பிரதமர் அலுவலகம்

மும்பையில் ரிசர்வ் வங்கியின் 90 ஆண்டு நிறைவு விழாவின் தொடக்க நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய உரை

Posted On: 01 APR 2024 2:32PM by PIB Chennai

மகாராஷ்டிர ஆளுநர் திரு ரமேஷ் பயஸ் அவர்களே, முதலமைச்சர் திரு ஏக்நாத் ஷிண்டே அவர்களே, அமைச்சரவையில் உள்ள எனது சகாக்களான நிர்மலா சீதாராமன் அவர்களே, பகவத் காரத் அவர்களே, பங்கஜ் சவுத்ரி அவர்களே, மகாராஷ்டிர அரசின் துணை முதலமைச்சர்கள் தேவேந்திர பட்னாவிஸ் அவர்களே, அஜித் பவார் அவர்களே, ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அவர்களே, இந்திய ரிசர்வ் வங்கியின் அதிகாரிகளே, தாய்மார்களே,

இன்று, இந்திய ரிசர்வ் வங்கி வரலாற்று மைல்கல்லை எட்டியுள்ளது. ரிசர்வ் வங்கி தனது 90 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. ஒரு நிறுவனமாக, ரிசர்வ் வங்கி சுதந்திரத்திற்கு முன்பும், பின்பும் சகாப்தங்களுக்கு சாட்சியாக உள்ளது. இன்று, ரிசர்வ் வங்கிக்கு உலகளவில் அங்கீகாரம் கிடைத்ததற்கு அதன் தொழில்முறை மற்றும் அர்ப்பணிப்பு காரணமாக கூறப்படுகிறது. ரிசர்வ் வங்கி தொடங்கப்பட்ட 90 ஆண்டுகளை முன்னிட்டு அதன் அனைத்து ஊழியர்களுக்கும், அதிகாரிகளுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும், இந்த நேரத்தில் ரிசர்வ் வங்கியுடன் தொடர்புடையவர்களை மிகவும் அதிர்ஷ்டசாலிகளாக நான் கருதுகிறேன். இன்று நீங்கள் வகுத்துள்ள கொள்கைகள், நீங்கள் செய்யும் பணிகள்தான் அடுத்த பத்தாண்டுகளுக்கான ரிசர்வ் வங்கியின் திசையை நிர்ணயிக்கும். இந்தத் தசாப்தம் இந்த நிறுவனத்தை அதன் நூற்றாண்டுக்கு எடுத்துச் செல்லும். இந்தத் தசாப்தம் 'வளர்ச்சியடைந்த பாரதம்' என்ற லட்சிய யாத்திரைக்கு சமமாக முக்கியமானது. இதற்காக, உங்கள் முழக்கம் குறிப்பிடுவது போல, ரிசர்வ் வங்கியின் விரைவான வளர்ச்சிக்கு உயர் முன்னுரிமை அளிக்கும் அதே வேளையில், நம்பிக்கை மற்றும் நிலைத்தன்மை ஆகியவற்றில் கவனம் செலுத்துவதும் முக்கியமானதாகும். ரிசர்வ் வங்கியின் நோக்கங்களுக்கும், தீர்மானங்களுக்கும் எனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நண்பர்களே,

