அனைவரின் கடமையும் ஆகிறது. அன்னையின் பெயரில் மரம் நடும் இயக்கத்தால் நமது அன்னை கௌரவப்படுத்தப்படுகிறாள் என்பதோடு, பூமித்தாயும் காக்கப்படுகிறாள். கடந்த பத்தாண்டுகளாக, அனைவரின் முயற்சிகளாலும், பாரதத்தில் வரலாறுகாணாத வனப்பகுதி விரிவாக்கம் ஏற்பட்டிருக்கிறது. அமுதப் பெருவிழாக்காலத்தில், நாடெங்கும் 60,000த்திற்கும் மேற்பட்ட அமுத நீர்நிலைகளும் உருவாக்கப்பட்டிருக்கின்றன. இப்போது நாம் இதைப் போலவே நமது அன்னையரின் பெயரில் மரம் நடும் இயக்கத்திற்கு மேலும் விரைவு கூட்ட வேண்டும்.
எனக்குப் பிடித்தமான நாட்டுமக்களே, தேசத்தின் பல்வேறு பாகங்களில் பருவமழையானது வேகமாக தனது வண்ணங்களைப் பரப்பி வருகிறது. மேலும் இந்த மழைக்காலத்தில், அனைவரின் வீடுகளிலும் தேடப்படும் ஒரு பொருள் என்றால் அது குடை. மனதின் குரலில் இன்று ஒரு விசேஷமான குடைகளைப் பற்றிய தகவலை நான் உங்களுடன் பகிர இருக்கிறேன். இந்தக் குடை நமது கேரளத்திலே தயார் செய்யப்படுகிறது. பார்க்கப்போனால், கேரளத்தின் கலாச்சாரத்திலே குடைகளுக்கென ஒரு விசேஷ மகத்துவமுண்டு. குடைகள் என்பவை அங்கே பல பாரம்பரியங்கள் மற்றும் விதிகள்-பழக்கங்களில் முக்கியமான பங்காற்றுகின்றன. ஆனால் நான் எந்தக் குடை பற்றிப் பேசுகிறேன் என்றால், அது கார்த்தும்பிக் குடை, இவை கேரளத்தின் அட்டப்பாடியிலே தயாரிக்கப்படுகின்றன. இந்த வண்ணமயமான குடைகள் மிகவும் அருமையாக இருக்கின்றன. இவற்றின் விசேஷம் என்னவென்றால், இவை கேரளத்தின் நமது பழங்குடியின சகோதர சகோதரிகளால் தயாரிக்கப்படுகிறது என்பது தான். இன்று நாடெங்கிலும் இந்தக் குடைகளின் தேவை அதிகரித்து வருகிறது. இவை இணையம்வழியும் விற்பனை செய்யப்படுகின்றன. இந்தக் குடைகளை வட்டாலக்கி கூட்டுறவு வேளாண் அமைப்பின் மேற்பார்வையில் தயாரிக்கிறார்கள். இந்த அமைப்பின் தலைமை, நமது பெண்களிடம் தான் இருக்கிறது. பெண்களின் தலைமையில் அட்டப்பாடியின் பழங்குடியினச் சமூகமானது, தொழில்முனைவின் அற்புதமான எடுத்துக்காட்டை முன்வைத்திருக்கிறது. இந்த அமைப்பு, மூங்கில் கைவினைப்பொருட்களுக்கான ஒரு அலகையும் நிறுவியிருக்கிறது. இப்போது இவர்கள் ஒரு சில்லறை விற்பனை அங்காடியையும், ஒரு பாரம்பரியமான கஃபேயையும் திறக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். அதாவது தங்களுடைய குடைகளையும், இன்னும் பிற பொருட்களையும் விற்பனை செய்வது மட்டுமல்ல, தங்களுடைய பாரம்பரியம், தங்களுடைய கலாச்சாரம் ஆகியவற்றையும் உலகிற்கு அறிமுகப்படுத்தி வருகிறது என்பதே உள்ளார்ந்த விஷயம். இன்று கார்த்தும்பி குடைகள், கேரளத்தின் சின்ன கிராமம் தொடங்கி, பன்னாட்டுக் கம்பெனிகள் வரை தங்கள் பயணத்தை மேற்கொண்டு வருகின்றன. உள்ளூர் பொருட்களுக்குக் குரல் கொடுக்க வேண்டும் என்ற நமது கொள்கைக்கு இதை விடச் சிறப்பான வேறு என்ன எடுத்துக்காட்டு இருக்க முடியும்?
