பிரதமர் அலுவலகம்

அசாம் மாநிலம் ஜோர்ஹாட்டில் ரூ. 17,500 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்து, நாட்டுக்கு அர்ப்பணித்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்


வடகிழக்கு பிராந்தியத்திற்கான பிரதமரின் மேம்பாட்டு முன்முயற்சி (PM-DevINE) திட்டத்தின் கீழ் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்

அசாம் முழுவதும் பிரதமரின் வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட சுமார் 5.5 லட்சம் வீடுகளை பயனாளிகளுக்கு ஒப்படைத்தார்

அசாமில் ரூ.1300 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான முக்கிய ரயில்வே திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார்

"வளர்ச்சி அடைந்த பாரதத்திற்கு வடகிழக்கின் வளர்ச்சி அவசியம்"

"காசிரங்கா தேசிய பூங்கா தனித்துவமானது- அனைவரும் அதைப் பார்வையிட வேண்டும்"

"வீர் லச்சித் போர்புகன் அசாமின் வீரம் மற்றும் உறுதியின் அடையாளம்"

"வளர்ச்சி மற்றும் பாரம்பரியம் என்பது நமது இரட்டை என்ஜின் அரசின் தாரக மந்திரமாக இருந்து வருகிறது"

“ஒட்டுமொத்த வடகிழக்கு மாநிலங்களிலும் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ள திட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றன”

Posted On: 09 MAR 2024 2:12PM by PIB Chennai

அசாம் மாநிலம் ஜோர்ஹாட்டில் ரூ.17,500 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்து, நாட்டுக்கு அர்ப்பணித்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இன்றைய வளர்ச்சித் திட்டங்கள் சுகாதாரம், எண்ணெய் மற்றும் எரிவாயு, ரயில் மற்றும் வீட்டுவசதி ஆகிய துறைகளை உள்ளடக்கியது.

நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், மாநிலத்தின் 200 வெவ்வேறு இடங்களிலிருந்து 2 லட்சம் பேர் காணொலி மூலம் இந்த நிகழ்ச்சியில் இணைந்ததற்கு மகிழ்ச்சி தெரிவித்தார். கோலாகாட் மக்கள் ஆயிரக்கணக்கான அகல் விளக்குகளை ஏற்றியதை குறிப்பிட்ட திரு நரேந்திர மோடி, மக்களின் அன்பும் பாசமும் தனது மிகப்பெரிய சொத்து என்று கூறினார். சுகாதாரம், வீட்டுவசதி மற்றும் பெட்ரோலியத் துறைகள் தொடர்பான சுமார் ரூ.17,500 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், நாட்டுக்கு அர்ப்பணித்தும் இருப்பது அசாமின் வளர்ச்சிக்கு உத்வேகம் அளிக்கும் என்று அவர் கூறினார். 

காசிரங்கா தேசியப் பூங்காவிற்கு தாம் மேற்கொண்ட பயணம் பற்றிப் பேசிய பிரதமர், இந்தப் பூங்கா ஒரு தனித்துவமான தேசியப் பூங்கா மற்றும் புலிகள் காப்பகம் என்று கூறியதுடன், அதன் பல்லுயிர் பெருக்க அமைப்பை சுட்டிக்காட்டினார். 70 சதவீத ஒற்றைக் கொம்பு காண்டாமிருகங்கள் காசிரங்காவில் உள்ளன என்று அவர் கூறினார். சதுப்பு நில மான், புலி, யானை மற்றும் காட்டு எருமை போன்ற வனவிலங்குகளைக் கண்ட அனுபவம் குறித்தும் அவர் பேசினார். அலட்சியம் மற்றும் குற்றங்கள் காரணமாக காண்டாமிருகம் எவ்வாறு ஆபத்தில் சிக்குகிறது என்பதை சுட்டிக்காட்டிய பிரதமர், 2013-ம் ஆண்டில் ஒரே ஆண்டில் 27 காண்டாமிருகங்கள் வேட்டையாடப்பட்டதை நினைவு கூர்ந்தார். தற்போதைய அரசின் முயற்சியால் 2022-ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை பூஜ்ஜியமாகக் குறைக்கப்பட்டது என அவர் குறிப்பிட்டார்.  மக்கள் அதிக அளவில் இந்த தேசியப் பூங்காவிற்கு வருகை தர வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

வீர் லச்சித் போர்புகானின் சிலையை இன்று திறந்து வைத்ததைக் குறிப்பிட்ட பிரதமர், வீர் லச்சித் போர்புகன் அசாமின் வீரம் மற்றும் உறுதிப்பாட்டின் அடையாளம் என்றார். 2002-ம் ஆண்டில் புதுதில்லியில் அவரது 400-வது பிறந்த நாளை கொண்டாடியதை அவர் நினைவு கூர்ந்தார்.