நீங்கள் அந்தந்தத் துறைகளில் நிபுணர்கள். நாட்டின் பொருளாதாரம் மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தி பெரும்பாலும் பணவியல் மற்றும் நிதிக் கொள்கைகளின் ஒருங்கிணைப்பைச் சார்ந்துள்ளது என்பதை நீங்கள் அறிவீர்கள். 2014-ம் ஆண்டில் ரிசர்வ் வங்கியின் '80 வது' ஆண்டு திட்டத்தில் நான் பங்கேற்றபோது, நிலைமை முற்றிலும் வேறுபட்டிருந்தது. பாரதத்தின் ஒட்டுமொத்த வங்கித் துறையும் பிரச்சினைகள் மற்றும் சவால்களுடன் போராடிக் கொண்டிருந்தது. பாரதத்தின் வங்கி அமைப்பின் ஸ்திரத்தன்மை மற்றும் அதன் எதிர்காலம் பற்றிய கவலைகள் பரவலாக இருந்தன, குறிப்பாக வாராக்கடன்கள்  தொடர்பாக. நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கு பொதுத்துறை வங்கிகளால் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்க முடியாத அளவுக்கு நிலைமை மோசமாக இருந்தது. நாங்கள் அனைவரும் அங்கிருந்து தொடங்கினோம். இன்று பாரதத்தின் வங்கி அமைப்பு உலகில் ஒரு வலுவான மற்றும் நிலையான அமைப்பாக கருதப்படுகிறது. முன்பு மூழ்கும் விளிம்பில் இருந்த வங்கி முறை இப்பொழுது லாபங்களை ஈட்டி கடன் வழங்குவதில் சாதனையளவிலான வளர்ச்சியைக் காட்டுகிறது.

நண்பர்களே,

வெறும் 10 ஆண்டுகளில் இத்தகைய குறிப்பிடத்தக்க மாற்றம் எளிதானது அல்ல என்பதையும் நீங்கள் அறிவீர்கள். நமது கொள்கைகள், நோக்கங்கள் மற்றும் முடிவுகளில் தெளிவு இருந்ததால் இந்த மாற்றம் ஏற்பட்டது. எங்கள் முயற்சிகளில் உறுதியும், நேர்மையும் இருந்ததால் இந்த மாற்றம் ஏற்பட்டது. நோக்கங்கள் சரியாக இருக்கும்போது, கொள்கைகளும் சரியாக இருக்கும் என்பதை இன்று நாடு காண்கிறது. கொள்கைகள் சரியாக இருக்கும்போது, முடிவுகளும் சரியாக இருக்கும். முடிவுகள் சரியாக இருக்கும்போது, அதன் பயன்களும் சரியாக இருக்கும். சுருக்கமாக, நான் சொல்ல விரும்புவது என்னவென்றால் - நோக்கங்கள் சரியாக இருக்கும்போது, முடிவுகள் சரியாக இருக்கும்.

நாட்டின் வங்கி அமைப்பு எவ்வாறு மாறியது என்பதே ஆய்வுக்குரியது. எங்கள் அரசு 'அங்கீகாரம்', 'தீர்மானம்' மற்றும் 'மறுமூலதனம்' என்ற கொள்கையின் அடிப்படையில் செயல்பட்டது. பொதுத்துறை வங்கிகளின் நிலையை மேம்படுத்த, அரசு கிட்டத்தட்ட 3.5 லட்சம் கோடி ரூபாய் மூலதனத்தை உட்செலுத்தியது. நிர்வாகம் தொடர்பான பல சீர்திருத்தங்களை செயல்படுத்தியது. நொடித்துப் போதல் மற்றும் திவால் சட்டத்தின் புதிய கட்டமைப்பு மட்டும் 3.25 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள கடன்களுக்குத் தீர்வு கண்டுள்ளது.

குடிமக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு புள்ளிவிவரம் என்னவென்றால், 2018 ஆம் ஆண்டில் சுமார் 11% ஆக இருந்த வங்கிகளின் மொத்த வாராக்கடன் செப்டம்பர் 2023 க்குள் 3% க்கும் குறைவாக குறைந்துள்ளது.

இன்று, இரட்டை இருப்புநிலைக் குறிப்பின் பிரச்சினை இப்போது கடந்த காலத்தின் ஒரு பகுதியாகும். இன்று, வங்கிகளின் கடன் வளர்ச்சி 15 சதவீதத்தை எட்டியுள்ளது. இந்த அனைத்து சாதனைகளிலும், ரிசர்வ் வங்கி ஒரு கூட்டாளியாக குறிப்பிடத்தக்க பங்கை ஆற்றியுள்ளது. அதன் முயற்சிகள் பாராட்டத்தக்கவை.

