உள்துறை அமைச்சகம்
கலைத்துறையில் சிறப்பான பங்களிப்புகளுக்காக டாக்டர் பத்மா சுப்பிரமணியத்திற்கு நாட்டின் இரண்டாவது மிக உயர்ந்த குடிமை விருதான பத்ம விபூஷண் வழங்கப்பட்டுள்ளது
திரு ஆர்.என்.ஜோ டி குரூஸ், திரு சேஷம்பட்டி தீர்த்தகிரி சிவலிங்கம் ஆகியோர் முறையே இலக்கியம், கல்வி மற்றும் கலைத் துறைகளில் சிறந்த பங்களிப்பிற்காக பத்மஸ்ரீ விருது பெற்றனர்
Posted On:
22 APR 2024 9:34PM by PIB Chennai
கலைத்துறையில் சிறந்த பங்களிப்புகளுக்காக டாக்டர் பத்மா சுப்பிரமணியத்திற்கு, குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு பத்ம விபூஷண் விருது வழங்கினார். திரு ஆர்.என்.ஜோ டி குரூஸ், திரு சேஷம்பட்டி தீர்த்தகிரி சிவலிங்கம் ஆகியோருக்கு முறையே இலக்கியம், கல்வி மற்றும் கலைத் துறைகளில் சிறந்த பங்களிப்பிற்காக பத்மஸ்ரீ விருதுகள் வழங்கப்பட்டன. விருது பெற்ற இவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். புதுதில்லியில் உள்ள குடியரசுத்தலைவர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் இந்த விருதுகள் வழங்கப்பட்டன.
விருது பெற்றவர்களின் வாழ்க்கை மற்றும் பணி பற்றிய விவரங்கள் வருமாறு-
1. டாக்டர் பத்மா சுப்பிரமணியம்
டாக்டர் பத்மா சுப்பிரமணியம், சர்வதேச அளவில் பாராட்டப்பட்ட பரதநாட்டியக் கலைஞர், நடன இயக்குநர், ஆராய்ச்சியாளர், பாடகர், இசையமைப்பாளர், ஆசிரியர், எழுத்தாளர் ஆவார்.
பிப்ரவரி 4, 1943-ல் பிறந்த இவர், தனது தந்தையால் 1942-ல் நிறுவப்பட்ட தொண்டு நிறுவனமான நிருத்யோதயாவின் தலைவராக உள்ளார். ஆசிய கலாச்சாரத்திற்கான பாரத இளங்கோ அறக்கட்டளையின் (பி.ஐ.எஃப்.ஏ.சி) நிறுவனர் மற்றும் நிர்வாக அறங்காவலராகவும், புதுதில்லி இந்திரா காந்தி தேசிய கலை மையத்தின் (ஐ.ஜி.என்.சி.ஏ) அறங்காவலராகவும் உள்ளார்.
பாரதிய சாஸ்திரிய நடனத்தின் வரலாறு, கோட்பாடு மற்றும் நடைமுறைக்கு இடையிலான இடைவெளியை முதன்முதலில் நிரப்பியவர் டாக்டர் பத்மா சுப்பிரமணியம். பரதமுனியின் நாட்டிய சாஸ்திரத்தை அடிப்படையாகக் கொண்ட "இந்திய நடனம் மற்றும் சிற்பக் கலைகளில் கரணங்கள்" குறித்த ஆராய்ச்சியில் முனைவர் பட்டம் பெற்ற முதல் நடனக் கலைஞர் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார். இவரது ஆராய்ச்சி, ஒரு தனித்துவமான கற்பித்தலுடன் தனது சொந்த நடன பாணியை உருவாக்க வழிவகுத்தது. அதற்கு இவர் பரதநிருத்யம் என்று பெயரிட்டார். சுதந்திரத்திற்குப் பிந்தைய இந்தியாவில் பிராந்திய பாரம்பரிய நடன வடிவமான தேசி அங்கீகரிக்கப்பட்டாலும், இவரது படைப்பு, மார்கம் அல்லது பாரதமுனி வகுத்த பாதை என்று அழைக்கப்படும் நுட்பத்தில் பொதுவான பாரதிய பாரம்பரியத்தின் மறுமலர்ச்சியாக இருந்தது.