என் மனம் நிறை நாட்டுமக்களே, அடுத்த மாதம் இந்த நேரம் பாரீஸ் நகரத்தில் ஒலிம்பிக் விளையாட்டுத் தொடங்கப்பட்டிருக்கும். நீங்கள் அனைவரும் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில், நம்நாட்டு வீரர்களை உற்சாகப்படுத்தக் காத்துக் கொண்டிருப்பீர்கள் என்பதில் எனக்குப் பூரண நம்பிக்கை உண்டு. ஒலிம்பிக் விளையாட்டுக்களில் பங்கெடுக்கவிருக்கும் இந்தியக் குழுவின் வீர்களுக்கு நான் பலப்பல நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். டோக்கியோ ஒலிம்பிக்கின் நினைவுகள் நம்மனைவரின் நினைவுகளிலும் இன்னமும் கூட பசுமையாக இருக்கின்றது. டோக்கியோவில் நமது வீரர்களின் வெளிப்பாடு, பாரதீயர்கள் அனைவரின் இதயங்களையும் கொள்ளை கொண்டது. டோக்கியோ ஒலிம்பிக்கிற்குப் பிறகிலிருந்தே நமது தடகள வீரர்கள், பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகளுக்காகத் தங்களைத் தயார் செய்வதில் ஈடுபட்டு வந்திருக்கிறார்கள். அனைத்து விளையாட்டு வீரர்களையும் கணக்கெடுத்தால், இவர்கள் அனைவரும் சுமார் 900 சர்வதேசப் போட்டிகளில் பங்கெடுத்திருக்கிறார்கள். இது கணிசமான எண்ணிக்கை.
நண்பர்களே, பாரீஸ் ஒலிம்பிக்கில் சில விஷயங்களை நீங்கள் முதன்முறையாகக் காண்பீர்கள். துப்பாக்கிச் சுடும் போட்டியில் நமது விளையாட்டு வீரர்களின் திறமை வெளிவரத் தொடங்கியிருக்கிறது. டேபிள் டென்னிஸில் நமது ஆடவர் மற்றும் பெண்களின் அணிகள் தகுதி பெற்றன. இந்திய ஷாட்கன் அணியில் நமது ஷூட்டர் பெண்களும் இடம் பெற்றிருக்கிறார்கள். இந்த முறை மல்யுத்தம் மற்றும் குதிரையேற்றத்தில் நமது அணியின் வீரர்கள், நாம் முன்பு போட்டியிடாத பிரிவுகளிலும் போட்டிபோட இருக்கிறார்கள். இந்த முறை விளையாட்டுக்களில் ஒரு அலாதியான சிலிர்ப்பை நம்மால் உணர முடியும் என்பதை நீங்களே அனுமானித்துக் கொள்ளலாம். சில மாதங்கள் முன்பாக, உலக மாற்றுத் திறனாளிகளுக்கான தடகளப் போட்டிகளில் நமது மிகச் சிறப்பான செயல்பாடு என்பது உங்களுக்கு நினைவிருக்கலாம். அதே போல சதுரங்கம் மற்றும் பேட்மிண்டனிலும் கூட நமது விளையாட்டு வீரர்களும் வெற்றிக் கொடி நாட்டியிருந்தார்கள். நம்முடைய விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக்ஸ் போட்டிகளும் கூட மிகச் சிறப்பான செயல்பாட்டைப் புரிவார்கள் என்று நாடு முழுவதும் எதிர்பார்க்கிறது. இந்தப் போட்டிகளில் பதக்கங்களையும் வெல்வார்கள், நாட்டுமக்களின் இதயங்களையும் கொள்ளை கொள்வார்கள். அடுத்து வரவிருக்கும் நாட்களில், பாரதிய அணியைச் சந்திக்கும் சந்தர்ப்பமும் எனக்குக் கிடைக்கவிருக்கிறது. நான் உங்களனைவரின் சார்ப்பாகவும் அவர்களை உற்சாகப்படுத்துகிறேன். அப்புறம் ஆம்..... இந்த முறை நம்முடைய #Cheer4Bharat ஆகும். இந்த ஹேஷ்டேக் வாயிலாக நாம் நமது விளையாட்டு வீரர்களை உற்சாகப்படுத்துவோம். அவர்களின் ஊக்கமும் உற்சாகமும் தொடர்ந்து அதிகப்பட்டுக் கொண்டே இருக்க வேண்டும். இந்த வேகத்தைத் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும்.... உங்களுடைய இந்த வேகம்...... பாரதத்தின் மாயாஜாலம், உலகிற்கு நம் வீரர்களின் செயல்பாட்டை வெளிப்படுத்த பேருதவியாக இருக்கும்.