நண்பர்களே,

ரிசர்வ் வங்கி போன்ற நிறுவனங்களைப் பற்றிய விவாதம் பெரும்பாலும் நிதி வரையறைகள் மற்றும் சிக்கலான சொற்களுடன் மட்டுப்படுத்தப்படுகிறது. உங்கள் வேலையின் நுணுக்கங்களைக் கருத்தில் கொண்டு இது இயல்பானது. இருப்பினும், நீங்கள் செய்யும் பணி சாதாரண குடிமக்களின் வாழ்க்கையை நேரடியாக பாதிக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில், மத்திய வங்கி, வங்கி அமைப்பு மற்றும் அடிமட்ட மட்டத்தில் உள்ள சாதாரண மக்களுக்கு இடையிலான இந்தத் தொடர்பை நாங்கள் எடுத்துக்காட்டினோம். ஏழைகளுக்கான நிதி உள்ளடக்கம் இன்று ஒரு குறிப்பிடத்தக்க உதாரணமாகும். எங்களுக்கு நாட்டில் 52 கோடி ஜன் தன் கணக்குகள் உள்ளன, இவற்றில் 55% க்கும் மேற்பட்ட கணக்குகள் பெண்களின் பெயரில் உள்ளன. இந்த நிதி உள்ளடக்கத்தின் தாக்கத்தை விவசாயம் மற்றும் மீன்வளம் போன்ற துறைகளிலும் காணலாம்.

இன்று, 7 கோடிக்கும் அதிகமான விவசாயிகள், மீனவர்கள் மற்றும் கால்நடை உரிமையாளர்கள் விவசாயிகள் கடன் அட்டைகளை வைத்துள்ளனர். இது நமது கிராமப்புற பொருளாதாரத்திற்கு குறிப்பிடத்தக்க ஊக்கத்தை அளித்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் கூட்டுறவுத் துறையும் பெரும் ஊக்கத்தைப் பெற்றுள்ளது. கூட்டுறவு வங்கியியல் துறையில் கூட்டுறவு வங்கிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன, இது ரிசர்வ் வங்கியின் ஒழுங்குமுறை மற்றும் மேற்பார்வையின் முக்கிய பகுதியாகும். ஒருங்கிணைந்த கொடுப்பனவு இடைமுகம் (யூபிஐ) இப்போது உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட தளமாக மாறியுள்ளது. இது ஒவ்வொரு மாதமும் 1200 கோடிக்கும் அதிகமான பரிவர்த்தனைகளை செயல்படுத்துகிறது.

இப்போது நீங்கள் மத்திய வங்கி டிஜிட்டல் நாணயத்திலும் வேலை செய்கிறீர்கள். இது கடந்த 10 ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள மாற்றத்தின் காட்சியாகும். பத்தாண்டுகளுக்குள் முற்றிலும் புதிய வங்கி முறை, புதிய பொருளாதாரம் மற்றும் புதிய நாணய அனுபவத்தில் நாம் நுழைந்துள்ளோம். நான் முன்பே குறிப்பிட்டது போல, கடந்த 10 ஆண்டுகளில் நடந்தது டிரெய்லர் மட்டுமே. இன்னும் செய்ய வேண்டியது நிறைய இருக்கிறது, நாட்டை இன்னும் முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும்.

நண்பர்களே,

அடுத்த 10 ஆண்டுகளுக்கான தெளிவான இலக்குகளை நாம் கொண்டிருப்பது முக்கியம். அடுத்த பத்தாண்டுகளில் டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கான வாய்ப்புகளை விரிவுபடுத்த நாம் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியது அவசியம். ரொக்கமில்லா பொருளாதாரத்தை நோக்கிய மாற்றத்தால் வரும் மாற்றங்களையும் நாம் கண்காணிக்க வேண்டும். அனைவரையும் உள்ளடக்கிய நிதி மற்றும் அதிகாரமளித்தல் முயற்சிகளை மேலும் மேம்படுத்த நாம் பாடுபட வேண்டும்.

