பிரதமர் அலுவலகம்

கூட்டுறவுத் துறைக்கான பல்வேறு முக்கிய திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார்


11 மாநிலங்களில் உள்ள 11 தொடக்க வேளாண் கடன் சங்கங்களில் (பிஏசிஎஸ்) "கூட்டுறவுத் துறையில் உலகின் மிகப்பெரிய தானிய சேமிப்புத் திட்டத்தின்" முன்னோடி திட்டத்தைத் தொடங்கி வைத்தார்

நாடு முழுவதும் கிடங்குகள் மற்றும் இதர வேளாண் உள்கட்டமைப்பு வசதிகளுக்காக கூடுதலாக 500 பிஏசிஎஸ் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்

நாடு முழுவதும் 18,000 பிஏசி-களை கணினிமயமாக்கும் திட்டத்தைத் தொடங்கி வைத்தார்

"நெகிழ்திறன் கொண்ட பொருளாதாரத்தை வடிவமைப்பதிலும், கிராமப்புறங்களின் வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்வதிலும் கூட்டுறவுத் துறை கருவியாக உள்ளது"

"கூட்டுறவு அமைப்புகள் அன்றாட வாழ்க்கையுடன் தொடர்புடைய ஒரு சாதாரண அமைப்பை ஒரு பெரிய தொழில்துறை அமைப்பாக மாற்றும் திறனைக் கொண்டுள்ளன, மேலும் இது கிராமப்புற மற்றும் விவசாய பொருளாதாரத்தின் முகத்தை மாற்றுவதற்கான நிரூபிக்கப்பட்ட வழியாகும்"

"ஏராளமான பெண்கள் விவசாயம் மற்றும் பால் கூட்டுறவு சங்கங்களில் ஈடுபட்டுள்ளனர்"

"வேளாண் அமைப்புகளின் நவீனமயமாக்கல் வளர்ச்சியடைந்த பாரதத்திற்கு அவசியம்"

" "தற்சார்பு இந்தியாவை உருவாக்காமல் வளர்ச்சியடைந்த பாரதம் சாத்தியமில்லை"

Posted On: 24 FEB 2024 12:21PM by PIB Chennai

பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று புதுதில்லியில் உள்ள பாரத மண்டபத்தில் கூட்டுறவுத் துறைக்கான பல்வேறு முக்கிய திட்டங்களைத் தொடங்கி வைத்து, அவற்றுக்கு அடிக்கல் நாட்டினார்.

11 மாநிலங்களில் உள்ள 11 தொடக்க வேளாண் கடன் சங்கங்களில் (பிஏசிஎஸ்) மேற்கொள்ளப்படும் 'கூட்டுறவுத் துறையில் உலகின் மிகப்பெரிய தானிய சேமிப்புத் திட்டத்தின்' முன்னோடித் திட்டத்தை பிரதமர் தொடங்கி வைத்தார்.

இந்த திட்டத்தின் கீழ் கிடங்குகள் மற்றும் இதர வேளாண் உள்கட்டமைப்பு வசதிகளுக்காக நாடு முழுவதும் கூடுதலாக 500 பிஏசிஎஸ்  திட்டங்களுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டினார்.

இந்த திட்டம் பிஏசிஎஸ் கிடங்குகளை உணவு தானிய விநியோகச் சங்கிலியுடன் தடையின்றி ஒருங்கிணைப்பதையும், உணவுப் பாதுகாப்பை வலுப்படுத்துவதையும், நபார்டின் ஆதரவுடனும் தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக் கழகத்தின் (என்.சி.டி.சி) கூட்டு முயற்சியுடனும் நாட்டில் பொருளாதார வளர்ச்சியை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன.

வேளாண் உள்கட்டமைப்பு நிதி, வேளாண் சந்தைப்படுத்தல் உள்கட்டமைப்பு போன்ற தற்போதுள்ள பல்வேறு திட்டங்களை ஒருங்கிணைப்பதன் மூலம் இந்த முயற்சி செயல்படுத்தப்படுகிறது, இதில் பங்கேற்கும் பிஏசிஎஸ் உள்கட்டமைப்பு மேம்பாட்டை மேற்கொள்வதற்கான மானியங்கள் மற்றும் வட்டி மானிய நன்மைகளைப் பெற உதவுகிறது.

கூட்டுறவுத் துறைக்கு புத்துயிர் அளித்தல் மற்றும் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு அதிகாரம் அளித்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட "கூட்டுறவு மூலம் செழிப்பு" என்ற அரசின் தொலைநோக்குப் பார்வையுடன் இணைந்து, நாடு முழுவதும் உள்ள 18,000 பிஏசிஎஸ்-ஐ கணினிமயமாக்கும் திட்டத்தையும் பிரதமர் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், வளர்ச்சியடைந்த பாரதம் பயணத்தில் பாரத மண்டபம் மற்றொரு மைல்கல்லை எட்டியுள்ளது என்று குறிப்பிட்டார். வேளாண்மை மற்றும் விவசாயத்தின் அடித்தளத்தை வலுப்படுத்துவதில் கூட்டுறவின் சக்திக்கு பெரும் பங்கு உள்ளது, இது கூட்டுறவுக்கான தனி அமைச்சகத்திற்கு வழிவகுத்தது.

கூட்டுறவுத் துறையில் இன்று தொடங்கப்பட்ட 'உலகின் மிகப்பெரிய தானிய சேமிப்புத் திட்டம்' நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் ஆயிரக்கணக்கான கிடங்குகளை உருவாக்கும் என்று அவர் கூறினார். இதுவும், பி.ஏ.சி.க்களை கணினிமயமாக்குவது போன்ற பிற திட்டங்களும் விவசாயத்திற்கு புதிய பரிமாணங்களை அளிக்கும் மற்றும் நாட்டில் விவசாயத்தை நவீனமயமாக்கும் என்றும் பிரதமர் தெரிவித்தார். 

கூட்டுறவு என்பது இந்தியாவின் பண்டைய கோட்பாடு என்பதை பிரதமர் சுட்டிக்காட்டினார். ஒரு புனித நூலை மேற்கோள் காட்டிய பிரதமர், சிறிய வளங்களை ஒருங்கிணைத்தால் மிகப்பெரிய பணியை நிறைவேற்ற முடியும் என்று விளக்கினார். இந்தியாவின் பண்டைய கிராம அமைப்பில் இந்த மாதிரி பின்பற்றப்பட்டது என்றார்.

"கூட்டுறவுகள் இந்தியாவின் தற்சார்பு சமூகத்தின் அடித்தளங்கள். இது எந்தவொரு அமைப்பும் அல்ல, ஆனால் ஒரு நம்பிக்கை, ஒரு உணர்வு" என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார், கூட்டுறவின் இந்த உணர்வு அமைப்புகள் மற்றும் வளங்களின் எல்லைகளுக்கு அப்பாற்பட்டது மற்றும் விதிவிலக்கான முடிவுகளை உருவாக்குகிறது என்பதை எடுத்துக்காட்டுகிறது.

அன்றாட வாழ்க்கையுடன் தொடர்புடைய ஒரு சாதாரண அமைப்பை மிகப்பெரிய தொழில் அமைப்பாக மாற்றும் திறனை இது கொண்டுள்ளது என்று கூறிய அவர், கிராமப்புற மற்றும் வேளாண் பொருளாதாரத்தின் மாறிவரும் முகத்தின் நிரூபிக்கப்பட்ட விளைவாகும் என்று கூறினார். இந்த புதிய அமைச்சகத்தின் மூலம், இந்தியாவின் வேளாண் துறையில் துண்டு துண்டாக உள்ள சக்திகளை ஒன்றிணைப்பதை அரசு நோக்கமாகக் கொண்டுள்ளது என்று பிரதமர் வலியுறுத்தினார்

விவசாயிகள் உற்பத்தியாளர் அமைப்புகளை உதாரணமாக குறிப்பிட்ட பிரதமர், கிராமங்களில் உள்ள சிறு விவசாயிகளிடையே தொழில்முனைவு அதிகரித்து வருவதை குறிப்பிட்டார். தனி அமைச்சகம் இருப்பதால், 10,000 உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் என்ற இலக்கில் 8,000 உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் ஏற்கனவே நாட்டில் செயல்பட்டு வருவதாக அவர் கூறினார்.

