புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்
உலக எரிசக்தி காங்கிரஸ் 2024: புதிய மற்றும் வளர்ந்து வரும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தொழில்நுட்பங்களுக்கான புதுமையான நிதி தீர்வுகள் அவசியமாகும்: ஐஆர்இடிஏ தலைவர்
Posted On:
26 APR 2024 10:46AM by PIB Chennai
இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு முகமை நிறுவனத்தின் (ஐஆர்இடிஏ) தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் திரு பிரதீப் குமார் தாஸ், நெதர்லாந்தின் ரோட்டர்டாமில் நடைபெற்ற உலக எரிசக்தி மாநாட்டின் 26-வது பதிப்பில் "புதிய பரஸ்பர சார்புகள்: நம்பிக்கை, பாதுகாப்பு மற்றும் காலநிலை தாக்கம்" என்ற குழு விவாதத்தில் பங்கேற்றார்.
இந்த விவாதத்தின்போது, எரிசக்தி மாற்றத்தை நோக்கிய இந்தியாவின் பயணம் குறித்த நுண்ணறிவுகளை ஐஆர்இடிஏ தலைவர் பகிர்ந்து கொண்டார். நாட்டிற்குள் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை ஏற்றுக்கொள்வதை முன்னெடுப்பதில் ஐஆர்இடிஏ-வின் முக்கிய பங்கை எடுத்துரைத்தார். 2030-ம் ஆண்டுக்குள் 500 ஜிகாவாட் புதைபடிவ எரிபொருள் அல்லாத எரிசக்தித் திறனை எட்ட வேண்டும் என்ற இந்தியாவின் லட்சிய இலக்கு, பருவநிலை மாற்றத்திற்கு எதிரான உலகளாவிய போராட்டத்தில் நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக நிலைநிறுத்தியுள்ளது என்று அவர் கூறினார். 2070-ம் ஆண்டுக்குள் நிகர பூஜ்ஜிய உமிழ்வை அடைவதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டையும் அவர் எடுத்துரைத்தார். புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் ஏற்பட்டுள்ள விரைவான முன்னேற்றத்துடன், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிறுவு திறனில் உலகளவில் இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது என்று அவர் சுட்டிக்காட்டினார்.
நாட்டின் மிகப்பெரிய தூய பசுமை நிதியுதவி என்பிஎப்சி-யாக, ஐஆர்இடிஏ ஆற்றல் மாற்றத்தை விரைவுபடுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. அபாயங்களைத் தணிப்பதற்கான புதுமையான நிதிக் கருவிகளைப் பயன்படுத்துவதன் மூலமும், புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் தனியார் துறையின் ஈடுபாட்டை ஊக்குவிப்பதன் மூலமும் எரிசக்தி மாற்றத் திட்டங்களுக்கு நிதியளிப்பதை எளிதாக்குவதில் ஐஆர்இடிஏ-ன் முயற்சிகளை அவர் சுட்டிக்காட்டினார்.
உலக எரிசக்தி மாநாட்டுக் குழு தற்போதைய உலகளாவிய எரிசக்தி நெருக்கடி குறித்தும் விவாதித்தது. எரிசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்த பல்வகைப்படுத்தல் மற்றும் வலுவான உள்கட்டமைப்பின் முக்கியத்துவத்தை ஐஆர்இடிஏ தலைவர் வலியுறுத்தினார். வலுவான மின் கட்டமைப்பு மூலம் பிராந்திய சந்தைகளை ஒருங்கிணைப்பதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார்.
முடிவில், பசுமை பொருளாதாரத்திற்கான ஐஆர்இடிஏ-வின் நிலையான உறுதிப்பாட்டை மீண்டும் அவர் எடுத்துரைத்தார். நிறுவனம் தொடர்ந்து முதலீடுகளை ஈர்ப்பதுடன், தொழில்நுட்ப முன்னேற்றங்களை வளர்ப்பது மற்றும் கொள்கை சீர்திருத்தங்களுக்கு வாதிடுவதாக அவர் கூறினார். 2070-ம் ஆண்டளவில் நிகர பூஜ்ஜிய உமிழ்வை அடைவதை நோக்கி இந்தியா முன்னேறும்போது, ஐஆர்இடிஏ முன்னணியில் இருக்கும் என்று அவர் தெரிவித்தார்.
***
PKV/RS/KV
(Release ID: 2018913)
Visitor Counter : 113