வளர்ச்சி மற்றும் பாரம்பரியம் ஆகியவை இரட்டை என்ஜின் அரசின் தாரக மந்திரமாக உள்ளது என்று பிரதமர் கூறினார். உள்கட்டமைப்பு, சுகாதாரம் மற்றும் எரிசக்தி துறைகளில் அசாம் வேகமாக முன்னேறியுள்ளது என்று அவர் கூறினார். எய்ம்ஸ், தின்சுகியா மருத்துவக் கல்லூரி, ஷிவ் சாகர் மருத்துவக் கல்லூரி மற்றும்  ஜோர்ஹாட்டில் உள்ள புற்றுநோய் மருத்துவமனை போன்ற சுகாதார உள்கட்டமைப்புகள் அசாமை முழு வடகிழக்குப் பகுதிக்கான மருத்துவ மையமாக மாற்றும் என்று அவர் குறிப்பிட்டார்.

பிரதமரின் உர்ஜா கங்கா திட்டத்தின் கீழ் பரவுனி – குவஹாத்தி குழாய் திட்டத்தை நாட்டுக்கு அர்ப்பணித்ததையும் பிரதமர் சுட்டிக் காட்டினார். இந்த எரிவாயு குழாய் திட்டம், வடகிழக்கு கட்டமைப்பை தேசிய கட்டமைப்புடன் இணைக்கும் என்றும், 30 லட்சம் வீடுகள் மற்றும் 600-க்கும் மேற்பட்ட சிஎன்ஜி நிலையங்களுக்கு எரிவாயு வழங்க உதவும் என்றும் கூறினார். இதன் மூலம் பீகார், மேற்கு வங்கம் மற்றும் அசாம் ஆகிய மாநிலங்களில் உள்ள 30-க்கும் மேற்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் பயனடைவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

டிக்பாய் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மற்றும் குவஹாத்தி எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை விரிவாக்கத் தொடக்க விழா பற்றிப் பேசிய பிரதமர், அசாமில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளின் திறனை விரிவுபடுத்த வேண்டும் என்ற மக்களின் நீண்டகால கோரிக்கையை முந்தைய அரசுகள் புறக்கணித்தன என்றார். தற்போதைய அரசின் முயற்சிகளால், அசாமில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளின் மொத்த திறன் தற்போது இரு மடங்காகவும், நுமாலிகர் சுத்திகரிப்பு ஆலையின் திறன் மூன்று மடங்காகவும் உயரும் என்று அவர் கூறினார். வளர்ச்சிக்கான எண்ணங்கள் வலுவாக இருக்கும்போது, எந்தவொரு பிராந்தியத்தின் வளர்ச்சியும் வேகமாக நடைபெறும் என்று அவர் தெரிவித்தார்.

இன்று வீடுகளைப் பெற்றுள்ள 5.5 லட்சம் குடும்பங்களுக்கு அவர் வாழ்த்துத் தெரிவித்தார். இந்த வீடுகள் வெறும் வீடுகள் மட்டுமல்ல என்றும் கழிப்பறைகள், எரிவாயு இணைப்புகள், மின்சாரம் மற்றும் குழாய் நீர் இணைப்பு போன்ற வசதிகளை இவை கொண்டுள்ளன என்றும் அவர் கூறினார். இதுவரை அசாமின் 18 லட்சம் குடும்பங்களுக்கு இதுபோன்ற வீடுகள் வழங்கப்பட்டுள்ளன என்று அவர் தெரிவித்தார். இந்த வீடுகளில் பெரும்பாலானவை பெண்களின் பெயரில் இருப்பது குறித்து அவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.

அசாமின் ஒவ்வொரு பெண்ணின் வாழ்க்கையையும் எளிதாக்கவும், அவர்களது சேமிப்பை மேம்படுத்தவும் அரசின் உறுதிப்பாட்டை எடுத்துரைத்த பிரதமர், மகளிர் தினத்தன்று எரிவாயு சிலிண்டரின் விலை ரூ. 100 குறைக்கப்பட்டதைக் குறிப்பிட்டார். ஆயுஷ்மான் அட்டைகள் போன்ற திட்டங்களும் பெண்களுக்கு பயனளிக்கின்றன என்று அவர் தெரிவித்தார், ஜல் ஜீவன் இயக்கத்தின்  கீழ், அசாமில் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன என்று அவர் கூறினார்.

2014-ம் ஆண்டுக்குப் பிறகு அசாமில் ஏற்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றங்களை எடுத்துரைத்த பிரதமர், 2.5 லட்சத்துக்கும் மேற்பட்ட நிலமற்ற பூர்வீக குடி மக்களுக்கு நில உரிமைகளை வழங்கப்பட்டதாகவும், சுமார் 8 லட்சம் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களை வங்கி அமைப்புடன் இணைத்துள்ளதாகவும், இதனால் அரசின் பலன்கள் நேரடியாக அவர்களது வங்கிக் கணக்குகளுக்கு மாற்றப்படுவதாகவும் குறிப்பிட்டார். இது இடைத்தரகர்களுக்கான அனைத்து கதவுகளையும் மூடிவிட்டது என்று பிரதமர் கூறினார்.

