பிரதமர் அலுவலகம்

ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகரில் சர்வதேச யோகா தினத்தையொட்டி பிரதமர் உரை

"யோகா பயிற்சி செய்பவர்களின் எண்ணிக்கை உலகளவில் அதிகரித்து வருகிறது"

"யோகாவினால் உருவாகும் சூழல் மற்றும் அனுபவத்தை இன்று ஜம்மு-காஷ்மீரில் உணர முடியும்"

"இன்று உலகம் ஒரு புதிய யோகா பொருளாதாரம் உருவாகி வருவதைக் காண்கிறது"

"உலகளாவிய நன்மைக்கான சக்திவாய்ந்த உந்து சக்தியாக யோகாவை உலகம் பார்க்கிறது"

"கடந்த காலத்தின் சுமைகள் இல்லாமல், தற்போதைய தருணத்தில் வாழ யோகா நமக்கு உதவுகிறது"

"சமூகத்தில் நேர்மறையான மாற்றத்திற்கான புதிய பாதைகளை யோகா உருவாக்கிறது"

"நமது நலன் நம்மைச் சுற்றியுள்ள உலகின் நலனுடன் தொடர்புடையது என்பதை உணர யோகா உதவுகிறது"

"யோகா ஒரு ஒழுக்கக் கட்டுப்பாடு மட்டுமல்ல, ஒரு அறிவியலும் கூட"

Posted On: 21 JUN 2024 8:39AM by PIB Chennai

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் இன்று நடைபெற்ற 10-வது சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றினார். சர்வதேச யோகா தினக் கொண்டாட்டங்களுக்கு பிரதமர் தலைமை தாங்கினார் மற்றும் யோகா அமர்வில் பங்கேற்றார்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு யோகா மற்றும் தியான பூமியான ஜம்மு காஷ்மீரில் இன்று கூடியிருப்பதற்கு நன்றி தெரிவித்தார். "யோகாவினால் உருவாகும் சூழல், சக்தி மற்றும் அனுபவத்தை ஜம்மு காஷ்மீரில் இன்று உணர முடிகிறது" என்று திரு மோடி கூறினார். குடிமக்கள் அனைவருக்கும், உலகின் பல்வேறு பகுதிகளில் யோகா பயிற்சி செய்பவர்களுக்கும் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு அவர் தது நல்வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

சர்வதேச யோகா தினத்தின் 10-வது ஆண்டு தினத்தை முன்னிட்டு பேசிய பிரதமர், ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியாவின் முன்மொழிவுக்கு 177 நாடுகள் ஒப்புதல் அளித்ததை நினைவுகூர்ந்தார். 2015-ல் கடமைப் பாதையில் 35,000 பேர் யோகா செய்ததையும், கடந்த ஆண்டு ஐ.நா தலைமையகத்தில் பிரதமர் தலைமையில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் 130-க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்றதையும் அவர் குறிப்பிட்டார். ஆயுஷ் அமைச்சகத்தால் உருவாக்கப்பட்ட யோகா சான்றிதழ் வாரியத்தால் இந்தியாவில் உள்ள 100-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மற்றும் 10 பெரிய வெளிநாட்டு நிறுவனங்கள் அங்கீகரிக்கப்பட்டிருப்பது குறித்து அவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.