கூட்டுறவுச் சங்கங்களின் பயன்கள் தற்போது மீனவர்களையும், கால்நடைவளர்ப்போரையும் சென்றடைந்து வருகின்றன. மீன்வளத்துறையில் 25,000க்கும் மேற்பட்ட கூட்டுறவு அலகுகள் செயல்பட்டு வருகின்றன. வரும் ஆண்டுகளில் 2,00,000 கூட்டுறவு சங்கங்களை நிறுவ வேண்டும் என்ற அரசின் இலக்கை பிரதமர் மீண்டும் வலியுறுத்தினார்.

குஜராத் முதலமைச்சராக இருந்த அனுபவத்தை நினைவு கூர்ந்த பிரதமர், அமுல் மற்றும் லிஜ்ஜத் பப்பட் ஆகியவற்றின் வெற்றிகரமான வளர்ச்சியை கூட்டுறவுகளின் சக்தியாக மேற்கோள் காட்டியதுடன், இந்த நிறுவனங்களில் பெண்களின் முக்கிய பங்களிப்பையும் எடுத்துரைத்தார்.

கூட்டுறவுத் துறை தொடர்பான கொள்கைகளில் அரசு பெண்களுக்கு முன்னுரிமை அளித்துள்ளது. பல மாநில கூட்டுறவு சங்கங்கள் சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதன் மூலம் மகளிருக்கான வாரிய பிரதிநிதித்துவத்தை உறுதி செய்ய முடியும் என்று அவர் குறிப்பிட்டார்.

விவசாயிகளின் தனிப்பட்ட பிரச்சனைகளை கூட்டு வலிமையுடன் கையாளும் திறன் கூட்டுறவு அமைப்புகளுக்கு உள்ளது என்பதை சுட்டிக்காட்டிய பிரதமர், சேமிப்பு என்பதற்கு உதாரணம் தெரிவித்தார்.

சேமிப்பு உள்கட்டமைப்பு இல்லாததால் விவசாயிகளுக்கு ஏற்பட்ட இழப்புகளை சுட்டிக்காட்டிய பிரதமர், ரூ .1.25 லட்சம் கோடி செலவில் அடுத்த 5 ஆண்டுகளில் முடிக்கப்படவுள்ள 700 லட்சம் மெட்ரிக் டன் உலகின் மிகப்பெரிய சேமிப்புத் திட்டம் குறித்து கவனத்தை ஈர்த்தார்.

விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை சேமித்து வைத்து தங்கள் சொந்த தேவைகளுக்கு ஏற்ப சரியான நேரத்தில் விற்கவும், வங்கிகளிடமிருந்து கடன் பெறவும் இது உதவும் என்று அவர் கூறினார்.

"வளர்ச்சியடைந்த பாரதம் அமைப்பை உருவாக்குவதற்கு வேளாண் அமைப்புகளை நவீனமயமாக்குவது சமமான முக்கியத்துவம் வாய்ந்தது" என்று கூறிய பிரதமர், பிஏசிஎஸ் போன்ற அரசு அமைப்புகளுக்கு புதிய பங்களிப்பை உருவாக்கும் அரசின் முயற்சியை எடுத்துரைத்தார்.

இந்த குழுக்கள் மக்கள் மருந்தக மையங்களாக செயல்படுவதாகவும், ஆயிரக்கணக்கான பிரதமரின் வேளாண் வள மையங்கள் செயல்படுவதாகவும் அவர் கூறினார். பெட்ரோல், டீசல் மற்றும் எல்பிஜி சிலிண்டர் பகுதிகளில் செயல்படும் கூட்டுறவு குழுக்கள் மற்றும் பிஏசிஎஸ் பல கிராமங்களில் நீர் குழுக்களின் பங்கையும் அவர் குறிப்பிட்டார்.

இது கடன் குழுக்களின் உற்பத்தித் திறனை அதிகரித்துள்ளதுடன், புதிய வருமான ஆதாரங்களையும் உருவாக்கியுள்ளது என்று பிரதமர் கூறினார். "கூட்டுறவு குழுக்கள் இப்போது கிராமங்களில் பொது சேவை மையங்களாக செயல்பட்டு நூற்றுக்கணக்கான வசதிகளை வழங்குகின்றன" என்று கூறிய அவர், விவசாயிகளுக்கு சேவைகளை பெரிய அளவில் கொண்டு செல்ல தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் இந்தியாவின் எழுச்சியைக் குறிப்பிட்டார். இது கிராமங்களில் உள்ள இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்று அவர் மேலும் கூறினார்.

வளர்ச்சியடைந்த பாரதம் பயணத்தில் கூட்டுறவு அமைப்புகளின் முக்கியத்துவத்தை பிரதமர் சுட்டிக் காட்டினார். தற்சார்பு இந்தியா திட்டத்தின் இலக்குகளை அடைய பங்களிக்குமாறு அவர்களை அவர் கேட்டுக் கொண்டார். தற்சார்பு இந்தியா இல்லாமல் வளர்ச்சியடைந்த பாரதம் சாத்தியமில்லை என்று பிரதமர் வலியுறுத்தினார்.

நாம் இறக்குமதியை நம்பியிருக்கும் பொருட்களை கூட்டுறவு நிறுவனங்கள் பட்டியலிட வேண்டும் என்றும், அவற்றை உள்நாட்டில் உற்பத்தி செய்ய கூட்டுறவுத் துறை எவ்வாறு உதவ முடியும் என்பதை ஆராய வேண்டும் என்றும் அவர் பரிந்துரைத்தார்.

சமையல் எண்ணெய் ஒரு பொருளாக எடுத்துக் கொள்ளப்படலாம் என்பதற்கு அவர் ஒரு உதாரணத்தை அளித்தார்.  இதேபோல், எத்தனாலுக்கான ஒத்துழைப்பு உந்துதல், எரிசக்தி தேவைகளுக்கு எண்ணெய் இறக்குமதியை சார்ந்திருப்பதைக் குறைக்கும். அந்நியச் சார்புநிலையைக் குறைப்பதற்காக கூட்டுறவு சங்கங்களுக்கு பிரதமர் பரிந்துரைத்த மற்றொரு அம்சம் பருப்பு இறக்குமதி ஆகும். பல உற்பத்தி பொருட்களையும் கூட்டுறவு அமைப்புகள் முன்னெடுப்பை மேற்கொள்ளலாம் என்றார் அவர்.

இயற்கை விவசாயத்தில் கூட்டுறவுகளின் பங்கை சுட்டிக் காட்டிய பிரதமர், விவசாயிகளை எரிசக்தி வழங்குபவர் மற்றும் உரம் வழங்குபவராக மாற்றுவது குறித்தும் சுட்டிக் காட்டினார். பண்ணைகளின் எல்லைகளில் மேற்கூரை சூரிய ஒளி மின்சாரம் தயாரிப்பதில் சூரிய தகடுகள் கூட்டுறவு முன்முயற்சிக்கான பகுதிகளாகக் காணப்படுகின்றன என்று அவர் கூறினார்.

இதேபோன்ற தலையீடு கோபர்தனிலும் சாத்தியமாகும், உயிரி சி.என்.ஜி உற்பத்தி, உரம் மற்றும் கழிவுகளை செல்வமாக மாற்றுதல். இதனால், உர இறக்குமதி செலவும் குறையும் என்றும் அவர் கூறினார். சிறு விவசாயிகளின் முயற்சிகளை உலகளாவிய முத்திரையிட கூட்டுறவு நிறுவனங்கள் முன்வர வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். உலகளவில் உணவருந்தும் மேஜைகளில் சிறுதானியங்கள் கிடைக்கச் செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

கிராமப்புற வருமானத்தை அதிகரிப்பதில் கூட்டுறவுகளின் பங்கு குறித்து குறிப்பிட்ட பிரதமர், தமது தொகுதியான காசியில் பால் கூட்டுறவு சங்கங்களின் தாக்கத்தை குறிப்பிட்டார். கடந்த 10 ஆண்டுகளில் தேன் உற்பத்தி 75 ஆயிரம் மெட்ரிக் டன்னிலிருந்து 1.5 லட்சம் மெட்ரிக் டன்னாகவும், தேன் ஏற்றுமதி 28 ஆயிரம் மெட்ரிக் டன்னிலிருந்து 80 ஆயிரம் மெட்ரிக் டன்னாகவும் அதிகரித்துள்ளதால் தேன் துறையில் கூட்டுறவுகள் அடைந்துள்ள முன்னேற்றத்தையும் அவர் குறிப்பிட்டார்.

நபாஃட், டிரிஃபெட் மற்றும் மாநில கூட்டுறவு அமைப்புகளின் பங்களிப்பைப் பற்றிக் கூறிய பிரதமர், இந்த அமைப்புகளின் வரம்பை விரிவுபடுத்துமாறு கேட்டுக் கொண்டார்.

டிஜிட்டல் பணப் பட்டுவாடா மற்றும் பயனாளிகளின் பணப் பரிமாற்றத்தின் நன்மைகளை சுட்டிக் காட்டிய பிரதமர், பிஏசிஎஸ் களில் நேரடியாகவும், டிஜிட்டல் முறையிலும் பணப் பட்டுவாடா செய்ய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். மண் பரிசோதனை செய்து மண் வள அட்டை இயக்கத்தை வெற்றிகரமாக்க முன்வர வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

கூட்டுறவுத் துறையில் இளைஞர்கள் மற்றும் பெண்களின் பங்களிப்பை அதிகரிப்பது குறித்து பிரதமர் கவனம் செலுத்தினார். கூட்டுறவு அமைப்புகளுடன் தொடர்புடைய விவசாயிகளுக்கு மண்ணின் வளத்தை பகுப்பாய்வு செய்து அதற்கேற்ப விளைபொருட்களை உருவாக்க கற்றுக் கொடுக்க வேண்டும் என்று அவர் பரிந்துரைத்தார்.

இது ஒரு புதிய சூழலை உருவாக்கும் மற்றும் இத்துறைக்கு புத்துயிர் அளிக்கும் என்று அவர் கூறினார். கூட்டுறவுத் துறையில் திறன் மேம்பாடு மற்றும் பயிற்சி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் பிரதமர் வலியுறுத்தினார்.

"பிஏசிஎஸ் மற்றும் கூட்டுறவு சங்கங்களும் ஒருவருக்கொருவர் கற்றுக்கொள்ள வேண்டும்" என்று கூறிய பிரதமர், சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்வதற்கான ஒரு இணையதளம், ஆன்லைன் பயிற்சிக்கான அமைப்பு மற்றும் சிறந்த நடைமுறைகளை முன்னெடுத்துச் செல்வதற்கான தொகுதிகள் ஆகியவற்றை உருவாக்க வேண்டும் என்று பரிந்துரைத்தார்.

மாற்றத்தை விரும்பும் மாவட்டத் திட்டம் பற்றிப் பேசிய பிரதமர், மாவட்டங்களுக்கு இடையே ஆரோக்கியமான போட்டியை உருவாக்க வேண்டும் என்று குறிப்பிட்ட பிரதமர், கூட்டுறவுத் துறையிலும் இதே போன்ற நடைமுறை பின்பற்றப்பட வேண்டும் என்றும் ஆலோசனை தெரிவித்தார். மக்களின் நம்பிக்கையை அதிகரிக்க கூட்டுறவு அமைப்புகளின் தேர்தல்களில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவருவதன் முக்கியத்துவத்தையும் அவர் சுட்டிக்காட்டினார்.

கூட்டுறவு சங்கங்களை செழிப்பின் அடிப்படையாக மாற்றுவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளை எடுத்துரைத்த பிரதமர், ரூ .1 கோடி முதல் ரூ .10 கோடி வரை வருமானம் கொண்ட கூட்டுறவு சங்கங்கள் மீதான செஸ் வரியை 12 சதவீதத்திலிருந்து 7 சதவீதமாகக் குறைத்ததையும் குறிப்பிட்டார்.

இது குழுக்களுக்கான மூலதனத்தை அதிகரிக்க வழிவகுத்தது, அதே நேரத்தில் ஒரு நிறுவனமாக முன்னேற பல்வேறு வழிகளைத் திறந்துள்ளது. கூட்டுறவு சங்கங்களுக்கும் நிறுவனங்களுக்கும் இடையிலான மாற்று வரிகளில் உள்ள பாகுபாட்டை சுட்டிக்காட்டிய அவர், சங்கங்களுக்கான குறைந்தபட்ச மாற்று வரியை 18.5 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாகக் குறைத்து, அதன் மூலம் கூட்டுறவு சங்கங்களுக்கும் நிறுவனங்களுக்கும் இடையில் சமத்துவத்தை நிறுவுவதையும் குறிப்பிட்டார்.

பணம் எடுப்பதில் வரிபிடித்தம் செய்யும் பிரச்சினையை சமாளிக்க ஆண்டுக்கு ரூ .1 கோடியிலிருந்து ரூ .3 கோடியாக திரும்பப் பெறும் வரம்பை உயர்த்துவதாகவும் பிரதமர் கூறினார். தனது உரையை நிறைவு செய்த பிரதமர், கூட்டுறவை நோக்கி மேற்கொள்ளப்படும் கூட்டு முயற்சிகள், நாட்டின் கூட்டு வலிமையுடன் வளர்ச்சிக்கான அனைத்து சாத்தியக்கூறுகளையும் திறக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு. அமித் ஷா, மத்திய வேளாண் அமைச்சர் திரு. அர்ஜுன் முண்டா, மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் திரு. பியூஷ் கோயல் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

 

பின்னணி

ரூ.2,500 கோடிக்கும் அதிகமான நிதி ஒதுக்கீட்டில் இந்த திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த முயற்சியானது அனைத்து செயல்பாட்டு பிஏசிஎஸ் களையும் ஒருங்கிணைந்த நிறுவன வள திட்டமிடல்  அடிப்படையிலான தேசிய மென்பொருளாக மாற்றுவதை உள்ளடக்கியது,

இது தடையற்ற ஒருங்கிணைப்பு மற்றும் இணைப்பை உறுதி செய்கிறது. மாநில கூட்டுறவு வங்கிகள் மற்றும் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகள் மூலம் இந்த  பிஏசிஎஸ்- ஐ நபார்டு வங்கியுடன் இணைப்பதன் மூலம், தொடக்கக் கணக்கின் செயல்பாட்டுத் திறன் மற்றும் ஆளுமையை மேம்படுத்தி, கோடிக்கணக்கான சிறு மற்றும் குறு விவசாயிகள் பயனடைவதை இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

இத்திட்டத்திற்கென தேசிய அளவிலான பொது மென்பொருளை நபார்டு வங்கி உருவாக்கியுள்ளது. இஆர்பி மென்பொருளில் 18,000 பிஏசிஎஸ்- இன் இணைப்பு நிறைவடைந்துள்ளது, இது திட்டத்தின் செயல்பாட்டில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கிறது.

******

AD/BS/DL



(Release ID: 2008594) Visitor Counter : 102