வளர்ச்சி அடைந்த பாரதத்திற்கு வடகிழக்கின் வளர்ச்சி அவசியம் என்று பிரதமர் உறுதிபடக் கூறினார். வடகிழக்கு மாநிலங்கள் முழுவதையும் மோடி தமது குடும்பமாக கருதுவதாகவும் அதனால்தான் பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த திட்டங்களில் தற்போது கவனம் செலுத்தப்பட்டு நிறைவேற்றப்படுவதாகவும் பிரதமர் தெரிவித்தார்.  சராய்காட் பாலம், தோலா – சதியா பாலம், போகிபீல் பாலம், பராக் பள்ளத்தாக்கு வரை ரயில்வே அகல ரயில் பாதை விரிவாக்கம், ஜோகிகோபாவில் பன்னோக்கு சரக்கு போக்குவரத்து பூங்கா, பிரம்மபுத்திரா ஆற்றில் இரண்டு புதிய பாலங்கள் மற்றும் வடகிழக்கில் 18 நீர்வழிப் பாதைகள் ஆகியவற்றை அவர் குறிப்பிட்டார். இந்தத் திட்டங்கள் இந்தப் பிராந்தியத்தில் புதிய வாய்ப்புகளை உருவாக்கியுள்ளன என்று அவர் கூறினார்.  கடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்ட உன்னதி திட்டம் பற்றி அவர் குறிப்பிட்டார். மாநிலத்தின் சணல் விவசாயிகளுக்கு பயனளிக்கும் வகையில் சணலுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையையும் அமைச்சரவை அதிகரித்துள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.

மக்களின் அன்பு மற்றும் பாசத்திற்கு நன்றி தெரிவித்த பிரதமர், ஒவ்வொரு இந்தியரும் தமது குடும்பம் என்று கூறினார். இந்தியாவின் 140 கோடி குடிமக்கள் தமது குடும்பம் என்று தாம் நம்புவதாகவும், மக்களுக்கு இரவும் பகலும் சேவை செய்வதாகவும் அவர் தெரிவித்தார். இதனால் மக்களின் அன்பு தம் மீது ஈர்க்கப்படுகிறது என்று கூறிய பிரதமர், இன்றைய நிகழ்ச்சி இந்த நம்பிக்கையை பிரதிபலிக்கிறது என்று எடுத்துரைத்தார். இன்றைய வளர்ச்சித் திட்டங்களுக்காக அசாம் மக்களை வாழ்த்தி அவர் தமது உரையை நிறைவு செய்தார்.

அசாம் முதலமைச்சர் டாக்டர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, மத்திய அமைச்சர் திரு சர்பனந்தா சோனாவால் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

பின்னணி

வடகிழக்கு பிராந்தியத்திற்கான பிரதமரின் மேம்பாட்டு முன்முயற்சி (PM-DevINE) திட்டத்தின் கீழ் சிவசாகரில் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை மற்றும் குவஹாத்தியில் ஹீமாடோ-லிம்பாய்டு மையம் உள்ளிட்ட திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார். டிக்பாய் சுத்திகரிப்பு ஆலையின் திறன் திறனை ஆண்டுக்கு 0.65 மில்லியன் மெட்ரிக் டன்களில் இருந்து 1 மில்லியன் மெட்ரிக் டன்களாக (ஆண்டுக்கு மில்லியன் மெட்ரிக் டன்) விரிவாக்குவது உட்பட எண்ணெய் மற்றும் எரிவாயு துறையில் முக்கியமான திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டினார்; குவஹாத்தி சுத்திகரிப்பு ஆலை விரிவாக்கம் (1.0 முதல் 1.2 மில்லியன் மெட்ரிக் டன் வரை) மற்றும் கிரியா ஊக்கி சீர்திருத்த பிரிவு (CRU)   மற்றும் பெட்குச்சி (குவஹாத்தி) முனையத்தில் வசதிகளை விரிவுபடுத்துதல்: இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் உள்ளிட்டவற்றுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

தின்சுகியாவில் புதிய மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை போன்ற முக்கிய திட்டங்களை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார்; சுமார் 3,992 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட 718 கி.மீ நீளமுள்ள பரவுனி - குவஹாத்தி குழாய் (பிரதான் மந்திரி உர்ஜா கங்கா திட்டத்தின் ஒரு பகுதி) போன்றவற்றையும் அவர் நாட்டுக்கு அர்ப்பணித்தார். பிரதமரின் கிராமப்புற வீட்டுவசதித் திட்டத்தின் (PMAY-G) கீழ், 8,450 கோடி ரூபாய் மொத்த மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சுமார் 5.5 லட்சம் வீடுகளையும் பிரதமர் திறந்து வைத்து பயனாளிகளிடம் ஒப்படைத்தார்.

அசாமில் துப்தாரா – சாய்கான் பிரிவு (கோல்பாரா இரட்டை ரயில் பாதைத் திட்டத்தின் புதிய போங்கைகான் – குவஹாத்தியின் ஒரு பகுதி) மற்றும் புதிய போங்கைகான் – சோர்போக் பிரிவு (புதிய போங்கைகான் – அக்தோரி  இரட்டிப்பு திட்டத்தின் ஒரு பகுதி) உள்ளிட்ட ரூ.1,300 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான முக்கியமான ரயில்வே திட்டங்களைப் பிரதமர் திரு நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

***

ANU/AD/PLM/DL



(Release ID: 2013073) Visitor Counter : 53