பிரதமர் அலுவலகம்
ராஜ்கோட்டில் ஸ்ரீ சுவாமிநாராயண் குருகுலத்தின் 75-வது அமிர்தப் பெருவிழாவில் பிரதமரின் உரை
Posted On:
24 DEC 2022 2:32PM by PIB Chennai
ஜெய் ஸ்வாமிநாராயண்!
பூஜ்ய ஸ்ரீ தேவ்கிருஷ்ணதாஸ் சுவாமி அவர்களே, மஹந்த் ஸ்ரீ தேவ்பிரசாதாஸ் சுவாமி அவர்களே, பூஜ்ய தர்மவல்லப சுவாமி அவர்களே, இந்தப் புனித நிகழ்ச்சிக்கு வழிகாட்டும் மரியாதைக்குரிய அனைத்துத் துறவிகளே, நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ள மற்ற பிரமுகர்களே, எனதருமை இளம் நண்பர்களே!
உங்கள் அனைவருக்கும் ஜெய் சுவாமிநாராயண்!
பூஜ்ய சாஸ்திரி மகராஜ் ஸ்ரீ தர்மஜீவன்தாஸ் சுவாமியின் உத்வேகம் மற்றும் ஆசீர்வாதங்களுடன், ராஜ்கோட் குருகுலம் 75 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. ராஜ்கோட் குருகுலத்தின் 75 ஆண்டுகால பயணத்திற்காக உங்கள் அனைவரையும் நான் மனதார வாழ்த்துகிறேன். பகவான் ஸ்ரீ சுவாமிநாராயணனின் நாமத்தை நினைவில் கொள்வதன் மூலமாக மட்டுமே ஒரு புதிய உணர்வு உருவாக்கப்படுகிறது.
நண்பர்களே,
நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், ராஜ்கோட்டில் உள்ள திரு சுவாமிநாராயண் குருகுலத்தின் 75 ஆண்டு நிறைவடைகிறது. இது ஒரு மகிழ்ச்சியான தற்செயல் நிகழ்வு மட்டுமல்ல, இது ஓர் அதிர்ஷ்டமான சந்தர்ப்பமும் கூட. ஒரு நாடாக சுதந்திர இந்தியாவின் பயணம் இதுபோன்ற வாய்ப்புகள் மற்றும் ஆயிரக்கணக்கான ஆண்டுகால நமது சிறந்த பாரம்பரியத்தால் முன்னேறி வருகிறது. கடமை, கடின உழைப்பு, கலாச்சாரம், அர்ப்பணிப்பு, ஆன்மீகம், நவீனம் ஆகியவற்றின் சங்கமங்களால் ஏற்பட்டவை இவை. நாடு சுதந்திரம் அடைந்தபோது, இந்தியாவின் பண்டைய பெருமையையும், கல்வித் துறையில் நமது பெருமிதத்தையும் புதுப்பிக்க வேண்டியது நமது பொறுப்பாக இருந்தது. ஆனால் அடிமை மனப்பான்மையின் அழுத்தத்தில் இருந்த அரசுகள் அந்தத் திசையில் செல்லவில்லை. சில விஷயங்களில், அது தவறான நடவடிக்கைகளை எடுத்தது. இத்தகைய சூழ்நிலைகளில், நாட்டுக்கான இந்தக் கடமையை நிறைவேற்ற நமது துறவிகளும், ஆச்சாரியர்களும் மீண்டும் ஒருமுறை முன்முயற்சி எடுத்தார்கள்.
ராஜ்கோட்டில் ஏழு மாணவர்களுடன் தொடங்கப்பட்ட குருகுல வித்யா பிரதிஷ்டானுக்கு இன்று உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் சுமார் 40 கிளைகள் உள்ளன. இங்கு ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் வந்து செல்கின்றனர். கடந்த 75 ஆண்டுகளில், மாணவர்களின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காக நல்ல எண்ணங்கள் மற்றும் மதிப்புகளை குருகுலம் வளர்த்துள்ளது.
