பிரதமர் அலுவலகம்
ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் 'இளைஞர்களுக்கு அதிகாரமளித்தல், ஜம்மு-காஷ்மீரை மாற்றியமைத்தல்' நிகழ்ச்சியில் பிரதமர் உரை
प्रविष्टि तिथि:
20 JUN 2024 8:22PM by PIB Chennai
ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள ஷெர்-இ-காஷ்மீர் சர்வதேச மாநாட்டு மையத்தில் நடைபெற்ற "இளைஞர்களுக்கு அதிகாரமளித்தல், ஜம்மு-காஷ்மீரில் மாற்றத்தை ஏற்படுத்துதல்" நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார். ஜம்மு-காஷ்மீரில் சாலை, குடிநீர் விநியோகம் மற்றும் உயர்கல்வியில் உள்கட்டமைப்பு ஆகிய துறைகளை உள்ளடக்கிய ரூ.1,500 கோடிக்கும் அதிக மதிப்பிலான பல வளர்ச்சித் திட்டங்களைப் பிரதமர் தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார். ரூ.1,800 கோடி மதிப்பிலான வேளாண்மை சார்ந்த துறைகளில் போட்டித்திறன் மேம்பாட்டுத் திட்டத்தையும் அவர் தொடங்கி வைத்தார். புதிதாக அரசுப் பணியில் சேர்ந்த 200 பேருக்கு வேலைவாய்ப்பு கடிதங்களை வழங்கும் பணியையும் திரு மோடி தொடங்கினார்.
கூட்டத்தினரிடையே உரையாற்றிய பிரதமர், தனது ஜம்மு காஷ்மீர் பயணம் குறித்து உற்சாகத்தை தெரிவித்ததுடன், அதற்கான இரண்டு முக்கிய காரணங்களையும் குறிப்பிட்டார். "முதலாவதாக, இன்றைய நிகழ்ச்சி ஜம்மு-காஷ்மீரில் வளர்ச்சித் திட்டங்களின் தொடக்கம் மற்றும் அடிக்கல் நாட்டுவது தொடர்பானது, இரண்டாவதாக, மக்களவைத் தேர்தலுக்குப் பின் ஜம்மு-காஷ்மீர் மக்களுடனான முதல் சந்திப்பு, இதுவாகும்" என்று அவர் கூறினார். ஜி-7 உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக அண்மையில் இத்தாலி சென்றதை நினைவுகூர்ந்த பிரதமர், இந்த அரசு மூன்று முறை தொடர்ந்து நீடிப்பதன் தாக்கத்தை எடுத்துரைத்தார். இந்தியர்களின் உயர்ந்த எதிர்பார்ப்புகளே நாட்டின் மிகப்பெரிய பலம் என்றும் அவர் கூறினார்.
"ஜம்மு-காஷ்மீரில் ஏற்பட்டுள்ள மாற்றம் கடந்த 10 ஆண்டுகளில் அரசு செய்த பணிகளின் விளைவாகும்" என்று பிரதமர் மோடி கூறினார். இந்தப் பிராந்தியத்தில் பெண்கள் மற்றும் குறைந்த வருவாய் பின்னணியைச் சேர்ந்தவர்கள் தங்கள் உரிமைகளை இழந்துள்ளனர் என்று சுட்டிக்காட்டிய பிரதமர், தற்போதைய அரசு 'அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம்' என்ற மந்திரத்தை ஏற்றுக்கொண்டு வாய்ப்புகளைக் கொண்டுவரவும், அவர்களின் உரிமைகளை மீட்டெடுக்கவும் பணியாற்றி வருகிறது என்றார். பாகிஸ்தானில் இருந்து குடியேறிய அகதிகள், வால்மீகி சமூகத்தைச் சேர்ந்தவர்கள், துப்புரவு தொழிலாளர்களின் குடும்பங்கள் ஆகியோர் முதல் முறையாக தங்கள் வாக்குரிமையைப் பெற்றனர் என்பதைப் பிரதமர் எடுத்துரைத்தார்.
கடந்த 10 ஆண்டுகளில் காஷ்மீரில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் பற்றி குறிப்பிட்ட பிரதமர், காஷ்மீர் பள்ளத்தாக்கில் சமீபத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை உலகம் காண்கிறது என்றார். ஜி20 உச்சிமாநாட்டின் போது பள்ளத்தாக்கின் மக்கள் அளித்த விருந்தோம்பலை அது தொடர்ந்து பாராட்டுகிறது. பள்ளத்தாக்கில் ஜி 20 உச்சிமாநாடு போன்ற உலகளாவிய நிகழ்வை ஏற்பாடு செய்திருப்பது காஷ்மீர் மக்களை பெருமிதம் கொள்ளச் செய்துள்ளது என்று அவர் கூறினார். கஷ்மீரில் சுற்றுலா எவ்வாறு பேசுபொருளாக மாறியுள்ளது என்று குறிப்பிட்ட பிரதமர், இங்கு நடைபெறவுள்ள சர்வதேச யோகா தின நிகழ்ச்சி மேலும் அதிகமான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் என்றார்.
ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர் திரு மனோஜ் சின்ஹா மத்திய ஆயுஷ் துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு பிரதாப்ராவ் ஜாதவ் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
***
(Release ID: 2027210)
SRI/BR/RR
(रिलीज़ आईडी: 2027362)
आगंतुक पटल : 100
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Telugu
,
Khasi
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Hindi_MP
,
Assamese
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Kannada
,
Malayalam