உலக அளவில் யோகா பயிற்சி மேற்கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், யோகா மீதான ஈர்ப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் பிரதமர் தெரிவித்தார். யோகாவின் பயன்பாடும் மக்களால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்பதை எடுத்துரைத்த பிரதமர், து கலந்துரையாடல்களின் போது யோகா குறித்து விவாதிக்காத உலகத் தலைவர்களே இல்லை என்று கூறினார். "அனைத்து உலகத் தலைவர்களும் என்னுடனான கலந்துரையாடல்களின் போது யோகா மீது மிகுந்த ஆர்வம் காட்டுகிறார்கள்" என்று அவர் கூறினார். உலகின் ஒவ்வொரு மூலையிலும் யோகா அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறியுள்ளது என்று அவர் உறுதிபடக் கூறினார். உலகம் முழுவதும் யோகாவை ஏற்றுக்கொள்ளும் திறன் அதிகரித்து வருவதை சுட்டிக்காட்டிய பிரதமர், 2015-ம் ஆண்டு தாம் துர்க்மேனிஸ்தானுக்கு பயணம் மேற்கொண்டபோது யோகா மையம் ஒன்றைத் தொடங்கி வைத்ததை நினைவு கூர்ந்தார். இன்று நாட்டில் யோகா மிகவும் பிரபலமாகியுள்ளது என்றார். துர்க்மெனிஸ்தானில் உள்ள மருத்துவப் பல்கலைக்கழகங்கள் யோகா சிகிச்சையை உள்ளடக்கியுள்ளதாகவும், சவுதி அரேபியா அதைத் தங்கள் கல்வி முறையின் ஒரு பகுதியாக மாற்றியுள்ளதாகவும், மங்கோலிய யோகா அறக்கட்டளை பல யோகா பள்ளிகளை நடத்தி வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். ஐரோப்பாவில் யோகாவை ஏற்றுக்கொண்டது பற்றி தெரிவித்த பிரதமர், இதுவரை 1.5 கோடி ஜெர்மனியின் மக்கள் யோகாவை பயிற்சி செய்பவர்களாக மாறியுள்ளனர். 101 வயதான பிரெஞ்சு யோகா ஆசிரியை ஒருவர், ஒரு முறை கூட இந்தியாவுக்கு வரவில்லை என்றாலும், யோகாவிற்காக அவர் ஆற்றிய பங்களிப்புக்காக இந்த ஆண்டு இந்தியா பத்மஸ்ரீ விருது வழங்கியதை அவர் நினைவு கூர்ந்தார். யோகா இன்று ஒரு ஆராய்ச்சிப் பொருளாக மாறியுள்ளது என்றும், பல ஆராய்ச்சிக் கட்டுரைகள் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளன என்றும் அவர் மேலும் கூறினார்.

கடந்த 10 ஆண்டுகளில் யோகா விரிவடைந்ததன் காரணமாக அதைப் பற்றிய கருத்துக்கள் மாறி வருவதைத் தொகுத்துப் பேசிய பிரதமர், புதிய யோகா பொருளாதாரம் குறித்து பேசினார். யோகா சுற்றுலா மீதான ஈர்ப்பு அதிகரித்து வருவதாகவும், உண்மையான யோகாவைக் கற்றுக்கொள்ள இந்தியாவுக்கு வர வேண்டும் என்ற மக்களின் விருப்பம் பற்றியும் அவர் குறிப்பிட்டார். யோகா ஓய்வு விடுதிகள், தங்கும் விடுதிகள், விமான நிலையங்கள் மற்றும் ஹோட்டல்களில் யோகாவுக்கான பிரத்யேக வசதிகள், யோகா ஆடைகள் மற்றும் உபகரணங்கள், தனிப்பட்ட யோகா பயிற்சியாளர்கள், யோகா மற்றும் மனமுழுமை ஆரோக்கிய முயற்சிகளை மேற்கொள்ளும் நிறுவனங்கள் பற்றியும் அவர் குறிப்பிட்டார். இவையனைத்தும் இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளன என்றும் அவர் கூறினார்.

இந்த ஆண்டு சர்வதேச யோகா தினத்தின் கருப்பொருளான 'தனிமனித மற்றும் சமூகத்திற்கான யோகா' பற்றி பேசிய பிரதமர் மோடி, உலகளாவிய நன்மையின் சக்திவாய்ந்த உந்து சக்தியாக யோகாவை உலகம் பார்க்கிறது என்றும், கடந்த காலத்தின் சுமைகள் இல்லாமல் நிகழ்காலத்தில் வாழ இது நமக்கு உதவுகிறது என்றும் கூறினார். "நமது நலன் நம்மைச் சுற்றியுள்ள உலகின் நலனுடன் தொடர்புடையது என்பதை உணர யோகா நமக்கு உதவுகிறது. நாம் மனதளவில் அமைதியாக இருக்கும்போது, உலகில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்த முடியும்" என்று அவர் கூறினார்.

