பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தொடர்ந்து இரண்டாவது முறையாக திரு ராஜ்நாத் சிங் பாதுகாப்பு அமைச்சராகப் பொறுப்பேற்றார்

Posted On: 13 JUN 2024 2:39PM by PIB Chennai

தொடர்ந்து இரண்டாவது முறையாக  திரு ராஜ்நாத் சிங் பாதுகாப்பு அமைச்சராக 2024, ஜூன் 13 அன்று பொறுப்பேற்றார். அவர் பொறுப்பேற்க வருகை தந்த போது பாதுகாப்புத் துறை  இணையமைச்சர் திரு சஞ்சய் சேத் அவரை வரவேற்றார். பாதுகாப்புப் படைகளின் தளபதி ஜெனரல் அனில் சௌஹான், ராணுவ தலைமைத் தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டே, விமானப்படைத் தளபதி ஏர் சீஃப் மார்ஷல் வி ஆர் சௌத்ரி, கப்பற்படை தளபதி  அட்மிரல் தினேஷ் திரிபாதி, பாதுகாப்புத் துறை செயலாளர் திரு கிரிதர் அரமானே, முன்னாள் ராணுவ வீரர்கள் நலத்துறை செயலாளர் டாக்டர் நிதேன் சந்தரா, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் தலைவர் டாக்டர்  சமீர் வி காமத் மற்றும் பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகள் உடனிருந்தனர்.

அமைச்சராக பொறுப்பேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய திரு ராஜ்நாத் சிங், அடுத்த 5 ஆண்டுகளுக்கான தமது தொலைநோக்குத் திட்டம் பற்றி  எடுத்துரைத்தார். பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையின் கீழ், பாதுகாப்புத் தொழில் துறை உற்பத்தியில் தற்சார்பை அடைவதில் கவனம் செலுத்தி நாட்டின் பாதுகாப்பு நிலைமையை மேலும் வலுப்படுத்துவது  எங்கள் நோக்கம் என்று அவர் கூறினார். ராணுவத்தை நவீனமயமாக்குதல், தற்போது பணியில் உள்ள மற்றும் ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களின் நலன் ஆகியவற்றுக்கு எங்களின் கவனம் முதன்மையானதாக தொடரும் என்று அவர் தெரிவித்தார்.

2023-24 நிதியாண்டில் பாதுகாப்பு தளவாடங்கள் ஏற்றுமதி ரூ.21,083 கோடி என்ற அளவை தொட்டது. இது வரலாற்றுச் சிறப்புமிக்கது. 2028-29 வாக்கில் பாதுகாப்பு சாதனங்கள் ஏற்றுமதி அளவை ரூ. 50 ஆயிரம் கோடியாக உயர்த்துவது எங்களின் இலக்கு என்றும் அவர் கூறினார்.

இதைத் தொடர்ந்து பாதுகாப்பு அமைச்சகத்தின் முதல் 100 நாள் செயல் திட்டம் குறித்த ஆய்வுக் கூட்டத்தை திரு ராஜ்நாத் சிங் நடத்தினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2025004

***

AD/SMB/RS/RR


(Release ID: 2025017) Visitor Counter : 77