தேர்தல் ஆணையம்

13 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் 2-ஆம் கட்ட வாக்குப்பதிவு சுமுகமாக நிறைவடைந்தது

Posted On: 26 APR 2024 9:37PM by PIB Chennai

இன்று காலை 7 மணிக்குத் தொடங்கிய 2024 பொதுத் தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில், இரவு 7 மணி நிலவரப்படி சுமார் 60.96% வாக்குகள் பதிவாகியுள்ளன. 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த வாக்காளர்கள் வெப்பமான காலநிலையையும் பொருட்படுத்தாமல் தங்கள் வாக்குச்சாவடியில் ஆர்வத்துடன் வாக்களித்தனர். புதுமணத் தம்பதிகள் முதல் மூத்த குடிமக்கள் வரை, பழங்குடியினர் முதல் தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள், மாற்றுத்திறனாளிகள், பெண்கள் மற்றும் இளைஞர்கள் அனைவரும் வாக்களிக்க வரிசையில் காத்திருந்தனர். 2024-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கான 14 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது.

அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வாக்குப்பதிவு சுமூகமாகவும், அமைதியாகவும் நடைபெற்றது. தலைமைத் தேர்தல் ஆணையர் திரு ராஜீவ் குமார், தேர்தல் ஆணையர்கள் திரு ஞானேஷ் குமார் மற்றும் திரு சுக்பீர் சிங் சந்து ஆகியோருடன் காலை முதல் வாக்குப்பதிவு நடைமுறைகளை தொடர்ந்து கண்காணித்தார். சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகள் அமல்படுத்தப்பட்டு, வாக்காளர்கள் அச்சமோ அச்சுறுத்தலோ இன்றி வாக்களிப்பதற்கு உகந்த சூழல் உருவாக்கப்பட்டது. 1 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகள் வெப்காஸ்ட் செய்யப்பட்டன.

பீகாரில் உள்ள பாங்கா, மாதேபுரா, ககாரியா மற்றும் முங்கர் தொகுதிகளில் உள்ள பல வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நேரம் மாலை 6 மணி வரை நீட்டிக்கப்பட்டது. வெப்பத்தை சமாளிக்க வாக்காளர்களின் வசதிக்காக ஷாமியானா, குடிநீர், மருத்துவ உபகரணங்கள், மின்விசிறிகள் உள்ளிட்ட சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

2-ஆம் கட்டமாக, சத்தீஸ்கரில் உள்ள பஸ்தார் மற்றும் காங்கர் மையங்களில் 46 கிராமங்களைச் சேர்ந்த வாக்காளர்கள் மக்களவைத் தேர்தலில் முதல் முறையாக தங்கள் சொந்த கிராமத்தில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் வாக்களித்தனர். இதனால், முதல் கட்டம் உட்பட, ஒட்டுமொத்தமாக, கிராம மக்களின் வசதிக்காக இங்கு முதல் முறையாக 102 புதிய வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன.

குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய பழங்குடியினர், வயதானவர்கள், இளைஞர்கள் மற்றும் முதல் முறையாக வாக்களிப்பவர்கள், பெண்கள் மற்றும் திருநங்கைகள் மத்தியில் வாக்களிப்பதை எளிதாக்க ஆணையம் சிறப்பு முயற்சிகளை மேற்கொண்டது.

புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர்கள் அனில் கும்ப்ளே, ராகுல் டிராவிட், ஜவகல் ஸ்ரீநாத் ஆகியோர் பெங்களூருவில் உள்ள பல்வேறு வாக்குச்சாவடிகளில் வாக்களித்தனர்.  தேர்தல் நடைமுறையில் பங்கேற்பதன் முக்கியத்துவம் குறித்த செய்தியை இளைஞர்களுக்கு அவர்கள் எடுத்துரைத்தனர்.

********* 

ANU/AD/BR/KV



(Release ID: 2018992) Visitor Counter : 50