யோகாவின் அறிவியல் அம்சங்களை வலியுறுத்திய பிரதமர், தகவல் சுமையைச் சமாளிப்பது மற்றும் கவனத்தைப் பராமரிப்பது ஆகியவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். அதனால்தான் ராணுவம் முதல் விளையாட்டு வரை பல்வேறு துறைகளில் யோகா இணைக்கப்பட்டுள்ளது என்று பிரதமர் விளக்கினார். விண்வெளி வீரர்களுக்கு யோகா, தியானம் ஆகியவற்றிலும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. சிறைக் கைதிகளிடையே நேர்மறையான எண்ணங்களைப் பரப்ப சிறைகளில் யோகா பயன்படுத்தப்படுகிறது. "சமூகத்தில் நேர்மறையான மாற்றத்திற்கான புதிய பாதைகளை யோகா உருவாக்குகிறது" என்று பிரதமர் மோடி கூறினார்.

யோகாவிலிருந்து பெறப்படும் உத்வேகம் நமது முயற்சிகளுக்கு நேர்மறையான சக்தியை அளிக்கும் என்று பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார். ஜம்மு-காஷ்மீர் மக்கள், குறிப்பாக ஸ்ரீநகர் மக்கள் யோகா மீது கொண்டுள்ள ஆர்வத்தைப் பாராட்டிய பிரதமர், யூனியன் பிரதேசத்தின் சுற்றுலாவை மேம்படுத்த இது ஒரு தளத்தை வழங்குகிறது என்றார். மழைக் காலத்தையும் பொருட்படுத்தாமல் வெளியே வந்து தங்கள் ஆதரவைக் காட்டிய மக்களின் உணர்வையும் அவர் பாராட்டினார். "ஜம்மு-காஷ்மீரில் 50,000 முதல் 60,000 பேர் யோகா நிகழ்ச்சியில் இணைந்திருப்பது மிகப்பெரியது" என்று அவர் மேலும் கூறினார். ஜம்மு காஷ்மீர் மக்கள் அளித்த ஆதரவு மற்றும் பங்கேற்புக்கு நன்றி தெரிவித்து தது உரையை நிறைவு செய்த பிரதமர், உலகெங்கிலும் உள்ள அனைத்து யோகா ஆர்வலர்களுக்கும் தது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

பின்னணி

21 ஜூன் 2024 அன்று 10வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, ஸ்ரீநகரில் உள்ள எஸ்கேஐசிசி-ல் சர்வதேச யோகா தினக் கொண்டாட்டங்களுக்கு பிரதமர் தலைமை தாங்கினார். இந்த ஆண்டு நிகழ்வு இளம் மனங்கள் மற்றும் உடல்களில் யோகாவின் ஆழமான தாக்கத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இந்தக் கொண்டாட்டம் யோகா பயிற்சியில் ஆயிரக்கணக்கானவர்களை ஒன்றிணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது, இது உலகளாவிய அளவில் உடல் ஆரோக்கியத்தையும், மன நலத்தையும் மேம்படுத்துகிறது.

2015 முதல், தில்லி, சண்டிகர், டேராடூன், ராஞ்சி, லக்னோ, மைசூரு மற்றும் நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய இடங்களில் சர்வதேச யோகா தினக் கொண்டாட்டங்களுக்கு பிரதமர் தலைமை தாங்கினார்.

இந்த ஆண்டு கருப்பொருள் 'தனிமனித மற்றும் சமூகத்திற்கான யோகா' தனிநபர் மற்றும் சமூக நல்வாழ்வை வளர்ப்பதில் இரட்டைப் பங்கை எடுத்துக்காட்டுகிறது. கிராமப்புறங்களில் அடிமட்டத்தில் உள்ள மக்கள் பங்கேற்பதையும், யோகா பரவுவதையும் இந்த நிகழ்ச்சி ஊக்குவிக்கும்.

***

(Release ID: 2027255)

SRI/PKV/AG/RR



(Release ID: 2027303) Visitor Counter : 37