நண்பர்களே,
இந்தியாவில் அறிவுதான் வாழ்க்கையின் மிக உயர்ந்த தேடலாக இருந்துள்ளது என்பதை நீங்கள் அறிவீர்கள். அதனால்தான், உலகின் பிற பகுதிகள் அவர்களின் ஆளும் வம்சங்களுடன் அடையாளம் காணப்பட்டபோது, இந்திய அடையாளம் அதன் குருகுலங்களுடன் இணைக்கப்பட்டது. குருகுலம் என்றால் குரு குடும்பம், ஞான குடும்பம் என்று பொருள்!
நண்பர்களே,
இந்தியாவின் பிரகாசமான எதிர்காலத்தில் நமது கல்வி முறையும், கல்வி நிறுவனங்களும் முக்கியப் பங்கு வகிக்கின்றன என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள். அதனால்தான், சுதந்திரத்தின் இந்த 'அமிர்த காலத்தில்' கல்வி, உள்கட்டமைப்பு அல்லது கல்விக் கொள்கை என ஒவ்வொரு மட்டத்திலும் நாங்கள் அதிக வேகத்துடனும், விரிவாகவும் பணியாற்றி வருகிறோம். தற்போது நாட்டில் ஐஐடி, ஐஐஐடி, ஐஐஎம், எய்ம்ஸ் போன்ற முக்கிய கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கை மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது. 2014-ம் ஆண்டு முதல் மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை 65 சதவீதத்திற்கு மேல் அதிகரித்துள்ளது. புதிய 'தேசிய கல்விக் கொள்கை' மூலம், முதன்முறையாக தொலைநோக்கு மற்றும் எதிர்காலத்தை நோக்கிய கல்வி முறையை நாடு உருவாக்கி வருகிறது. புதிய தலைமுறையினர் குழந்தைப் பருவத்திலிருந்தே சிறந்த கல்வி முறையில் வளரும்போது, நாட்டிற்கு சிறந்த குடிமக்கள் தானாகவே உருவாவார்கள். இந்த சிறந்த குடிமக்கள் மற்றும் இளைஞர்கள் 2047 -ம் ஆண்டில் நாடு சுதந்திரத்தின் 100 ஆண்டுகளைக் கொண்டாடும் போது வளர்ந்த இந்தியா என்ற கனவை நிறைவேற்றுவார்கள்.
நண்பர்களே,
அமிர்த காலத்தின் அடுத்த 25 ஆண்டுகால பயணத்தில் மகான்களின் ஆசீர்வாதமும் ஒத்துழைப்பும் மிகவும் மகத்துவமானவை. தற்போது இந்தியாவின் தீர்மானங்கள் புதியவை, அந்தத் தீர்மானங்களை நிறைவேற்றுவதற்கான முயற்சிகளும் புதியவை. டிஜிட்டல் இந்தியா, தற்சார்பு பாரதம், உள்ளூர் தயாரிப்புகளுக்கு ஆதரவு, 75 அமிர்த நீர்நிலைகள் கட்டுமானம், ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற தொலைநோக்குப் பார்வையுடன் இன்று நாடு முன்னேறி வருகிறது.
நமது குருகுலமும், பண்பட்ட படித்த இளைஞர்களும், ஒளிமயமான எதிர்காலத்திற்காக, சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்காக, சுதந்திரத்தின் 'அமிர்த காலத்தில்' ஒரே பாரதம், உன்னத பாரதம் என்ற கனவை நனவாக்க பல புதிய சிந்தனைகளையும், தீர்மானங்களையும் முன்னெடுத்துச் செல்லலாம். நான் கேட்ட போதெல்லாம் சுவாமிநாராயண் பாரம்பரியம் என் ஆசைகள் அனைத்தையும் நிறைவேற்றியது என் அதிர்ஷ்டம். இன்று நான் கேட்பதை நீங்கள் நிறைவேற்றுவீர்கள் என்று நான் நம்புகிறேன். இது குஜராத்தின் பெயரை பிரகாசமாக்குவது மட்டுமின்றி, எதிர்கால சந்ததியினரின் வாழ்க்கைக்கும் வழிவகுக்கும். மீண்டும் உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி!
ஜெய் ஸ்வாமிநாராயண்!
***
(Release ID: 1886272)
SMB/IR/AG/RR
(Release ID: 2017431)
Visitor Counter : 59
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam