பிரதமர் அலுவலகம்

தெலங்கானா மாநிலம் அடிலாபாத்தில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்துப் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

Posted On: 04 MAR 2024 1:07PM by PIB Chennai

தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்களே, முதலமைச்சர் திரு. ரேவந்த் ரெட்டி அவர்களே, எனது அமைச்சரவை சகா ஜி. கிஷன் ரெட்டி அவர்களே, சோயம் பாபு ராவ் அவர்களே, பி. சங்கர் அவர்களே, இதர பிரமுகர்களே, தாய்மார்களே, பெரியோர்களே!

இன்று, அடிலாபாத் மண்ணில் தெலங்கானா மட்டுமின்றி, நாடு முழுமைக்குமான பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உங்கள் மத்தியில் 30-க்கும் மேற்பட்ட வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைப்பதும், அடிக்கல் நாட்டுவதும் எனக்குக் கிடைத்த பாக்கியம். ரூ.56,000 கோடி மதிப்புள்ள இந்தத் திட்டங்கள் தெலங்கானா உட்பட நாடு முழுவதும் பல மாநிலங்களில் வளர்ச்சியின் புதிய அத்தியாயத்தை உருவாக்கும். அவை ஆற்றல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு முயற்சிகள் மற்றும் தெலங்கானாவில் நவீன சாலை நெட்வொர்க்குகளின் முன்னேற்றம் ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க முயற்சிகளை உள்ளடக்கியது. இந்த மாற்றத்தை ஏற்படுத்தும் திட்டங்களுக்காக தெலங்கானா மக்களுக்கும், அனைத்து சக குடிமக்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

நண்பர்களே,

மத்தியில் எங்கள் அரசு தொடங்கியும், தெலங்கானா மாநிலம் உருவாகியும் கிட்டத்தட்ட பத்தாண்டுகள் கடந்துவிட்டன. தெலங்கானா மக்களின் வளர்ச்சி விருப்பங்களை நிறைவேற்றுவதில் மத்திய அரசு உறுதியாக ஆதரவளித்து வருகிறது. தெலங்கானாவில் 800 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட என்டிபிசியின் இரண்டாவது யூனிட் இன்று தொடங்கி வைக்கப்படுகிறது. இந்த மைல்கல் மாநிலத்தின் மின் உற்பத்தித் திறனை அதிகரிப்பதுடன், அதன் வளர்ந்து வரும் எரிசக்தித் தேவைகளையும் பூர்த்தி செய்யும். மேலும், அம்பாரி-அடிலாபாத்-பிம்பல்குதி ரயில் பாதையின் மின்மயமாக்கல் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. மேலும், அடிலாபாத்-பேலா மற்றும் முலுகு ஆகிய இடங்களில் இரண்டு புதிய தேசிய நெடுஞ்சாலைகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. ரயில் மற்றும் சாலை வழியாக இந்த நவீனப் போக்குவரத்து வசதிகள் ஒட்டுமொத்த பிராந்தியம் மற்றும் தெலங்கானாவின் வளர்ச்சியை ஊக்குவிக்கும். அவை பயண நேரத்தைக் குறைக்கும், தொழில்துறை மற்றும் சுற்றுலா வளர்ச்சியை ஊக்குவிக்கும், மேலும் ஏராளமான புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும்.

நண்பர்களே,

தனிப்பட்ட மாநிலங்களின் முன்னேற்றத்தின் மூலம் நாட்டின் வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்ற கொள்கையை எங்கள் மத்திய அரசு பின்பற்றுகிறது. இதேபோல், நாட்டின் பொருளாதாரம் வலுவடைந்து, நாட்டின் மீதான நம்பிக்கை வளரும்போது, மாநிலங்கள் அதன் பலன்களை அறுவடை செய்து, முதலீடு அதிகரிப்பதைக் காண்கின்றன. கடந்த 3-4 நாட்களில் பாரதத்தின் விரைவான பொருளாதார வளர்ச்சி எவ்வாறு உலகத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது என்பதை நீங்கள் கவனித்தீர்கள். கடந்த காலாண்டில் 8.4 சதவீத வளர்ச்சி விகிதத்தை எட்டிய உலகின் ஒரே பெரிய பொருளாதாரமாக இந்தியா தனித்து நிற்கிறது. இந்த வேகத்துடன் நமது நாடு உலகளவில் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறும். இது தெலுங்கானாவின் பொருளாதாரத்தின் விரைவான விரிவாக்கத்திற்கும் உதவும்.

நண்பர்களே,

கடந்த 10 ஆண்டுகளில் நாட்டின் அணுகுமுறையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை தெலங்கானா மக்கள் இன்று காண்கின்றனர். தெலங்கானா போன்ற முன்னர் புறக்கணிக்கப்பட்ட பகுதிகள் எண்ணற்ற சவால்களை எதிர்கொண்டன, ஆனால் கடந்த 10 ஆண்டுகளில், தெலுங்கானாவின் வளர்ச்சியில் எங்கள் அரசு முதலீட்டை கணிசமாக அதிகரித்துள்ளது. எங்களைப் பொறுத்தவரை, வளர்ச்சி என்பது ஏழைகள், தலித்துகள் மற்றும் பழங்குடியினர் உள்ளிட்ட மிகவும் விளிம்புநிலை சமூகங்களை மேம்படுத்துவதை உள்ளடக்கியது. ஏழைகளுக்கான எங்களது விரிவான நலத்திட்டங்கள் மூலம் 25 கோடி மக்கள் வறுமையிலிருந்து விடுவிக்கப்பட்டதில் எங்களது முன்முயற்சிகளின் கண்கூடான பலன் தெளிவாகத் தெரிகிறது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்த வளர்ச்சி வேகத்தை விரைவுபடுத்த நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்.

இந்த உறுதியுடன், உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இத்துடன் எனது உரையை நிறைவு செய்கிறேன். இன்னும் 10 நிமிடங்களில் அந்த திறந்த வெளியில் மேலும் பல வெளிப்படையான விவாதங்களில் ஈடுபட ஆவலாக உள்ளேன். தது பொன்னான நேரத்தை ஒதுக்கி எங்களுடன் இணைந்ததற்காக முதலமைச்சருக்கு மீண்டும் ஒரு முறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தளராத உறுதியுடன் வளர்ச்சிப் பயணத்தில் நாம் ஒன்றாக முன்னேறிச் செல்வோம்.

மிகவும் நன்றி.

***

PKV/AG/KV



(Release ID: 2012133) Visitor Counter : 33