என் கனிவான நாட்டுமக்களே, நான் உங்களனைவருக்கும் ஒரு குரல் பதிவை இசைக்க விரும்புகிறேன்.
Audio Clip
இந்த வானொலி நிகழ்ச்சியைக் கேட்டு, நீங்கள் அனைவரும் ஆச்சரியப்பட்டுப் போனீர்கள் இல்லையா!! சரி, இதன் பின்னணியில் இருக்கும் விஷயம் முழுவதையும் நான் உங்களிடம் கூறுகிறேன் வாருங்கள்!! உள்ளபடியே இது குவைத் வானொலியின் ஒரு ஒலிபரப்புப் பகுதி. நாமோ குவைத் பற்றிப் பேசுகிறோம், ஆனால் ஹிந்தி எங்கிருந்து வந்தது என்று தானே நீங்கள் சிந்திக்கிறீர்கள்? ஆனால் குவைத் அரசாங்கம் தனது தேசிய வானொலியில் ஒரு விசேஷமான நிகழ்ச்சியை ஆரம்பித்திருக்கிறது. அதுவும் ஹிந்தி மொழியில். குவைத் வானொலியில், ஞாயிறுதோறும் இது அரை மணிக்கு ஒலிபரப்பாகும். இதிலே பாரதக் கலாச்சாரத்தின் பல்வேறு வண்ணங்கள் இடம் பெறும். நமது திரைப்படங்கள் மற்றும் கலையுலகோடு தொடர்புடைய விவாதங்கள் ஆகியன அங்கே இருக்கும் பாரதநாட்டவர்களுக்கு இடையே மிகவும் பிரபலமாக இருக்கின்றன. குவைத் நாட்டவர்களும் கூட இதிலே அதிக நாட்டம் காட்டுகிறார்களாம். இந்த அருமையான முன்னெடுப்பிற்காக, நான் குவைத் அரசுக்கும், அங்கிருக்கும் மக்களுக்கும் என் இதயப்பூர்வமான நன்றிகளைத் தெரிவிக்கிறேன்.
நண்பர்களே, இன்று உலகமெங்கிலும் நமது கலாச்சாரம் எப்படியெல்லாம் கொண்டாடப்படுகிறது என்பதைக் காணும் போது, எந்த ஒரு இந்தியர் தான் உவப்பெய்த மாட்டார்!! இப்போது துர்க்மெனிஸ்தானிலே இந்த ஆண்டு மே மாதம், அவர்களுடைய தேசியக்கவியின் 300ஆவது நூற்றாண்டு கொண்டாடப்பட்டது. இந்தச் சந்தர்ப்பத்தின் போது, துர்க்மெனிஸ்தானின் குடியரசுத் தலைவர், உலகின் 24 புகழ்மிக்க கவிஞர்களுடைய உருவச்சிலைகளைத் திறந்து வைத்தார். இவர்களில் ஒரு உருவச்சிலை, குருதேவ் ரவீந்திரநாத் டாகோர் அவர்களுடையதாகும். இது குருதேவருக்கான கௌரவம், பாரதத்துக்கான கௌரவம். இதைப் போலவே ஜூன் மாதம், இரண்டு கரிபியன் தேசங்களான சூரினாம் மற்றும் செயிண்ட் வின்செண்ட் அண்ட் தி க்ரெனாடீன்ஸ் ஆகியன, தங்களுடைய இந்திய மரபினை மிகுந்த உற்சாகத்தோடு கொண்டாடின. சூரினாமிலே இந்திய வம்சாவழியினர் ஒவ்வொரு ஆண்டு ஜூன் மாதம் 5ஆம் தேதியன்றும், இண்டியன் அரைவல் டே அதாவது இந்தியர்கள் வந்து சேர்ந்த நாள் மற்றும் அயலக இந்தியர்கள் தினத்தைக் கொண்டாடுகிறார்கள். இங்கே ஹிந்தி மொழியோடு சேர்ந்து, போஜ்புரி மொழியையும் நன்கு பேசுகிறார்கள். செயிண்ட் வின்செண்ட் அண்ட் தி க்ரெனாடீன்ஸில் வசிக்கும் நமது பாரதீய வம்சாவழியைச் சேர்ந்த சகோதர சகோதரிகளின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 