நண்பர்களே,

இவ்வளவு பெரிய மக்கள்தொகையின் வங்கித் தேவைகள் உண்மையில் பரவலாக மாறுபடும். சிலர் பாரம்பரிய இயற்பியல் கிளை மாதிரியை விரும்புகிறார்கள், மற்றவர்கள் டிஜிட்டல் விநியோகத்தை விரும்புகிறார்கள். வங்கிச் சேவையை எளிதாக்கும் கொள்கைகளை வகுப்பது மற்றும் அனைவரின் தேவைகளுக்கு ஏற்ப கடன் அணுகலை வழங்குவது அவசியம். டிஜிட்டல் பணப்பட்டுவாடா உள்கட்டமைப்புத் துறையில் பாரதத்தை முன்னோடியாக மாற்ற, செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர கற்றல் ஆகியவற்றை நாம் தொடர்ந்து பயன்படுத்த வேண்டும். பாரதத்தின் முன்னேற்றம் விரைவானதாகவும், உள்ளடக்கியதாகவும், நிலையானதாகவும் இருக்க ரிசர்வ் வங்கி தொடர்ந்து நிலையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ஒரு கட்டுப்பாட்டாளராக, ரிசர்வ் வங்கி வங்கித் துறையில் விதிகள் அடிப்படையிலான ஒழுக்கம் மற்றும் நிதி விவேகமான நடைமுறைகளை உறுதி செய்துள்ளது.

இருப்பினும், ரிசர்வ் வங்கி பல்வேறு துறைகளின் எதிர்கால தேவைகளை முன்கூட்டியே தயார் செய்வதும், அவற்றின் தேவைகளை மதிப்பிடும்போது வங்கிகள் செயலூக்கமான நடவடிக்கைகளை எடுக்க ஊக்குவிப்பதும் அவசியம். அரசு உங்களுடன் நிற்கும் என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன். இரட்டை இலக்க பணவீக்கத்தைக் கையாள்வது பத்து ஆண்டுகளுக்கு முன்பு நிதிக் கொள்கைகளில் பிரதிபலிக்கவில்லை என்பது உங்களுக்கு நினைவிருக்கலாம். இந்தச் சவாலை எதிர்கொள்ள, பணவீக்கத்தை இலக்காகக் கொள்ளும் அதிகாரத்தை இந்திய ரிசர்வ் வங்கியிடம் எங்கள் அரசு ஒப்படைத்தது. இந்த ஆணையை நிறைவேற்றுவதில் நிதிக் கொள்கைக் குழு ஒரு சிறந்த பணியைச் செய்துள்ளது. கூடுதலாக, செயலில் விலை கண்காணிப்பு மற்றும் நிதி ஒருங்கிணைப்பு போன்ற நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளது. எனவே, கோவிட் நெருக்கடி, பல்வேறு நாடுகளில் போர் சூழ்நிலைகள் மற்றும் பதட்டங்கள் இருந்தபோதிலும், இந்தியாவில் பணவீக்கம் மிதமான அளவிலேயே உள்ளது.

நண்பர்களே,

தெளிவான முன்னுரிமைகளைக் கொண்ட ஒரு நாடு முன்னேறுவதைத் தடுக்க முடியாது. கோவிட் நெருக்கடியின் போது, நாங்கள் நிதி விவேகத்திற்கு முன்னுரிமை அளித்தோம், அதே நேரத்தில் சாதாரண குடிமக்களின் வாழ்க்கைக்கும் அதிக முன்னுரிமை அளித்தோம். அதனால்தான் பாரதத்தின் ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் இப்போது நெருக்கடியையும் மீறி பொருளாதாரத்தை முன்னோக்கி செலுத்துகிறார்கள். உலகின் பல பெரிய பொருளாதாரங்கள் இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீளப் போராடி வரும் நிலையில், இந்தியப் பொருளாதாரம் புதிய சாதனைகளைப் படைத்து வருகிறது. ரிசர்வ் வங்கி பாரதத்தின் வெற்றியை உலக அளவில் கொண்டு செல்ல முடியும்.

