பிரதமர் அலுவலகம்

ஜி-7 உச்சிமாநாட்டின் மக்கள் தொடர்பு அமர்வில் பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

Posted On: 14 JUN 2024 10:12PM by PIB Chennai

பிரதமர் மெலோனி அவர்களே,

புனிதர்களே,

மேன்மை தங்கியவர்களே,

மாண்புமிகு பிரமுகர்களே,

வணக்கம்!

முதலாவதாக இந்த உச்சிமாநாட்டிற்கு அழைப்பு விடுத்ததற்காகவும் நமக்கு அன்பான விருந்து உபசாரம் அளித்ததற்காகவும் பிரதமர் மெலோனிக்கு நான் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். அதிபர் ஓலஃப் ஷோல்ஸ்-க்கு நான் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவிக்கிறேன். ஜி-7 உச்சிமாநாடு தனித்துவமானது, வரலாற்றுச் சிறப்புமிக்கது.  இந்தக் குழுவின்  50-வது ஆண்டின் ஜி-7 நண்பர்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.

நண்பர்களே,

கடந்த வாரம் உங்களில் பெரும்பாலோர் ஐரோப்பிய நாடாளுமன்ற தேர்தலில் மும்முரமாக இருந்தீர்கள். சில நண்பர்கள் வருங்கால தேர்தல் குறித்து சிந்தித்துக் கொண்டு இருந்திருப்பீர்கள். இந்தியாவிலும் கூட சில மாதங்களுக்கு முன் தேர்தல் காலமாக இருந்தது. இந்தியத் தேர்தலில், தனித்துவத்தையும் பரிமாணத்தையும், 2,600-க்கும் அதிகமான அரசியல் கட்சிகள்,10 லட்சத்துக்கும் அதிகமான வாக்குச் சாவடிகள், 50 லட்சத்துக்கும்   அதிகமான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், 1 கோடியே 50 லட்சம்  வாக்குச் சாவடி அலுவலர்கள், சுமார் 97 கோடி வாக்காளர்கள்  என்ற புள்ளிவிவரங்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம். இந்தத் தேர்தலில் 64 கோடி வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். நவீனத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியதாக ஒட்டுமொத்த தேர்தல் நடைமுறைகளும் நியாயமானதாக, வெளிப்படையானதாக இருந்தன. இந்த மிகப் பெரிய தேர்தல் முடிவுகள்  ஒரு சில மணி நேரங்களிலேயே அறிவிக்கப்பட்டன. இது உலகின் ஜனநாயகத் திருவிழாவில் மிகப் பெரியதாகும். மேலும் மனிதகுல வரலாற்றிலும் பெரியதாகும். 3-வது முறையாக தங்களுக்கு சேவை செய்யும் வாய்ப்பை இந்திய மக்கள் எனக்கு அளித்திருப்பது எனது அதிர்ஷ்டமாகும். கடந்த 60 ஆண்டுகளில் இந்தியாவில் முதல் முறையாக இது நடந்துள்ளது. பிரதமராகப் பொறுப்பேற்ற ஒரு சில நாட்களிலேயே நண்பர்களாகிய உங்களிடையே இருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.  

நண்பர்களே,

21-ம் நூற்றாண்டு தொழில்நுட்ப நூற்றாண்டாகும். இந்தத் தொழில்நுட்பம் ஒரு பக்கம் மனிதரை நிலவுக்குக் கொண்டு செல்வதில் ஊக்கம் கொடுப்பதாக இருக்கிறது.  மறுபக்கம் சைபர் பாதுகாப்பு என்ற சவால்களையும் இது உருவாக்குகிறது. சமூக சமத்துவம் இன்மைகளை நீக்குவதற்கும் சமூகத்தில் உள்ள அனைவரின் திறமைகளையும் பயன்படுத்துவதற்கும் உகந்ததாக  தொழில்நுட்பத்தின் பயன்களை  சமூகத்தின் அனைத்துத் தரப்பினருக்கும் கொண்டு செல்வதை நாம் கூட்டாக உறுதி செய்ய வேண்டும்.

நண்பர்களே,

எரிசக்தித் துறையில், இந்தியாவின் அணுகுமுறை, அனைவருக்கும் கிடைப்பது, எளிதில் கிடைப்பது, குறைந்த செலவில் கிடைப்பது, ஏற்புடையதாக  இருப்பது என்ற நான்கு கோட்பாடுகளைக் கொண்டுள்ளது.  பருவநிலை மாற்றம் குறித்த உறுப்பு நாடுகளின் மாநாட்டின் நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்கு முன் அனைத்து உறுதிப்பாடுகளையும் நிறைவேற்றிய முதலாவது நாடாக இந்தியா உள்ளது. ஒவ்வொருவரும் தங்களின் தாயை நேசிக்கும் அதே உணர்வுடன் மரக்கன்றுகள் நடும் இயக்கத்தை தனிப்பட்ட முறையிலும், உலகளாவியப் பொறுப்போடும் நடத்த நாங்கள் விரும்புகிறோம். நீங்கள் அனைவரும் அதில் இணைய நான் வலியுறுத்துகிறேன்.

நண்பர்களே,

இன்றைய சந்திப்பு அனைத்து நாடுகளின் முன்னுரிமைகளில் ஆழ்ந்த கவனம் செலுத்துவதைப் பிரதிபலிக்கிறது. இத்தகைய பிரச்சனைகள் அனைத்திலும் நாம் பேச்சுவார்த்தையையும் ஒத்துழைப்பையும் தொடர்வோம்.

உங்களுக்கு மிக்க நன்றி

***

(Release ID: 2025448)

AD/SMB/KPG/RR



(Release ID: 2027019) Visitor Counter : 19