6000. அவர்கள் அனைவருக்கும் தங்களுடைய மரபு பற்றி மிகுந்த பெருமிதம் இருக்கிறது. ஜூன் மாதம் 1ஆம் தேதியன்று இந்தியர்கள் வந்து சேர்ந்த தினத்தை அவர்கள் கொண்டாடிய விதத்தைப் பார்த்தாலே போதும், அவர்களுடைய இந்தியத்தன்மை மீதான பெருமித உணர்வை நம்மால் உணர முடியும். உலகெங்கும் பாரதநாட்டு மரபு மற்றும் கலாச்சாரத்தின் இத்தகைய பரவலைப் பார்க்கும் போது, அனைத்து இந்தியருக்குமே பெருமை மேலோங்குகிறது.
நண்பர்களே, இந்த மாதம் உலகெங்கிலும் 10ஆவது யோகக்கலை தினம் மிகுந்த உற்சாகத்தோடும், ஊக்கத்தோடும் கொண்டாடப்பட்டது. நானுமே கூட ஜம்மு கஷ்மீரத்தின் ஸ்ரீநகரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் பங்கெடுத்துக் கொண்டேன். கஷ்மீரத்தின் இளைஞர்களோடு கூடவே இளம் சிறார்களும் சிறுமிகளும் கூட யோகக்கலை தினத்தில் பங்கெடுத்துக் கொண்டு யோகக்கலை பயின்றார்கள். உலகெங்கிலும் யோகக்கலை தினம் பல அருமையான சாதனைகளைப் படைத்திருக்கிறது. சவுதி அரேபியாவில் முதன்முறையாக ஒரு பெண்மணியான அல் ஹனௌஃப் ஸாத் அவர்கள், பொதுவான யோகக்கலை நெறிமுறையை முன்னின்று நடத்தினார். ஒரு பிரதானமான யோகக்கலைப் பயிற்சியை, சவுதி நாட்டைச் சார்ந்த ஒரு பெண் வழிநடத்துவது என்பது இதுவே முதன் முறையாகும். எகிப்திலும் இந்த முறை யோகக்கலை தினத்தன்று ஒரு புகைப்படப் போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நீலநதிக்கரையோரம், செங்கடலின் கடற்கரைப் பகுதிகளில், பிரமிடுகளுக்கு முன்பாக யோகக்கலை பயிலும் இலட்சக்கணக்கானோரின் படங்கள் மிகவும் பிரபலமாகின, பலராலும் விரும்பப்பட்டன. பளிங்காலான புத்தர் சிலைக்குப் பெயர் போன மியான்மாரின் மாராவிஜயா பகோடா வளாகம் உலகில் மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கே ஜூன் மாதம் 21ஆம் தேதியன்று அற்புதமான யோகக்கலைப் பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பஹரீனில் மாற்றுத்திறனாளிக் குழந்தைகளுக்காக ஒரு சிறப்பு முகாமிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இலங்கையில் யுனெஸ்கோ மரபுச்சின்னமான புகழ்மிக்க கால் கோட்டையிலும் கூட ஒரு நினைவுகொள்ளத்தக்க யோகக்கலைப் பயிற்சி மேற்கொள்ளப்பட்டது. அமெரிக்காவின் நியூயார்க்கில் ஆப்சர்வேஷன் டெக்கிலும் கூட மக்கள் யோகக்கலையைப் பயின்றார்கள். மார்ஷல் தீவுகளும் கூட முதன்முறையாக நடந்த, பெரிய அளவில் யோகக்கலை தினத்தின் நிகழ்ச்சிகளில், அவர்களின் குடியரசுத் தலைவரும் பங்கு கொண்டார். பூட்டான் நாட்டின் திம்புவிலும் கூட ஒரு பெரிய யோகக்கலை நிகழ்ச்சி அரங்கேறியது, இதிலே என்னுடைய நண்பரான, பிரதமர் டோப்கேயும் கூட பங்கெடுத்துக் கொண்டார். அதாவது உலகின் பல்வேறு இடங்களிலும் யோகக்கலை பயிலும் ஒரு பரந்துபட்ட பார்வையை நாமனைவரும் கண்டோம். யோகக்கலை தினத்தில் பங்கெடுத்துக் கொண்ட அனைத்து நண்பர்களுக்கும் நான் என் இதயப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்களிடத்திலே பழையதொரு விண்ணப்பமும் உண்டு. நாம் யோகக்கலையை வெறும் ஒரு நாள் பயிற்சியாக மட்டுமே அணுகக் கூடாது. நீங்கள் சீரான வகையிலே யோகக்கலையைப் பயில வேண்டும். இதனால் உங்கள் அனைவருடைய வாழ்க்கையிலும் ஆக்கப்பூர்வமான மாற்றங்களை உங்களால் உணர முடியும்.
நண்பர்களே, பாரதத்தின் பல பொருட்களுக்கு உலகெங்கிலும் தேவை அதிகம் இருக்கிறது, நாம் நமது நாட்டின் உள்ளூர்ப் பொருட்கள் உலக அளவில் பரவலாக்கப்படுவதைக் காணும் போது, நெஞ்சம் கர்வத்தில் விம்முவது இயல்பான விஷயம் தானே!! இப்படிப்பட்ட ஒரு பொருள் தான் அரக்கு காப்பி. அரக்கு காப்பி, ஆந்திரப் பிரதேசத்தின் அல்லூரி சீதா ராம ராஜு மாவட்டத்தில் அதிக அளவில் பயிரிடப்பட்டு வருகிறது. இதன் செறிவான சுவையும் மணமும் உலகப் புகழ் வாய்ந்தவை. அரக்கு காப்பியின் சாகுபடியோடு சுமார் ஒண்ணரை இலட்சம் பழங்குடியினக் குடும்பங்கள் தொடர்புடையனவாக இருக்கின்றன. அரக்கு காப்பியை புதிய உயரங்களுக்குக் கொண்டு செல்வதில் கிரிஜன் கூட்டுறவுக்கு மிகப்பெரிய பங்களிப்பு இருக்கிறது. இங்கிருக்கும் விவசாய சகோதர சகோதரிகளோடு இணைந்து இது செயல்பட்டு, அரக்கு காப்பியைப் பயிர் செய்ய அவர்களை ஊக்கப்படுத்தியது. இதன் காரணமாக இங்கிருக்கும் விவசாயிகளின் வருவாய் அதிகம் பெருகியது. இதனால் ஆதாயம் இங்கிருக்கும் கோண்டா டோரா பழங்குடியினச் சமூகத்துக்கும் கிடைத்திருக்கிறது. வருமானத்தோடு கூடவே அவர்களுக்கு வாழ்க்கையில் ஒரு கௌரவமும் கிடைத்திருக்கிறது. ஒருமுறை விசாகப்பட்டினத்தில் ஆந்திரப் பிரதேசத்தின் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அவர்களோடு இந்தக் காப்பியைப் பருகும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்ததை நான் இப்போது நினைவு கூருகிறேன். இதன் சுவையைப் பற்றி நான் என்ன சொல்ல, ஆஹா அற்புதம்!! மிகவும் அருமையான காப்பி!! அரக்கு காப்பிக்கு உலகளாவிய பல விருதுகள் கிடைத்திருக்கின்றன. தில்லியில் நடந்த ஜி 20 உச்சிமாநாட்டிலும் கூட காப்பி எங்கும் மணம் பரப்பிக் கொண்டிருந்தது. உங்களுக்கு எப்போது சந்தர்ப்பம் வாய்க்கிறதோ, அப்போது நீங்களும் கூட அரக்கு காப்பியை சுவைத்து மகிழுங்களேன்!!