பணவீக்கக் கட்டுப்பாடு மற்றும் வளர்ச்சியை சமநிலைப்படுத்துவது எந்தவொரு வளரும் நாட்டிற்கும் ஒரு தனித்துவமான சவாலாகும். இந்தச் சவாலை எதிர்கொள்ள எந்த பணக் கருவிகளைப் பயன்படுத்தலாம் என்பதைப் பற்றி சிந்திக்க வேண்டியது அவசியம். இந்த அணுகுமுறைக்கு ஒரு மாதிரியாக செயல்படுவதன் மூலம் ரிசர்வ் வங்கி உலகளாவிய தலைமைப் பாத்திரத்தை வகிக்க முடியும். பத்தாண்டு கால அனுபவத்தின் அடிப்படையிலும், உலகை உன்னிப்பாக கவனித்து புரிந்துகொண்ட பின்னரும் இதைச் சொல்கிறேன். இது ஒட்டுமொத்த தெற்கு உலகிற்கும் பெரிதும் பயனளிக்கும்.

நண்பர்களே,

அடுத்த 10 ஆண்டுகளுக்கான இலக்குகளை நிர்ணயிக்கும் அதே வேளையில், பாரதத்தின் இளைஞர்களின் விருப்பங்களையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். இன்று உலகின் இளைய நாடுகளில் பாரதமும் ஒன்று. இளைஞர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதில் ரிசர்வ் வங்கிக்கு முக்கியப் பங்கு உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில், அரசாங்கக் கொள்கைகள் காரணமாக புதிய துறைகள் உருவாகியுள்ளன, இது நாட்டின் இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகளை வழங்குகிறது. பசுமை எரிசக்தி போன்ற வளர்ந்து வரும் துறைகளில் இன்று விரிவாக்கத்தை நாம் காணலாம்.

சூரிய ஆற்றல் மற்றும் பசுமை ஹைட்ரஜன் போன்ற துறைகளை அரசு ஊக்குவித்து வருகிறது. நாட்டில் எத்தனால் கலப்பதில் நிலையான வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் பாரதம் ஒரு முக்கிய நாடாக உருவெடுத்துள்ளது, மேலும் உள்நாட்டு 5ஜி தொழில்நுட்பத்தை நோக்கி முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கூடுதலாக, பாதுகாப்புத் துறை ஏற்றுமதியாளராக நாம் குறிப்பிடத்தக்க பங்கை வகிக்கிறோம்.

இந்தியப் பொருளாதாரம் மற்றும் உற்பத்தித் துறையின் முதுகெலும்பாக இருப்பது எம்.எஸ்.எம்.இ எனப்படும் குறு சிறு நடுத்தரத் தொழில் நிறுவனங்களாகும். இந்த அனைத்து துறைகளுக்கும் பல்வேறு வகையான நிதி தேவைப்படுகிறது, மேலும் பெருந்தொற்றின் போது, எம்.எஸ்.எம்.இக்களுக்கான கடன் உத்தரவாதத் திட்டம் இந்தத் துறைக்கு குறிப்பிடத்தக்க ஊக்கத்தை அளித்தது. ரிசர்வ் வங்கி முன்னோக்கிச் செல்லும் கொள்கைகள் குறித்தும் சிந்திக்க வேண்டும். நமது சக்திகாந்த தாஸ் அவர்கள் வித்தியாசமாகச் சிந்திப்பதில் வல்லவர் என்பதை நான் காண்கிறேன். நமது இளைஞர்களுக்கு, குறிப்பாக புதிய துறைகளில், போதுமான கடன் கிடைப்பதை உறுதி செய்வது மிகவும் முக்கியம்.