காஞ்சி காமகோடி பீடத்தின் 68-வது சங்கராச்சாரியாரான காஞ்சி மகாசுவாமிகள் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் மீது கொண்டிருந்த அளவற்ற பக்தி கொண்டிருந்த இவர், பாராட்டுகளையும், விமர்சனங்களையும் சமநிலையுடன் நோக்குவதும், தன்னலமற்ற தேசியம் என்ற தனது பார்வையில் உறுதியாக இருப்பதும் இவருக்கு அளப்பரிய வலிமையை அளித்துள்ளது. இந்தியாவின் முன்னாள் குடியரசுத்தலைவர் திரு ஆர்.வெங்கட்ராமன் இவரை "ஆக்கபூர்வமான கிளர்ச்சியாளர்" என்று குறிப்பிட்டார். இந்தியக் கலாச்சாரத்தின் மீதான இவரது உறுதியான பற்றுதலை இவரின் படைப்புகள் மற்றும் எழுத்துக்களில் காணலாம். சமஸ்கிருதம், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, மராத்தி, பெங்காலி, காஷ்மீரி போன்ற மொழிகளை உள்ளடக்கிய வேதம் முதல் சுதந்திரப் போராட்டம் வரை, வேதாந்தம் முதல் காதல் கவிதைகள் வரை தனது அனைத்து நடனத் தயாரிப்புகளுக்கும் இவர் இசையமைத்துள்ளார். இவர் பல புத்தகங்களை எழுதியிருப்பதுடன் சில பல்கலைக்கழகங்களுடன் தொடர்பில் உள்ளார். 1992-ம் ஆண்டில் தூர்தர்ஷனால் ஒளிபரப்பப்பட்ட இவரது தொலைக்காட்சித் தொடரான "பாரதிய நாட்டிய சாஸ்திரம்", பாரதத்தின் பொதுவான கலாச்சார வேர்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. ஐ.ஜி.என்.சி.ஏ தயாரித்து, விடுதலையின் அமிர்தப் பெரு விழாவின் போது வெளியிடப்பட்ட 10.5 மணி நேர ஆவணத் தொடரான "கரண உஜ்ஜீவனம்" மூலம் இவர் தனது முழு ஆராய்ச்சிப் பணிகளையும் தேசத்திற்கு அர்ப்பணித்துள்ளார்.
காஞ்சி மகாசுவாமிகள் விருப்பத்தின் பேரில் மகாராஷ்டிராவின் சதாராவில் கட்டப்பட்ட உத்தர சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கான கரண சிற்பங்களில் டாக்டர் பத்மா சுப்பிரமணியத்தின் வடிவமைப்புகள், இந்தோனேசியாவின் பிரம்பானனில் உள்ள சிவன் கோவிலில் இவர் கண்டுபிடித்த 9-ஆம் நூற்றாண்டு சிற்பங்களுடன் ஒத்துப்போகின்றன. இது ஆசிய கலாச்சாரத்திற்கான பாரத இளங்கோ அறக்கட்டளை (பி.ஐ.எஃப்.ஏ.சி), ஆசிய ஆராய்ச்சி மையத்தை நிறுவ இவருக்கு உத்வேகம் அளித்தது, இதில் பரதமுனிக்கு ஒரு நினைவு ஆலயம், ஆசிய நிகழ்த்துக் கலைகளின் அருங்காட்சியகம் ஆகியவை உள்ளன.
பத்மஸ்ரீ, பத்ம பூஷண், அகாடமி ரத்னா உள்ளிட்ட 150-க்கும் அதிகமான விருதுகளை டாக்டர் பத்மா சுப்பிரமணியம் பெற்றுள்ளார். தமிழ்நாடு அரசின் கலைமாமணி, மத்தியப் பிரதேச அரசின் காளிதாஸ் சம்மான் போன்று மாநில அரசுகளின் பல விருதுகளையும் பெற்றுள்ளார். "ஆசியாவில் நல்லிணக்கம் மற்றும் வளர்ச்சியில் இவரது பங்களிப்புக்காக" ஜப்பானின் ஃபுகுவோகா ஆசிய கலாச்சார பரிசைப் பெற்ற ஒரே இந்திய நடனக் கலைஞர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. கல்விப் பங்களிப்புக்காக மும்பையின் 'ஃபெல்லோ ஆஃப் ஆசியாடிக் சொசைட்டி' என்ற அங்கீகாரம் பெற்ற ஒரே கலைஞரும் இவர்தான்.