நண்பர்களே, உள்ளூர்ப் பொருட்களை உலகளாவிய அளவுக்குக் கொண்டு சேர்ப்பதில் நம்முடைய ஜம்மு கஷ்மீரைச் சேர்ந்தவர்கள் ஒன்றும் பின் தங்கிப் போனவர்கள் அல்ல. கடந்த மாதங்களில் ஜம்மு கஷ்மீர் சாதித்துக் காட்டியிருப்பவை, நாடெங்கும் இருக்கும் மக்களுக்கும் கூட ஒரு எடுத்துக்காட்டு. இங்கே, புல்வாமாவிலிருந்து அவரைக்காயின் முதல் தொகுதி லண்டனுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கஷ்மீரில் விளையும் அரியவகைக் காய்கறிகளை ஏன் நாம் உலகிற்கு அறிமுகம் செய்யக்கூடாது என்ற எண்ணம் சிலர் மனங்களில் உதித்தது. அப்புறமென்ன!! சகூரா கிராமத்தைச் சேர்ந்த அப்துல் ராஷீத் மீர் அவர்கள் இதற்காக முதன்முதலில் முன்வந்தார். இவர் கிராமத்தின் பிற விவசாயிகளின் நிலங்களை ஒருங்கிணைத்து, அவரைப்பயிரை விளைவிக்கும் பணியைத் தொடக்கினார், சில காலத்திற்குள்ளாகவே அவரைக்காய் கஷ்மீரிலிருந்து லண்டனைச் சென்றடைந்தது. இந்த வெற்றி, ஜம்மு கஷ்மீரின் மக்களுக்கு வளங்களை அளிக்கும் புதிய கதவுகளைத் திறந்து விட்டிருக்கிறது. நம்முடைய நாட்டிலே இப்படிப்பட்ட தனித்துவமான பொருட்களுக்குக் குறைவேதும் இல்லை. நீங்கள் இப்படிப்பட்ட பொருட்களை #myproductsmypride என்பதில் கண்டிப்பாகப் பகிருங்கள். நான் இந்த விஷயம் தொடர்பாக வரவிருக்கும் மனதின் குரல் நிகழ்ச்சிகளிலும் விவாதிக்க இருக்கிறேன்.
मम प्रिया: देशवासिन:
अद्य अहं किञ्चित् चर्चा संस्कृत भाषायां आरभे |
மம பிரியா: தேசவாசின:, அத்ய அஹம் கிஞ்சித் சர்ச்சா சம்ஸ்கிருத பாஷாயாம் ஆரபே.
மனதின் குரலில் திடீரென சம்ஸ்கிருதத்தில் நான் ஏன் பேசுகிறேன் என்று நீங்கள் நினைக்கலாம். காரணம் என்னவென்றால், இன்று சம்ஸ்கிருதத்தோடு தொடர்புடைய ஒரு சிறப்பான சந்தர்ப்பம். இன்று ஜூன் மாதம் 30ஆம் தேதியன்று தான் ஆகாசவாணியின் முதல் சம்ஸ்கிருத செய்தியறிக்கை, 50 ஆண்டுகளுக்கு முன்பாக ஒலிபரப்பானது. 50 ஆண்டுகளாகத் தொடர்ந்து இந்தச் செய்தியறிக்கையானது பலரை சம்ஸ்கிருதத்தோடு இணைத்து வைத்திருக்கிறது. நான் ஆல் இண்டியா ரேடியோ குடும்பத்தாருக்குப் பாராட்டுக்களைத் தெரிவிக்கிறேன்.
