தேர்தல் ஆணையம்

மக்களவைத் தேர்தல்: 6-வது கட்டமாக 8 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் உள்ள 58 நாடாளுமன்றத் தொகுதிகளில் அமைதியான வாக்குப்பதிவு

Posted On: 25 MAY 2024 8:13PM by PIB Chennai

58 நாடாளுமன்றத் தொகுதிகளில் தொடங்கிய 2024 பொதுத் தேர்தலின் ஆறாம் கட்ட வாக்குப்பதிவில் இரவு 7:45 மணி நிலவரப்படி தோராயமாக 59.06% வாக்குகள் பதிவாகியுள்ளன. நாட்டின் சில பகுதிகளில் வெப்பமான வானிலை இருந்தபோதிலும், வாக்காளர்கள் நாடு முழுவதும் வாக்களிக்க பொறுமையாக வரிசையில் நிற்பதைக் காண முடிந்தது. வாக்குப்பதிவு முடிந்த நேரத்தில் சில வாக்குச்சாவடிகளில் ஏராளமான வாக்காளர்கள் வரிசையில் காத்திருந்தனர்.

ஜம்மு-காஷ்மீரில் அனந்த்நாக்-ரஜோரி நாடாளுமன்றத் தொகுதியில் வாக்குப்பதிவு முற்றிலும் அமைதியாக இருந்தது, இரவு 7.45 மணி நிலவரப்படி 52.28% வாக்குகள் பதிவாகியுள்ளன, இது பல தசாப்தங்களில் மிக அதிகம். இதையடுத்து, ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உள்ள நாடாளுமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. நடப்பு 2024 பொதுத் தேர்தலில், பள்ளத்தாக்கில் உள்ள ஸ்ரீநகர் பாரமுல்லா மற்றும் அனந்த்நாக்-ரஜோரி (ஆகிய மூன்று தொகுதிகளில் இரவு 7:45 மணி நிலவரப்படி முறையே  38.49%, 59.1% மற்றும் 52.28% வாக்குகள் பதிவாகியுள்ளன, இது பல தசாப்தங்களில் ஒப்பிடும்போது மிக உயர்ந்த எண்ணிக்கையாகும்.

பீகார், ஜம்மு-காஷ்மீர், ஹரியானா, ஜார்க்கண்ட், என்.சி.டி தில்லி, ஒடிசா, உத்தரப் பிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நடைபெற்ற தேர்தலில் மொத்தம் 889 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர்.

அனைத்து தொகுதிகளிலும் வாக்குப்பதிவு சுமூகமாகவும், அமைதியாகவும் நடைபெற்றது. தலைமைத் தேர்தல் ஆணையர் திரு ராஜீவ் குமார், தேர்தல் ஆணையர்கள் திரு ஞானேஷ் குமார், திரு சுக்பீர் சிங் சந்து ஆகியோரும் தங்கள் குடும்பத்தினருடன் வாக்குச்சாவடிகளில் வாக்களித்தனர். தேர்தல் நடைமுறையின் ஒவ்வொரு அம்சத்தையும் அவர்கள் உன்னிப்பாகக் கண்காணித்து, தேவையான வழிகாட்டுதல்களை வழங்கினர். வாக்காளர்கள் அச்சமோ மிரட்டலோ இன்றி வாக்களிப்பதற்கு உகந்த சூழலை உருவாக்கும் வகையில் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

ஒடிசாவில் 42 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் மக்களவைத் தொகுதிகளுக்கும் ஒரே நேரத்தில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இரவு 7:45 மணி நிலவரப்படி 60.07% வாக்குகள் பதிவாகியிருந்தன. 

6-ஆம் கட்ட தேர்தல் முடிவடைந்த நிலையில், 2024 பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இப்போது 28 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் மற்றும் 486 நாடாளுமன்றத் தொகுதிகளில் நிறைவடைந்துள்ளது. அருணாச்சலப் பிரதேசம், சிக்கிம், ஆந்திரா ஆகிய மாநில சட்டப்பேரவைகள் மற்றும் ஒடிசா மாநில சட்டப்பேரவையின் 105 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. 7-வது மற்றும் இறுதி கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1, 2024 அன்று 8 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் 57 நாடாளுமன்றத் தொகுதிகளில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

***********  

ANU/AD/BR/KV 
 



(Release ID: 2021699) Visitor Counter : 54