2. திரு ஆர்.என். ஜோ டி' குரூஸ்
சென்னை சசி லாஜிஸ்டிக்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி / ஆலோசகரான திரு ஆர்.என்.ஜோ டி’ குரூஸ், கடந்த 35 ஆண்டுகளாக வர்த்தகக் கப்பல் மற்றும் சரக்குப் போக்குவரத்து துறையில் பணியாற்றி வருகிறார். வர்த்தகக் கப்பல் துறையில் பரவலாக அறியப்பட்ட இவர், தீபகற்ப இந்தியாவில் கடலோரக் கப்பல் போக்குவரத்தின் வளர்ச்சிக்குப் பெரிதும் பங்களித்துள்ளார்.
1963, மே 17 அன்று ஒரு பாரம்பரிய மீனவக் குடும்பத்தில் பிறந்த திரு டி’ குரூஸ் தனது வாழ்க்கையின் ஆரம்ப கட்டங்களிலிருந்தே கடலோர இந்தியாவின் வாழ்க்கை, வாழ்வாதாரம் மற்றும் நலனில் ஆர்வத்தை வளர்த்துக் கொண்டதோடு, கடலோர சமூகங்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக பணியாற்றத் தொடங்கினார். சென்னை லயோலா கல்லூரியில் பொருளாதாரத்தில் முதுநிலைப் பட்டமும், திருச்சி புனித ஜோசப் கல்லூரியில் பொருளாதாரத்தில் அறிவியல் நிறைஞர் பட்டமும் பெற்றார். கடலோர இளைஞர்களுக்குக் கல்வி மற்றும் தொழில் வழிகாட்டல் என்ற அவரது ஆரம்ப முயற்சி, இறுதியில் அவரைக் கடலோர வாழ்க்கையின் வரலாற்றாசிரியராக மாற்றியது. சாதி, இனம் மற்றும் மத வேறுபாடுகளுக்கு அப்பால், தேசக் கட்டமைப்பில், தேசத்தின் முதல் தர கடலோரப் பாதுகாப்பு, சமூகங்களின் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் விழிப்புணர்வு மற்றும் பங்கேற்பிற்காக அவர்களுடன் பணியாற்றினார்.
முன்னணி செய்தித்தாள்கள் மற்றும் சஞ்சிகைகளில் பத்தி எழுத்தாளராக, திரு டி'குரூஸின் எழுத்துக்கள் கடலோர வாழ்க்கையைச் சுற்றி அமைந்துள்ளன, இது மீனவர்களின் வளமான பாரம்பரியம் பற்றி பரவலான வாசகர்களின் கவனத்தை ஈர்த்தவை. நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காக மீன்பிடித்தல் மற்றும் கப்பல் போக்குவரத்தை ஒரே நேரத்தில் மேம்படுத்தும் நிலையான நீலப் பொருளாதாரத்தின் ஆதரவாளர் இவர். சிந்தனைக் குழுவான பாரத கலாச்சாரம் மற்றும் பாரம்பரிய அறக்கட்டளையின் நிறுவனரான இவர், இரு தரப்பினரின் நலனுக்காக இணக்கமான தீர்வுகளுக்கு கடற்கரைக்கும், அரசுக்கும் இடையே ஒரு பாலமாக செயல்படுகிறார்.
திரு டி'குரூஸ் தனது எழுத்துக்கள் மற்றும் ஆவணப்படங்களுக்காக பல விருதுகளைப் பெற்றுள்ளார். 2013 -ஆம் ஆண்டில் தனது கொற்கை புதினத்திற்காக இவர் சாகித்ய அகாடமி விருது பெற்றார். தேசிய கப்பல் வாரியம் மற்றும் கடற்பயணிகளின் தேசிய நல வாரியத்தின் உறுப்பினரான இவர், தலைமுறை தலைமுறையாகக் கடைப்பிடிக்கப்படும் பாரம்பரிய கடல்சார் ஞானத்தைப் புரிந்துகொண்டு நிலையான மீன்பிடித்தல் மற்றும் கப்பல் செயல்பாடுகளில் பங்களிப்பு செய்து ஊக்கம் அளித்து வருகிறார்.