நண்பர்களே,

21 ஆம் நூற்றாண்டில் புதிய கண்டுபிடிப்புகள் முக்கியப் பங்கு வகிக்கும். புதிய கண்டுபிடிப்புகளில் அரசு சாதனை முதலீடுகளை செய்து வருகிறது. சமீபத்திய இடைக்கால பட்ஜெட்டில் புதிய கண்டுபிடிப்புகளுக்காக 1 லட்சம் கோடி ரூபாய் ஆராய்ச்சி நிதியை ஒதுக்கியுள்ளோம் என்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அதிநவீன தொழில்நுட்பத் துறையில் பணியாற்ற விரும்புவோரை எவ்வாறு தயார்படுத்துவது என்பது பற்றி சிந்திக்க வேண்டியது அவசியம். ரிசர்வ் வங்கி அவர்களுக்கு எவ்வாறு உதவும் என்பதையும் சிந்திக்கத் தொடங்க வேண்டும். அத்தகைய நபர்களை நாம் அடையாளம் கண்டு குழுக்களை உருவாக்க வேண்டும். பாரம்பரிய வணிகங்கள் மற்றும் வரவிருக்கும் பாடங்களில் நாம் நிபுணத்துவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

இதேபோல், புதிய ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் உருவாகி வருவதால், விண்வெளித் துறையும் திறக்கப்பட்டு வருகிறது. அவர்களுக்கு எந்த மாதிரியான ஆதரவு தேவை என்பதை நாம் பார்க்க வேண்டும். இதேபோல், இந்தியாவில் முழு வீச்சுடன் வளர்ந்து வரும் மிகப்பெரிய துறைகளில் ஒன்று சுற்றுலாத் துறை. சுற்றுலாத் துறை வளர்ந்து வருகிறது, முழு உலகமும் பாரதத்திற்கு வர விரும்புகிறது, பாரதத்தைப் பார்க்க வேண்டும், பாரதத்தைப் புரிந்து கொள்ள விரும்புகிறது. வரும் ஆண்டுகளில், மத சுற்றுலாவில் அயோத்தி உலகின் மிகப்பெரிய தலைநகராக மாறும் என்று சுற்றுலா நிபுணர்கள் கூறியதாக நான் எங்கோ படித்தேன். இந்தத் துறையை நிதி ரீதியாக ஆதரிப்பதற்கான நமது தயாரிப்புகளை நாம் பார்க்க வேண்டும். நாட்டில் புதிய துறைகள் உருவாகும்போது, இப்போதிலிருந்தே அவற்றில் நிபுணத்துவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். அவற்றை எவ்வாறு ஆதரிப்பது என்பது குறித்து சிந்திக்க வேண்டும்.

நான் அடுத்த 100 நாட்களுக்கு தேர்தல் பணிகளில் இடைவிடாமல் ஈடுபட இருக்கிறேன், எனவே நீங்கள் சிந்திக்க நிறைய நேரம் இருக்கிறது, ஏனென்றால் பதவியேற்ற இரண்டாவது நாளிலிருந்தே செய்ய வேண்டிய வேலைகள் நிறைய இருக்கும்.

நண்பர்களே,

அனைவரையும் உள்ளடக்கிய நிதி மற்றும் டிஜிட்டல் பணப் பட்டுவாடா ஆகியவற்றில் நாம் நிறைய பணிகளைச் செய்துள்ளோம். இதன் விளைவாக, நமது சிறு வணிகங்கள் மற்றும் தெருவோர வியாபாரிகளின் நிதித் திறன் இப்போது வெளிப்படையாகத் தெரிகிறது. இப்போது, இந்த தகவலைப் பயன்படுத்தி, அவர்களுக்கு நிதி ரீதியாக அதிகாரம் அளிக்க வேண்டும்.