நண்பர்களே, பண்டைய ஞானம் மற்றும் விஞ்ஞானத்தில் சம்ஸ்கிருதத்தின் மிகப்பெரிய பங்களிப்பு இருக்கிறது. இன்றைய காலத்தின் தேவை என்னவென்றால், நாம் சம்ஸ்கிருதத்துக்கு மதிப்பளிப்பதோடு, நமது அன்றாட வாழ்க்கையிலும் இதை இணைத்துக் கொள்ள வேண்டும். தற்போது இப்படிப்பட்ட ஒரு முயற்சி பெங்களூரூவில் பலர் செய்து வருகிறார்கள். பெங்களூரூவின் ஒரு பூங்காவான கப்பன் பூங்காவில் இங்கிருப்போர் ஒரு புதிய பாரம்பரியத்தைத் தொடங்கியிருக்கிறார்கள். இங்கே வாரத்தில் ஒரு முறை, ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையன்றும், குழந்தைகள், இளைஞர்கள், பெரியோர் என அனைவரும் பரஸ்பரம் சம்ஸ்கிருதத்தில் உரையாடுகிறார்கள். இது மட்டுமல்ல, இங்கே வாதவிவாதங்களின் பல அமர்வுகளும் சம்ஸ்கிருதத்திலேயே ஏற்பாடு செய்யப்படுகின்றன. இவர்களுடைய இந்த முயற்சியின் பெயர் சம்ஸ்கிருத வார இறுதி. இதன் தொடக்கத்தை ஒரு இணையத்தளத்தின் வாயிலாக, சமஷ்டி குப்பி அவர்கள் செய்தார்கள். சில நாட்கள் முன்பாகத் தொடங்கப்பட்ட இந்த முயற்சி பெங்களூரூவாசிகளின் மத்தியிலே, சில நாட்களிலேயே மிகவும் பிரபலமானதாகிவிட்டது. நாமனைவரும் இதைப் போன்ற முயற்சிகளில் இணைந்தோம் என்றால், உலகின் இத்தனை தொன்மையான, அறிவியல் செறிவுடைய மொழியின் வாயிலாகப் பலவற்றைக் கற்றுக் கொள்ள முடியும்.
எனதருமை நாட்டுமக்களே, மனதின் குரலின் இந்தப் பதிப்பில் உங்களோடு இணைந்து பயணிப்பது மிகவும் நன்றாக இருக்கிறது. இப்போது முதல் இந்தத் தொடர் எப்போதும் போலவே தொடரும். அடுத்த ஒரு வாரத்திற்குப் பிறகு புனிதமான ரத யாத்திரை தொடங்கவிருக்கிறது. மஹாபிரபு ஜகன்னாதரின் கிருபையானது நாட்டுமக்கள் அனைவரின் மீதும் பொழிய வேண்டும் என்பதே என்னுடைய ஆசை. அமர்நாத் யாத்திரையும் தொடங்கி விட்டது, அடுத்த சில நாட்களில் பண்டர்பூர் வாரியும் தொடங்கிவிடும். இந்தப் புனித யாத்திரைகளில் பங்குபெறும் அனைத்து பக்தர்களுக்கும் நான் என் நல்வாழ்த்துக்களை அளிக்கிறேன். அடுத்து கச்சீ நவவர்ஷ் என்ற ஆஷாடீ பீஜ் பண்டிகையும் வரவிருக்கிறது. இந்த அனைத்து சுபதினங்களுக்குமான என்னுடைய பலப்பல நல்வாழ்த்துக்கள். ஆக்கப்பூர்வ உணர்வு நிரம்பிய, மக்களின் பங்கெடுப்புடன் கூடிய இத்தகைய முயற்சிகளை நீங்கள் என்னோடு பகிர்ந்து கொள்வீர்கள் என்பதே என் நம்பிக்கை. அடுத்த மாதம் உங்களோடு மீண்டும் இணைய ஆவலோடு காத்திருப்பேன். அதுவரை நீங்கள் உங்களையும், உங்கள் குடும்பத்தாரையும் கவனமாகப் பார்த்துக் கொள்ளுங்கள். பலப்பல நன்றிகள். வணக்கம்
***
AD/KV
(Release ID: 2029653)
Visitor Counter : 135
Read this release in:
Manipuri
,
Urdu
,
Telugu
,
Kannada
,
Assamese
,
Khasi
,
English
,
Marathi
,
Hindi
,
Hindi_MP
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Malayalam