பிரதமர் அலுவலகம்

மேற்கு வங்கம் கிருஷ்ணா நகரில் பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைத்து பிரதமர் ஆற்றிய உரை

Posted On: 02 MAR 2024 12:03PM by PIB Chennai

மேற்கு வங்க ஆளுநர் சி.வி. ஆனந்த போஸ் அவர்களே, எனது அமைச்சரவை சகா சாந்தனு தாக்கூர் அவர்களே, வங்காள சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் அவர்களே, சுவேந்து அதிகாரி அவர்களே, நாடாளுமன்றத்தில் எனது சகா ஜகந்நாத் சர்க்கார் அவர்களே, மாநில அரசின் அமைச்சர்களே, இதர பிரமுகர்களே, தாய்மார்களே, பெரியோர்களே!

மேற்கு வங்கத்தை ஒரு வளர்ந்த மாநிலமாக மாற்றுவதற்கான மற்றொரு முன்னெடுப்பை இந்த நிகழ்வு குறிக்கிறது. நேற்றுதான் ஆரம்பாக் பகுதியில் மேற்கு வங்க மக்களுக்கு சேவை செய்யும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அங்கு சுமார் ரூ.7,000 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினேன்.

இவற்றில் ரயில்வே, துறைமுகங்கள் மற்றும் பெட்ரோலியம் தொடர்பான பல குறிப்பிடத்தக்க திட்டங்கள் இருந்தன. இன்று, மீண்டும் ஒருமுறை, சுமார் ரூ .15,000 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைப்பதிலும், அடிக்கல் நாட்டுவதிலும் நான் பெருமைப்படுகிறேன்.

மின்சாரம், சாலை மற்றும் ரயில் வசதிகளை மேம்படுத்துவது மேற்குவங்கத்தின் எனது சகோதர சகோதரிகளின் வாழ்க்கையை மேம்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. இந்த மேம்பாட்டு முயற்சிகள் மேற்கு வங்கத்தின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்து, இளைஞர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும். இந்த முக்கியமான தருணத்தில் உங்கள் அனைவரையும் நான் பாராட்டுகிறேன், உங்களுக்கு நல்வாழ்த்துகள் .

நண்பர்களே

நவீன யுகத்தில், வளர்ச்சியை முன்னோக்கி நகர்த்துவதற்கு மின்சாரம் மிக முக்கியமான தேவையாக உள்ளது. எந்த மாநிலத்தின் தொழிற்சாலைகளாக இருந்தாலும், நவீன ரயில்வே உள்கட்டமைப்பாக இருந்தாலும் அல்லது மேம்பட்ட தொழில்நுட்பத்துடன் பின்னிப்பிணைந்த நமது அன்றாட வாழ்க்கையாக இருந்தாலும், போதுமான மின்சார விநியோகம் இல்லாமல் எந்த மாநிலமும் அல்லது நாடும் முன்னேற முடியாது. எனவே, மேற்கு வங்கம் அதன் தற்போதைய மற்றும் எதிர்கால மின்சாரத் தேவைகளில் தன்னிறைவை அடைவதே எங்களது முதன்மையான முயற்சியாகும். தாமோதர் பள்ளத்தாக்கு கழகத்தின் கீழ் ரகுநாத்பூர் அனல் மின் நிலையம் – இரண்டாம் கட்ட திட்டத்திற்கு அடிக்கல் நாட்டியதன் மூலம் இந்தத் திசையில் இன்று குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்த திட்டம் மாநிலத்தில் ரூ.11,000 கோடிக்கு மேல் முதலீடு செய்கிறது, இது அதன் எரிசக்தி தேவைகளை நிவர்த்தி செய்வது மட்டுமல்லாமல், சுற்றியுள்ள பிராந்தியங்களில் பொருளாதார வளர்ச்சியையும் மேம்படுத்துகிறது. மேலும், இந்த அனல் மின் நிலையத்தை தொடங்கி வைப்பதுடன், மெஜியா அனல் மின் நிலையத்தில் எப்ஜிடி அமைப்பையும் நான் தொடங்கி வைத்துள்ளேன். இந்த அமைப்பு சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை சுட்டிக் காட்டுகிறது மற்றும் இப்பகுதியில் மாசுபாட்டை கணிசமாகக் குறைக்கும்.

நண்பர்களே

மேற்கு வங்கம் நமது தேசத்திற்கும் மற்ற பல மாநிலங்களுக்கும் கிழக்கு நுழைவாயிலாக திகழ்கிறது. இந்த நுழைவாயில் மூலம், கிழக்குப் பிராந்தியத்தில் முன்னேற்றத்திற்கான ஏராளமான வாய்ப்புகள் மேற்கொள்ளப்படும். எனவே, மேற்கு வங்கத்தில் சாலைகள், ரயில்வேக்கள், விமானப் போக்குவரத்துகள், நீர்வழிப் பாதைகள் ஆகியவற்றை நவீனப்படுத்த எங்கள் அரசு உறுதியுடன் செயல்பட்டு வருகிறது.

சுமார் 2,000 கோடி ரூபாய் முதலீட்டில் ஃபராக்கா மற்றும் ராய்கன்ஜ் நகரங்களை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை 12-ஐ இன்று நான் தொடங்கி வைத்தேன். இந்த நெடுஞ்சாலை வங்காள மக்களின் பயண வேகத்தை வெகுவாக அதிகரிக்கும், ஃபராக்காவிலிருந்து ராய்கஞ்ச் வரையிலான பயண நேரத்தை 4 மணி நேரத்திலிருந்து பாதியாக குறைக்கும்.

கூடுதலாக, இது கலியாசக், சுஜாபூர் மற்றும் மால்டா டவுன் போன்ற நகர்ப்புறங்களில் போக்குவரத்து நிலைமையை மேம்படுத்தும். போக்குவரத்து செயல்திறன் அதிகரிக்கும் போது, தொழில்துறை நடவடிக்கைகளும் அதிகரிக்கும், உள்ளூர் விவசாயிகளுக்கும் பயனளிக்கும்.

நண்பர்களே

உள்கட்டமைப்பு கண்ணோட்டத்தில், ரயில்வே மேற்கு வங்கத்தின் புகழ்பெற்ற வரலாற்றின் ஒருங்கிணைந்த பகுதியாகும். இருப்பினும், இந்த விஷயத்தில் வங்காளத்தின் வரலாற்று நன்மை இருந்தபோதிலும், சுதந்திரத்திற்குப் பிறகு அது திறம்பட பயன்படுத்தப்படவில்லை.

ஏராளமான வாய்ப்புகள் இருந்தபோதிலும், வங்காளம் பின்தங்கியதற்கு இந்த மேம்போக்கான பார்வைதான் காரணம். கடந்த பத்தாண்டுகளாக, இந்த ஏற்றத்தாழ்வை நிவர்த்தி செய்ய ரயில்வே உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு நாங்கள் குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் அளித்து வருகிறோம். தற்போது, வங்காளத்தின் ரயில்வே உள்கட்டமைப்புக்கு எங்கள் அரசு  முன்பை விட இரு மடங்கிற்கும் அதிகமான தொகையை ஒதுக்குகிறது. இன்று, ஒரே நேரத்தில் வங்காளத்தில் நான்கு ரயில்வே திட்டங்களைத் தொடங்கி வைக்கிறேன்.

நவீன மற்றும் வளர்ச்சியடைந்த வங்காளம் என்ற நமது தொலைநோக்கு பார்வையை நிறைவேற்றுவதில் இந்த வளர்ச்சி முயற்சிகள் முக்கிய பங்கு வகிக்கும். இந்த நிகழ்வை மேலும் நீட்டிக்க நான் விரும்பவில்லை, ஏனெனில் வெறும் 10 நிமிட தூரத்தில், வங்காளத்திலிருந்து ஏராளமான மக்கள் எனக்காக ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

அங்கே வெளிப்படையாகவும் விரிவாகவும் உரையாற்ற உத்தேசித்துள்ளேன். எனவே, எனது கருத்துக்களை அங்கு தெரிவிப்பது மிகவும் பொருத்தமாக இருக்கும். இத்துடன் நமது நிழ்வு இங்கே முடிவடைகிறது. இந்த பாராட்டத்தக்க திட்டங்களுக்காக உங்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை வாழ்த்துகள்.

நன்றி!

***

ANU/AD/BS/DL



(Release ID: 2015183) Visitor Counter : 34