நண்பர்களே,

அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதாரத் தற்சார்பை மேலும் மேம்படுத்த நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். உலகளாவிய நெருக்கடிகளால் நமது பொருளாதாரம் குறைவாக பாதிக்கப்படுவதை நாம் உறுதி செய்ய வேண்டும். இன்று, உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 15 சதவீத பங்குடன் இந்தியா உலக வளர்ச்சியின் இயந்திரமாக மாறி வருகிறது. இந்த சூழ்நிலைகளில், நமது நாணயத்தை உலகளவில் மிகவும் அணுகக்கூடியதாகவும், ஏற்றுக்கொள்ளக்கூடியதாகவும் மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

சமீபத்திய ஆண்டுகளில் உலகளவில் அவதானிக்கப்பட்ட மற்றொரு போக்கு அதிகப்படியான பொருளாதார விரிவாக்கம் மற்றும் அதிகரித்து வரும் கடன் ஆகும். பல நாடுகளின் தனியார் துறை கடன் அவற்றின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை இரட்டிப்பாக்கியுள்ளது. பல நாடுகளின் கடன் அளவு அந்த நாடுகளை பாதிப்பது மட்டுமல்லாமல், முழு உலகப் பொருளாதாரத்தையும் பாதிக்கிறது. இதுகுறித்து ரிசர்வ் வங்கி ஆய்வு நடத்த வேண்டும்.

பாரதத்தின் வளர்ச்சியின் வாய்ப்புகள் மற்றும் திறனைக் கருத்தில் கொண்டு, எவ்வளவு கடன் கிடைப்பது இருக்க வேண்டும் மற்றும் நவீன சூழலில் அதை எவ்வாறு நிலையானதாக நிர்வகிக்க வேண்டும் என்பதை தீர்மானிக்க வேண்டியது அவசியம்.

நண்பர்களே,

நாட்டின் அத்தியாவசிய திட்டங்களுக்கு நிதியளிக்க நமது வங்கித் துறை முன்னேற வேண்டியது சமமாக முக்கியமானதாக இருக்கும். இந்த தேவைக்கு மத்தியில், இன்று பல முனைகளில் சவால்களும் உள்ளன. செயற்கை நுண்ணறிவு, பிளாக் செயின்  போன்ற புதிய தொழில்நுட்பங்கள் வங்கி முறைகளை மாற்றியுள்ளன, முழு அணுகுமுறையையும் மாற்றியுள்ளன. டிஜிட்டல் வங்கியின் வளர்ந்து வரும் சகாப்தத்தில் இணையவெளிப் பாதுகாப்பின் பங்கு முக்கியமானதாகிவிட்டது. நிதிநுட்பத்தில் ஏற்பட்டுள்ள புதுமைகள் வங்கிச் சேவைக்கான புதிய வழிகளை உருவாக்கியுள்ளன. இத்தகைய சூழ்நிலையில், நாட்டின் வங்கித் துறையின் கட்டமைப்பில் தேவையான மாற்றங்கள் குறித்து நாம் சிந்திக்க வேண்டும். இதற்கு புதிய நிதி, இயக்க மற்றும் வணிக மாதிரிகள் தேவைப்படலாம். உலகளாவிய சாம்பியன்களின் கடன் தேவைகள் முதல் தெரு விற்பனையாளர்களின் தேவைகள் வரை, அதிநவீன துறைகள் முதல் பாரம்பரிய துறைகள் வரை, இந்த தேவைகளை பூர்த்தி செய்வது 'வளர்ச்சியடைந்த பாரதத்துக்கு முக்கியமானதாகும்.

வளர்ச்சியடைந்த பாரதத்துக்கு என்ற வங்கியியல் தொலைநோக்கு பார்வை குறித்த இந்த ஒட்டுமொத்த ஆய்வுக்கும் ரிசர்வ் வங்கி மிகவும் பொருத்தமான அமைப்பாகும். 2047-ம் ஆண்டுக்குள் 'வளர்ச்சியடைந்த பாரதத்துக்கான உங்களது முயற்சிகள் முக்கியமானதாக இருக்க வேண்டும்.

மீண்டும் ஒருமுறை உங்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

நன்றி!

***

(Release ID: 2016792)

PKV/AG/RR



(Release ID: 2017207) Visitor Counter : 77