3. திரு சேஷம்பட்டி தீர்த்தகிரி சிவலிங்கம்
திரு சேஷம்பட்டி தீர்த்தகிரி சிவலிங்கம், புகழ்பெற்ற ஒரு நாதஸ்வர கலைஞர் ஆவார், இவர் இந்தப் பாரம்பரிய இந்தியக் கலையுடன் உலகை வளப்படுத்த தனது வாழ்க்கையை அர்ப்பணித்துள்ளார்.
1944-ம் ஆண்டு ஜூலை 7 அன்று பிறந்த திரு சிவலிங்கம், தனது 7 வயதில் தனது தந்தை திரு சேஷம்பட்டி பி.தீர்த்தகிரியிடம் பயிற்சியைத் தொடங்கினார். மேலும் அவருடன் கச்சேரிகளுக்குச் சென்றபோது, காருக்குறிச்சி அருணாசலம், டி.என்.ராஜரத்தினம் பிள்ளை போன்ற சிறந்த கலைஞர்களுடன் அறிமுகமானார். கீவளூர் என்.ஜி.கணேசனிடம் பயிற்சி பெற தஞ்சாவூர் சென்றார். பின்னர் 1971 -ம் ஆண்டில் கர்நாடக இசைக் கல்லூரியில் வாத்ய விஷாரத் பட்டம் பெற சென்னை சென்றார். சென்னையில், திரு கீரனூர் ராமசாமி பிள்ளையிடம் பயிற்சி பெற்ற இவர், பின்னர் திருவாரூர் லட்சப்ப பிள்ளையிடம் இந்திய அரசு அறிஞராக சிறப்புப் பயிற்சி பெற்றார். பாரம்பரிய முறைகளில் தேர்ச்சி பெற்ற திரு சிவலிங்கம், உண்மையான ராக ஆலாபனைகளுக்குப் புகழ்பெற்ற தனது சொந்த தனித்துவமான பாணியை உருவாக்கினார். பல தசாப்தங்களாக, இவர் ஒரு முன்னணி நாதஸ்வர வித்வானாக முக்கியத்துவம் பெற்றுள்ளார், புகழ்பெற்ற சபாக்களில் பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தவர்.
திரு சிவலிங்கம், தனது பண்டைய கருவியான நாதஸ்வரத்தை நியூயார்க், பிட்ஸ்பர்க், சிகாகோ, சான் டியாகோ, சிட்னி போன்ற நகரங்களிலும் இசைத்துள்ளார். மேலும், உலகத் தமிழ் மாநாடுகளிலும் பங்கேற்றுள்ளார். பயிலரங்குகள் மூலமாகவும், கர்நாடக இசையில் சர்வதேச மாணவர்களுக்கு வழிகாட்டுவதன் மூலமும், இந்தியப் பாரம்பரிய இசையை சர்வதேச அளவில் கொண்டு சென்று, டென்மார்க், சுவீடன், அமெரிக்கா, ஹங்கேரி போன்ற நாடுகளைச் சேர்ந்த மாணவர்களுக்குப் பயிற்சி அளித்துள்ளார்.
சங்கீதா, காஸ்மிக், மோசர்பேர் போன்ற நிறுவனங்களுடன் பாராட்டப்பட்ட பல இசை ஆல்பங்கள் உட்பட கணிசமான படைப்புகளையும் திரு சிவலிங்கம் தந்துள்ளார். ஏ-கிரேடு கலைஞராக, ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக அகில இந்திய வானொலி மற்றும் தூர்தர்ஷனில் பல மறக்கமுடியாத நிகழ்ச்சிகளை வழங்கியுள்ளார். அகில இந்திய வானொலி போன்ற புகழ்பெற்ற அமைப்புகளுக்கான போட்டிகள் மற்றும் தேர்வுகளுக்கு நடுவராக அழைக்கப்பட்டுள்ளார். கர்நாடக இசை உலகில் இவரது அந்தஸ்தை அங்கீகரிக்கும் வகையில் முன்னணி ஊடகங்களின் நேர்காணல்களில் பங்கேற்றுள்ளார்.
சங்கீத நாடக அகாடமி, கலைமாமணி, தமிழிசைச் சங்கத்தின் இசைப் பேரறிஞர், மியூசிக் அகாடமியின் டி.டி.கே விருது போன்ற பல பெருமைமிகு விருதுகளையும் இவர் பெற்றுள்ளார்.
***
AD/RB/DL
(Release ID: 2018540)
Visitor Counter : 105